என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்.
    • நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம்.

    `நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத ஆட்களின் மரபணுக்களைவிட, அதிக அளவில் ஒரே தோற்றம் தருகின்றன. நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்' எனச் சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு விஞ்ஞானிகள். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு மரபணுத்துறையில் இன்று பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவே அது.

    அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில், இதயம் தொடர்பான ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரம் பேரிடம், இவர்கள் மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன்படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப்போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர். அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களைவிடக் குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதை அறிந்தனர்.

    அதாவது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை விட, நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம். இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன், சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

    எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூறையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இவர்கள், `நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே எங்களின் கண்டுபிடிப்பு'' என்கிறார்கள்.

    ஆனால் இவர்களின் இந்த கண்டுபிடிப்பை சக விஞ்ஞானிகள் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். `இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். ஒரே ஊரில் இருப்பதால், உறவினர்களாகவும் இருக்கலாம். அதனால் மரபணு ஒத்துப்போகலாம்'' என்கிறார் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இவான் சார்னி.

    இவரது விமர்சனத்தை மறுக்கும் இந்த இரட்டை ஆய்வாளர்கள், தாங்கள் சுமார் 907 ஜோடி நண்பர்களைத் தனியாகப் பிரித்து, அவர்களுக்கு இடையில் எந்த விதமான ரத்த உறவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அவர்களின் மரபணுக்களை ஒப்பிட்டு பார்த்ததாக சொல்கிறார்கள். எனவே, இனி நட்புக்கு மனசு ஒத்துப் போகிறதோ, இல்லையோ... மரபணு ஒத்துப்போகவேண்டும்!

    அதாவது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை விட, நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம். இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன், சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

    • கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது.
    • டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி

    டெங்கு காய்ச்சல், நான்கு வகையான டெங்கு வைரஸ்களில் ஒன்றை கொண்டு செல்லும் கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் இது ஜிகா மற்றும் சிக்குன்குனியாவையும் உண்டு செய்கிறது. இவை தீவிரமான நிலையில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வந்தால் குணப்படுத்த உதவும் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    டெங்குவின் தாக்கம் ஒரு வாரகாலத்துக்குள் குறையவும், அதேநேரம் ரத்த தட்டுக்களின் உற்பத்தி விகிதத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் உடலை புத்துயிர் பெறவும் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க 30-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன.

    * டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தான். மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பதும் முக்கியம் ஆகும். இந்த அமிழ்தவள்ளி மற்றும் துளசி இலைகளின் தண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் மூலிகை பானம் டெங்குபாதிக்கப்பட்ட உடலில் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடும்.

    * துளசி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. துளசி இலையை கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை இரண்டு மணி நேரம் இடைவெளியில் குடித்து வர வேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும். துளசி மருத்துவ குணங்களை கொண்டது என்பதோடு பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்க அளவோடு எடுப்பது நல்லது.

    * பப்பாளி இலைகளை நசுக்கி அல்லது அதன் சாறு எடுத்து நேரடியாக குடித்து வரலாம். இது டெங்குவால் உடலில் ரத்த அணுக்கள் குறைந்திருப்பதை அதிகரிக்க செய்வதோடு சோர்வு மற்றும் குமட்டல் அறிகுறிகளையும் நீக்க செய்கிறது. உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் வரை தினமும் பப்பாளி இலை சாறு குடித்து வரலாம்.

    * கரு ஊமத்தை சக்தி வாய்ந்த மூலிகை. இது டெங்குவினால் உண்டாகும் அறிகுறிகளை குறைக்க செய்கிறது. பெரும் மருத்துவ குணங்களை கொண்டுள்ள இது நன்மை செய்யகூடியது என்றாலும் சுயமாக எடுக்கமால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் கலந்தாலோசிட்து எடுப்பது நல்லது.

    * நெல்லிக்கனி வைட்டமின் சி நிறைந்தது. உடலில் நோயெதிர்ப்புசக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மிகவும் உதவும். ஆயுர்வேதத்தில் நெல்லி அற்புதமான மருத்துவகுணங்களை கொண்டதாக விவரிக்கிறது. இவை உடல் முழுவதும் நன்மை செய்யகூடியது. நெல்லியை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் எடுத்து வரலாம்.

    * டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். அதிமதுர வேர்கள் மோசமான தோஷங்களை சமப்படுத்தவும் வீக்கத்தை குறைக்கவும் உதவும். இதை தேநீராக்கி குடிப்பது காய்ச்சல், வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

    * வேப்பிலை கசப்பு நிறைந்தது. இது பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இதன் மருத்துவ குணங்களுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. டெங்குவில் உள்ள வேப்ப இலை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் 3-4 வேப்ப இலைகளை போட்டு ஊறவைத்து நாள் முழுவதும் கஷாயத்தை குடிப்பதன் மூலம் பலனை பெறலாம்.

    டெங்குவுக்கு இந்த ஆயுர்வேத மருத்துவத்தை எல்லோரும் பின்பற்றலாம் என்றாலும் உங்கள் உடல் வாகு மற்றும் உங்கள் உடலில் உள்ள நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவரின் பரிந்துரை படி இதனை எடுத்துக்கொள்ளலாம்.

    • வாய் சுகாதாரத்தை சரியாக பேணாமல் இருப்பதால் பல் சொத்தை உருவாகிறது.
    • ஆயில் புல்லிங் செய்வதால் பற்கள் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும்.

    பல் சொத்தை பிரச்சினை இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே மிக எளிதாக வந்து விடுகிறது. இதற்கு காரணம் அவர்கள் அதிகமாக சாப்பிடும் இனிப்பு மிட்டாய்கள், சாக்லெட், ஸ்டார்ச் நிறைந்த உணவுப்பொருள்கள் ஆகியவை தான். இந்த உணவுகளின் எஞ்சிய பகுதி பற்களில் ஒட்டிக் கொண்டு பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. வாயில் பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். இதேநிலை தான் பெரியவர்களுக்கும்.

    உணவு சாப்பிட்டதும் சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பது, வாய் சுகாதாரத்தை சரியாக பேணாமல் இருப்பது போன்றவற்றால் இந்த பிரச்சினை அதிகரிக்கும்.

    தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் பற்கள் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும். பற்களில் பிளேக் படிவதைத் தடுக்கும். தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வதோடு பல் சொத்தையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்யும்.

    உணவுமுறையில் மாற்றம்

    பல் சொத்தைப் பிரச்சினை இருப்பவர்கள் அதன் தீவிரத்தைக் குறைப்தற்கு முதலில் செய்ய வேண்டியது உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது தான். சர்க்கரை சேர்த்த இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். சர்க்கரை சேர்த்து ஜூசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். கால்சியம் பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நம்முடைய உடலில் இன்பிளமேஷன்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

    சொத்தை பல், பல் வலி உள்ளிட்ட பல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் இன்பிளமேஷன்களால் தான் உண்டாகிறது. அதனால் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆயுர்வேதத்தில் காயகல்ப மூலிகைகளில் ஒன்றாக சொல்லப்படுவது நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி பல் சொத்தை மற்றும் பல் வலியைச் சரிசெய்ய உதவி செய்யும். ஒரு கப் நீரில் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அந்த நீரை ஆறவைத்து அதை வாய்க் கொப்பளித்து வர பல் சொத்தை வேகமாக சரியாகும்.

    அதிமதுரம் மிகவும் இனிப்பான மூலிகை. அதனால் ஆயுர்வேதத்தில் எல்லா வகையான மருந்துகள் தயாரிப்பிலும் இந்த அதிமதுரத்தைச் சேர்ப்பார்கள். இதில் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகம் என்பதால் இது பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அதிமதுரத்தைச் சேர்த்து கொதிக்க விட்டு, ஆறவிட்டு அந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல் சொத்தையில் உள்ள புழுக்களை வெளியேற்றும். நாளடைவில் பல் சொத்தையைச் சரிசெய்யும்.

    கற்றாழையில் ஆன்டி இன்பிளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் பயோஆக்டிவ் பண்புகள் உடலில் ஏற்படும் கிருமித் தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. அதில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும். கற்றாழை ஜெல்லை டூத் பேஸ்ட்டாக பயன்படுத்தி பல் துலக்கி வர வேகமாக பல் சொத்தை சரியாகும். அதேபோல கற்றாழையை ஜூசாக செய்து குடித்து வர பல் சொத்தை மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.

    கிரீன் டீயில் நிறைய ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. அதனால் கிரீன் டீ பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிற பல் சொத்தையைச் சரிசெய்ய உதவி செய்யும். அதோடு கிரீன் டியில் ஃப்ளூரைடும் அதிகமாக இருக்கிறது. இந்த ஃப்ளூரைடு என்பது பற்களைப் பாதுகாக்கவும் பல் சொத்தையைப் போக்கவும் உதவும் ஒரு வகை மினரல். அடிக்கடி கிரீன் குடிப்பது, கிரீன் டீ பேக்கை வைத்து சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர பல் பிரச்சினைகள் தீரும்.

