என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.

    இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் .

    இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.

    அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தெலுங்கானா தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலையும் நடத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விரும்புகிறார்.
    • ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார்.

    இந்த திடீர் சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அடுத்த 3 மாதங்களுக்குள் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்படவுள்ளது.

    இந்நிலையில் முன்கூட்டியே தெலுங்கானா தேர்தலுடன் ஆந்திர சட்டமன்ற தேர்தலையும் நடத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விரும்புகிறார்.

    எதிர்க்கட்சிகள் இதுவரை கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் தற்போது தனக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருதி முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்புகிறார்.

    சந்திரபாபு ஏற்கனவே பா.ஜ.க உடன் கூட்டணி வைத்து 2019-ம் ஆண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்க்க திட்டமிட்டார்.

    எனவே சந்திரபாபுவை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் நம்ப தயாராக இல்லை.

    அதே வேளையில் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய சில திட்டங்கள் அல்லது மசோதாக்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    எனவே முன்கூட்டியே தேர்தல் நடத்தும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என தெரிகிறது.

    ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • திருப்பதி கோவில் வாசலில் திடீரென டிராலியுடன் உண்டியல் அண்டா கீழே சாய்ந்தது.
    • கோவிலுக்குள் சாமி தரிசனத்துக்காகச் சென்ற பக்தர்கள் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள பிரதான உண்டியலில் நேற்று காலை காணிக்கைகள் நிரம்பியதும், புதிய பரகாமணி மண்டபத்துக்கு கொண்டு சென்று எண்ணுவதற்காக உண்டியலை சீல் வைத்து தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் உண்டியல் அண்டாவை டிராலியில் வைத்து கோவிலுக்கு வெளியே கொண்டு வந்தனர். கோவில் வாசலில் திடீரென டிராலியுடன் உண்டியல் அண்டா கீழே சாய்ந்தது. அதில் இருந்த நகை, பணம், சில்லறை நாணயங்கள் சிதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைப் பார்த்த ஒப்பந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் கோவிலுக்குள் சாமி தரிசனத்துக்காகச் சென்ற பக்தர்கள் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர்.

    அங்கிருந்த தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து காணிக்களை சேகரித்து, உண்டியல் அண்டாவில் போட்டு மீண்டும் சீல் வைத்து, பத்திரமாக லாரியில் ஏற்றி புதிய பரகாமணி மண்டபத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    டிராலியில் ஏற்றி வந்த உண்டியல் அண்டா கோவில் வாசலில் கீழே விழுந்ததற்கு ஒப்பந்த ஊழியர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே காரணம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம்.

    திருப்பதி:

    சதீஷ்கர் மாநிலம் பிஜப்பூர், உசூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தேவா. இவரது மனைவி போஜ்ஜா.போஜ்ஜாவுக்கு ஏற்கனவே 4 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தேவா தனது மனைவியுடன் ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

    மீண்டும் கர்ப்பமான போஜ்ஜா பிரசவத்திற்காக கடந்த 2-ந் தேதி பத்ராசலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போஜ்ஜாவுக்கு இது 8-வது பிரசவம் ஆகும்.

    அங்கு போஜ்ஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரது ஹீமோகுளோபின் அளவு 5.1 கிராம் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் போஜ்ஜா வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் சுகப்பிரசவத்தில் போஜ்ஜாவுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தேவாவுக்கு 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போஜ்ஜாவுக்கு ஏற்கனவே பிரசவம் பார்த்த டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • தண்ணீரில் மூழ்கிய லெனின் நாகக்குமார் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் லெனின் நாகக்குமாரின் பிணத்தை மீட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், மச்சிலி பட்டினத்தை சேர்ந்தவர் லெனின் நாகக்குமார் (வயது 23). மச்சிலி பட்டினத்தில் பட்ட படிப்பை முடித்த இவர் மேற்படிப்புக்காக கடந்த 2021-ம் ஆண்டு கனடா நாட்டிற்கு சென்றார்.

    அங்குள்ள லேக் அவுட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சில்வர் நீர்வீழ்ச்சிக்கு 3 நண்பர்களுடன் சென்றார்.

