என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மாணவர்களை, ‘இந்த பாடத்தைதான் படிக்க வைக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்போதுதான் மாணவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லவர்களாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச் செலவு செய்கின்றன. நமது கல்வியில் பெரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டியது நமது தலையாய கடமையாகும். இன்று ஆங்கில வழிக்கல்வி மீது மக்களுக்கு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுள்ளது. தமிழைப் புறக்கணிக்கக்கூடாது. தமிழைப் பொறுத்தவரை சில செய்யுள் பகுதிகள் மட்டும் மனப்பாடம் செய்ய வேண்டியது இருக்கும். மற்றபடி எல்லாப்பாடங்களையும், பொதுவாகப் புரிந்து படிக்க வேண்டிய மனப்பக்குவத்தை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். எல்லா பாடங்களையும் மானப்பாடம் செய்யவைப்பது மிகப்பெரிய தவறு.

    மாணவர்கள் தனியாகச் சிந்திக்கின்ற தன்மையை உருவாக்குவதோடு, சொந்தமாக எழுதுகின்ற வழக்கத்தையும் கொண்டு வர வேண்டும். அதற்கு மனப்பாடம் செய்தலும், ஒப்பித்தலும் பரம எதிரிகளாக அமையும் என்பது திண்ணம். மாணவர்களை, ‘இந்த பாடத்தைதான் படிக்க வைக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்போதுதான் மாணவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லவர்களாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.



    மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் கல்வியைப் புகட்ட வேண்டும். பள்ளிக்கூடங்களிலேயே திறனாய்வுத் தேர்வுகளை அடிக்கடி நடத்த வேண்டும். இனி வரும் மாணவச் சமுதாயம், கடுமையான போட்டிகள் நிறைந்த ஒரு உலகத்தை சந்திக்க இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்வதில் பள்ளிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளி படிப்பு வரை தான் கல்வி நிலையங்கள் ஒரு மாணவனுக்கு ஆடுகளமாக அமையும். எனவே அந்தக் காலக்கட்டத்தில் அவனுக்கு எல்லா பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். கல்லூரிப்படிப்பின் போது மாணவனின் எண்ணங்கள் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே ஒரு மாணவனை பக்குவப்படுத்துவதற்கு வேண்டிய இடமே ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகள் என்பதில் சந்தேகம் இல்லை.

    எனவே மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு மாணவர்களுக்கு பொது அறிவுச்சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். வினாடி-வினா போன்ற நிகழ்வுகளை அடிக்கடி பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும். திறன் அறியும் தேர்வு முறைகளை கல்வியில் புகுத்த வேண்டும். பக்கம் பக்கமாக எழுதுகின்ற முறையினை மாற்றி எதிர்காலத்திற்குத் தேவையான நுண்ணிய, நுணுக்கமான முறைகளை கல்வியில் புகுத்தினால் நாடு நலம் பெறும்.

    -முனைவர் ராம.கண்ணன், நெல்லை 
    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை காக்க பழங்களை அதிகளவு சாப்பிடுவது மிகவும் நல்லது. இன்று மாதுளை சப்போட்டா சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    விதையில்லாத, சிவப்பு நிறமுடைய மாதுளை முத்துக்கள் - 2 கப்,
    சப்போட்டா - 1,
    ஆப்பிள் - 2 துண்டுகள்,
    தேன் - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    சப்போட்டாவின் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

    ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த சப்போட்டா விழுது நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துக்கள், தேன், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

    சூப்பரான மாதுளை சப்போட்டா சாலட் ரெடி.

    வித்தியாசமான இந்த சாலட், வெயில் நேரத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண் என்பவள் கடவுளாக, மனைவியாக, தாயாக பொதுநல தொண்டில் தலைவியாக, ஒழுக்கத்தின் உயர்வாக வழிகாட்டப் பிறந்தவள். பெண்ணே! நீ சாகப்பிறந்தவள் அல்ல. சாதனை செய்ய பிறந்தவள்.
    பெண் என்பது இனிமையான சொல். தென்றலாய் வந்து உடலை தழுவிக்கொள்ளும் சொல். தாய்மையை தாலாட்டும் சொல்.

    பெண் பல விதத்தில் ஆணைவிட சிறந்தவள். தன்னலம் பற்றே இல்லாது, பொறுமையாக, அன்பாக, தாயாக, தியாகியாக, கொடையாளியாக, மற்றவர்களுக்காக வருந்துவதற்கு பெண்ணுடன் ஆண் ஒருபோதும் சமமாக மாட்டான் என்றார், லாலா லஜபதிராய்.

    சீரும் சிறப்புமிக்க நம் செந்தமிழ் நாட்டிலே வடவர் வரவால், அவர் தம் செல்வாக்கால் பெண்ணுரிமை மறுக்கப்பட்டது. இந்நாட்டிலே இருள் சூழ்ந்தது, மடமை புகுந்தது. இங்குள்ளோர் இருட்டிலே நெளியும் புழுக்களாயினர். இக்கால கட்டத்தில் பெண்ணினத்தின் விடிவெள்ளியாகத் தமிழ்த் தென்றல் திரு.வி.க., புதுமைக்கவிபாரதி, புரட்சிக் கவிஞன் பாரதிதாசன், தந்தை பெரியார் போன்ற அறிவியக்கத் தூதர்கள் தோன்றினர். பெண்ணுலகில் ஒளியேற்றினர். புகழ் சேர்த்தனர்.