    கிராம்பு காலங்காலமாக பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்காக நம்முடைய முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் பல் வலியைக் குறைக்கவும் பல் சொத்தையை சரிசெய்யவும் உதவி செய்யும். பல் சொத்தை மற்றும் பல் வலி பிரச்சினை உள்ளவர்கள் அந்த இடத்திலுள்ள வலியை குறைக்க கிராம்பு எண்ணையை பயன்படுத்தலாம்.

    • காலை தூங்கி எழுந்ததும் உடலில் அரிப்பு தொடங்கலாம்.
    • தோல் நோய்களில் இந்த கரப்பான் நோய் மோசமானது.

    விதவிதமான தோல் நோய்கள் என்று இருந்தாலும் அதில் நம்மை அதிகம் சிரமத்துக்கு ஆளாக்குவது என்றால் கரப்பான் நோய் தான். இந்த கரப்பான நோய் மற்றும் தோல் நோய் அனைத்துக்கும் பயன்படும் ஆயுர்வேத மூலிகைகள் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தோல் நோய் தீர்க்கும் கஷாயம்:

    காலை தூங்கி எழுந்ததும் உடலில் அரிப்பு தொடங்கலாம். அதேபோன்று அலுவலகம் சென்று வந்ததும் மீண்டும் அரிப்பு தொடங்கலாம். இப்படி உடல் முழுவதும் அரிப்பு தொடங்கி அதை சொரிந்து சொரிந்து அரை மணி நேரம் சொரிந்த பிறகு மீண்டும் படுக்கைக்கு செல்லும் போது அரிப்பு தொடங்கலாம். தோல் நோய்களில் இந்த கரப்பான் நோய் மோசமானது.

    இந்த கரப்பான் நோயை முற்றிலும் குணமாக்க இயலாத நோயாக பார்க்கப்படுகிறது. நோய் தீவிரமாக இருந்தாலும் கட்டுக்குள் வைக்கவே இந்த சிகிச்சை உதவுகிறது. ஆனால் அரிப்பு இல்லாத சிகிச்சையை ஆயுர்வேத மூலிகைகள் அளிக்கிறது. ௧௩ வகையான கரப்பான் நோய்கள் இருக்கும் நிலையில் அரிப்பற்ற நிலைக்கு உதவும் ஆயுர்வேத கஷாயம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அமுக்கிரான் கிழங்கு சூரணம் - 2 கிராம்

    திரிபலா சூரணம் - 2 கிராம்

    திரிகடுகு சூரணம் - 2 கிராம்

    ஓமம் - 2 கிராம்

    பரங்கிப்பட்டை பொடி - 2 கிராம்

    நீரடி முத்து பொடி - 2 கிராம்

    ஜாதிக்காய் பொடி - 2 கிராம்

    ஜாதிபத்திரி பொடி - 2 கிராம்

    கிராம்பு பொடி - 2 கிராம்

    தண்ணீர் - 300 மில்லி

    செய்முறை:

    தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அவை 1௦௦ மில்லியாக குறைந்து வரும் வரை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். கடுமையான கசப்பும் துவர்ப்பும் கொண்ட அருமருந்து.

    அறிகுறிகள்

    கரப்பான் அரிப்பு என்பது மோசமானது. இந்த நோய் தீவிரம் வேதனையானது. சொரி, சிரங்கு என்று அழைக்கப்படும் இது பெரியவர்களை தாண்டி குழந்தைகளிடமும் பார்க்கலாம். கால்களில், கைகளில் முகத்திலும் கூட இவற்றை பார்க்கலாம். இதனால் குழந்தை அரித்து அரித்து சிரமப்படுவதை பார்த்திருப்போம்.

    கரப்பான் நோய் சிரமத்தை மாற்ற வேண்டுமெனில் அவர்கள் அசைவத்தை தவிர்த்து சைவமாக இருக்க வேண்டும். உணவு முறையில் உடலில் பித்தத்தை அதிகரிக்கும் கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் அரிப்பு தீவிரம் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.

