என் மலர்tooltip icon

    சமையல்

    தோசை, இட்லி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மசாலா குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பூண்டு - 2 பல்,
    வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் - தலா 1,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு, குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,

    செய்முறை:

    உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா குழம்பு ரெடி.
    காய்கறிகள், பழம், தயிர் சேர்த்து செய்யும் இந்த சாலட் காலையில் சாப்பிட மிகவும் நல்லது. இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீன்ஸ் - 11
    கேரட் - ஒன்று பெரியது
    உருளைக்கிழங்கு - ஒன்று
    ஆப்பிள் - ஒன்று
    தயிர் - ஒரு கப்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப     

    செய்முறை:

    கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும்.

    தயிரை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும்.

    பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வேகவைத்து நன்றாக ஆற வைத்து கொள்ளவும்.

    ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய ஆப்பிளை போட்டு அதனுடன் வடிகட்டிய தயிர், உப்பு, மிளகுத்தூள் கடுகு பேஸ்ட் (அ) பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் ஆறவைத்த காய்கறிகளையும் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான சாலட் ரெடி.

    குறிப்பு: பொதுவாக ரஷ்யன் சாலட்டில் மயோனைஸ் கலப்பது வழக்கம். அதைவிட தயிர் ஆரோக்கியமானது என்பதால் இங்கு தயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
    தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த தக்காளி குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,
    கீறிய பச்சை மிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு,
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1 ,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    நாட்டு தக்காளி, பெங்களூரு தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

    தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான தக்காளி குழம்பு ரெடி.

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையை கிச்சடி, உப்புமா என்று சாப்பிடாமல் இப்படி காய்கறிகள் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - கால் கப்
    வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
    ப்ரோக்கோலி - பாதியளவு
    தக்காளி - 1
    ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
    பூண்டு - 3 பல்
    எலுமிச்சைச் சாறு -  2 டேபிள்ஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த பாதாம்பருப்பு - 9
    கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப     

    செய்முறை:


    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    ப்ரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

    கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, ப்ரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை).

    வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
    குழந்தைகள் கீர் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வித்தியாசமான முறையில் அரிசியில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பாஸ்மதி அரிசி அல்லது பச்சரிசி  - 1  கப்
    சர்க்கரை  - 1 கப்
    பால்  -  3 கப்
    பாதாம்பருப்பு  - 6
    குங்குமப்பூ  - சிறிது
    ஏலக்காய்தூள்  -  சிறிது
    நெய் - 2  மேசைக்கரண்டி
    கண்டென்ஸ்டு மில்க் - 3 மேசைக்கரண்டி

     செய்முறை:

     
    அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும்.

    அரை வேக்காடாக வேக வைத்த அரிசியை கொதிக்கும் பாலில் கொட்டி நன்கு வேக விடவும்.
     
    ஒரு மேசைக்கரண்டி பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்கவும்.

    நன்கு கரைந்தவுடன் வெந்து கொண்டிருக்கும் சாதத்துடன் சேர்க்கவும்.

    பாதாம்பருப்பை சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
     
    சாதம் நன்றாக வெந்தவுடன், பால் பாதியாக குறைந்தவுடன், சர்க்கரை, நெய், பாதாம்பருப்பு, ஏலக்காய்தூள், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது கமகம நறுமணத்துடன், சுவையான அரிசி கீர் தயார்.

    கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
    தேவையான பொருட்கள் :

    புளித்த தோசை மாவு - 1/2 கப்
    கம்பு மாவு - 1 கப்
    உப்பு - தேவைக்கு
    சீரகம் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை  - சிறிதளவு
    ப.மிளகாய் - 2
    வெங்காயம்  - 2

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,சீரகம், ப.மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.

    இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

    அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும். தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.

    தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.

    பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.

    சுவையான சத்தான கம்பு தோசை ரெடி.
    இப்பொழுது பல வகையான இனிப்பு போளிகள் செய்யப்படுகின்றன. ஆனாலும் தேங்காய் போளி, பருப்பு போளி இரண்டும் பரவலாக எல்லோராலும் செய்யப்படுபவை.
    தேவையானப் பொருட்கள் :

    மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்
    தேங்காய்த்துருவல் - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1 கப்
    சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - சுவைக்கு
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் வரை
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - 1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணெயைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    * வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.

    * வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி (பூர்ணம் வெளியில் வரக்கூடாது), தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.

    * சுவையான தேங்காய் போளி ரெடி.

    குறிப்பு :

    * சாதாரணமாக மைதா மாவில் தான் செய்வார்கள். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.

    * இதே போன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம். மாவின் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை போட்டு அதன் மேல் சப்பாத்திக்கட்டையால் உருட்டினால் ஒட்டாமல் வரும்.