    தங்களது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென லெனின் நாகக்குமார் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். அவரை மீட்க அவரது நண்பர்கள் நீண்ட நேரம் போராடினர்.

    தண்ணீரில் மூழ்கிய லெனின் நாகக்குமார் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் லெனின் நாகக்குமாரின் பிணத்தை மீட்டனர்.

    இந்த சம்பவம் அவரது சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார்.
    • தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், செமுடு குண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மானேயம்மா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஸ்ரீனிவாசுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என கூறி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த மானேயம்மா தனது குழந்தைகளுடன் லிங்கைய்ய பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனைவி பிரிந்து சென்றதால் மாமியார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் அங்குள்ள பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தி மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    இந்த நிலையில் மானேயம்மா கூலி வேலை செய்து குங்கப்பூடி கிராமத்தில் ஏல சீட்டு கட்டி வந்தார். நேற்று இரவு மானேயம்மா ஏல சீட்டு எடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார். தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற ஸ்ரீனிவாஸ் சிறிது நேரத்தில் தனக்குத்தானே உடல் முழுவதும் கத்தியால் வெட்டிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றனர்.

    அங்குள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி சாலைக்கு ஓடி வந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.

    அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றார். அவரை கண்டதும் வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த திருநங்கைக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • திருப்பதி அன்னமய்யா பவனில் நாளை காலை பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • திருப்பதியில் நேற்று 77,299 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனி ராமையா தலைமையில் ஆக்டோபஸ், காவல் துறை, தீயணைப்பு, வருவாய், மருத்துவம் மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

    நவீன தொழில் நுட்பத்துடன் ஆக்டோபஸ் படையினரின் மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டது.

    ஒத்திகை நிறைவுக்குப் பின், ஆக்டோபஸ் கூடுதல் எஸ்.பி.நாகேஷ் பாபு கூறியதாவது:-

    திருப்பதி மலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வலுவான பாதுகாப்பு அமைப்பு இருப்பதால் எந்த பாதுகாப்பு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மேலும், ஊழியர்களுடன் இதுபோன்ற மாதிரி ஒத்திகையை அடிக்கடி நடத்துவதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகளைப் போக்க முடியும்.

    திருமலையில் எந்த இடத்தில் எவர் தாக்குதல் நடத்தினாலும் அவர்களை எப்படி விரட்டி அடிப்பது, பக்தர்களை பாதுகாப்பது எப்படி என்பதை அறிவதே மாதிரி ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும் என்றார்.

    சமூக விரோத சக்திகளை எதிர்கொள்ளும்போது எந்தெந்த துறை என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது பவர் பாயின்ட் மூலம் விளக்கப்பட்டது.

    திருப்பதி அன்னமய்யா பவனில் நாளை காலை பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்களின் கேள்விகளுக்கு செயல் அலுவலர் தர்மா ரெட்டி பதிலளிக்க உள்ளார்.

    கருத்துக்கள், குறைகளை தெரிவிக்க விரும்பும் பக்தர்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதியில் நேற்று 77,299 பேர் தரிசனம் செய்தனர். 30,479 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.
    • கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் பைரவபாலம் ஆற்றில் தினமும் மீன் பிடித்து வருகின்றனர்.

    நேற்று மீனவர்கள் வலையில் 24½ கிலோ எடையுள்ள மீன் ஒன்று சிக்கியது.

    இந்த மீன் ஏனாம் கொண்டு வரப்பட்டது. அங்கு இந்த ராட்சத மீன் ரூ.17,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மீனிற்கு முதுகுத்தண்டு தவிர அதிக முட்கள் கிடையாது.

    அதனால் பெரும்பாலானோர் விரும்புவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கோதாவரி ஆற்றில் 20 கிலோ எடை வரை வளரும் மீன்கள். கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.

    கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

    ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்த பகுதியில் அதிக அளவு எடையுள்ள மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பிரேசில் நாட்டில் 16.70 கோடி நெல்லூர் இன மாடுகள் உள்ளன.
    • பிரேசிலில் உயர் மரபணு கொண்ட நெல்லூர் இன பசு ஏலம் விடப்படுகின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் இன பசுகள் பிரேசில் நாட்டில் முக்கியமான மாடு இனங்களில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகளின் இறைச்சி குறைந்த கொழுப்பு தன்மை காரணமாக பல நாடுகளில் அதிக தேவை உள்ளது.

    தற்போது பிரேசில் நாட்டில் 16.70 கோடி நெல்லூர் இன மாடுகள் உள்ளன. பிரேசிலின் மொத்த பசுக்களின் எண்ணிக்கையில் அவை 80 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இனத்தைச் சேர்ந்த சிறந்த காளைகளின் விந்தணுவும் அரை மில்லி லிட்டர் ரூ.4 லட்சம் மதிப்புடையது. நெல்லூர் இன காளைகளின் விந்துக்கள் மூலம் அதிக அளவில் செயற்கை முறை கருத்தரித்தல் செய்யப்படுவதால் அவற்றின் விலை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த மாடுகள் அதிக வெப்பநிலையைத் தாங்கும் மற்றும் அடர்த்தியான வெள்ளை நிறத்தைக் கொண்டிருக்கும். தடிமனான தோல் இருப்பதால் ரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள் அவற்றை அண்ட முடியாது.

    அவற்றின் பால் சுரப்பிகள் ஐரோப்பிய மாடுகளை விட 2 மடங்கு பெரியதாகவும், பால் சுரப்பது 30 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.

    அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடவை என்பதால் தொற்றுநோய்களைத் திறம்பட தாங்கும்.

    பிரேசிலில் உயர் மரபணு கொண்ட நெல்லூர் இன பசு ஏலம் விடப்படுகின்றன. கடந்த ஆண்டு ஒரு பசு ரூ.6.50 கோடிக்கு ஏலம் போனது.

    இந்த ஆண்டு உயர் ரக பசு ஒன்று ரூ.35.30 கோடிக்கு ஏலம் போனது. இதுவே உலகின் விலை உயர்ந்த பசுவாகும்.

    • திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும்.
    • ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    அதன்படி வருகிற 11-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக காலை 6 மணிக்கு தொடங்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். திருமஞ்சன நிகழ்ச்சி முடிந்ததும் சுவாமி மூலவிரட்டுக்கான பூஜை நிகழ்ச்சிகளை கோவில் அர்ச்சகர்கள் செய்வார்கள்.

    அதன்பின், பகல் 12 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் சோதனை செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகாசன வாராந்திர மேல் வஸ்திர சேவை மற்றும் அபிஷேக சேவைகள் சிறப்பு வாய்ந்தவை.

    இந்த சேவைகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்க்கை பாக்கியமாக கருதப்படுகிறது.

    அதனால் இந்த சேவையை பெறுவதற்கு பக்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் மேல் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

    தனது நண்பர்களிடம் மேல் வசீக சேவையில் கலந்து கொள்ள டிக்கெட் கேட்டு வந்தனர்.

    அப்போது திருப்பதியை சேர்ந்த லலித் குமார் என்பவர் விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    வாராந்திர சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை பெற்று தருவதாகவும் ஆன்லைன் மூலம் ரூ.1.04 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். லலித் குமார் அனுப்பிய வங்கி கணக்கிற்கு விஜயகுமார் பணத்தை அனுப்பி வைத்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதிக்கு வந்தனர். அப்போது தரிசன டிக்கெட் பெறுவதற்காக விஜயகுமார், லலித்குமாரின் செல்போனை தொடர்பு கொண்டார். லலித் குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட விஜயகுமார் இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் சோதனை செய்தனர்.

    சோதனையின்போது 5 பக்தர்கள் ரூ.300 போலி தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேவஸ்தான அதிகாரிகள் போலி தரிசன டிக்கெட் கொண்டு வந்த பக்தர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் போலி தரிசன டிக்கெட் கொடுத்தது தெரிய வந்தது. போலீசார் ஒப்பந்த ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். திருப்பதியில் நேற்று 76,254 பேர் தரிசனம் செய்தனர். 28,091 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×