    தோல் சார்ந்த தொற்று நோய்கள், பூஞ்சை சார்ந்த தொற்றுகள், தோல்களில் குணப்படுத்த முடியாத சொரியாசிஸ் நோய்கள் என கொண்டிருப்பவர்கள் சிகிச்சை மருந்துகளோடு இணை மருந்தாக இந்த 9 மூலிகைகள் கொண்ட கரப்பான் நோய் தீர்க்கும் கஷாயம் அருந்தினால் தோல் அரிப்பு, தோல் உணர்ச்சியின்மை தடுப்பு, எரிச்சல் தடுப்பு உண்டாகி உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்நாள் முழுவதும் அரிப்பு இல்லாமல் பார்த்துகொள்ளலாம்.

    கஷாயத்தை காலை ஒரு வேளை, மாலை ஒரு வேளை என்று எடுத்துவரலாம். தோல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இதை எடுக்க விரும்பினால் மருத்துவரிடம் தெளிவான ஆலோசனை பெறுவது அவசியம்.

    • சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்று.
    • தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும்.

    சளி, இருமல் ஆகியவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்களால் உண்டாகும். குறிப்பாக வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும்போது அவை முதலில் பாதிப்பது சுவாச மண்டலத்தை தான். சுவாச மண்டலங்களில் தொற்றுக்கள் ஏற்படும் போதுதான் தீராத சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொற்று ஏற்பட்ட பிறகு மருந்து எடுத்துக் கொள்வதை விட ஆரம்பத்திலேயே உணவுகளின் வழியாக, இயற்கையான முறையில் சரிசெய்து கொள்ள முயற்சி செய்வது தான் நல்லது.

    * துளசியை இஞ்சியுடன் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து பின்னர் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர சளி, இருமல் தொல்லை சரியாகும்.

    * தேன் எடுத்துக் கொள்வது சளி, இருமலைக் குறைக்கும் வேலையைச் செய்யும்.

    * ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலை, இரவு என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வர சளி, இருமல் கட்டுக்குள் வரும்

    * லவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன. லவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் பலப்படும்.

    * லவங்கப்பட்டையின் பொடியுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டாலும் சளி, இருமல் பிரச்சினை குறையும்.

    * லவங்கப்பட்டை பொடியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு டம்ளராக சுண்டவிட்டு டீயாக எடுத்துக் கொள்ளும்போது சளி, இருமல், காய்ச்சல் தீருவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * சீந்தில் பல நூறு நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இந்த சீந்தில் கொடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல். வைரஸ் தொற்றுக்கள் பருவ கால தொற்று நோய்களை தீர்க்க முடியும்.

    * சீந்தில் கொடியின் சாறை உட்கொள்வதன் மூலம் பருவ கால தொற்றுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்.

    • காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம்.
    • பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது.

    காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம். சில நேரங்களில் மந்தமான வலியையும், மற்ற நேரங்களில் ஊசியை வைத்து குத்துவது போன்ற வலியையும் ஏற்படுத்தலாம். காதில் உள்ள குழாய் திரவத்தால் நிரப்பப்பட்டு தடுக்கப்படும் போது அவை செவிப்பறை அல்லது காது தொற்றுக்கு பின்னால் அழுத்தம் அதிகரிக்க செய்கிறது. இதனால் காது வலி உண்டாகலாம். பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது. இவை பற்கள், தாடை அல்லது தொண்டை போன்ற வேறு சில பகுதிகளின் வலியாலும் உண்டாகிறது.

    காதுவலியை ஏற்படுத்தும் காரணங்கள்:

    தொண்டை வலி

    சைனஸ் தொற்று

    பல் தொற்று

    குறுகிய கால அல்லது நீண்ட கால காது தொற்று

    தாடையின் கீல்வாதம்

    ஜாயிண்ட் சிண்ட்ரோம்

    காதில் காயம்

    மெழுகு அல்லது சில பொருள் காதில் மாட்டிகொள்வது

    நீச்சல் காது (காதுகால்வாயின் தொற்று)

    மண்டை ஓட்டின் எலும்புகளில் தொற்று மற்றும் சேதம்

    குழந்தைகளுக்கு குளிக்கும் போது சோப்பு உள்ளே செல்வது, ஷாம்பு உள்ளே சென்று விடுவது மற்றும் குளியலுக்கு பிறகு காது சுத்தம் செய்கிறேன் என்று பருத்தி நுனி கொண்ட துணியால் காதினுள் விடுவது போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகலாம்.

