என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.
    • 2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.

    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இருவரும் கட்சிக்கு உரிமை கோரி வந்த நிலையில், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு கட்சியின் வில், அம்பு சின்னத்தையும், பெயரையும் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

    வில், அம்பு சின்னத்தை இழந்தது உத்தவ் தாக்கரேக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. அவரது புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏக்நாத் ஷிண்டேக்கு கட்சி, சின்னம் வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் தலையிட நான் விரும்பவில்லை.

    2 நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை கூறிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது.
    • தேர்தல் ஆணையம் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர், பா.ஜ.க.வுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது.

    கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

    அதே சமயம் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்ற வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டது.

    சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

    ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சி பெயர், சின்னம் ரூ.2,000 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெறுவதற்கு இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன். இது முதற்கட்ட புள்ளிவிவரம் மட்டுமே, அதேசமயம் இது 100 சதவீதம் உண்மை. தொடர்ந்து பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை என பதிவிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாதம், கிளர்ச்சி சம்பவங்கள் 80 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
    • உலகளவில் இந்தியாவை முதலிடம் கொண்டு செல்வதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றார் உள்துறை மந்திரி.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜவஹர்லால் டார்டாவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:

    பிரதமர் மோடி ஆட்சிக்கு முன்பு வரை காஷ்மீர், வடகிழக்கு மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை சந்தித்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இன்று காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி, இடதுசாரி தீவிரவாதம் போன்றவை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கு ஓராண்டில் மட்டும் 1.8 கோடி சுற்றுலா பயணிகளைப் பார்த்திருக்கிறது. இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கே முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மோடி ஆட்சியில் வெறும் 3 ஆண்டுகளில் மட்டுமே ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

    இதைப்போல வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி சம்பவங்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் 60 சதவீத பகுதிகளில் சர்ச்சைக்குரிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    உலக அளவில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு செல்வதே பிரதமர் மோடியின் நோக்கம் ஆகும். ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் உற்பத்தி மையமாக மாறி வருகிறது. மக்களுக்கு பலனளிக்கக்கூடிய முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறும். அதேபோல், செயற்கைக்கோள் துறையில் இந்தியா இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் முன்னேறும்.

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் சிறப்பானவை. பொது முடக்கத்துக்கு அவர் விடுத்த அழைப்புக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது என தெரிவித்தார்.

    • சிவ சேனா கட்சி மற்றும் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது
    • உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதவாளர்கள் மத்தியில் பேசினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா கட்சிக்கு உரிமை கொண்டாடி உத்தவ் தாக்கரே அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தின. இதில், ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    ஏக்நாத் ஷிண்டே அணிதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று கூறிய தேர்தல் ஆணையம், கட்சியின் வில்-அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.

    இதற்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம் இதற்கு முன் செய்யாததை செய்துள்ளது. ஆதரவாளர்கள் அனைவரும் பொறுமைகாக்க வேண்டும். மும்பை உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது. திருடர்களுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்' என்றார்.

    உத்தவ் தாக்கரே அணியினர் 'சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்ற பெயரையும், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
    • ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

    அதன்பின், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மாநில முதல் மந்திரி ஆனார்.

    இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

    ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.

    இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.

    உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். சிவசேனா சின்னத்தைத் திருடி விட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.

    • பேஸ்பால் மட்டையால் தாக்கி காரை சேதப்படுத்தியதாக பிருத்வி ஷா நண்பர் புகார் அளித்தார்.
    • பிருத்வி ஷா முதலில் தங்களை தாக்கியதாக எதிர்தரப்பினர் கூறி உள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை ஓஷிவாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பிருத்வி ஷா நேற்று தனது நண்பருடன் சாப்பிடச் சென்றபோது, இரண்டு ரசிகர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்) அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். பிருத்வி ஷா அனுமதியின் பேரில் சில புகைப்படங்கள் எடுத்த அவர்கள், தொடர்ந்து மேலும் படங்கள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது, மறுப்பு தெரிவித்த பிருத்வி ஷா, தனது நண்பர் மற்றும் ஓட்டல் மேலாளரை அழைத்து, ரசிகர்களை வெளியேற்றும்படி கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பிருத்வி ஷா நண்பருடன் வெளியே வந்தபோது அவரை சிலர் பேஸ்பால் மட்டைகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது காரையும் பேஸ்பால் மட்டையால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பிருத்வி ஷா வேறு காரில் ஏறி சென்றுள்ளார்.

    நண்பரும் மற்றும் சிலரும் அவரது காரை ஓட்டிச் சென்றனர். ஆனால், அந்த காரை வாகனங்களில் துரத்தி வந்து சிலர் தாக்கியதாகவும், 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் பிருத்வி ஷாவின் நண்பர் புகார் அளித்தார். அதன்பேரில் சப்னா கில் என்ற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குற்றம்சாட்டப்பட்ட சப்னா, கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் மறுத்துள்ளனர். பிருத்வி ஷா முதலில் தங்களை தாக்கியதாக அவர்கள் கூறி உள்ளனர். 

    • மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக" கூறி அழைப்பை துண்டித்து கொண்டார்.
    • அவுரங்கபாத் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவுரங்காபாத்:

    மராட்டிய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை 5.45 மணி அளவில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய ஆசாமி "நான் பணம் செலுத்தி விட்டேன். ஆனால் எனது வேலை நடக்கவில்லை. இதனால் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக" கூறி அழைப்பை துண்டித்து கொண்டார். இது பற்றி அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதன்பேரில் வெடிகுண்டு படை பிரிவுடன் ஐகோர்ட்டிற்கு சென்று 2 மாடிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அந்த வாடகை வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில், படுக்கைக்கு கீழே மேகாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்து உள்ளது.
    • சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் நலசோப்ரா நகரில் விஜய் நகர் பகுதியில் சீதா சதன் குடியிருப்பில் லிவ்-இன் முறையில் ஹர்தீக் ஷா என்ற 27 வயது வாலிபரும், மேகா தனசிங் தோர்வி என்ற 35 வயது பெண்ணும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்து உள்ளனர்.

    அவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் என்றும் வீட்டு உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களிடம் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என கூறியுள்ளனர்.

    இந்நிலையில், அந்த பிளாட்டில் இருந்து அழுகிய நிலையில் வாடை வந்து உள்ளது. உடனடியாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசில் தெரிவித்து உள்ளனர். போலீசார் அந்த வாடகை வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில், படுக்கைக்கு கீழே மேகாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    மூத்த காவல் ஆய்வாளர் ஷைலேந்திரா நாகர்கர் கூறும்போது, "கடந்த வாரம் மேகா கொல்லப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது" என கூறியுள்ளார். அவருடன் ஒன்றாக லிவ்- இன் முறையில் வசித்து வந்த ஹர்தீக் ஷா தப்பி செல்ல முயன்று உள்ளார். அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் வேலையில்லாமல் இருந்து உள்ளார். இதனால், அந்த ஜோடிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதுபோன்று ஒரு முறை சண்டை நடக்கும்போது, மேகாவை அவர் கொலை செய்துவிட்டார். ஆனால், எந்த தேதியில் சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர், இதுபற்றி தனது சகோதரிக்கு ஹர்தீக் குறுஞ்செய்தி அனுப்பி தகவல் தெரிவித்து உள்ளார்.

    தப்பி செல்வதற்கு முன் பிளாட்டில் இருந்த நாற்காலி உள்ளிட்ட மர பொருட்களை அவர் விற்று உள்ளார். இதுபற்றி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
    • 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    மும்பை :

    மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது.

    அந்த நேரத்தில் திடீரென தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் அதிகாலை 5 மணிக்கு ராஜ்பவனில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி பதவி ஏற்ற 3 நாளில் கவிழ்ந்தது.

    இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து சரத்பார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டி.வி. நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    நிலையான அரசு தேவைப்பட்டதால் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்சி அமைக்க நாங்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின் போது சரத்பவாரும் இருந்தார். ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. நிலைமை எப்படி மாறியது என நீங்களே பார்த்தீர்கள். நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட தகவலை சரத்பவார் மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேவேந்திர பட்னாவிஸ் ஜென்டில் மேன், பண்பட்டவர் என்று நினைத்தேன். அவர் பொய்யை நம்பி இதுபோன்ற ஒரு அறிக்கையை விடுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை." என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    • மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்கத்தில் குஜராத், மும்பை அணிகள் மோதுகின்றன.
    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது.

    87 வீராங்கனைகள் ரூ.59½ கோடிக்கு ஏலம் விடப்பட்டனர். அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை அணி வசப்படுத்தியது.

    இந்நிலையில், பிரிமீயர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். 2-வது, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணி இறுதிச்சுற்றை எட்டும். மொத்தம் 22 ஆட்டங்கள் நடக்கின்றன. தினமும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

    மார்ச் 4-ம் தேதி டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மறுநாள் இரட்டை ஆட்டங்களாக பெங்களூரு- டெல்லி, உ.பி. வாரியர்ஸ்- குஜராத் அணிகள் சந்திக்கின்றன. மார்ச் 26-ம் தேதி இறுதிப்போட்டி மும்பை பிரபோர்னில் நடைபெறும்.

    • மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடந்தது.
    • இதில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை மந்தனா ரூ.3.4 கோடிக்கு விலை போனார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26- ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 5 அணிகள் களம் இறங்குகின்றன.

    இந்த அணிகளுக்கு வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் நேற்று பிற்பகல் நடந்தது. 5 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.12 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது. ஏலப்பட்டியலில் 179 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 449 வீராங்கனைகள் இடம் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார்.

    முதல் வீராங்கனையாக இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியது.

    இந்திய அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.8 கோடிக்கு மும்பை அணி சொந்தமாக்கியது.

    ஜெமிமா ரோட்ரிக்சை ரூ.2.2 கோடி மற்றும் ஷபாலி வர்மாவை ரூ.2 கோடிக்கு டெல்லி அணியும் வாங்கியது.

    ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ.2.6 கோடிக்கு உ.பி. வாரியர்ஸ் வாங்கியது.

    வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகரை ரூ.1.9 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

    மிடில் வரிசை பேட்டர் யாஸ்திகா பாட்டியா ரூ.1½ கோடிக்கு மும்பை வாங்கியது.

    இளம் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷை ரூ.1.9 கோடிக்கு பெங்களூரு வாங்கியது.

    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை ரூ.1½ கோடிக்கு பெங்களூரு அணி உரிமையாக்கியது.

    தேவிகா வைத்யாவை ரூ.1.4 கோடிக்கு உ.பி.வாரியர்ஸ் அணி வாங்கியது.

    மேலும், வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நதாலி சிவெரை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும் தட்டிச் சென்றது.

    • மாணவர் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு
    • படிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலம் என சந்தேகிக்கின்றனர்.

    மும்பை:

    மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி-யில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்த அகமதாபாத் மாணவர் தர்சன் சோலங்கி நேற்று மாலை திடீரென விடுதியின் 7வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை என்று உறுதி செய்யும் வகையில் மாணவர் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுகிறது. படிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலம் என சந்தேகிக்கின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக சாதி பாகுபாடு காட்டப்பட்டதாகவும், அதனால் மாணவர் தற்கொலை செய்திருப்பதாகவும், மாணவர் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இந்த கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவரின் முதல் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமை முடிந்த நிலையில் அவர் இறந்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×