    இன்று பெண்கள் பட்டம் பெறுகின்றனர். சட்டங்கள் செய்கின்றனர். அறிவினில் ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்ற சங்கநாதம் எட்டுத்திக்கிலும் இன்று எதிரொலிக்கின்றது. ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஒன்றாக உலவுகின்றனர்.

    பெண்ணினம் பெருமைப்பட வேண்டிய பொற்காலத்திலே பெண்ணினமும் சிந்திக்க வேண்டியன சில உள்ளன. அவற்றை நினைவூட்டுவதில் தவறில்லை. புதிய நாகரிகம் என்ற பெயரால், நம் உயர்ந்த பண்பாடு புதைக்கப்படுகின்றது. தாய்மை அழிக்கப்படுகிறது. இன்றைய போலி நாகரிகம் பெண்ணினத்தை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்கின்றது.



    சினிமா மோகம், பிற கேளிக்கைகள், இரவு விடுதிகள் இவைகளும், அரைகுறை ஆடைகளை அணிவதும் பெண்ணிற்குரிய அச்சம், நாணம், மடம், பயிற்பு இவைகளை மறப்பதும் வருந்தத்தக்கதே. இவற்றுக்கெல்லாம் இன்றைய சினிமாவும், சின்ன திரைகளும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. பெண்மையை எவ்வளவு கீழ்த்தரமாக காட்ட முடியுமோ அத்தனையும் இவைகள் செய்கின்றன. இது பெண்மையை போற்றுகின்றவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு சமூக நாகரிகம் என்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலில் அல்ல.

    அக்காலப் பெண்கள், தாங்கள் உடுத்தியிருந்த ஆடையை களைந்து விட்டு மறு ஆடை உடுத்தி கொள்ளும்போது தன் எதிரே தன் கணவனின் புகைப்படம் இருந்தால் அதை மறைத்துவிட்டு, மறு ஆடையை உடுத்தி கொள்வார்களாம். அப்போது எல்லாம் பாலியல் பலாத்காரம் என்றால் என்னவென்பதே தெரியாது.

    ஒரு வீட்டின் வாழ்வே அந்நாட்டின் வாழ்வாக அமைகிறது. ஒரு நாட்டின் வாழ்வும், தாழ்வும் பெண்ணினத்தைப் பொறுத்தே அமைகிறது. எனவே பெண்ணினம் வாழ வேண்டும். குடும்ப நலன் காத்து, குழந்தை வளம் பேணி குணத்தால் சிறக்க வேண்டும். வள்ளுவரும் வாசுகியுமாய்க் கருத்தால் இணைந்து, கற்பால் பிணைந்து, கல்வியால் ஓங்கி சுற்றம் பேணி, அறங்கள் போற்றி ஆன்றோர் நெறி வளர்த்து, அகிலம் வாழ, ஆக்கம் தழைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வையகம் வாழ வழி வகுக்க வேண்டும்.

    புதுமையின் பேரால் நடமாடும் அநாகரிகங்களும், ஆடைக்குறைப்புகளும் அறவே நீங்க வேண்டும். அனைத்துலகம் பின்பற்றும் நம் உயர்ந்த நாகரிகம், பண்பாடு மீண்டும் தழைக்க வேண்டும். அகிலத்திற்கே தலைமையேற்ற அருந்தமிழ்ப்பண்பாடு பெண்ணினத்தாலே பாதுகாக்கப்படல் வேண்டும்.

    ஒரு பெண்ணிற்கு தாய்மை எவ்வளவு முக்கியமோ? அதேப் போன்று பிள்ளைகளின் வளர்ப்பும் மிக முக்கியம். ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வாழ்க்கையின் உச்சத்தை அடைவார்கள். ஒழுக்கத்தை தவறவிட்ட பிள்ளைகள் வாழ்க்கையில் வீழ்ச்சியை அடைவார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் சில பெற்றோர் தன் சிறு வயது பிள்ளைகள் கைப்பேசியில் விளையாடுவதை பெருமையாக நினைக்கின்றனர். அதேப் பிள்ளைகள் பள்ளி படிப்பில் பயிலும் போது தன் நண்பர்கள் ஒருங்கே அமர்ந்து கைப்பேசியில் எதை, எதையோ பார்க்கின்றனர். பிள்ளைகளுக்கு சுதந்திரம் தர வேண்டியதுதான். அந்த சுதந்திரம் அவர்களின் வருங்காலத்தை செப்பனிட வேண்டுமே தவிர சிதைத்து விட கூடாது. பிள்ளைகளின் ஒழுக்கம் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது. முக்கியமாக பெண்கள் கையில் உள்ளது.

