என் மலர்
குஜராத்
- சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
- இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் திருடியதற்காக வாலிபர் ஒருவரை காரின் முன்பக்க பகுதியில் கட்டிவைத்து தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோத்ரா தாலுகா கன்கு தம்பலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் பொருட்களை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து அறிந்த கடை உரிமையாளர் மற்றும் உடன் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இச்சம்பவம் கடந்த 29-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் கவனத்திற்கு சென்ற வீடியோ குறித்து விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை ஒப்படைக்காமல், சட்டத்தை கையில் எடுத்து கொடூரமான முறையை கையாளும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதால் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- 20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 வயதான நிலேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது தாயை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முரண்பாடு வாக்குவாதமாய் மாறி கடைசியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ளார்.
தாயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் முன்னாள் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு போலீசாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர்.
- அரபிக்கடலில் புயல் உருவாகி இருக்கிறது.
- இந்த புயலுக்கு ‘அஸ்னா’ என பாகிஸ்தான் பெயரிட்டு இருக்கிறது.
குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த கனமழைக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதைப்போல தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
விஸ்வமித்ரி உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை கடந்து வெள்ளம் பாய்வதால் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
இந்த நிலையில், அரபிக்கடலில் புயல் உருவாகி இருக்கிறது. கட்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது.
இது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று 11.30 மணி நிலவரப்படி இது குஜராத்தின் பூஜ் பகுதியில் இருந்து மேற்கு-வடமேற்கே 190 கி.மீ. அருகே மையம் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்பகுதியை விட்டு கடந்து விடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த புயலுக்கு 'அஸ்னா' என பாகிஸ்தான் பெயரிட்டு இருக்கிறது.
அரபிக்கடலின் தற்போதைய சூழலை பொறுத்தவரை இந்த புயல் மேலும் வலுப்பெற வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே குஜராத்தில் நேற்று மழை வெகுவாக குறைந்திருந்தது. வெறும் 4 பகுதிகளில் மட்டுமே 15 மி.மீ. முதல் 26 மி.மீ. வரை மழை பெய்திருந்தது. மீதமுள்ள பகுதிகளில் லேசான தூறல் அல்லது மழை இல்லாத நிலையே காணப்பட்டன.
அதேநேரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் கரையோர பகுதிகள் இன்னும் நீருக்குள்ளேயே மூழ்கி உள்ளன. குறிப்பாக கேதா மாவட்டத்தின் கேதா நகரின் முக்கிய சந்தை மற்றும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
இதைப்போல தேவ்பூமி துவாரகா, பரூச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை தொடர்ந்து குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடிசைகள் மற்றும் பலவீனமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பள்ளிகள், கோவில்கள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கட்ச் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-மந்திரி பூபேந்திர படேலும் ஆய்வு செய்தார்.
ஏற்கனவே கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கும் குஜராத் மக்களுக்கு, இந்த புதிய புயல் சின்னம் மேலும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
- குஜராத் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாதோராவில் கனமழையில் சிக்கி 6 வெளிநாட்டினர் தவித்து வருவதாக மீட்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வெள்ளம் நிறைந்த சாலையில் வெளிநாட்டினர் 6 பேரையும் புல்டோசரில் அழைத்து சென்று மீட்புப்படையினர் மீட்டனர்.
வெளிநாட்டினர் புல்டோசரில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
குஜராத் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது.
- ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன.
குஜராத் மாநிலம் வதோதராவில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து விஸ்வாமித்ரி நதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலைகளையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 10 முதல் 15 அடி நீளமுள்ள பல முதலைகள் சாலைகள், பூங்காக்கள், குடியிருப்புகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் 10 முதலைகளை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
10 முதலைகளில் 2 முதலைகள் வனபகுதியில் விட்டதாகவும், 8 முதலைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஆற்றின் நீர்மட்டம் குறையும் போது அவற்றை விடுவிப்போம் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் விஸ்வாமித்ரி ஆற்றில் 300 சதுப்புநில முதலைகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆற்றின் நீர் மட்டம் அதன் அபாய கட்டமான 37 அடியிலிருந்து 12 அடியாக குறைந்து இன்று காலை 24 அடியாக இருந்தது.
எவ்வாறாயினும், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மழைக்காலத்திலும், முதலைகள் ஆற்றின் பாதுகாப்பான எல்லைகளை விட்டு வெளியேறி, வெள்ளம் நிறைந்த தெருக்களில், நகரின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன, ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
விஸ்வாமித்ரி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து முதலைகளை மீட்கும் பணி ஆண்டு முழுவதும் தொடரும். அதே வேளையில், மழைக்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
- தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
- வதோதராவில் வசிக்கும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர்.