    வீட்டு வைத்தியம்:

    * காதுவலி இருக்கும் போது எளிமையான வீட்டு சிகிச்சை முறையே முக்கியமானது. சுத்தமான துணி அல்லது துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நீரை பிழிந்து துணியை கையடக்கமாக மடித்து காதுக்கு எதிராக சூடான அழுத்தத்தை ஒற்றி எடுங்கள். இப்படி 15 நிமிடங்கள் வரை செய்தால் காது வலி, வீக்கம் குறையும்.

    * காதுவலி சமயங்களில் சைனஸ் அல்லது நாசி நெரிசலால் வந்தால் நீராவியை உள்ளிழுப்பது நிவாரணம் அளிக்கும். தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி உடல் முழுவதும் கனமான போர்வை கொண்டு போர்த்தி முகம் நன்றாக பானையின் மீது இருக்கும்படி சாய்ந்து கொள்ளவும். மூக்கு வழியாக நீராவியை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும் சில நிமிடங்கள் வரை வைத்திருந்து மீண்டும் உள்ளிழுக்கவும். இது காதுகளுக்கு அழுத்தம் குறைத்து நெரிசலை குறைக்கும்.

    * இது பெரும்பாலும் நீச்சல் பயில்பவர்களுக்கு வரக்கூடிய காதுவலிக்கு உதவும். அதேபோன்று காற்று மற்றும் மழை நாட்களில் வெளியில் இருப்பதும் தொற்றுநோயை உண்டு செய்யலாம். காதுக்கு அருகில் குறைந்த வெப்பத்தில் ப்ளோ- ட்ரையரை காட்டுவது காதில் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்தை உலர வைக்க உதவும். நீங்கள் மழையில் நீச்சல் பழகிய பிறகு காதில் ஈரப்பதம் இருந்தால் இம்முறை உங்களுக்கு காதுவலியை தவிர்க்கும்.

    * காது வலியை குணப்படுத்த வெங்காயசாறு உதவும் என்பது 1800-களில் இருந்ததாக சொல்லப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள குர்செடின் என்னும் ஃப்ளவனாய்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஒரு முறை வெங்காயத்தை 450 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்து 15 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். பிறகு அது ஆறியதும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, பாத்திரத்தில் சாற்றை பிழிந்து சில துளிகள் காதுகளில் விட வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் வெங்காயத்தை நேரடியாகவும் வைக்கலாம். எனினும் மூன்று நாட்கள் கடந்தும் வலி உணர்வு குறையாத நிலையில் நீங்கள் மருத்துவரை பார்ப்பது பாதுகாப்பானது.

    * காதில் ஆலிவ் எண்ணெய் விடுவது வலியை ஆற்றும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆலிவ் எண்ணெய் மெழுகு திரட்டி அல்லது இலேசான காது தொற்று வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். சிறிது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் ஒரு துளியை காதில் விடலாம். சூடான எண்ணெய் காதை பாதிக்கலாம். அதனால் கவனம் வேண்டும். இந்த ஆலிவ் எண்ணெய் காதில் விட்டு அப்படியே எதிர்புறமாக படுத்தபடி இருந்தால் அது வலியை குறைத்து அசவுகரியத்தை குறைக்கும் காதில் இருக்கும் மெழுகை மென்மையாக்கும்.

    * இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாறு அல்லது இஞ்சி சேர்த்து சூடுபடுத்தப்பட்ட எண்ணெயை இளஞ்சூட்டில் காதை சுற்றி தடவ வேண்டும். இப்படி செய்தால் வலி ஓரளவு கட்டுப்படும். வெளிப்புறமாக காது பகுதியை சுற்றி தடவ வேண்டும். இதனை காதுகளின் உள்ளே விடக்கூடாது.

    * பூண்டு ஆண்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி பண்புகள் கொண்டவை. பூண்டை சூடான ஆலிவ் அல்லது நல்லெண்ணெயில் ௩௦ நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு இதை வடிகட்டி காது பகுதியில் தடவி விடவும். இதை காதுக்குள் விட வேண்டாம். இது எரிச்சலை உண்டு செய்துவிடலாம்.

    * ஹைட்ரஹன் பெராக்சைடு காதுவலிக்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தலாம். காதுவலிக்கு காரணம் மெழுகு கட்டியாக இருந்தால் சிகிச்சையில் இந்த முறை சிறப்பாக உதவும். காதுவலி இருக்கும் பகுதியில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சொட்டுகள் வைத்து சில நிமிடங்கள் உட்காரவும். பிறகு சுத்தமான காய்ச்சி வடிகட்டிய நீரில் காதை சுத்தம் செய்யவும். இது மெழுகு கட்டியை பாதுகாப்பாக வெளியேற்ற செய்யும்.

