search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை தடையின்றி கொண்டாட உத்தவ் தாக்கரே தான் காரணம்: சிவசேனா
    X

    மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை தடையின்றி கொண்டாட உத்தவ் தாக்கரே தான் காரணம்: சிவசேனா

    • விநாயகர் சதுர்த்தியை பொதுவிழாவாக கொண்டாடுவதை சிவசேனா முன்னெடுத்து சென்றுள்ளது.
    • சிவசேனாவின் இந்த ஏகபோக உரிமையை தட்டிப்பறிக்கும் முயற்சி நடக்கிறது.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதை அடுத்து இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி வெகு விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தற்போது இது அரசியலாகவும் மாறி உள்ளது. சிவசேனா உடைந்து தற்போது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைந்த அரசும், விநாயகர் சதுர்த்தியை எந்த தடையும் இன்றி கொண்டாடப்படுவதற்கு நாங்கள் தான் காரணம் என பா.ஜனதாவும் விளம்பரம் செய்து வருகிறது.

    இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 2 ஆண்டுகள் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போராடினார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    தற்போது கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி கொரோனா கொண்டாட்டங்கள் நடைபெறுவதின் பெருமை முழுவதும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவையே சேரும்.

    தொற்று நோய் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட முடியாத நாட்கள் இருந்தது. ஆனால் இது விநாயக பெருமானை வழிபடுவதை ஒருபோதும் தடுக்கவில்லை.

    லோக்மான்ய திலகரின் பாரம்பரியத்தை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியை பொதுவிழாவாக கொண்டாடுவதை சிவசேனா முன்னெடுத்து சென்றுள்ளது. சிவசேனாவின் இந்த ஏகபோக உரிமையை தட்டிப்பறிக்கும் முயற்சி நடக்கிறது.

    மகாராஷ்டிரா இந்துத்வாவின் மூலமாக பூமி. வீர் சாவர்க்கர், சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே போன்றவர்கள் இங்கு பிறந்தவர்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×