என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மருமகள் டி.வி.யை அதிக சத்தத்துடன் வைத்து பார்த்து கொண்டு இருந்தார்.
    • மருமகள் கடித்ததில் மாமியாரின் 3 விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மும்பை :

    தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் விருஷாலி (வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டு இருந்தார். அப்போது, அவரது மருமகள் விஜயா(32) டி.வி.யை அதிக சத்தத்துடன் வைத்து பார்த்து கொண்டு இருந்தார். தான் பஜனை பாடுவதால் டி.வி. சத்தத்தை குறைக்கும்படி மாமியார் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அதற்கு மருமகள் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாமியார் விருஷாலி டி.வி.யை அணைத்தார். இதனால் வெறி கொண்ட மருமகள் விஜயா, தனது மாமியாரின் கையை பற்றிக்கொண்டு விரல்களை கடித்து குதறினார்.

    இதில் வலி தாங்க முடியாமல் விருஷாலி கதறி துடிக்கவே, அவரது மகன் ஓடி வந்து தடுக்க முயன்றார். ஆத்திரம் தணியாத விஜயா தனது கணவர் என்றும் பாராமல் அவரது கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். இதில் கணவர் செய்வதறியாமல் திகைத்து போனார்.

    இதற்கிடையே மருமகள் கடித்ததில் விருஷாலியின் 3 விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். மேலும் மருமகள் மீது சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விஜயா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
    • நாளை(வெள்ளிக்கிழமை) ஆனந்த சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை செலுத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அங்கு காணிக்கையாக ரூ.3 கோடி அளவில் தங்கம், வெள்ளி, பணம் போன்றவை பெறப்பட்டது.

    இந்தநிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆனந்த சதுர்த்தியையொட்டி லால்பாக் ராஜா கணபதி சிலை கரைப்பிற்காக ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மண்டல் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன.
    • 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன.

    மும்பை :

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் வகையில், ஜன் தன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கி கொடுக்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட 12 சதவீத வங்கி கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என பேங்க் ஆப் மகாராஷ்டிரா பொது மேலாளர் விஜய் காம்ளே கூறியுள்ளார்.

    அவுரங்காபாத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பாகவத் காரட் தலைமையில் நடந்த மாநில பேங்கர்ஸ் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு அவர் இதை கூறினார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன. அந்த கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. எனவே அந்த கணக்கு வைத்த நபர்களை தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கணக்கை செயல்பாட்டில் வைக்க கூற வேண்டும்.

    இதேபோல 18 வயது நிறைவடைந்த இளைஞர்களை கண்டறித்து ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை தொடங்க வைக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 10 ஆயிரத்து 938 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளை.
    • கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம்.

    மகாராஷ்டிரா மாநிலம் லதூரில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தில் மகாராஷ்டிரா கிராமின் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுமார் 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் கணக்கு வைத்து சேமித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வங்கிக்கு வந்த பணியாளர்கள், முகப்பு வாயில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வங்கி முழுவதும் சோதனையிட்டனர். அப்போது, வங்கியில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் ஆய்வாளர் ராமேஷ்வர் தத் கூறியதாவது:-

    வங்கியின் முகப்பு வாயில் கதவு 5 வகையான லாக்கர் கொண்டது. இந்த லாக்கரை தொழில் ரீதியாகவும், நுணுக்கமாகவும் உடைத்துள்ளனர். மேலும், வங்கி இருக்கும் கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டிட ஜன்னலில் இரும்பு கம்பி இல்லாததால் கொள்ளையார்கள் எளிதாக நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    மேலும் வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மும்பையில் உள்ள லால்பாக்ராஜா மண்டலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
    • தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது.

    மும்பை

    2014 சட்டசபை தேர்தலில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உடைந்தது. 2 கட்சிகளும் தேர்தலை தனித்தனியாக சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா 120 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.

