என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • ஆந்திர மாநிலத்தில் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்.
    • மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் இந்து மத நிபுணர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    ஆந்திர மாநிலத்தில் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். திருப்பதியில் நடந்த கலப்பட நெய் முறைகேடு அராஜகம் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க ஆந்திர மாநில ஐ.ஜி. மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது.

    இந்த குழுவினர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

    எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளிக்கிறேன்.

    மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு கோவிலிலும் மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களுக்கு மரியாதை கிடைப்பதை உறுதி செய்வோம்.

    அனைத்து கோவில்கள், மசூதிகள் தேவாலயங்களில் மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். எந்த மதத்தின் ஆலயமும் அந்தந்த மதத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

    கடந்த ஆட்சியில் திருப்பதி கோவிலில் பிற மதத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான குழு ஒரு சூதாட்டம் போல தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் நடந்துள்ளது.

    ஆட்சி மன்றங்களில் குற்றவாளிகள் சமூக விரோதி சக்திகள் இல்லை என்பதை உறுதி செய்வோம். தேவைப்பட்டால் கடுமையான சட்டம் கொண்டு வருவோம்.

    திருப்பதி கோவில் வளர்ச்சி குறித்து மத்திய மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்தோம். கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு பக்தருக்கும் இனி எந்த பிரச்சனையும் வராது என்று உறுதி அளிக்கிறேன். திருப்பதி லட்டுகள் தயாரிப்பில் கடந்த ஆட்சியில் செய்த தவறுக்காக தவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2-வது இடம் பிடித்தது.
    • ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா சி உடன் மோதியது.

    இதில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட்டானது.

    63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி அணி களமிறங்கியது. அந்த அணியின் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில் இந்தியா சி அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    மற்றொரு போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதின முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.

    இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 119 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார்.

    இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணி 115 ரன்களில் சுருண்டது. இதனால் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணி வெற்றி பெற்றது.

    மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2வது இடமும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி மூன்றாம் இடமும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.

    • முதலமைச்சர், முன்னாள் முதல்வர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
    • லட்டில் மாட்டிறைச்சி கொழுப்புகலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர், முன்னாள் முதல்வர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    லட்டு விவகாரம் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியுள்ள நிலையில் திருப்பதி தேவாஸ்தான அதிகாரிகள் இது குறித்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ் திருப்பதி புனிதத்தன்மை மீட்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "வெங்கடேச பெருமானுக்கு நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் அல்லது சமயச் சடங்குகளின் போது ஏதேனும் 'தோஷங்கள்' நடந்திருப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது உணவு மாதிரிகளை நறுமணம், சுவை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது."

    "பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அவர்கள் அமைதியான மனதுடன் பிரார்த்தனை செய்யவும், நாளை ஒரு நாள் 'சம்ப்ரோக்ஷணம்' மற்றும் 'சாந்தி ஹோமம்' நடத்தப்படும். இதன் மூலம், ஆலயத்தின் புனிதம் மீட்கப்படும் என நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    • பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்
    • ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விநியோகிக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரசாதமான லட்டு மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று முதல் வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். விரத முடிவில் முவில் அக்டோபர் 1,2-ந் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

    மேலும் நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற அனாச்சாரங்கள் நடபத்தை தடுக்க தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷனா [பாதுகாப்பு] சங்கம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பிற மதங்களை ஒப்பிட்டு இந்த விவகாரத்தில் பவன் கல்யாண் மற்றொரு கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

    அதாவது, திருப்பதி கோவிலில் நடந்ததுபோல தேவாலயத்திலோ, மசூதியிலோ நடந்திருந்தால் இந்நேரம் நாட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அந்த விஷயம் உலகம் முழுவதும் பேசப்பட்டு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கும். ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் மத நம்பிக்கை புண்பட்டுள்ள வேளையில் நாம் மதச்சார்பற்றவர்கள் எனக் கூறி இதை பிரச்சனையாக வேண்டாம் என்று கூறுகின்றனர். ஏன்! இந்துக்களுக்கு உணர்வுகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • அரசியல் நோக்கங்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை தீவிரமாக புண்படுத்துகிறார்.

    திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது எனவும் நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து ஜெகன் மோகன் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சந்திரபாபு நாயுடுவின் பொறுப்பற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளால் பக்தர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பகவான் வெங்கடேஷ்வரருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடிகணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை சரியான முறையில் கையாளாமல் போனால், இந்தப் பொய்கள் பக்தர்கள் மனதில் பரவலாக வேதனையைத் தூண்டி, பல்வேறு நிலைகளில் பிரச்னைகளைத் தூண்டும்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது சுயாதீன வாரியம். அதில், பலதரப்பட்ட சூழல்களில் இருந்து வரும் உண்மையான பக்தர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களில் சிலர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரம் அறங்காவலர் குழுவிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகத்தில் ஆந்திர பிரதேச மாநில அரசிற்கு மிகச் சிறிய பங்கு மட்டுமே உள்ளது.