    பெண்ணே நீ ஒரு பெண்ணை பெற்று விட்டாய். அவளை பற்றி உன் நினைவுகளில் எத்தனை கற்பனைகள். அவைகள் எல்லாம் கனிந்து வந்ததா? கனிந்து வர என்ன செய்ய வேண்டும்? பிள்ளை பருவம் வளர்த்து விடுவாய். ஆனால் வாலிப பருவம் உன்னை மிகவும் சிந்திக்க வைக்கும்.

    அவள் கல்லூரி வாயிலில் நுழையும் போது, பல மாறுதல்கள் அவளிடம் தோன்றலாம். அவைகளில் சில நல்லவைகளாகவும், சில கெட்டவைகளாகவும் இருக்கலாம். உன் மகள் நல்லவளாக இருக்க, பெற்றவர்கள் பெயர் எடுக்க ஊக்க மருந்து அவளுக்கு சிறுபிள்ளையில் நீங்கள் கற்று தரும் ஒழுக்கம் என்ற மூலதனமே! அதுவே பெண்களை உயர்த்தும்.

    பெண் என்பவள் கடவுளாக, மனைவியாக, தாயாக பொதுநல தொண்டில் தலைவியாக, ஒழுக்கத்தின் உயர்வாக வழிகாட்டப் பிறந்தவள். பெண்ணே! நீ சாகப்பிறந்தவள் அல்ல. சாதனை செய்ய பிறந்தவள். உன் பிறவியின் பெருமையை உலகிற்கு உண்மையாக்கு. பெண்ணே நீ கவிதை பாடும் காவியப்பெண் என்பதை மறவாதே!

    பேராசிரியை ச.சுமதி, பெங்களூரு
    நம்முடைய அழகுக்கு அழகு சேர்த்து, மிக மிக முக்கியமான பணிகள் பலவற்றையும் செய்கிற தோல், கோடை காலத்தில் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று காணலாம்.
    கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெயர்தான் கோடையே தவிர, கூட்டம், வேலை போன்றவற்றிற்கு ஓய்ச்சல் இல்லாத காலகட்டம்.

    இத்தகைய சூழலில், குடும்பம், குழந்தைகள், உறவினர் என்று பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கும் பெண்களுக்குத் தங்களை கவனித்துக்கொள்ள நேரம் கிடையாது. வியர்வை, கசகசப்பு, நேர் வெயில் என்று ஏகப்பட்ட அவதிகளைச் சந்திக்கவேண்டியவர்களும் ஆவார்கள்.

    கோடையில் மிகுதியும் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். உடலின் பிற உறுப்புகளைப் பற்றி அவ்வப்போது கவலைப்படுகிற நாம், தோல் என்பதை ஒரு உறுப்பாகவோ, உடலின் பகுதியாகவோ கருதுவதே இல்லை. சொல்லப்போனால், உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல் எனலாம். உடலைப் பாதுகாத்து, நம்முடைய அழகுக்கு அழகு சேர்த்து, மிக மிக முக்கியமான பணிகள் பலவற்றையும் செய்கிற தோல், கோடை காலத்தில் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று காணலாமா? என்னென்ன செய்யலாம்?

    முதலில் நிறைய நீர் அருந்த வேண்டும். வெப்பச் சூழலில், உடலின் நீர், ஆவியாகி வெளியேறிவிடும். தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறம் மங்குதல், கன்னம், கழுத்து போன்ற இடங்களிலும், மடிப்புப் பகுதிகளிலும் கருமை படர்தல் போன்றவை நமது சருமமானது நீர்ச்சத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளங்கள்.

    அரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு கிளாஸ் நீர் கண்டிப்பாக அருந்துங்கள். பழச்சாறு (குறிப்பாக தர்பூசணிச் சாறு, கிரிணிச் சாறு, சாத்துக்குடிச் சாறு, மாதுளஞ்சாறு, எலுமிச்சைச் சாறு ஆகியவை), நீராகாரம், மோர், கரும்புச் சாறு, இளநீர் போன்றவற்றுக்கு உங்கள் உணவுப் பட்டியலில் கூடுதல் இடம் கிடைக்கட்டும். காலத்திற்கேற்ற, எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களையும் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளிலும், நீர்ச்சத்து அதிகம் கொண்ட பூசணி, தக்காளி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    தயிர்மோர் சாதம், பழைய சோறு, சோற்றில் இரவு நீர் ஊற்றிக் காலையில் நீரை மட்டும் இறுத்தெடுத்து (தென் மாவட்டங்களில் இதனைச் ‘சாத்தூத்தம்’ என்பார்கள்) அதில் சிறிதளவு உப்பிட்டு மோர் கலந்த பானம் இவையெல்லாம் வெப்பத்தைத் தணிப்பவை மட்டுமல்ல; செலவு குறைவானவை; செய்வதற்கு எளிதானவை; வைட்டமின்கள் தரக்கூடியவை; நீர்ச்சத்தையும் உப்புச் சத்தையும் உடலில் தக்க வைப்பவை.

