என் மலர்tooltip icon

    சமையல்

    • மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா?

    உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா செய்தும் சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் தெரியுமா? இந்த மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த புட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 20

    வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

    கறிவேப்பிலை - சிறிது

    பச்சை மிளகாய் - 2 (இரு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    மசாலா அரைப்பதற்கு:

    துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

    பட்டை - 1

    ஏலக்காய் - 1

    கிராம்பு - 2

    சோம்பு - 2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, 2 நொடிகள் ஒருமுறை அரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மிக்சர் ஜாரில், தேங்காய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது உப்பு தூவி, குறைவான தீயில் வைத்து சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும். அடுத்து அரைத்த மீல் மேக்கரை சேர்த்து, மசாலாவுடன் மீல் மேக்கர் ஒன்று சேரும் வரை நன்கு கிளறி, இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைலில் மீல் மேக்கர் புட்டு தயார்.

    • சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது.
    • காலை உணவாக மட்டுமின்றி, மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாகவும் சாப்பிடலாம்.

    சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இதை பெரியோர்களும் சாப்பிடலாம். அதுவும் இதை காலை உணவாக மட்டுமின்றி, மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாகவும் சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே சத்து மாவு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சத்து மாவு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1/2 கப்

    தினை - 1/2 கப்

    உளுத்தம் பருப்பு - 1/4 கப்

    கொள்ளு - 1/2 கப்

    கைக்குத்தல் அரிசி - 1/4 கப்

    பொட்டுக்கடலை - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/2 கப்

    ராகி மாவு - 1/2 கப்

    மக்கா சோளம் - 1/2 கப்

    வேர்க்கடலை - 1/4 கப்

    முந்திரி - 1/4 கப்

    பாதாம் - 1/4 கப்

    ஏலக்காய் - 10

    சுக்கு பொடி - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். பின்னர் அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.

    வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், பிளெண்டர் அல்லது மிக்சி ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை, முந்திரி, வேர்க்கடலை, பாதாம் மற்றும் ஏலக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, அதையும் மிக்சி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து பொடி செய்து, அதை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மாவுகளை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து, அதையும் அந்த பொடியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சுக்கு பொடியை சேர்த்து, அனைத்து பொடிகளையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பிறகு கலந்து வைத்துள்ள பொடியை சல்லடையால் சலித்து, காற்றுப்புகாத ஒரு கண்டெய்னரில் போட்டு சேகரித்துக் கொண்டால், சத்து மாவு தயார்.

    இந்த சத்து மாவை செய்யும் போது சிறிது எடுத்து பாத்திரத்தில் போட்டு, அதில் பால் அல்லது நீர் சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, பின் அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், சுவையான சத்து மாவு கஞ்சி தயார்.

    • சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.
    • சிறு தானிய உணவுகளை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது.

    சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளதால் சிறு தானிய உணவகங்களை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது. இந்த சூழலை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து சிறுதானிய உணவு கூடங்களை அமைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள். கேழ்வரகு கேக் செய்வது போல கேழ்வரகு பிஸ்கட் செய்வதும் மிக மிக எளிமையான ஒன்றாகும்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு- ஒரு கிலோ,

    சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை- அரை கிலோ,

    டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய்- அரை கிலோ

    கான்பிளவர் மாவு- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதனுடன் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

    அந்த மாவினை தேவையான வடிவத்தில் அதாவது பிஸ்வடிவத்திற்கு வெட்டி அதன் நடுவே ஃபோர்க் கரண்டியால் கோடுகளாக இட்டு ஒரு பிளேட்டில் வெண்ணெய் தடவி அதில் அந்த பிஸ்கட்களை அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 150 டிகிரி செல்சியசில் சுமார் 30 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்து குளிர வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

    இந்த கேழ்வரகு பிஸ்கட் செய்யும் போது கேழ்வரகு மாவுடன் சுமார் 30 முதல் 70 சதவீதம் வரை வாழை மாவு அல்லது மரவள்ளி மாவு சேர்த்தும் பிஸ்கட் செய்ய முடியும். வாசனைக்கு ஏலக்காய் பொடி செய்தும், தூளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். மாவு பிசையும் போது உலர்ந்த முந்திரி அல்லது வேர்கடலை பருப்பினை வருத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அலங்காரத்திற்காகவும் சுவை மற்றும் சத்துக்களை கூட்டுவதற்காகவும், பிஸ்கட் மேலே தூவுவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.
    • பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம்.

    சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை சிறுதானிய கேக்குகள். கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு- 100 கிராம்

    கிரீம்- 100 கிராம்

    பேக்கிங் பவுடர்- 1/4 டீஸ்பூன்

    கொக்கோ பவுடர்- ஒரு ஸ்பூன்

    சர்க்கரை- 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    முட்டை- 2

    பால்- 20 மில்லி லிட்டர்

    வனிலா எசன்ஸ்- 2 சொட்டு

    செய்முறை:

    வெள்ளை கருவுடன் சர்க்கரை தூள் சேர்த்து நன்கு அடித்து, கலக்கி அதனுடன் பால், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் ராகி மாவு, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நமக்கு தேவையான வடிவங்களில் அல்லது கேக் மோல்டின் உள்ளே பட்டர் அல்லது நெய் தடவ வேண்டும்.

    அதில் கேக் கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்து 10 நிமிடங்கள் வரை குளிர வைத்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.

    • உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
    • ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன.

    கேழ்வரகில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு விவரங்களை பார்ப்போம். சிறுதானிய உணவுகளில் அரிசியை காட்டிலும் அதிகப்படியான புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆதலால் தான் மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை தற்பொழுது அதிகப்படியாக பரிந்துரை செய்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானிய உணவுகளில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

    அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த ராகியில் அமைந்துள்ள புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் முளைகட்டி பொடியாக்கி குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது. மேலும் ராகி நூடுல்ஸ், ராகி பணியாரம், ராகி சேமியா, ராகி இடியாப்பம், ராகி அல்வா, ராகி தோசை, ராகி அடை போன்றவைகளை தயாரிக்க முடியும். மேலும் ராகி முறுக்கு, ராகி மிக்சர், ராகி கேக், ராகி பிஸ்கட், ராகி லட்டு போன்ற நொறுக்கு தீனி வகை பலகாரங்களையும் செய்யலாம். கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - ஒரு கப்

    அரிசி மாவு - அரை கப்

    கடலை மாவு- கால் கப்

    பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

    எள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - 2 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அதன்பிறகு சூடாக இருக்கும் எண்ணெய்யை மாவுக் கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ராகி முறுக்கு தயார்.

    • புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.
    • புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் காலை முதல் இரவு உணவு வரை இட்லி, தோசை, ரொட்டி, பூரி, உப்மா, பொங்கல், சப்பாத்தி, சாதம், பிரியாணி போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவையே எடுத்துக்கொள்கிறார்கள். நாம் திருவிழா நேரங்களில் செய்யும் தின்பண்டங்கள், கோவிலில் வழங்கப்படும் புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.

    சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் தான்  என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வித்தியாசமாக வரகு அரிசியை கொண்டு புளியோதரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வரகரிசி- ஒரு கப்

    மல்லி (தனியா)- ஒரு டீஸ்பூன்

    எள் - ஒரு டீஸ்பூன்

    வெந்தயம் - கால் ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 10

    புளி - பெரிய எலுமிச்சை அளவு

    வேர்க்கடலை - 5 தேக்கரண்டி

    கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுந்தம்பருப்பு, கடுகு- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- தாளிக்க

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    வரகு அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் அளவு ஒருகப் அரிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். ஒரு வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

    அதன்பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும் போது இறக்கினால். புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை எடுத்து வரகு அரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

    • மக்கள் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள்.
    • பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது.

    இன்றைய தலைமுறையினர் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் வீட்டில் செய்யக்கூடிய புதுவகையான சிறுதானிய ரெசிப்பிகள் உங்களுக்காக...

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி - ஒரு கிண்ணம்

    பெரிய வெங்காயம் - ஒன்று நறுக்கியது

    பச்சை மிளகாய்- 3 நறுக்கியது

    கடுகு, உளுந்தம்பருப்பு- ஒரு ஸ்பூன்

    பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- சிறிதளவு

    கேரட்- நறுக்கியது

    பீன்ஸ்- நறுக்கியது

    கோஸ்- நறுக்கியது

    பச்சைப் பட்டாணி- ஒரு கைப்புடி

    எண்ணெய்- ஒரு குழிகரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    குதிரைவாலி அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயத்தூள், கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். அதன்பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவைகளை சேர்த்துக் கிளறவும். இதனுடன் உப்பு சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து குதிரைவாலி அரிசியை சேர்த்து வேகும் வரை கிளறவும். நன்கு வெந்த பின் இறக்கி சூடாக பரிமாறவும்.