    இதனை எல்லாம் செய்தும் காதுவலி சரியாக வில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகலாம்.

    • ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும்.
    • ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

    ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். இது ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது மற்றும் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதே இதன் வேலை. ஹீமோகுளோபின் அளவுகள் குறைவாக இருக்கும்போது, ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாதபோது அல்லது ரத்த சிவப்பணுக்கள் போதுமான ஆக்சிஜனை எடுத்துச் செல்லாதபோது ரத்தசோகை ஏற்படலாம்.

    உங்களுக்கு உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தேன் ஊற்றி 24 மணிநேரம் ஊற வைத்து குறைந்த 3 மாதங்கள் சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுக்கும் போது உண்மையாகவே உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்திருப்பதை நீங்களே உணர்வீர்கள். செய்து பார்த்து பயன் அடையுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    நெல்லிக்காய்- 3

    பேரிச்சை- 50 கிராம்

    கருப்பு காய்ந்த திராட்சை- 50 கிராம்

    அத்திப்பழம்- 50 கிராம்

    பாதாம்- 50 கிராம்

    பட்டை துண்டு- ஒரு துண்டு

    இஞ்சி- 2 துண்டு துருவியது

    ஆப்ரிகாட்- 50 கிராம்

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தேன் ஊற்றி ஒரு நாள் அல்லது குறைந்தது 24 மணிநேரத்துக்கு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறியதும் இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

    மெடிக்கலில் கிடைக்கும், சிரப் வகைகளை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக நாமே வீட்டில் இந்த மாதிரி பொருட்களை கொண்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். குறைந்தது 3 மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

    • ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு காரணம்.
    • மனஅழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.

    கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    ஊட்டச்சத்து குறைபாடு:

    போதுமான அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்குத் தீனி போன்றவற்றில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்காது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குடலில் இருக்கும் மைக்ரோபயோட்டா இன்றியமையாதது.

    மேலும் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்புகள், வைட்டமின்கள் டி, சி, பி, ஏ, ஈ, கே மற்றும் இரும்பு, கால்சியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் உடலுக்கு போதுமான அளவு தேவை. அத்துடன் நோய் எதிர்ப்பு அமைப்பு திறம்பட செயல்பட பழங்கள் மற்றும் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஃப்ரீபயாடிக்குகள், புரோபயாடிக்குகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதும் முக்கியம்.

    உடற்பயிற்சி இல்லாமை:

    தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் வாரத்தில் 3 நாட்களாவது உடற்பயிற்சிக்காக நேரம் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது. அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    மன அழுத்தம்:

    நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதன் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளில் மன அழுத்தம் முதன்மையானது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அதில் இருந்து மீள்வதற்கான நேரம் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள வைத்துவிடும். மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.

    தூக்கமின்மை:

    மன அழுத்தத்தைப் போலவே தூக்கமின்மையும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான ரத்த வெள்ளை அணுக்களின் இயல்பான உற்பத்தியை சீர்குலைத்து விடும். ஒழுங்கற்ற தூக்க முறைகளும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.

    மது-புகைப்பழக்கம்:

    மது பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆல்கஹால் காரணமாக பாதிப்படையும். புகைப்பிடித்தல் புற்றுநோயுடன் தொடர்புடையது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளிலும் குறுக்கிடும்.

    வீட்டுக்குள்ளேயே இருத்தல்:

    எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருப்பதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். தினமும் சில நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படர வேண்டும். சூரிய ஒளியின் வெளிப்பாடு சர்க்காடியன் தாளத்தை பராமரிக்க உதவும். இது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போதுமான அளவு கிடைக்காதபோது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும்.

    கொரோனா காலகட்டத்தில் பலரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டார்கள். எப்போதும் சளி, இருமலால் அவதிப்படுவது, அடிக்கடி வயிறு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது, மன அழுத்தத்திற்கு ஆளாவது, அவ்வப்போது சோர்வாக இருப்பதாக உணர்வது, அடிக்கடி நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
    • செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.

