என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வாழைப்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று வாயில் வைத்தாலே கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். ..
    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 8
    சர்க்கரை - ஒரு கப்
    நெய் - 6 டேபிள் ஸ்பூன்
    பாதாம் - 5
    முந்திரி - 5
    சோள மாவு - 5 டீஸ்பூன்

    வாழைப்பழ அல்வா

    செய்முறை:

    முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

    அதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.

    வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும்.

    அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்து வைத்து பாதாம், முந்திரியை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறலாம்.

    சுவையான வாழைப்பழ அல்வா ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை. இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
    ஊறவைத்த கடலைப்பருப்பு - 150 கிராம்
    பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறு துண்டு
    கிராம்பு - 1
    பச்சை மிளகாய் - 5
    காய்ந்த மிளகாய் - 4
    புதினா - ஒரு கைப்பிடி அளவு
    வெங்காயம் - 100 கிராம்
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை

    செய்முறை:


    மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    புதினா, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மரவள்ளிக்கிழங்கு மசால் பருப்பு வடை தயார்.

    குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு அழைக்கப்படுகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருவாட்டில் தொக்கு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் கருவாடு வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - அரை கிலோ
    வஞ்சிரம் கருவாடு - அரை கிலோ
    வெங்காயம் - அரை கிலோ
    பழுத்த தக்காளி - அரை கிலோ
    பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
    காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
    தயிர் - ஒரு கோப்பை
    கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    புதினா - ஒரு கொத்து
    பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
    பிரியாணி இலை - இரண்டு
    உப்பு தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - 200 மில்லி
    நெய் - 50 மில்லி
    எலுமிச்சை - அரை பழம்

    கருவாட்டு பிரியாணி

    செய்முறை :

    அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

    கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.

    அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும்.

    அடுத்து அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

    தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

    பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.

    சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  
    குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மீல்மேக்கர் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்
     
    பாஸ்மதி அரிசி - 1 கப்
    மீல்மேக்கர் - 1 கப்
    உப்பு - தேவைக்கு
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
    இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
    பட்டை தூள் கிராம்புத் தூள் சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - சிறிது
    புதினா கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
    நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.

    மீல்மேக்கர் பிரியாணி

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு மீல்மேக்கர் அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.

    வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இந்த கம்பு லட்டை சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். இன்று இந்த லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கம்பு மாவு - 2 கப்
    வெல்லம் - 2 கப்
    பாதாம் - 10
    ஏலக்காய் - 10
    பிஸ்தா - 10
    முந்திரி - 10
    திராட்சை - 10
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர்- தேவையான அளவு

    கம்பு லட்டு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதம், தோசை, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த திருநெல்வேலி சொதி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - 100 கிராம்
    நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - 1 கப்
    முருங்கைக்காய் - 1
    சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
    தேங்காய் துருவல் - 1 கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 6 பல்
    பச்சை மிளகாய் - 5
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
    நெய், எண்ணெய், உப்பு - தேவைக்கு

    திருநெல்வேலி சொதி

    செய்முறை:

    தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக பால் எடுத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், முருங்கைக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்.

    அடுத்து அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்கவும்.

    நன்கு வெந்ததும் பாசிப்பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.

    கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து நுரை பொங்கி வந்ததும் இறக்கியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.

    இதனை புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு விருந்துடன் சேர்த்து பரிமாறுவார்கள். சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நொறுக்குத்தீனிக்கு மாற்றாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புட்டை வீட்டில் தயாரித்து சுவைக்கலாம். இன்று சிவப்பரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு புட்டரிசி மாவு - 1 கப்
    சர்க்கரை - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
    நெய் - சிறிதளவு

    சிவப்பரிசி இனிப்பு புட்டு

    செய்முறை:

    சிவப்பு புட்டரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து அதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் அதனுடன் நெய் சேர்த்து கிளறவும்.

    புட்டு குழாயில் மாவு கலவை, சிறிதளவு சர்க்கரை, தேங்காய் துருவல் ஆகிய மூன்றையும் வரிசையாக போட்டு வேக வைத்து இறக்கவும்.

    சுவையான சிவப்பரிசி இனிப்பு புட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரட்டில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நல்ல வைட்டமின்கள் உள்ளன. இன்று கேரட்டை வைத்து அருமையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய்த் துருவல் - கால் கப்
    கேரட் துருவல் - கால் கப்
    சர்க்கரை - ஒரு கப்
    நெய் -  தேவையான அளவு
    ஏலக்காய் - 4 (பொடித்துக் கொள்ளவும்).

    கேரட் தேங்காய் பர்ஃபி

    செய்முறை:

    வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும்.

    இடைஇடையே நெய் சேர்த்து கிளறவும்.

    சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும்.

    கலவை சுருண்டு நெய் வெளியில் வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும்.

    சுவையான கேரட் தேங்காய் பர்ஃபி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் குழந்தைகள் சாப்பிட அருமையான, சத்தான ஸ்நாக்ஸ் இந்த பச்சைப் பட்டாணி போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம்
    கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    புதினா சிறிதளவு - சிறிதளவு
    எண்ணெய் - 300 கிராம்
    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கடலை மாவு - 150 கிராம்
    அரிசி மாவு - 25 கிராம்
    மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.

    பச்சைப் பட்டாணி போண்டா

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.

    இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் வைத்து சூடானவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான பச்சை பட்டாணி போண்டா ரெடி.

    குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உளுந்து, பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த வடை சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - 150 கிராம்,
    கருணைக்கிழங்கு - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
    இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    பட்டை, சோம்பு - சிறிதளவு,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.

    கருணைக்கிழங்கு வடை

    செய்முறை:  

    கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.

    இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட உருளைக்கிழங்கு, தயிர், சீஸ் சேர்த்து செய்யும் போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்),
    துருவிய சீஸ் - ஒரு கப்,
    சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கெட்டித்தயிர் - அரை கப்,
    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    ஆய்ந்த செலரி கீரை- ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா

    செய்முறை:

    சோள மாவுடன், மைதா மாவு, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்குடன் சீஸ் துருவல், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும்.

    வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளைக் கரைத்து வைத்த மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    தயிருடன் சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதில் பொரித்த சீஸ் போண்டாக்களைப் போட்டு, மேலே செலரி கீரை தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுரைக்காய் முட்டியா குஜராத்தில் மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - 1
    கடலை மாவு - 1 டம்ளர்
    கோதுமை மாவு - 1 குழிக்கரண்டி
    அஸ்கா - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தயிர் - 1 டம்ளர்
    கொத்துமல்லி - 1 கப்
    சோடா உப்பு - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    வெள்ளை எள் - 50 கிராம்
    எண்ணெய் -  தேவையான அளவு
    கடுகு -  1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    சுரைக்காய் முட்டியா

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    சுரைக்காயை தோல்சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும்.

    சுரைக்காய், கடலைமாவு, கோதுமை மாவு, அஸ்கா, மஞ்சள் தூள், தயிர், கொத்த மல்லி, சோடா, உப்பு,  சிறிது எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை நீளமாக நேந்திரன் பழ அளவு உருட்டிக் கொள்ளவும்.

    உருட்டியவற்றை இட்லி பானையில் வைத்து 25 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்தவுடன் அதன் மேல் எண்ணெய், கடுகு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

    புதினா மல்லிச்சட்டினியுடன் பரிமாறவும்.

    சூப்பரான சுரைக்காய் முட்டியா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×