    • முட்டையே இல்லாமல் வெஜ் ஆம்லெட்.
    • அசைவம் சாப்பிடாத நிலையில் சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

    முட்டையில் ஆம்லெட் செய்தால் சாம்பார் சாதம், ரசம் சாதம் அனைத்திற்கும் நல்ல சைட்டிஷ் ஆக இருக்கும். ஆனாலும் சிலருக்கு முட்டை பிடிக்காது. எனவே முட்டை பிடிக்காதவர்கள் முட்டையே இல்லாமல் வெஜ் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். மேலும் புரட்டாசி மாதம் வந்துவிட்டது. எனவே விரதம் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாத நிலையில் இந்த சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு- 1கப்

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    தக்காளி- 1 (நறுக்கியது)

    பச்சைமிளகாய்-2 (நறுக்கியது)

    கொத்தமல்லி இலை- சிறிதளவு

    கறிவேப்பிலை- சிறிதளவு

    மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

    சிவப்பு மிளகாய்தூள்- 1/4 ஸ்பூன்

    கரம் மசாலா- 1/4 ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டுக்கொள்ளவும். பின்னர் அதில் கடலை மாவு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், எண்ணெய், உப்பு, சேர்த்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையினை 1௦ நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஒரு தோசை தவாவில் சிறிது எண்ணெய் தடவி கலவையை ஊற்றி சமமாக பரப்பவும். இருபுறமும் முழுமையாக 5 நிமிடம் வேக விட்டு எடுக்க வேண்டும். இந்த வெஜ் ஆம்லெட் சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

    • பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக்.
    • வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மக் கேக்.

    பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக். வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மக் கேக். இதை கொஞ்சமாக தினமுமே செய்யலாம். மேலும் இதற்கு தேவையான பொருட்களின் விலையும் குறைவாகத் தான் இருக்கும். ஆகவே வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.

    குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் ஒரு மக் கேக் செய்வதற்கு தேவையானவை. எனவே உங்களுக்கு தகுந்தவாறு நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரவுன் சுகர்- 1 ஸ்பூன்

    பீனட் பட்டர்- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 1 ஸ்பூன்

    கோக்கோ பவுடர்- 1 ஸ்பூன்

    முட்டை-1

    பேக்கிங் பவுடர்- 1/4 ஸ்பூன்

    சாக்லேட் சிப்ஸ்- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்க்க வேண்டும். அதில், பிரவுன் சுகர், பீனட் பட்டர், கோக்கோ பவுடர், மைதா மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து, ஃபோர்க் கரண்டியால் நன்றாக அடித்து கலக்கவும். இறுதியாக அதில் சாக்லேட் சிப்சை சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையை மக்கின் உள்ளே வைக்க வேண்டும். பாதி அளவு வரை மட்டுமே வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்டு வைத்து 15 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு மக் கேக்கை எடுத்து உள்ளே வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். 25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மக் கேக் தயார்.

    ஆறியபின்னர் பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சாக்லேட் கேக் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். உடனே காலியாகிவிடும். செய்து பார்த்து அசத்துங்கள்.

    • லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    • வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க.

    உடுப்பி, மங்களூர் பகுதியில் உள்ள பல கொங்கனி குடும்பங்களில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு நைவேத்யமாக கொண்டைக்கடலை மாவு லட்டுகள் செய்து பரிமாறப்படுகிறது. இந்த லட்டுகள் கொண்டைக்கடலை மாவு, கொப்பளித்த நெல், வெல்லம் ஆகியவற்றின் கலவையாகும். அவை முந்திரி, காய்ந்த தேங்காய், நெய்யில் வறுத்த எள்ளுடன் சுவையூட்டப்படுகின்றன. இந்த லட்டுக்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும் போது சாப்பிட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவை சரியாக செய்யப்பட்டால், அவை பல மாதங்கள் சேமிக்கப்படும்.

    ஆனால் இன்று நாம் வெள்ளை கொண்டைகடலையை ஊறவைத்து அரைத்து, அதனை எண்ணெய் அல்லது நெய்யில் பொறித்து வரும் மாவில் இருந்து வித்தியாசமாக கொண்டைக்கடலை லட்டு செய்யலாம் வாங்க பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்

    சர்க்கரை - 150 கிராம்

    ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி

    பிஸ்தா, பாதாம் (பொடித்தது) - தேவைக்கு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    கேசரி பவுடர் (ஆரஞ்சு நிறம்) - தேவைக்கு

    செய்முறை:

    கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு அதை வடிகட்டி மிக்சியில் போட்டு அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். கொண்டைக்கடலை மாவை தட்டையாக தட்டி எண்ணெயில்  போட்டு பொரித்து எடுக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கம்பி பதம் அதாவது பிசுபுசுப்பத்தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதில் கேசரி பவுடர், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த பாகு கரைசலில் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை மாவினை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி, பாதாமை அதில் சேர்க்க வேண்டும். இதனை இளம் சூடாக இருக்கும்போதே. உருண்டைகளாக பிடிக்க வேண்டும். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது சுவையான 'கொண்டைக்கடலை லட்டு' தயார்.

    • லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.
    • லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர்.

    லட்டு என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும், இது சர்க்கரை, கோதுமை மாவு, நெய் மற்றும் பிற பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு ஆகும். லட்டை அனைத்து வயதினரும் விரும்புவர். லட்டு வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த இனிப்பு ஆகும். இது ஒரு சிறந்த ஆரோக்கியமான இனிப்பு ஆகும், இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. லட்டு செய்ய பல வழிகள் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி பழத்தினை வைத்து வித்தியாசமான முறையில் ஸ்ட்ராபெர்ரி லட்டு செய்யலாம். அதற்கான செய்முறை விளக்கங்களை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பூந்தி தயாரிக்க:

    கடலை மாவு -150 கிராம்

    இளஞ்சிவப்பு நிற சிரப் - 1 தேக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - 120 மில்லி

    நெய் - தேவையான அளவு

    சர்க்கரை பாகு தயாரிக்க:

    சர்க்கரை - 150 கிராம்

    ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ் அல்லது எசென்ஸ் - ஒரு மூடி

    சர்க்கரை - 100 கிராம்

    தண்ணீர் - 150 மில்லி

    பிஸ்தா, பாதாம் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு. இளஞ்சிவப்பு நிற சிரப், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். இதனை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ், சர்க்கரை சேர்த்து கலக்கி, கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். தேவைப்பட்டால் அதில் சில துளிகள் இளஞ்சிவப்பு நிற சிரப் சேர்க்கலாம்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். இப்போது தயாரித்து வைத்திருக்கும் கடலை மாவு கலவையை சல்லடைக் கரண்டி மூலம் அதில் ஊற்றவும். பூந்தி நன்றாக பொரித்து வந்ததும், அதை ஸ்ட்ராபெர்ரி பாகில் போடவும். இந்த பூந்திக் கலவை சூடாக இருக்கும் போதே, உருண்டைகளாக பிடிக்கவும். தேவைப்பட்டால் அதில் சிறிது நெய் சேர்க்கலாம். கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது 'ஸ்ட்ராபெர்ரி லட்டு தயார்.

    • பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம்.
    • இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியம்.

    சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி. பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது, இல்லத்தரசிகள் இந்த பிரிமிக்ஸ் மாவு தயாரிப்பை பகுதி நேர சுயதொழிலாகவும் செய்யலாம். அது பற்றிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 3 கப்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    முந்திரி- 20

    பச்சை மிளகாய் - 4

    கறிவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    அடிகனமான அகன்ற வாணலியில் ரவையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு அதை ஒரு அகலமான தட்டில் மாற்றி ஆற வைக்கவும். அதே வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும். பின்னர் அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வறுக்கவும். பின்னர் உலர்ந்த கறிவேப் பிலை, உப்பு சேர்த்து ஆறவைக்கவும்.

    இந்த கலவையை ரவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பிரிமிக்ஸ் மாவு தயார். இந்த மாவைக் கொண்டு இட்லி, பணியாரம், வடை ஆகிய ரெசிபிகளை செய்து அசத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் தேவைப்படும்போது விருப்பமான ரெசிபிகளை சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இந்த மாவை பிரிட்ஜில் வைத்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

    உபயோகிக்கும் முறை:

    இரண்டு கப் பிரீமிக்ஸ் மாவுடன் ஒன்றரை கப் தயிர் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் மாவை ஒருமுறை நன்றாகக் கிளறி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    இட்லி தயாரிக்க:

    எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். இப்போது சுவையான ரவா இட்லி ரெடி.

    குழிப்பணியாரம் தயாரிக்க:

    அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதன் குழிகளில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், அது சூடானதும் டீஸ்பூன் மூலம் மாவை ஒவ்வொரு குழியிலும் முக்கால் பங்கு அளவிற்கு ஊற்றி வேக வைக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான குழிப்பணியாரம் தயார்.

    வடை தயாரிக்க:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். தயாரித்து வைத்திருக்கும் மாவை வடையாக தட்டிப்போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். இதனுடன் தேங்காய் சட்னி, காரச்சட்னி, சாம்பார் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

    சந்தைப்படுத்தும் முறை:

    உணவுப் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தும் போது அதற்கு தேவையான சான்றிதழ்களை வாங்க வேண்டியது அவசியம், பிராண்டு பெயருடன் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட், மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யலாம். பொருட்காட்சிகளிலும் உங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.

    ×