என் மலர்tooltip icon

    சமையல்

    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த சாண்ட்விச் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பாம்பே சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிரெட் ஸ்லைஸ் - 8,
    உப்பு சேர்த்த வெண்ணெய் - தேவைக்கேற்ப,
    பீட்ரூட் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    தக்காளி - ஒன்று,
    வெங்காயம் - ஒன்று,
    வெள்ளரிக்காய் - ஒன்று,
    சாட் மசாலாத்தூள் - சிறிதளவு,
    டொமேட்டோ கெட்சப், கிரீன் சட்னி - தேவையான அளவு.

    செய்முறை:

    4 பச்சை மிளகாய், இஞ்சி ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்), புதினா, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் கிரீன் சட்னி தயார்.

    உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    பீட்ரூட்டையும் இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    பிறகு இரண்டையும் தோலுரித்து ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெள்ளரிக்காய், தக்காளியை ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தைத் தோலுரித்து சிறிய வட்டங்களாக நறுக்கவும்.

    ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவவும்.

    மற்றொரு பிரெட் ஸ்லைஸில் கிரீன் சட்னி தடவவும்.

    கிரீன் சட்னி தடவிய பிரெட் ஸ்லைஸை ஒரு தட்டில் வைத்து கிரீன் சட்னியின் மேல் 2 உருளைக்கிழங்கு துண்டுகள், 2 பீட்ரூட் துண்டுகள் வைக்கவும்.

    இதன் மேல் சில தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகளை வைக்கவும்.

    காய்கறிகளின் மேல் சிறிதளவு டொமேட்டோ கெட்சப் தெளித்து, சாட் மசாலாத்தூள் தூவி, வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸால் மூடவும்.

    மற்ற பிரெட் ஸ்லைஸ்களிலும் இதேபோல் சாண்ட்விச் செய்துகொள்ளவும்.

    ஒவ்வொரு சாண்ட்விச்சையும் நான்கு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான பாம்பே சாண்ட்விச் ரெடி.
    பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை கோஸ், சிவப்பு கோஸ் - தலா 100 கிராம்
    வெங்காயம் - ஒன்று
    தயிர் - ஒரு கப்
    தேன் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    கடுகு பேஸ்ட் அல்லது கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப     

    செய்முறை:

    பச்சை கோஸ், சிவப்பு கோஸ், வெங்காயம் ஆகிய காய்கறிகளை நன்றாகக் கழுவி துடைத்து, நீள நீளமாக மெல்லிய குச்சியைப் போல நறுக்கவும்.

    கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும்.

    தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும்.

    வடிகட்டிய தயிருடன் தேன், உப்பு, கடுகு பேஸ்ட் (அ) பொடி, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகிவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் டிரெஸ்ஸிங் தயார்.

    நறுக்கிய காய்கறிகளை ஒரு பெரிய பவுலில் போடவும். இதனுடன் டிரெஸ்ஸிங்கை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டைகோஸ் தயிர் சாலட் ரெடி.
    இட்லி, தோசை, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் மிளகு குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன்  - 1/2 கிலோ
    மிளகு - 2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    தனியா தூள் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - 100 கிராம்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    சிக்கனை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    சிக்கன் கொதித்துகொண்டிருக்கும் போது அதில் கலந்துவைத்துள்ள மசாலாவையும், உப்பையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் அதில் கொதிக்கும் குழம்பில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    கடைசியாக சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் மிளகு குழம்பு ரெடி.
    பொரி விளங்காய் உருண்டை புரோட்டீன் நிறைந்தது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    புழுங்கலரிசி - 200 கிராம்
    பச்சை பயறு - 100 கிராம்
    கோதுமை - 100 கிராம்
    வறுத்த வேர்க்கடலை (தோல நீக்கியது) - 1 கப்
    பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
    லவங்கம் - 7
    சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்
    தேங்காய் - சிறிதளவு (துருவி (அ) நறுக்கி நெய்யில் வதக்கியது)
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    பாகு வெல்லம் - 400 கிராம்
    நெய் - சிறிதளவு

    செய்முறை:
     
    புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மாவாக்கவும்.

    பச்சை பயறு, கோதுமையை சிவக்க வறுத்து மாவாக்கவும்.