    இருப்பினும் 2017-ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தனித்தனியாக சந்தித்தன. இந்த தேர்தலிலும் பா.ஜனதா 82 இடங்களில் வெற்றி பெற்று மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் 2 இடங்களில் (84 இடங்கள்) கூடுதலாக வெற்றி பெற்ற சிவசேனாவுக்கு மாநகராட்சியை விட்டு கொடுத்தது.

    இந்தநிலையில் 2019 சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவி போட்டியில் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.

    எதிர்பாராத திருப்பமாக கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே, 39 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார்.

    இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று மும்பை வந்தார். அவர் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்ராஜா மண்டலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதேபோல மலபார்ஹில் பகுதியில் உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு பங்களா, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு பங்களாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் வழிபட்டார். பாந்திரா பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதியையும் தரிசித்தார்.

    பின்னர் அவர் மும்பையை சேர்ந்த பா.ஜனதா கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை தலைவர் ஆஷிஸ் செலார், தேசிய நிர்வாகி வினோத் தாவ்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்பை மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் சிவசேனாவிடம் இருந்து தட்டிப்பறிக்க வியூகம் வகுப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்தது.

    கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:-

    நீங்கள் ஒருவரை வேறு இடத்தில் அடித்தால் அவருக்கு வலிக்காது. ஆனால் அவரை அவரது சொந்த இடத்தில் அடிக்கும் போது, அந்த வலி ஆழமாக இருக்கும். எனவே சிவசேனாவின் சொந்த மைதானத்தில் (மும்பை மாநகராட்சி), அந்த கட்சிக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்த வேண்டும்.

    பா.ஜனதா மும்பை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை எனில், நாம் மராட்டியத்தை வெல்ல முடியாது. தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது. எனவே உத்தவ் தாக்கரேக்கு அவருக்கான இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    நீங்கள் (உத்தவ் தாக்கரே) பிரதமர் மோடி மற்றும் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பெயரை சொல்லி ஓட்டு கேட்டீர்கள். ஆனால் உங்களுக்கு பேராசை வந்தவுடன் சரத்பவாருடன் உட்கார்ந்து கொண்டீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் தேசியவாத காங்கிரசை எதிர்த்து வந்தீர்கள். ஆனால் முதல்-மந்திரி பதவிக்காக நீங்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சமரசம் செய்து கொண்டீர்கள்.

    ஒருவர் அநீதியை பொறுத்து கொள்ளலாம். ஆனால் துரோகத்தை பொறுத்துகொள்ள கூடாது. துரோகம், கொள்கையை விட்டு கொடுத்தற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு, அவர்களுக்குரிய இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார்.
    • அவர் மீண்டும் ஆர்தர்ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    மும்பை

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவர் சஞ்சய் ராவத். சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான இவர், பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராக கட்சியை உடைத்த போதும், அதிருப்தி அணியினரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    இந்தநிலையில் சஞ்சய் ராவத் பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பத்ரா சால் மோசடியில் கிடைத்த சட்டவிரோத பணத்தின் ஒரு பகுதி சஞ்சய் ராவத்தின் மனைவி, கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர் நேற்று மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    சிறப்பு கோர்ட்டு சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 (வருகிற 19-ந்தேதி வரை) நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஆர்தர்ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    • டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

    மும்பை :

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு தொழில் அதிபர் ஜகாங்கிர் பண்டோலேவும் பலியானார். ஜகாங்கிர் பண்டோலேவின் சகோதரர் டாரியஸ் பண்டோலே (60), இவரது மனைவியான டாக்டர் அனகிதா (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டாக்டர் அனகிதாதான் விபத்துக்குள்ளான காரை ஓட்டினார்.

    பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் குஜராத் மாநிலம் வாபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் நேற்று மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

    கார் விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். ரத்தன் டாடா பதவி விலகியதை அடுத்து 2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பதவி ஏற்று, அந்த பொறுப்பில் 2016-ம் ஆண்டு வரை நீடித்தார்.