    கோவிலுக்குள் கொண்டு வரப்படும் நெய்யின் தரம் குறித்து பல சோதனைகள் நடத்தப்படுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு டெண்டர் விடுவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகச் சோதனைகள் மற்றும் பலதரப்பட்ட சோதனைகளும் நடத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது.

    இதேபோன்ற நடைமுறைகள் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியிலும் பின்பற்றப்பட்டது. இத்தகைய கடுமையான சோதனைகளுக்குப் பின்னரும் பிரசாதம் செய்வதற்கு கலப்பட நெய் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை.

    சந்திரபாபு நாயுடு ஒரு தொடர்ச்சியான பொய்யர். அரசியல் நோக்கங்களுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை தீவிரமாக புண்படுத்தியுள்ளார்.

    அவரது செயல்கள் ஒரு முதல்வரின் மரியாதை மட்டுமின்றி, பொது வாழ்க்கையில் உள்ள அனைவரின் மரியாதையையும், உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தையும் குறைத்துவிட்டன.

    இந்த முக்கியமான தருணத்தில் நாடு முழுவதும் உங்களை நம்பியுள்ளது. இழிவான பொய்களைப் பரப்பிய சந்திரபாபு நாயுடு கடுமையான முறையில் கண்டிக்கப்பட வேண்டும்.

    மேலும், இந்த விவகாரத்தில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதுவே, கோடிக்கணக்கான இந்துக்களின் மனதில் சந்திரபாபு நாயுடு உருவாக்கிய சந்தேகங்களை நீக்கி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதம் குறித்த அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு குற்றம்சாட்டி வருகிறது.
    • ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜென் மோகன் வீட்டை முற்றுகையிட்டனர்.

    திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் தான் இந்த தவறு அரங்கேறியது என ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு குற்றம்சாட்டி வருகிறது.

    இதனை அம்மாநில முன்னாள் முதல்வர் ஜென் மோகன் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இந்த நிலையில், லட்டு விவகாரத்தில் ஜென் மோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜென் மோகன் வீட்டை முற்றுகையிட்டனர்.

    இதேடு, வீட்டின் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில், அம்மாநில முன்னாள் முதல்வர் வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில், வீட்டின் பாதுகாவலர் அறையின் கண்ணாடி உடைந்தது. தாக்குதல் மட்டுமின்றி ஜெகன் மோகன் வீட்டு சுவர்களில் காவி வண்ணங்களை பூசியுள்ளனர்.

    • கலப்பட நெய் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கோயில் பரிகார பூஜைகள் செய்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

    அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கி 9 நாட்கள் திருப்பதி மலையில் ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது.

    அதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சந்திப்பின்போது கலப்பட நெய் விவகாரம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கோயில் பரிகார பூஜைகள் செய்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    • வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமாளை பிரார்த்திக்கிறேன்.
    • கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகார சபதம்

    திருப்பதி, செப்.22-

    திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்களை முந்தைய அரசு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது ஆந்திராவில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், வெங்கடேசப் பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக, ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் அறிவித்தார்.

    அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது குறித்து நான் மிகவும் வேதனையடைந்தேன்.

    அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தில் வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

    இந்த தருணத்தில், நான் கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகார சபதம் எடுத்து, 11 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறேன்.

    11 நாள் பரிகார தீட்சை முடிவில் அக்டோபர் 1,2-ந் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன்' என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விரதத்தை இன்று தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

    • லட்டு பிரசாதத்தில் கலப்படம் உள்ளதாக கூறினால் எவ்வளவு பக்தர்களின் மனங்கள் பாதிக்கப்படும் என்பதை இந்த வயதிலாவது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
    • மீண்டும் கடவுளிடமே அரசியல் செய்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்த சர்சசையால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த ஆட்சியில் இது நடந்ததாக கூறியிருப்பதால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார் என நினைக்கவில்லை. ஏழுமலையானுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர்.

    லட்டு பிரசாதத்தில் கலப்படம் உள்ளதாக கூறினால் எவ்வளவு பக்தர்களின் மனங்கள் பாதிக்கப்படும் என்பதை இந்த வயதிலாவது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும்.

    அரசியலை திசை திருப்புவதற்காக இது போன்று செய்து வருகிறார்.

    ஏழுமலையான் கோவில் முன்பாக இருந்த வைக்கால் மண்டபத்தை இடித்ததால் கடவுள் அவருக்கு பலமான அடியை கொடுத்தார். அதன் பிறகாவது திருந்துவார் என நினைத்தால் திருந்துவதாக இல்லை.

    சித்தூர் மாவட்டத்தில் தான் சந்திரபாபு நாயுடு பிறந்தார். நானும் பிறந்தேன். மீண்டும் கடவுளிடமே அரசியல் செய்கிறார். கடவுளே பார்த்து அவருக்கு தண்டனை கொடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றச்சாட்டு.
    • பலகோடி பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெய் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும் கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமளா ராவ் நியமிக்கப்பட்டார்.