    * நெய்யுடன் இந்த தேங்காய் போளியை தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று இட்லிக்கு அருமையான பருப்பு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 5
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    அதுபோல் மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

    ஆறியவுடன் அவைகளுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.

    இந்த பொடியை சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்.

    சூப்பரான பருப்பு பொடி ரெடி.

    தயிர் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எண்ணெய் மாங்காய். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பான மாங்காய் (மீடியம் சைஸ்) - 6,
    மிளகாய்த்தூள் - 50 கிராம்,
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்,
    நல்லெண்ணெய் - 100 கிராம்,
    கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்க தேவையான அளவு,
    உப்பு - ஒரு டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப).

    செய்முறை:

    மாங்காய்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெந்தயத்தை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும்.

    இத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, மாங்காய் துண்டுகளைப் போடவும்.

    இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    பிறகு, கடுகுப் பொடி போட்டு, மீதமுள்ள எண்ணெயை விட்டு, பொடித்த வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி ஆற விடவும்.

    பின்னர் சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

    சூப்பரான எண்ணெய் மாங்காய் ரெடி.
    வெள்ளரிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலை புரதச்சத்து வளர்ச்சிக்கு உதவும். நல்ல கொழுப்பும், கனிமங்களும் கொண்டது. இன்று இவை இரண்டையும் வைத்து சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப்,
    கொத்தமல்லி - சிறிது,
    விதை நீக்கிய காய்ந்த மிளகாய் - 3,
    வெங்காயம் - 1,
    வேர்க்கடலை விழுது - 1 கப்,
    எலுமிச்சைச்சாறு - சிறிது,
    தேன் - சிறிது,
    ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    உப்பு- தேவையான அளவு.

    செய்முறை

    கொத்தமல்லித்தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேர்க்கடலையை வேகவைத்து கொரகொரப்பாக விழுது போல அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், வேர்க்கடலை விழுது, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, விதை நீக்கிய காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், ஆலிவ் எண்ணெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

    சத்தான வெள்ளரிக்காய் வேர்க்கடலை சாலட் ரெடி.

    ஊட்டச்சத்து குணங்கள்

    வெள்ளரிக்காய் : ஞாபகத்திறனை அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் காக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்தது.

    வேர்க்கடலை : இதன் புரதச்சத்து வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் E சருமத்தின் நலம் காக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. நல்ல கொழுப்பும், கனிமங்களும் கொண்டது.

    கொத்தமல்லித்தழை கெட்ட கொழுப்பை குறைக்கும். செரிமானத்துக்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் உள்ளது. ரத்த
    சோகையை சரி செய்யும். மூளை சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

    வெங்காயம் : ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் உள்ளது. ஆஸ்துமாவை சரி செய்யும். செரிமானத்துக்கு
    நல்லது. வெயில் காலத்தில் வெங்காயம் உண்ணும்போது உடல் சூடு தணியும்.

    ஆலிவ் எண்ணெய் : நல்ல கொழுப்பு உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. இதயத்தின் நலனுக்கும் எடை பராமரிப்புக்கும் உதவி செய்யும்.
    கேசர் லஸ்ஸியை குட்டீஸ் விரும்பி சுவைப்பார்கள். இந்த லஸ்ஸியில் புரதச்சத்து, கால்சியமும் நிறைந்துள்ளது. இன்று இந்த லஸ்ஸி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டித் தயிர் - ஒரு கப்,
    குங்குமப்பூ - சிறிதளவு,
    காய்ச்சி ஆற வைத்த பால் - 2 டீஸ்பூன்,
    சர்க்கரை - தேவையான அளவு,
    பிஸ்தா, பாதாம் துருவல் - தலா 2 டீஸ்பூன்.

    செய்முறை :

    பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    தயிருடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.

    மேலே பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
    இது புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் இது வழக்கமான பானங்களிலிருந்து வேறுபட்டது. உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ்.
    தேவையான பொருட்கள்

    நுங்குத் துண்டுகள் தோல் உரித்து நறுக்கியது - 1 கப்
    இளநீர் - 1/2 கப்
    வெல்லம் பொடித்தது - 2 டீஸ்பூன்
    இளநீர் வழுக்கைத் துண்டுகள் - சிறிதளவு.

    செய்முறை

    மிக்சி பிளெண்டரில் நறுக்கிய நுங்கு, இளநீர், வெல்லம், இளநீர் வழுக்கையை சேர்த்து அரைக்கவும்.

    அரைத்த ஜூஸை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்த பிறகு அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே சில நுங்கு துண்டுகளை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

    குளுகுளு நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி.
    ×