மழை தொடர்பான விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் 30 வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக மூன்று கார்கள் நீரில் மூழ்கியதில் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
வதோதராவில் வசிக்கும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மாருதி சுஸுகி சியாஸ், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ரூ. 50 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் ஆடி ஏ6 ஆகியவை ஒரே இரவில் பெய்த கனமழையால் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
"இனி வாழ்வதற்கு எதுவுமில்லை... என்னிடம் இருந்த 3 கார்களும் இப்போது போய்விட்டன" என்று அவர் தலைப்பிட்டு கார்கள் தண்ணீரில் மூழ்கிய படங்களை பதிவிட்டுள்ளார்.
- 4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியா தாலுகாவில் 454 மிமீ மழை பெய்துள்ளது. ஜாம்நகரில் 387 மிமீ மழையும், ஜாம்நகரில் உள்ள ஜாம்ஜோத்பூர் தாலுகாவில் 329 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.
4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சூரத், வதோதரா, வல்சட், தபி, நவ்சரி, நர்மதா, பஞ்சமஹாத் ஆகிய மாவட்டங்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 22 பேர் பலியாகினர். இதனால் குஜராத்தில் கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்தார்.
இதுப்பற்றி பூபேந்திர படேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி குஜராத்தில் கனமழை நிலவரம் குறித்து என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை வழங்கினேன். மக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதலை பிரதமர் மோடி வழங்கினார். மேலும் மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், உதவியையும் அவர் உறுதி செய்தார்" என தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நாளை வரை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது.
- இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி ஆகும்.
குஜராத்தில் மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதைக்கான (MAHSR) பாலம் கேடா மாவட்டத்தில் உள்ள வத்ராக் ஆற்றின் மீது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் "ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையங்களை இணைக்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக 280 மீட்டர் நீளமுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் தற்போது நிறைவடைந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளது.
ரெயில்வே அமைச்சக திட்டத்தில் மொத்தம் 24 ஆற்றுப் பாலங்கள் உள்ளன. குஜராத்தில் 20 மற்றும் மகாராஷ்டிராவில் 4 உள்ளன. தற்போது குஜராத்தில் உள்ள 20 பாலங்களில் 10 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
"இந்நிலையில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது. இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி" ஆகும்.
"இந்த நதி ராஜஸ்தானின் துங்கர்பூர் மலைப்பகுதியில் உருவாகி குஜராத்தில் மேகராஜ் தாலுகாவின் மொய்டி கிராமத்திற்கு அருகில் நுழைகிறது. வத்ராக் ஆறு ஆனந்த் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
- கனமழையால் நக்த்ரானா - லக்பத் நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
- கனமழையால் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கட்ச், காந்தி நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
கட்ச் பகுதியில் பெய்த கனமழையால் நக்த்ரானா - லக்பத் நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மோர்பி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிராக்டர் ட்ராலி யுடன் 7 பேர் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 7 பேரையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு முதல்வர் பூபேந்திர பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
- கிரேன் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது விழுந்தது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது.
- கிரேன் விழுந்த அந்த பங்களாவில் ஆள் இல்லை மற்றும் அது ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் மெட்ரோ கட்டுமான பணியின்போது ஒரு கிரேன் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது சரிந்தது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மெட்ரோ ரெயில் பணியின்போது குழுவினர் கிரேனை பயன்படுத்தி ஒரு பொருளை தூக்கும்போது, கிரேன் கட்டிடத்தின் மீது விழுந்தது என்று தீயணைப்பு அதிகாரி ஹர்திக் படேல் கூறினார்.
கிரேன் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது விழுந்தது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக, கிரேன் விழுந்த அந்த பங்களாவில் ஆள் இல்லை மற்றும் அது ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
- கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் திஷா பட்டேல் என்ற சிறுமி, ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. சிறிது நேரம் கழித்து, அவர் முன்னே ஒரு கார் வந்தது.
காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் சுதாகரித்து எழுவதற்குள், அந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.
சிறுமியின் மீது கார் மோதியவுடன் காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் சிறுமியை பார்க்க வெளியே வருகிறார். அதற்குள் சிறுமி உயிரிழந்து விட்டார்.
கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வைர தொழிலின் மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.
வைர உற்பத்தி குஜராத்தின் முக்கியமான தொழிலாளாகும். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட விரக்தியால் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகியுள்ளது. ஆகவே தொழிலாளர்களை காக்கும் பொருட்டு குஜராத்தில் உள்ள வரை வைர தொழிலாளர் சங்கத்தால் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டது.
இந்த தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவைக்கு கடந்த 20 நாட்களில் 1500 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர். தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக இந்த ஹெல்ப்லைனுக்கு கால் செய்துள்ளனர்.
மேலும் கஷ்டப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வைர தொழிலாள சங்கம் உதவி செய்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 20 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய், சக்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொழிலாளர் சங்கம் வழங்கியுள்ளது.
வைர வியாபாரி லால்ஜி படேல், கஷ்டப்படும் 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.