    இந்த மாவுகளுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, வதக்கிய தேங்காய், லவங்கம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

    வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பாகுக்கு விடுவதைக் காட்டிலும் ஒரு கொதி அதிகமாக வர விட்டு, நெய் சேர்க்கவும்.

    பிறகு, மாவுக் கலவையில் கொட்டி, நன்கு பிரட்டவும்.

    கையில் அரிசி மாவு தொட்டு, மாவுக் கலவையை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இந்த பொரி விளங்காய் உருண்டை ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
     
    மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, தேவையான புரோட்டீன் நிறைந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச்சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்சனைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
    நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி - ½ கப்
    தேங்காய் பால் - 1 கப்
    ஏலப்பொடி - 1 சிட்டிகை
    நெய் - 2 டீஸ்பூன்
    நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
    பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் - சுவைக்கு ஏற்ப

    செய்முறை

    அரிசியை இரவு முழுவதும் ஊறவிட்டு, பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விடவேண்டும். வெந்த அரிசியை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும்.

    வாணலில் நெய் விட்டு அரைத்தவற்றை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி, நட்ஸ் பவுடர், ஏலப்பொடி, தேவையான பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றி கலக்கவும்.

    சூடானதும் இறக்கி விடலாம்.

    சூப்பரான சிவப்பு அரிசி பாயாசம் ரெடி.
    காலையில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நுங்கு ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நுங்கு - 4
    மாதுளம் பழம் - 1
    ஆப்பிள் - 1
    மாம்பழம் - 1
    வாழைப்பழம் - 1
    நன்னாரி சர்பத் - 1 டீஸ்பூன்
    திராட்சை (பச்சை, கருப்பு) - கால் கப்

    தேவையான பொருட்கள்

    மாம்பழம், வாழைப்பழம், நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    திராட்சையை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான நுங்கு ஃப்ரூட் சாலட் ரெடி.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழ கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 1/2 கப்
    சர்க்கரை - 1 கப்
    மாம்பழம் - பாதி
    பால் - 1/2 கப்
    வெனிலா எசன்ஸ் - 4 துளிகள்
    பட்டர் -1 கப்
    வால்நட் - சிறிது
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    செய்முறை


    பட்டரை நன்கு நீர் போல் உருக்கிக் கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் கோதுமை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

    பின் மாம்பழத்தை தோல் உரித்து, ஒன்றுக்கு இரண்டாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

    கோதுமை கலவையில் மாம்பழ கூழ், பால், வெனிலா எசன்ஸ் மற்றும் பட்டரை ஊற்றவும். சிறிது மாம்பழக் கூழை தனியே எடுத்து வைக்கவும்.

    அனைத்து கலவையையும் பீட்டரில் மென்மையாக நன்கு கலக்கவும்.

    பின் ஒரு மைக்ரோ ஓவன் ட்ரேயில் 60% மேல் இருக்காதவாறு கலவையை ஊற்றவும். அப்போது தான் கேக் நன்கு வெந்து உப்பி வர தேவையான இடம் கிடைக்கும்.

    ஓவனை 325 சூடுக்கு முதலில் சூடு செய்து டிரேயை 45 நிமிடம் வரை வைக்கவும். அவ்வப்போது திறந்து பார்த்து நிறத்தை சோதனை செய்து கொள்ளவும்.

    கேக் நன்கு பிரவுன் கலரில் மாறியதும் அதை திருப்பி போட்டு 5 நிமிடம் ஆற விடவும்.

    பின் மீதமுள்ள மாம்பழக் கூழை கேக்கின் மீது தடவி வேண்டிய டிசைனை செய்து கொள்ளவும்.

    சுவையான மாம்பழ கேக் ரெடி.
    புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச்சத்தும் நிறைந்த சௌ சௌ, சிறந்த நோய் எதிர்ப்பு நிவாரணியாகவும், திகழ்கிறது..
    தேவையான பொருட்கள்

    சௌசௌ - 1
    காய்ந்த மிளகாய் - 3
    உளுந்து, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    சின்ன வெங்காயம் - 10
    பூண்டு - 2 பல்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    புளி - சிறிதளவு

    செய்முறை

    சௌசௌவைத் தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உளுந்து, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்துள்ள சௌசௌ ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வதக்கி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

    சூடு ஆறியதும் அவற்றுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள்.