    இரவில் போதுமான அளவு தூங்காவிட்டால் ஏற்படும் சோர்வு மறுநாள் முழுவதும் எதிரொலிக்கும். ''தூக்கமின்மை உடல் நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். போதிய நேரம் தூங்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வித்திடும்'' என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாள் இரவும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் தூக்கமின்மை ரத்த அழுத்த அளவை அதிகரிக்கச்செய்யக்கூடும். இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்க்கும் வழிவகுக்கும். தினமும் இரவில் 7 மணி முதல் 9 மணி நேரம் வரை தூங்குமாறு அமெரிக்க இதய சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

    தூக்கத்தின்போது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயல்புடையது. இதன் மூலம் சிறு, சிறு உடல்நல குறைபாடுகள் நீங்கிவிடும். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும். ''நீங்கள் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படும்போது உடல் அதிக மன அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்யும். அப்போது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    நன்கு ஆழ்ந்து தூங்கும்போது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்து மீளவும் உதவும். போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டாலோ, ஆழ்ந்து தூங்க முடியாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போகும். நாள்பட்ட அழற்சி, ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு வித்திடும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து இதய அமைப்பை சேதப்படுத்தும். நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும்.

    • பல் சொத்தையாகி எனாமல் தேய்ந்து போவது ஒரு காரணம்.
    • குழந்தைகளுக்கு புளூரைடு அதிகம் உள்ள பேஸ்ட்தான் நல்லது.

    மெல்லிய மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது பிழையல்ல, அதனையும் தாண்டி நிறம் கடுமையானால் ஆபத்து. வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்பட்டுள்ளன என்பதே இதற்கு அர்த்தம்.

    பல் கூச்சம் எதனால் வருகிறது?

    பல் சொத்தையாகி எனாமல் தேய்ந்து போவது ஒரு காரணம் தேய்ந்த பிரஷ்ஷால் அதிக நேரம் பல் தேய்ப்பதால் எனாமல் தேய்ந்தாலும், வயது அதிகம் ஆகும் போது பல் தேய்மானம் காரணமாகவும் பல் கூச்சம் வரும் மிருதுவான பிரஷ் பயன்படுத்த வேண்டும். பிரஷ் தேய்ந்து விட்டால் உடனே மாற்ற வேண்டும். பல் தேய்க்கும் போது மேலும் கீழுமாக மட்டுமே தேய்க்க வேண்டும்

    பற்களை பாதுகாக்க என்ன பேஸ்ட் பயன்படுத்தலாம்?

    பெரியவர்கள் எந்த பேஸ்ட் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு புளூரைடு அதிகம் உள்ள பேஸ்ட்தான் நல்லது அப்போதுதான் பல்லில் சொத்தை ஏற்படாது பற்கள் வளர்ச்சியில் பாதிப்பு வராது குழந்தைகளுக்கு என்று தனியாக புளூரைடு பேஸ்ட் கிடைக்கிறது.

    வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை தடுப்பது எப்படி?

    பல்லை சரியாக தேய்க்கவில்லை என்றால் வாயில் துர்நாற்றம் தான் வரும். சாப்பிட்ட பிறகு வாய்கொப்பளித்தால் மட்டும் சுத்தமாகாது. பிரஷ் பண்ணினால்தான் சுத்தமாகும். காலை, இரவு படுக்க போகும் முன் பல் தேய்ப்பது அவசியம். தவறினால், அது கால்சியமாக உருவாகி பற்களில் மஞ்சள் கறை படியும்.

    வயிற்றில் புண். நாள் பட்ட சளி இருந்தாலும் வாய் துர்நாற்றம் வரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் டாக்டரை பார்த்து செக்கப் செய்து கொள்வது அவசியம்.

    ஈறுகளில் வீக்கம் ஏன் வருகிறது?

    பற்களை சரியாக சுத்தம் செய்யாததால் பற்களின் இடையில் மஞ்சள் கறை படிந்து தொற்று ஏற்படும் போது ஈறுகளில் விக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் ரத்தக்கசிவும் ஏற்படும்.

    பல் சொத்தையாவதை தடுப்பது எப்படி?

    பற்களின் அமைப்பு மேடு பள்ளமாகதான் இருக்கும். அப்போது தான் சாப்பிடும் உணவு பொருட்கள் மெல்லும் போது அரைபடும். அப்போது அந்த பள்ளங்களில் உணவுகள் படிந்து இருக்கும். சாக்லெட் போன்ற இனிப்புகள் சாப்பிடும் போது பற்களின் இடையில் ஒட்டிக்கொள்ளும் அதை சரியாக பிரஷ் செய்யாமல் விடுவதால் கிருமிகள் உருவாகின்றன. குழந்தைகளில் பற்கள் விரைவில் சொத்தையாக இதுவே காரணம்.