    இரண்டாவதாக நேரடி வெயிலைத் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதுகளில் வெளியில் போக நேர்ந்தாலும், ஆடையால் மூடப்படாமல் உள்ள பகுதிகளை (கைகள், முகம்), மெல்லிய துணியால் போர்த்திக்கொள்ளலாம். தலைக்குக் குடை பிடித்துக்கொள்ளுங்கள்; அல்லது மெல்லிய பருத்தித் துணியால் முக்காடு போல் இட்டுக் கொள்ளலாம். முடிந்தவரை, வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

    மூன்றாவதாக, தக்க ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். இது மிக முக்கியம். சித்திரை, வைகாசி மாதங்களில் திருமண வைபவங்களும் கோவில் திருவிழாக்களும் நிறையவே இருக்கும். இத்தகைய நிகழ்ச்சிகள், பலரும் கூடியிருந்து, பானகம் போன்ற நீர்ச்சத்து உணவுகளைப் பரிமாறிக்கொண்டு, வெயிலின் கடுமையை மறப்பதற்குத் தானே தவிர, ஆடம்பரத்தை அதிகப்படுத்திக்கொள்வதற்கு அல்ல.

    பளபளக்கும் பட்டு உடைகள், சிந்தடிக் துணிகள் போன்றவற்றை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது அவசியம். கல்யாணத்திற்குப் போகிறோம் என்பதற்காக, பட்டு ஜரிகை வைத்த உடை, அலங்காரம் அதிகம் செய்த ஆடை என்றெல்லாம் அணிய வேண்டாமே! முக்கியமாகக் குழந்தைகளுக்கும் இப்படிப்பட்ட உடைகளை உடுத்திவிடாதீர்கள். இத்தகைய ஆடைகள் சருமத்தைத் திக்குமுக்காடச் செய்யும்.



    சருமத்திற்குக் கிடைக்கவேண்டிய காற்றோட்டம் கிடைக்காது. சருமத்துளைகள் அடைபட்டு, கூடுதல் அழுக்கு சேரும். மெல்லிய பருத்தி ஆடைகளே இந்தக் காலகட்டத்திற்கு ஏற்பானவை. வெளிர் நிற ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஸ்டைல், பேஷன், அழகு போன்றவை சற்றே குறைந்தாலும் பாதகமில்லை; தளர்வான, சருமத்தை இறுக்கிப் பிடிக்காத, காற்றோட்டத்தைத் தடை செய்யாத ஆடைகளை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.

    நகைகளை தவிர்ப்பதும் நலம் பயக்கும். பேஷன் டிஸைனர்கள்கூட, வெயில் காலத்திற்கான அறிவுரைகளில், ‘அணிகலன்களைக் குறையுங்கள்’ என்பார்கள். கழுத்திலும் கைகளிலும் நகைகள் உறுத்தும். சாதாரண சமயங்களில் அவ்வளவாக பாதிக்காத இந்த உறுத்தல்கள், கோடையில் சற்று கூடுதலாகவே எரிச்சலூட்டும்.

    அதே போல தோல் படிவுகளை நீக்க வேண்டியது அவசியம். நம்முடைய புறத்தோலின் மேலடுக்கு அணுக்கள், நாள்தோறும் சிதைந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு சிதைந்து வெளித்தள்ளப்படுகிற அணுக்கள், தோலின் புறப்பரப்பில் தங்கியிருக்கும். நீராடும் போது நீக்கப்படவேண்டிய இவை, வெயில் காலங்களில், வியர்வையில் ஒட்டி அப்படியே தங்கிவிடக்கூடும். இந்த வகையான தோல் சிதைவுப் படிவுகளை நீக்கினால், தோலின் மங்கல்தன்மை நீங்கிப் பொலிவு கூடும்; அது மட்டுமல்லாமல், சருமத் துளைகளும் அடைப்பின்றிச் செயல்படும்; சருமமும் மொத்தத்தில் மென்மையாக இருக்கும்.

    இதற்காக வேதிமங்கள் கலந்த பொருட்களை தவிர்த்து, நம்முடைய பழைய பழக்க இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரு நாட்களாவது, கடலை மாவு, பயத்தம் பொடி போன்றவற்றைத் தேய்த்து நீராடலாம். வாரத்தில் ஒருநாளாவது, நல்லெண்ணெயைக் கேசத்திலும் உடலிலும் செதும்பத் தேய்த்து, சீயக்காய் அல்லது மேற்கூறிய பொடிகளில் ஒன்றைத் தேய்த்துக் குளிக்கலாம்.

    வெயில் காலம் என்று குளிர்நீரில் குளிப்பீர்கள்; அது நல்லதுதான். ஆனால், வாரத்தில் ஓரிரு நாட்களாவது, வெதுவெதுப்பான அல்லது சற்றே சூடான நீரில் குளிப்பது நல்லது. குறிப்பாக, எண்ணெய் தேய்க்கும் அல்லது கடலை பயத்தம் பொடிகளைப் பயன்படுத்தும் நாட்களில் வெந்நீரையும் பயன்படுத்தினால், அழுக்குகளைக் கரைப்பதற்கும் தோல் படிவுகளை நீக்குவதற்கும் உதவும்.

    பாலேடு, தேங்காயெண்ணெய் (ஓரிரு சொட்டுகள் நல்லெண்ணெய் சேர்த்து) ஆகியவற்றை முகத்திற்குப் பூசி, சிறிது நேரம் கழித்துக் குளிர் நீரில் கழுவலாம். தக்காளித் துண்டு அல்லது உருளைக்கிழங்கு துண்டு போன்றவற்றையும் முகத்தில் சிறிது நேரம் பூசியிருக்கலாம்.