    சூப்பரான சௌ சௌ துவையல் ரெடி.
    மட்டனை வைத்து பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மட்டன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    மட்டன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 4-5
    பட்டை - 1
    மிளகு - 10
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 4
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி விதைகள் -  1 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு (தேவையான அளவு)

    செய்முறை:

    மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து அதில், நெய் ஊற்றி சூடானதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்பு இதில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள மட்டன், இஞ்சி, பூண்டு பேஸட் ஆகியவை சேர்த்து, மட்டன் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

    பின்பு 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    பின்பு குக்கரினை மூடி போட்டு மூடி விட்டு, 4 விசில் வரும் வரை காத்திருக்கவும். தற்போது நன்கு வெந்துள்ள மட்டனை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சிவப்பு மிளகாய், மல்லி விதைகள், கிராம்பு பட்டை, கடுகு ஆகியவை சேர்த்து நன்கு வறுக்கவும்.

    இதன் சூடு ஆறிய பின்பு, மிஞ்சியில் போட்டுப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில், தேவைப்பட்டால், சிறிதளவு பூண்டு பேஸ்டை சேர்த்துக் கொள்ளலாம்.

    தற்போது கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில், வேக வைத்த மட்டன் துண்டுகள், பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

    7 முதல் 8 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து வறுத்து எடுத்தால் ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் தயார்.
    தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, ஆலிவ் சேர்த்து சத்தான சாலட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெங்களூரு தக்காளி - 2
    வெள்ளரிக்காய் - 1
    பிளாக் ஆலிவ் - 6
    வெங்காயம் - 2
    உப்பு - சுவைக்க
    மிளகு தூள் - சுவைக்க
    துளசி இலை - 3-4
    பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) - 2 மேஜைக்கரண்டி

    செய்முறை :

    வெங்காயம், பிளாக் ஆலிவ், பெங்களூரு தக்காளியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    துளசி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பிளாக் ஆலிவ், வெள்ளரிக்காய், பெங்களூரு தக்காளியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகு தூள், பால்சமிக் வினிகர் (Balsamic vinegar) சேர்த்து நன்றாக கலந்து துளசி இலை தூவி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான தக்காளி ஆலிவ் சாலட் ரெடி.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்..நூடுல்ஸ் வைத்து சூப்பரான பக்கோடா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்:

    நூடுல்ஸ் பாக்கெட் - 1
    மேகி மசாலா - 1
    வெங்காயம் - 1
    குடைமிளகாய் - பாதி
    முட்டை கோஸ் - தேவைக்கு ஏற்ப
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - தேவையான அளவு
    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி, மிளகாய் பொடி, ரவை, உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், குடைமிளகாய், முட்டை கோஸ், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சூடானதும், மேகி மசாலா சேர்க்கவும். அத்துடன், நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து தனியாக வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள்,

    இரண்டு டீஸ்பூன் ரவை, உப்பு போட்டு இதனுடன், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    மேலும், கலவையுடன் கடலை மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், கலவையை உருண்டை பிடித்து அதில் போட்டு வறுத்து எடுத்தால் சுவையான நூடுல்ஸ் பக்கோடா ரெடி..!.
    பச்சை பப்பாளியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர 1 மாதத்தில் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
    தேவையான பொருட்கள் :

    பப்பாளிக்காய் - ஒன்று (சிறியது)
    கேரட், வெங்காயம் - தலா ஒன்று
    சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய பூண்டு - 2 பல்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த வேர்க்கடலைப்பொடி, -  2 டேபிள்ஸ்பூன்
    வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
    ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப          
    ஆரோக்கியமான சாலட் வகைகள்

    செய்முறை:


    பப்பாளிக்காய், கேரட், வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லிய குச்சி போல வெட்டி ஒரு பெரிய பவுலில் போடவும்.

    ஒரு பாட்டிலில் வேர்க்கடலைப் பொடி, ஆலிவ் ஆயில், சோயா சாஸ், நறுக்கிய பூண்டு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும்.

    இதுதான் சாலட்  டிரெஸ்ஸிங்.  

    இந்த டிரெஸ்ஸிங்கை நறுக்கிய காய்கறிகளுடன் கலந்து, வறுத்த வெள்ளை எள்ளை அதன் மேலே தூவிப் பரிமாறவும்.

    சூப்பரான பச்சை பப்பாளி சாலட் ரெடி.
    ×