    பிரபல தொழில் அதிபரான அவர் கார் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சைரஸ் மிஸ்திரியுடன் காரில் உடன் பயணம் செய்தவர்கள் அவரது நண்பர்கள். இவர்கள் அனைவரும் பிரபல தொழில் அதிபர்கள். மேலும் அனகிதா மும்பையில் பிரபல மகப்பறு மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர்கள் குஜராத் மாநிலம் உடவா பகுதியில் உள்ள ஒரு பார்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மும்பை திரும்பி உள்ளனர். காரை பெண் டாக்டரான அனகிதா ஓட்டி உள்ளார். அவரது கணவர் டாரியஸ் முன் இருக்கையில் இருந்துள்ளார். சைரஸ் மிஸ்திரியும், ஜகாங்கிரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளனர்.

    கார் மும்பையை நெருங்கி கொண்டு இருந்தபோது பால்கர் அருகே ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் மோதியபோதுதான் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.

    இதற்கிடையே காரின் அதிவேகம், சீட் பெல்ட் அணியாதது, காரை ஓட்டிய பெண் டாக்டரின் தவறான கணிப்பு போன்ற காரணங்கள் சைரஸ் மிஸ்திரியின் உயிரை பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கார் அதிவேகமாக சென்று உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, கார் சரோட்டி சுங்கச்சாவடியில் இருந்து, விபத்து நடந்த பகுதிக்கு 20 கி.மீ. தூரத்தை 9 நிமிடங்களில் கடந்து உள்ளது. முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதி விட்டது.

    மோதிய வேகத்தில், பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜகாங்கிர் ஆகிய 2 பேரின் தலையும் முன் இருக்கையில் மோதி உள்ளது. இவர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை. மேலும் உடனடியாக ஏர் பலூனும் விரியவில்லை. இதனால் முன் இருக்கையில் தலை மோதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

    காரை ஓட்டிய பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் சீட் பெல்ட் அணிந்து உள்ளனர். மேலும் முன் இருக்கையில் ஏர் பலூன் விரிந்ததால் அவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி பற்றி மராட்டிய முன்னாள் துணை கலெக்டரும், தொழில் அதிபருமான கணேஷ் ஜக்தாப் கூறியதாவது:-

    சைரஸ் மிஸ்திரி எனக்கு மிகவும் நெருக்கமானவர். விமான பயண வசதிகள் இருந்தாலும் அவர் சாலை பயணத்தையே அதிகம் விரும்புவார். அவர் விரும்பிய சாலை பயணமே அவரது உயிரை பறித்துள்ளது.

    பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் சாலையோர உணவு கடைகளில் விற்கப்படும் வடபாவ், பாவ் பாஜி ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவார். சாலையோர டீக்கடைகளில் டீ குடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தியை பொதுவிழாவாக கொண்டாடுவதை சிவசேனா முன்னெடுத்து சென்றுள்ளது.
    • சிவசேனாவின் இந்த ஏகபோக உரிமையை தட்டிப்பறிக்கும் முயற்சி நடக்கிறது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி வெகு விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தற்போது இது அரசியலாகவும் மாறி உள்ளது. சிவசேனா உடைந்து தற்போது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைந்த அரசும், விநாயகர் சதுர்த்தியை எந்த தடையும் இன்றி கொண்டாடப்படுவதற்கு நாங்கள் தான் காரணம் என பா.ஜனதாவும் விளம்பரம் செய்து வருகிறது.

    இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 2 ஆண்டுகள் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போராடினார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    தற்போது கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி கொரோனா கொண்டாட்டங்கள் நடைபெறுவதின் பெருமை முழுவதும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவையே சேரும்.

    தொற்று நோய் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட முடியாத நாட்கள் இருந்தது. ஆனால் இது விநாயக பெருமானை வழிபடுவதை ஒருபோதும் தடுக்கவில்லை.

    லோக்மான்ய திலகரின் பாரம்பரியத்தை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை பொதுவிழாவாக கொண்டாடுவதை சிவசேனா முன்னெடுத்து சென்றுள்ளது. சிவசேனாவின் இந்த ஏகபோக உரிமையை தட்டிப்பறிக்கும் முயற்சி நடக்கிறது.