    இத்தகையவற்றை சகோதரிகளே, நீங்கள் மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்படுத்தலாம். வெப்பத்தின் பாதிப்பைக் குறைப்பதற்காக, அவ்வப்போது, முகத்தையும் கைகால்களையும் குளிர்நீரில் கழுவலாம். ஆனால், சோப்புகளைப் பயன்படுத்தாதீர்கள்; அவை ஈரப்பதத்தை எடுத்துவிடும். திரும்பத் திரும்பக் கழுவினால், அதுவேகூட வறட்சியேற்படுத்தலாம். எண்ணெய், தக்காளி, பாலேடு போன்றவற்றைப் பூசி வறட்சியைத் தடுக்கலாம்.

    சரியான தூக்கமின்மையும் தோலை வறட்சியடைய செய்யும். முறையாக உறங்கி, கூடுமானவரை இயற்கையைத் துணைகொண்டால், கோடையிலும்கூட, தோல் பளபளக்கும்.

    டாக்டர் சுதாசேஷையன்
    ஆரோக்கிய உணவைத் தேடும் முயற்சியில், ஏற்கனவே நாம் எடுத்துக்கொண்டிருக்கும் உணவு ஆரோக்கியமானதல்ல என்பதற்காகத் திடீரென நிறுத்தக்கூடாது.
    ஆரோக்கிய உணவைத் தேடும் முயற்சியில், ஏற்கனவே நாம் எடுத்துக்கொண்டிருக்கும் உணவு ஆரோக்கியமானதல்ல என்பதற்காகத் திடீரென நிறுத்தக்கூடாது. ஆரோக்கிய உணவு என்பதற்காக அதிகமாக ஒரு உணவையும் சாப்பிடக்கூடாது. அதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல!

    இன்றைய அவசரமான உடனடித் தேவை இயற்கையில் விளைந்த உணவுப் பொருட்களுக்கு மாறுவதே ஆகும். கடந்த 50 ஆண்டுகளாக, பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள், ஹைபிரிட் விதைகள், பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றால், நிலம், நீர், காற்று எல்லாவற்றையும் மாசுபடுத்தி விட்டோம். இந்த பூமிப்பந்தை நாம் வாழத் தகுதியில்லாத அளவுக்கு மாற்றி விட்டோம். நாம் உண்ணும் உணவே நஞ்சாகிவிட்டது. இதுவே இயற்கை உணவு முறைக்கு மாறத்தக்க தருணத்தையும் தாண்டிப்போய்க் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறி.

    பாலும், பால் பொருட்கள்: பாலும், பால் பொருட்களும் மற்ற உணவுகளிலிருந்து வேறுபட்ட குணங்கள் உடையவை.

    பால்: பசும்பால், அதிலும் நமது மரபுவழி வந்த நாட்டுப் பசுக்களின் பால் நல்லது. பாலைக் காய்ச்சி, ஆடையை எடுத்துவிட்டு, சூடாகவோ, வெதுவெதுப் பாகவோ அருந்துவது நல்லது. பித்த தோஷ வேறுபாட் டால் நோய் வாய்ப்பட்டவர்கள் மட்டும் குளிர்ந்த பாலை அருந்தலாம். பாலின் அருமையான குணங்கள் காரணமாக, பாலைத் தனியாக அருந்துவது நல்லது. உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகள் மற்றும் மீன் ஆகியவற்றுடன் சேர்த்துப் பாலை அருந்தக்கூடாது.

    தயிர்: தயிர் செழிப்பான உணவு, ஆனால் அதை உண்பதற்கும் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. கடுமையான வெயில் நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது உஷ்ணத்தன்மையுள்ள உணவு. ஆகவே உடலில் தேவையான ஈரப்பசையை மிகுவிக்கும். குளிர் காலத்தில் மதிய உணவுடன் சாப்பிடலாம்.

    ஆனால் நெய், பாசிப்பயறு, பழுப்புச் சர்க்கரை,தேன், நெல்லிக்காய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். இவை தயிரின் சூடாக்கும் தன்மையைக் குறைக்கின்றன. வாழைப்பழம் மற்றும் பிறபழங்களைத் தயிருடன் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து தயிரை அதிகமாக சாப்பிட்டால் சைனஸ், ஆஸ்த்துமா, நீரிழிவு, சிறுநீரக் செயல்பாடு குறைவு, தோல் வியாதிகள் வரும், ஊறுகாயுடன் சாப்பிடுவது தயிரின் தரும் குளிர்ச்சியைக் குறைக்கவே!