    அவர் மேற்கொண்ட ஆய்வில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை அறிந்தார்.

    அந்த நெய்யை குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தார். பரிசோதனை அறிக்கையில், "நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளது. இது தரமற்ற நெய் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து முந்தைய ஆட்சியின் கொள்முதல் டெண்டரை சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. கடந்த ஆகஸ்ட் முதல் அனைத்து பிரசாதங்களுக்கும் கர்நாடக அரசின் நந்தினி நெய் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஆட்சியில் பிரசாதங்கள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட தாக சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்ய அறிக்கை தயாராகி வருகிறது.

    இந்தநிலையில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை விநியோகம் செய்ததற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

    நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தலைமையில், 4 ஆகம ஆலோசகர்கள், பிரதான அர்ச்சகர் வேணு கோபால தீட்சிதர், இணை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது கோவிலை சுத்தப்படுத்தி யாகம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. அதன்படி கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மகா சாந்தி யாகம், சாந்தியாகும் மகா சம்ராக்ஷண யாகம் நடத்த உள்ளனர்.

    இதற்கிடையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    ஏழுமலையான் விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புகழை குலைப்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் கடந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தோன்றுகிறது.

    ஏழுமலையான் விஷயத்தில் நான் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பேன். ஒருபோதும் நாங்கள் தவறிழைக்க மாட்டோம். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசின் நடவடிக்கையால் பலகோடி பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. அந்த பக்தர்களில் நானும் ஒருவன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் எடுத்தது.
    • இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்கள் எடுத்துள்ளது.

    அனந்தபூர்:

    ஆந்திராவின் அனந்தபூரில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.

    தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. ரிக்கி புல் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார். இதுவரை இந்தியா டி அணி 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷஷ்வாத் ராவத் 124 ரன்னில் அவுட்டானார். ஆவேஷ் கான் அரை சதம் கடந்தார். ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சி சார்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா சி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அபிஷேக் பரோல் அரை சதம் கடந்து 82 ரன் எடுத்தார். புல்கிட் நாரங் 35 ரன்னும், பாபா இந்திரஜித் 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில் இந்தியா சி அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், அக்யூப் கான் தலா 3 விக்கெட்டும், முலானி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்தது. ரியான் பராக், ஷஷ்வாத் ராவத் அரை சதம் கடந்தனர். இதுவரை இந்தியா ஏ அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றது.

    • லட்டு பிரசாதத்தில் மிருக எச்சங்கள் இருந்ததை அறிந்த நொடியில் எனது மனம் உடைந்துவிட்டது.
    • இதற்கு பிராயச்சித்தமாக ஒரு தவம் செய்ய முடிவெடுத்துள்ளேன்.

    திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "புனிதமாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம், கடந்த ஆட்சியாளர்களின் கேடுகெட்ட போக்கின் விளைவாக தூய்மையற்றதாகிவிட்டது. விலங்கு எச்சங்களால் மாசுபட்டுள்ளது. இந்தப் பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனது இந்து மக்களின் மீதான கறையாக பதிந்துவிட்டது.

    லட்டு பிரசாதத்தில் விலங்கு எச்சங்கள் இருந்ததை அறிந்த அடுத்த நொடியே குற்ற உணர்வால் மனம் உடைந்து விட்டது. மக்கள் நலனுக்காகப் போராடி வரும் எனக்கு, இதுபோன்ற பிரச்னைகள் ஆரம்பத்திலேயே கவனத்திற்கு வராதது வேதனை அளிக்கிறது. கலியுகத்தின் கடவுளான பாலாஜிக்கு இழைக்கப்பட்ட இந்த பயங்கரமான அநீதிக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதியாக நான் ஒரு தவம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

    நாளை (செப்டம்பர் 22) காலை குண்டூர் மாவட்டம், நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் நான் தீட்சை எடுப்பேன். 11 நாட்கள் தீட்சை தொடர்ந்த பிறகு திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்கிறேன். 'கடவுளே... கடந்த ஆட்சியாளர்கள் உமக்கு எதிராக செய்த பாவங்களைக் கழுவும் சக்தியை எனக்குக் கொடுங்கள்' என்று நான் மன்றாடுகிறேன்.

    கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தான அமைப்பில் அங்கம் வகிக்கும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், ஊழியர்களும் கூட அங்குள்ள தவறுகளை கண்டு பிடிக்க முடியாமலும், கண்டு பிடித்தாலும் பேசுவதில்லை என்பதுதான் எனக்கு வேதனையை அளிக்கிறது. முந்தைய பேய் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் பயந்ததாகத் தெரிகிறது.

    திருமாலின் புனிதத்தை இழிவுபடுத்தும் செயல்களைச் செய்த கடந்த ஆட்சியாளர்களின் செயல் இந்து தர்மத்தைப் பின்பற்றும் அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. மேலும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் விலங்கு எச்சங்கள் அடங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×