என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.
    • தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் கவர்னர் தமிழிசை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை துச்சமென நினைத்து இழிவாக பேசியுள்ளார்.

    தேர்தல் தோல்வி இவரை இப்படி பேச சொல்கிறதோ என்று எண்ணத்தோன்று கிறது.

    இங்கிருந்து சென்ற இந்தியா கூட்டணியின் 40 எம்.பி.க்கள்தான் இந்த பாரதத்தின் வலிமையான எதிர்க்கட்சிக்கு தூண்களாக திகழ்கின்றனர். நாட்டிற்கு எப்பொழுது எல்லாம் அநீதி இழைக்கப்படு கிறதோ அப்போதெல்லாம் இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.

    எங்கள் தலைவருடைய நாடாளுமன்ற உரை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்திலே மக்கள் மனதிலே நீங்காமல் என்றும் நிலைத்திருக்கும். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

    இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடக் கூடியவர்களேயன்றி தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல என்பதை தமிழிசை புரிந்து கொண்டு இதுபோன்ற அவதூறான பேச்சுக்களை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நாடு முழுவதும் பா.ஜ.க. வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பதாகை ஏந்தி தர்ணா.

    புதுச்சேரி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசியதாக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதேபோல் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் புதுச்சேரி சட்டசபை வளாகத்தின் முன்பு தரையில் அமர்ந்து பதாகை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

    ராகுல்காந்தி இந்து சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். 

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
    • என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    புதுவை அமைச்சரவை யில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் 4 அமைச்சர்களும், பா.ஜனதா தரப்பில் 2 அமைச்சர்களும், சபாநாயகரும் உள்ளனர். என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதாவுக்கும் 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    இதோடு புதுவை சட்ட மன்றத்தில் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்ற னர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆட்சி அமைந்தது முதலே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் சட்ட சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    புதிய மது ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சட்டசபையிலேயே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கூட தங்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை என்றும் புகார் செய்தனர்.

    வளர்ச்சிப் பணிகளில் தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி சார்பில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.

    அதோடு தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.

    ஆனால், கவர்னருடனான சந்திப்பு குறித்து கேட்ட போது தொகுதியில் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்தவும், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகளிடை யிலான ரெஸ்டோ பார் களை அகற்றவும் கவர்னரி டம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்த திருபு வனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசிய ஆடியோ வெளியானது. இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து பேசிய விரங்களை தெரிவித்துள் ளார்.

    அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் புரோக்கர் கள் துணையோடு முதல்- அமைச்சர், அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள் ளார்.

    இதேநிலை நீடித்து கூட்டணி ஆட்சி தொடர்ந் தால் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டணி தர்மத்தை மதிக்காத முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்ததாகவும் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    இந்த ஆடியோ புதுவை மக்களிடம் வைரலானது. மேலும் பா.ஜனதா தலைமையை சந்தித்து பேச எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    இது புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி கல்வித்துறை உத்தரவிட்டது.
    • ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குனரகம் அங்கீகாரம் இல்லாமல் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சட்டத்துக்கு முரணானது. முதல்கட்டமாக 33 அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூட கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி கல்வித்துறை உத்தரவிட்டது.

    இங்கு குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டனர். 2-ம் கட்டமாக 33 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். எதிர்காலத்தில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களே முழு பொறுப்பு.

    அங்கீகாரம் உள்ளதா? என பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகளை நடத்துவது பள்ளிக்கல்வி சட்டம் பள்ளிக்கல்வி விதிகளை மீறுவதாகும். குழந்தைகள் இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நடத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் விதிமீறல்கள் இருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • சிறப்பு அபிஷேகத்தில் மற்றும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி:

    கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதா சிவராஜ்குமார் மற்றும் குடும்பத்தின, நண்பர்களுடன் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சனீஸ்வர பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகத்தில் மற்றும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் யானை பிரக்ருதியிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

    பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்தனர். கூட்டத்தில் சிக்கிய அவரை பத்திரமாக மீட்டு போலீசார் கோவில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

    அப்போது அவர் ஏற்கனவே கோவிலுக்கு வழங்கிய வெள்ளி கிரீடத்தை கோவில் நிர்வாகத்தினர் அவரிடம் காண்பித்தனர். அதனை அவர் பார்வையிட்டார்.

    நடிகர் விஜய் எனது நெருங்கிய நண்பர். அவரது ஐடியாலஜி நல்லா இருக்கிறது. நான் முன்பே சொல்லியிருந்தேன் விஜய் அரசியல் வருவார் என்று. அவருக்கு நல்ல மனசு இருக்கு. நல்ல மனசு இருப்பவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் கள்ளச்சாராயம் இறப்பு குறித்து எனக்கு தெரியாது என்று கூறினார். 

    • தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில், 'CPI விசாரணை வேண்டும்' என சிலர் பதாகை ஏந்தி நின்றிருந்தனர்.

    இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 

    • புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
    • தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    அதிக போதைக்காக சாராயத்தில் கலக்க புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதன் தொடர்ச்சியாக தமிழக போலீசார் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக மெத்தனால் சப்ளை செய்யப்பட்டாக கூறபடும் புதுச்சேரி மாநில எல்லை யான மடுகரை உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் புதுச்சேரியில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக போலீசார் சோதனை குறித்து தகவல் அறிந்து புதுச்சேரி போலீசார் மடுகரைக்கு விரைந்தனர். இந்த சோதனைக்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஏற்கனவே சோதனை நடத்திவிட்டோம். மெத்தனால் எங்கும் பதுங்கி வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழக போலீ சாரை திருப்பி அனுப்பினர்.

    இது தொடர்பாக புதுச் சேரி போலீசார் தரப்பில் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் வீடு புதுச்சேரி மாநில எல்லையான மடுகரை பகுதியில் உள்ளது. அங்கு சோதனை செய்யவும், விசாரணைக்காகவும் தமிழக போலீசார் வந்தனர்.

    அப்போது அவர்கள் வந்த வாகனத்தில் சாராயத்தில் போதைக்காக பயன்படுத்தும் மெத்தனால் கேன் இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    இதற்கிடையே புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதேசின் உறவினர் வீட்டை கண்காணிக்கவும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    கள்ளச்சாராயம் அருந்தியதில் 160க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். அதில் 20 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்ற வந்த பெரியசாமி (40) என்பவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெரியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.

    • கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விலைவாசி குறைப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நீட் தேர்வு ரத்து, புதுச்சேரிக்கு மாநில தகுதி கிடைக்க உறுதி அளித்த இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்து பா.ஜனதாவிற்கு தோல்வியை அளித்தனர்.

    புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு துன்பம் அளித்த என். ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு எதிராக இந்திய கூட்டணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றதனால் புதுச்சேரி மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கத்தை வெற்றியடைய செய்தனர். வெற்றியை அளித்த புதுச்சேரி மாநில மக்களுக்கு இந்தியா கூட்டணி நன்றியை தெரிவிக்கிறது.

    தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் நம்பிக்கையை இழந்த என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அகற்றி, எதிர்காலத்தில் மக்கள் நலம் காக்கும் அரசை அமைக்க இந்திய கூட்டணி பணியாற்றும். புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
    • 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது.
    • கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது.

    புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடி படகில் தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    புதுச்சேரி மீனவ கிராமங்களான காலாப்பட்டு, புதுக்குப்பம் வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 கிராமங்களில் சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.
    • ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்து பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக பதவியில் இல்லாத ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், 3 ஆண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையிலும் இதுவரை வாரியத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.

    அதோடு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட தங்கள் தொகுதி களுக்கு தரப்படவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குமுறலில் உள்ளனர்.

    இத்தகைய சூழலில் ஆளுங்கட்சியாக இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது கூட்டணிக்குள் மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ரகசிய கூட்டம் நடத்தினர்.

    அதையடுத்து மாநிலத்தலைவர் செல்வகணபதி யிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும்-வாரியத்தலைவர் பதவிகளை உடன் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, "முதல் அமைச்சர் ரங்கசாமி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் உணவு விருந்துக்கு அழைத்துள்ளார்" என்று அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்தது.

    ஆளுங்கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், தேர்தல் தோல்வியை பற்றி ஆராய்வும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசவும் முதல்- அமைச்சர் அழைத்து இருக்கலாம் என எண்ணினர்.

    இதனால், அங்கு கூட்டத்தில் பேச முன்கூட்டியே தயார் செய்து தீர்மானத்துடன் பல எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். ஆனால், தனியார் ஓட்டலுக்கு வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ஒட்டலில் ஏற்கெனவே தலைமைச் செயலர், கலெக்டர், அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசியல் பேச வாய்ப்பும் இல்லை என்ற சூழலில் முதல்- அமைச்சர் ஏன் அழைத்தார் என குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அமைதியாக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்கு பிறகு வந்தார்.

    அவர் அனை வரையும் நேரடியாக உணவு சாப்பிட அழைத்து சாப்பிட தொடங்கி னார். விருந்து முடிந்து அதிகாரிகளை அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர் பேசுவார் என ஆளுங்கட்சியினர் நினைத்தனர். ஆனால், முதல்-அமைச்சர் ரங்கசாமி சாப்பிட்ட பிறகும் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதனால் எதற்காக நம்மை விருந்து சாப்பிட அழைத்தார் என்று தெரியாமலேயே குழப்பத்தில் ஆளுங்கட்சி கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டனர். இதன் பிறகுதான் காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    ஆனால் காங்கிரஸ்- தி.மு.க., சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் விருந்தில் பங்கேற்கவில்லை.

    இதுதொடர்பாக விசாரித்த போது, தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக முதல்-அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×