    மோர் தயிரைவிடச் சிறந்தது. “உண்டி சுருக்கி, மோரைப் பெருக்கி...” என்ற சொல் வழக்கே இதை உணர்த்தும். மோருடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துப் பருகும் போது தாகம் தணியும், தொண்டை கரகரப்பு ஆகியவை வராது. மோருடன் பழைய சோற்றுத் தண்ணீர் சேர்த்து அருந்த வயிற்றுப் புண்கள் சரியாகும். மோர் நாளங்களைச் சுத்தப்படுத்துகிறது. மோர் அதிகம் சாப்பிடுவதால் நூறாண்டுக்கு மேல் (அதிகப்படியான மக்கள்) வாழுமிடங்கள் உலகில் உள்ளன.
    ஐஸ்கிரீம்: குளிர்ச்சியுடையது. கபத்தை அதிகரிக் கும், செரிமானத்துக்குக் கடினமானது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் உண்ணக்கூடாது.

    வெயில் காலத்தில் உண்ணலாம். இஞ்சி, தேன், மிளகு ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குளிர்ச்சியைக் குறைக்கும், சைனஸ், ஆஸ்த்துமா, சளித்தொல்லை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

    இறைச்சி: ஆயுர்வேதம் அசைவத்துக்கு எதிரானது அல்ல. சிலவகை நோய்களுக்கு இறைச்சி பரிந் துரைக்கப்படுகிறது ஆனால் இறைச்சிக்காக வளர்க் கப்படும் விலங்குகள் மரபுபடி வளர்க்கப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இப்போது ஹார்மோன் களைக் கொடுத்து வளர்ச்சியைத் தூண்டுகிறார்கள். அவசியமில்லாமல் தினமும் ஆன்டிபயாடிக் கொடுக் கிறார்கள். பெரும்பாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகராமலே அவை வாழுகின்றன. இவை இயல்புநிலை அல்லவே!

    அசைவம் சாப்பிட வேண்டுமானால் ஆட்டிறைச்சியானது கோழி, பன்றி ஆகியவற்றை விட நல்லது. மீன் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் மீன் சாப்பிடலாம். ஆனால் வறுத்த, உப்பிட்ட மீன் சாப்பிடக்கூடாது. மீன் வாதத்துக்கு நல்லது. ஆனால் பித்தம், கபம் இவற்றை அதிகரிக்கும்.

    மேலும் அசைவம் சாப்பிடுவதால் நமது உடலின் 5 தோஷங்களின் முன்னேற்றம் தடைபடும். அதனால் நமது ஆன்ம உயர்வும் தடைபடும்!மேலும் ஓர் உயிரைச் கொல்வதும், கொல்வதற்காக வாங்குவதும், விற்பதும் மோசமான கர்மவினையைத் தரும். உணவுக்காகவோ, மனமகிழ்வுக்காகவோ (வேட்டை யாடுதல்) உயிர்க்கொலை புரிவது வன்முறையையும், போர்க்குணத்தையும் மனித மனங்களில் அதிகமாக்கும். எல்லாவற்றிலும் மேலாக நமது கர்மவினைத் தொகுப்பால் மொத்தம் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியைத் தடுக்கும்.

    * தண்ணீர் ஆகாரத்திற்குப் பிறகு அருந்துவது: உணவுக்குப்பின் அருந்த, தண்ணீரே மிகச்சிறந்த பானம் ஆகும். தயிர், தேன், பார்லி, கோதுமை போன்ற உஷ்ணம் தரும் பொருட்களை உண்டபின்னும், வெயில் காலம், இலையுதிர் காலங்களிலும் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும். குளிர்காலத்திலும், செரிமானத்துக்குக் கடினமான உணவுகளை உண்ட பின்னும் சுடுநீராக குடிக்க வேண்டும். இ.என்.டி. தொல்லை உடையவர்கள், கபம் உள்ளவர்கள் திரிபலாச் சூரணம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது நல்லது.

    -&டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422&4322888, 2367200)
    ஆலிவ் ஆயில் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலிவ் ஆயிலில் என்ன நன்மை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
    ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆலிவ் ஆயில் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலிவ் ஆயிலில் என்ன நன்மை இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்…

    * ஆலிவ் ஆயிலில் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது.

    * ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக டைப் 2 டயாபடீஸைக் குறைக்க முடியும்.

    * வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் ஆயிலுக்கு உண்டு.

    * இதில் உள்ள நல்ல கொழுப்பு, லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.

    * தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம்.

    * மேலும், இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளை தாக்குவதை தடுக்கிறது.

    * ஆலிவ் ஆயிலில் மசாஜ் செய்ய, நரம்புகளை இயல்பாக்குகிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தம் குறைகிறது.

    * தினமும் ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது, அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    * சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும்.

    * ஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குணமாக்கி, சரும செல்களை பொலிவாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும்.



    * தலையில் ஆலிவ் ஆயிலை தேய்த்துவர முடி உதிர்தல் குறையும், பொடுகைக் கட்டுப்படுத்தும். அதோடு, முடியை பளபளப்பாக்கி, அதன் வளர்ச்சியை தூண்டும்.
    குழந்தைகளுக்க ரோஸ்மில்க் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நுங்கு சேர்த்து ரோஸ்மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளம் நுங்குச் சுளைகள் - 3,
    சர்க்கரை - 3 டீஸ்பூன்,
    ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன்,
    பால் - முக்கால் கப்,
    சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு - கால் டீஸ்பூன்,
    நெய் - அரை டீஸ்பூன்.