    பற்களை பளிச் வெள்ளையாக்க பற்பசைகள், மருத்துவமனையில் சிகிச்சை என்பது பற்களின் கவசமான எனாமல் பூச்சை பாதிக்கலாம். இந்த செயற்கை முயற்சிகள், பற்களை நாளடைவில் பலவீனப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே மஞ்சள் நிறமும் ஆபத்துதான், செயற்கையான வெண்மை நிறமும் ஆபத்துதான்.

    • இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தடவை கொட்டாவி விடுகிறோம்.
    • மூளை குளுமை அடைந்து நமக்குக் கொட்டாவி வரும்.

    நாம் வாழ்நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தடவை கொட்டாவி விடுகிறோம். ஆனால் ஏன், எதனால் கொட்டாவி விடுகிறோம் என்று அறிவியலால் கூட உறுதியாகச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. இருந்தபோதிலும் கொட்டாவிக்கான காரணங்களை நிபுணர்கள் அடுக்குகிறார்கள். முதலில் என்ன மாதிரியான சூழலில் இருக்கிறோம் என்பதை பொறுத்து கொட்டாவி வருகிறது. நம்முடைய உடல் சோர்வாக அல்லது சலிப்பாக இருக்கும்போது மூளையின் வெப்பநிலை உயரும்.

    அப்போது நமக்கு கொட்டாவி வரும். தவிர, அடைக்கப்பட்ட அறைக்குள் நீண்ட நேரம் இருக்கும்போது குளிர்ந்த காற்றை சுவாசிக்கிறோம். அப்போது மூளை குளுமை அடைந்து நமக்குக் கொட்டாவி வரும். ஒருவர் கொட்டாவி விடுவதை பார்க்கும்போது நமக்கும் கொட்டாவி வருகிறது. தவிர, விலங்குகளுக்கும் கொட்டாவி விடும் பழக்கம் உண்டு. இதைப் படிக்கும்போது நீங்களும் கொட்டாவி விடலாம்.

    • இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும்.
    • உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.

    உலக இதய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதய நோய்களை தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    இதய நோயின் அறிகுறி, நோயை தடுக்க செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்த தினத்தில் பல நாடுகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.

    இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும். அதில் பாதிப்பு ஏற்பட்டால் உயிழப்பு உண்டாகும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தை ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதமாகும்.

    "இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி" என்பதே இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருளாக கூறப்பட்டுள்ளது.

    காற்று மாசுபாட்டை குறைத்தால் பொதுவாக மனிதர்களுக்கு வரும் இதய நோய்களை கனிசமாக குறைக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பது. தேவையற்ற புகையை வெளியிடுவதை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி உதவலாம்.

    மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையே மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி, தரமான தூக்கம் போன்றவற்றால் நமது உடல் சீராகும். இதயம் பலப்படும்.

    உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும். உடனே மருத்துவர்களை அணுகி தேவையான மருந்துகளையும், ஆலோசனைகளையும் பெறவேண்டும். அதேபோல் உடலில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவில் தேவையானவற்றை அதிகரித்து, தேவையில்லாததை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்கள் முறையான உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அடிக்கடி சிறிது தூரம் நடக்கவேண்டும். புகை இதயத்துக்கு முதல் பகையாகும். அதனால் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் கைவிடவேண்டும்.

    எண்ணெய்யில் பொரித்த தின்பண்டங்களை குறைத்து உண்ணலாம். வயதானவர்கள் தவிர்ப்பது சிறந்தது. இதேபோல் சவர்மா, பீட்சா, பர்கர், துரித முறையில் சமைக்கும் கோழி இறைச்சி, மைதா மாவால் செய்யப்படும் உணவுகளும் ஜீரணத்தை பாதித்து, நுரையீரலையும், இதயத்தையும் சேதமாக்கும். பிரியமானவர்களிடம் பேசும்போது இதயத்தில் வைத்து உன்னை பாதுகாப்பேன் என்று உதாரணத்துக்கு கூறுவோம். ஆனால் பலர் அந்த இதயத்தை பாதுகாக்கவே தவறிவிடுகிறார்கள். ஒருவர் இறக்கும்போது அவருக்கு மட்டும் பாதிப்பில்லை. அவருடைய மொத்த குடும்பமே பாதிக்கும். எனவே விலை மதிப்பில்லாத உயிரை காக்க இதயத்தை காப்போம். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

    ×