    மகாராஷ்டிரா இந்துத்வாவின் மூலமாக பூமி. வீர் சாவர்க்கர், சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே போன்றவர்கள் இங்கு பிறந்தவர்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சைரஸ் மிஸ்திரி பயணித்த சொகுசு கார், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்
    • சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

    அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பியபோது, பால்கர் மாவட்டம் சாரோட்டியில் உள்ள சூர்யா ஆற்றுப்பாலத்தில் சென்றபோது இன்று பிற்பகல் 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர் பயணித்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி உள்ளது.

    விபத்தில் உருக்குலைந்த கார்

    விபத்தில் உருக்குலைந்த கார்

    இந்த விபத்தில் காயமடைந்த கார் டிரைவர் உள்ளிடட் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சைரஸ் மிஸ்திரி, 2012 முதல் 2016 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பை கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபாக் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி உள்ளனர்.
    • ஏற்கனவே இப்பகுதியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நிலம், வீடு வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி.

    உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் கோலி 61-வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்.

    அவரது ஆண்டு வருமானம் ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலி, ஓட்டல் தொழிலில் குதித்துள்ளார். அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்ட்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா, மும்பை புறநகர் பகுதியான ஜீஹுவில் உள்ளது.

    இது தொடர்பாக கிஷோர்குமாரின் மகன் சுமித்குமாரை சந்தித்த விராட் கோலி, ஓட்டல் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார்.

    அந்த பங்களாவில் ரெஸ்டாரண்ட் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அக்கட்டிடம் கோலிக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

    பங்களாவில் ஏராளமான தாவரங்கள் உள்ளன. அவைகள் அகற்றப்படமாட்டாது என்றும் உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பங்களாவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரெஸ்ட்ராண்ட் அமைக்கப்பட்ட போது, மாநகராட்சி சார்பில் சட்ட விரோத கட்டுமானத்துக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது புதிய உணவகம், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பை கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபாக் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி உள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர்சிங், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நிலம், வீடு வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜ்தாக்கரே சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்.
    • சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மும்பை :

    ராஜ் தாக்கரேயை அவரது வீட்டுக்கு சென்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்தித்தார். இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    சிவசேனா கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்தது. இதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி முதல்-மந்திரி, ராஜ்தாக்கரே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ராஜ்தாக்கரேயும் சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் ஆவார். சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தாதரில் உள்ள சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் ஜோஷி வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே சென்று அவரை சந்தித்தார்.

    • பீகாரில் காணாமல் போன சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீட்பு.
    • ஆதார் அட்டை முகவரி மூலம் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    நாக்பூர்:

    கடந்த 2016 ஆண்டு நவம்பர் 28 ந்தேதி நாக்பூர் ரெயில் நிலையத்தில் 15 வயதுள்ள பேச்சு மற்றும் கேட்புத் திறன் இல்லாத சிறுவனை மீட்ட ரெயில்வே அதிகாரிகள் அவனை நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் இங்காலே என பெயரிடப்பட்டது. இந்தப் பெயரில் அந்த சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் வினோத் தேப்ராவ் விண்ணப்பித்தார்.

    ஆனால், அந்த சிறுவனின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் பொருந்தியிருந்ததால் புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதையடுத்து, மும்பையில் உள்ள ஆதார் ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு சென்ற அந்த காப்பக கண்காணிப்பாளர் பரிசோதித்துப் பார்த்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016 ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பீகாரில் உள்ள ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுவனான சச்சின்குமார் 2016 ஆண்டு நவம்பர் முதல் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறை மூலம் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

    அந்த தகவலின் அடிப்படையில் அவனது தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூர் வந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சச்சின் குமாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 6 ஆண்டுகளுக்கு முன்னாள் காணால் போன சச்சின் குமார் ஆதார் அட்டை உதவியுடன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

    ×