    செய்முறை:

    நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ளவும்.

    காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

    கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
    வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

    வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

    வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.



    ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.

    அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

    சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.

    நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.
    உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க 'ஃபேஸ் பேக் யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே.
    உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க 'ஃபேஸ் பேக்' யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. அதற்கான சில யோசனைகளை பார்க்கலாம்.

    * தக்காளி, தயிர், எலுமிச்சை, பப்பாளி, வெள்ளரிக்காய்... இவற்றில் ஏதாவது இரண்டை அரைத்து, தினமும் சருமத்தில் தேய்த்து வருவது நல்லது. கண்ணுக்குக் கீழே கருவளையம், தோலின் குறிப்பிட்ட பகுதி நிறம் மாறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள், உருளைக்கிழங்கை மையாக அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், பிரச்சனை மெள்ள நீங்கும்.

    * வெயிலில் நீண்ட நேரம் அலைவது சிலருக்கு அரிப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள், தினமும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரில் குளிக்க வேண்டும். இது அரிப்பு பிரச்சனையைச் சரிசெய்யும்; சருமப் பிரச்சனைகளையும் தீர்க்கும். சிந்தடிக் பவுடருக்குப் பதிலாக, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களால் செய்யப்படும் குளியல் பவுடரை (Natural Bath Powder) பயன்படுத்தலாம். இவை அனைத்தும் செய்து பார்த்த பிறகும், பிரச்சனை தொடரும் பட்சத்தில், மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

    * கோடையில் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும் என்பதால், ஒருநாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல, உடலிலிருந்து அதிக நீர் வெளியேறும்போது, உள்ளுறுப்புகளில் நீர் வறட்சி ஏற்படும். குறிப்பாக, பெருங்குடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

    * 15 நாள்களுக்கு ஒருமுறை, ஒருநாள் முழுக்க உணவுக்குப் பதில் ஜூஸ் மட்டுமே சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வது, உடலிலுள்ள கழிவு வெளியேற உதவியாக இருக்கும். உடலில் கழிவுகள் வெளியேறிவிட்டாலே, சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
    கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கிவி ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிவி பழம் - 4
    பைனாப்பிள் ஜூஸ் - 2 கப்
    சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    3 கிவி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு கூழாக்கி கொள்ளவும்.

    1 கிவி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அரைத்த கிவி பழ விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பைனாப்பிள் ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

    திக்கான பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

    நன்றாக ஆறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள கிவி பழத்துண்டுகளை போட்டு நன்றாக கலந்து சிறிய கப்புகளில் ஊற்றி குளிர் சாதன பெட்டியில் 5 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கிவி ஐஸ்கிரீம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கோடை காலம் அவ்வளவு ஏற்றதல்ல. அவர்களது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, நீரிழப்பு காரணமாக தோல் வியாதிகள் உண்டாகலாம்.
    குழந்தைகளுக்கு கோடை காலம் அவ்வளவு ஏற்றதல்ல. அவர்களது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, நீரிழப்பு காரணமாக தோல் வியாதிகள் உண்டாகலாம்.

    குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிட்டால் மறக்காமல், அவர்களின் சருமத்திற்கு பொருத்தமான சன்ஸ்கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். அவை தோல் வியாதிகளில் இருந்து காக்க உதவும். வெளி இடங்களில் அதிக நேரம் செலவிடுவதாக இருந்தால் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பொருத்தமான சன்ஸ் கிரீமை பூசிக்கொள்வது நல்லது.

    காட்டன் ஆடை உடுத்துவதோடு அது வெளிர் நிறம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதுதான் குழந்தையின் உடல் பாகங்களை வெயிலில் இருந்து காக்கும். அதேபோல் குழந்தைகளுக்கு தரமான டயாபர்களையும் உபயோகப்படுத்த வேண்டும். அவைகளையும் தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சரும அலர்ஜி பிரச்சினை உருவாகக்கூடும்.

    வெளியிடங்களில் குழந்தை தூங்கும்போது எடை குறைவான போர்வையை பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    அகலமான தொப்பியை அணிவது வெயிலில் இருந்து குழந்தையின் முகத்திற்கு பாதுகாப்பு தரும்.

    பச்சிளம் குழந்தையாக இருந்தால் அடிக்கடி தாய்ப்பால் புகட்ட வேண்டியது அவசியம். அது உடலில் உள்ள நீரிழப்பை ஈடு செய்யும். அவ்வப்போது கொஞ்சமாவது தண்ணீர் கொடுப்பதும் அவசியம்.

    தேவைப்பட்டால் பசும் பாலைகாய்ச்சி வழங்கலாம்.

    சிறுவர், சிறுமிகளை வெளி இடங்களில் சென்று விளையாடுவதற்கு ஆசைப்பட்டால் அதற்கு கடிவாளம் போடக்கூடாது. அதேவேளையில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது.

    குழந்தைகள் வியர்க்குரு பிரச்சினையால் அவதிப்பட்டால் காய்ச்சிய நீருடன் தயிரை கலந்து உடலில் தடவி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். முல்தானி மெட்டியும் பயன்படுத்தலாம். அது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து வியர் குருவை போக்கும்.

    பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நீரிழப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி தர்ப் பூசணி கொடுப்பது நல்லது. அது உடலில் நீரின் அளவை ஈடு செய்ய உதவும்.



    கோடை காலத்தில் காரமான உணவு வகைகள் எதையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவை உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேற வழிவகுத்துவிடும். குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களையும், பழ வகைகளையும் கொடுக்க வேண்டும். கார உணவுகள் குழந்தைகளின் வயிற்றுக்கும் ஏற்றதல்ல.

    உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது. அவை சருமத்திற்கு நல்லது. ரத்த ஓட்டம் சீராக நடைபெற துணைபுரியும்.

    எண்ணெய் பலகாரங்கள், துரித உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவை செரிமானமாகுவதற்கு அதிக நேரமாகும். அதனால் உடல் சோர்ந்து சோம்பல் தலைதூக்கி விடும்.

    ஜூஸ் வகைகள், குளிர்பானங்களில் இனிப்பு அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் விரும்புவார்கள் என்பதற்காக அதிக இனிப்பு கொடுத்துவிடக்கூடாது.

    1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் ஒன்றரை லிட்டர் திரவ உணவுகளை கொடுப்பது அவசியமானது. அவை தண்ணீர், ஜூஸ், சூப்புகள் என எந்தவகையாகவும் இருக்கலாம். கால் லிட்டர் பால் கொடுப்பதும் அத்தியாவசியமானது.

    விளையாடும் நேரம் தவிர மற்ற சமயங்களில் வீட்டு தோட்ட வேலைகளுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்தலாம். அது உடலுக்கு நல்ல உடற் பயிற்சியாகவும் அமையும். பெற்றோருக்கும் நேரம் பயனுள்ள வகையில் செலவாகும்.

    கோடை கால சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரலாம். அந்த முகாம்கள் நல்ல ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தொல்லைப்படுத்துகிறார்கள் என்பதற்காக கோடை கால முகாம்களுக்கு அனுப்பிவிடாதீர்கள். முகாம்களை பற்றி தீர ஆராயுங்கள். ஒருசிலவற்றில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 
    துணிச்சலை தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும். தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்தோடி வரும்.
    வெற்றிக்கு சில துணைவர்கள் உண்டு. தன்னம்பிக்கையும், விடா முயற்சியும்தான் அந்த நண்பர்கள். அதேபோல வெற்றிக்கு இரண்டு எதிரிகளும் உண்டு. அது தயக்கமும், முயற்சியின்மையும்தான். துணிச்சலை தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும். தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்தோடி வரும். தயக்கத்தை தவிர்க்கவும், துணிச்சலை வளர்க்கவும் உதவும் சில யுத்திகளை அறிவோம்...

    தயக்கத்தை விரட்டும் முதல் யுத்தி நேர்மறை எண்ணங்கள்தான். என்னால் முடியும் என்ற எண்ணம் தரும் நம்பிக்கை தயக்கத்தை விரட்டியடிக்கும். வெற்றியைத் தேடித்தரும். என்னால் முடியுமா? என்ற தயக்கம் தோல்வியெனும் படுகுழியில் தள்ளிவிடும். யாரும் என்னுடைய பேச்சை கேட்க மாட்டார்கள், எனக்கு யாரும் உதவ மாட்டார்கள், நமக்கு இது சரிப்பட்டு வராது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை குறைத்தாலே அனைத்தும் நலமாக நடப்பதை உணரலாம். மனஉறுதியால் தேடியதை கண்டடைந்தவர்கள் உண்டு. மனஉறுதியின்மையால் பின்னடைவே வரும்.



    அடுத்ததாக தயக்கத்தை விட்டொழிக்கவும் முயற்சி அவசியம். எழுத்தாளராக வேண்டுமானால் எழுதி எழுதிப் பழக வேண்டும், பேச்சாளராக பேசிப் பேசி பழக வேண்டும், வெற்றியை நோக்கி செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எனவே நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள், எதைக் கண்டு நடுங்குகிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு அதைப் போக்க முயற்சி செய்யுங்கள். அதற்கான தயாரிப்புகளுடன் அடுத்தடுத்த செயல்களை செய்யுங்கள். மன அமைதியுடன் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டு தயக்கத்தை வெற்றி காணுங்கள்.

    சோர்வாக இருப்பது, தயங்குவது, பின்வாங்குவது, ஆர்வம் குறைவாக இருப்பது, முடியுமா என சந்தேகிப்பது, முடிவெடுக்க முடியாமல் தயங்குவது, தன்னம்பிக்கையின்றி பேசுவது, செயல்படுவது எல்லாம் துணிவின்மையின் அடையாளங்கள். இதைத் தருவதும் தயக்கம்தான். தயக்கத்தை விட்டொழிக்கும்போது துணிச்சல் தானே வரும். துணிச்சல் வந்தால் தன்னம்பிக்கையும் கூடவே வந்துவிடும்.

    திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை கொண்டால் நீங்களும் வெற்றி சிகரத்தில் ஏறலாம்! 
    ×