என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    எரிவாயுவின் விலை தங்கத்தின் விலையை போல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே. இதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன.
    எரிவாயுவின் விலை தங்கத்தின் விலையை போல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நடுத்தர மக்களின் பட்ஜெட் எகிறிகொண்டிருக்கிறது. இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே. இது நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. இதற்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன.

    எப்போது சமையல் செய்தாலும் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள்.இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும்.

    வேகவைப்பது குழம்பு தயார் செய்வது போன்றவற்றுக்கு சாதாரண பாத்திங்களுக்கு பதில் பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் நேரமும் எரிவாயுவும் மிச்சாகும்.

    இரண்டு பேருக்கு சமைப்பதற்காக பத்து பேருக்கு சமைக்கும் பாத்திரத்தை பயன்படுத்தாமல் சரியான அளவு பாத்திரம் கொண்டு சமைக்க வேண்டும். குழிவான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்துக்கு பதிலாக தட்டையான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தில் சமைக்கும் போது வெப்பம் சீராக பரவி சமையல் சீக்கிரமாக முடிந்து எரிபொருள் பயன்பாடும் குறையும்.

    அடுப்பை பற்றவைப்பதற்கு முன் சமையல் செய்ய தேவையானவை அனைத்தையும் தயார் நிலையில் அருகிலேயே வைத்துகொள்ள வேண்டும். அடுப்பில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது கடுகையும், கறிவேப்பிலையையும் தேடிகொண்டிருக்க கூடாது. இதனால் நேரமும், எரிபொருளும் விரயமாகும்.

    தண்ணீரோ குழம்போ கொதிக்கும் போது அடுப்பை சிறுதீயில் வைத்துவிடுவது நல்லது. இதனால் அவை பொங்கி வழிந்து அடுப்பு அணைத்து எரிபொருள் வீணாவதை தடுக்கலாம்.

    மிகவும் முக்கியமாக கேஸ் அடுப்பில் பர்னர்களை அடிக்கடி தூசு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எரிபொருளை அதிக அளவு மிச்சப்படுத்த முடியும்.

    குடும்பத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக சாப்பிடும் போது குழம்பு, பொரியல் முதலியவைகளை அடிக்கடி சூடு செய்ய வேண்டியிருக்கும். மாறாக எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டால் எரிபொருள் மிச்சமாவதுடன் நமது ஒற்றுமையும் அதிமாகும்.

    சிக்கனமாக இருப்பது நமது வீட்டின் பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்துக்கும் நல்லது.
    எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.
    வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான் புதுப்புது ரெசிபிக்களை விதம் விதமாக செய்து கொடுத்தாலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பதில் என்னவோ வேண்டாம் என்பது தான். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய சில வழிகள்.

    எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.

    * குழந்தைகள் தேவையற்ற நொறுக்கு தீனியை அடிக்கடி உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வை பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட்ட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்கு தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.

    * குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுககம் நேரத்தில் உணவு கொடுத்தால் முழுமையாக சாப்பிடுவார்கள்.

    * குழந்தைகளுக்கு பிடித்த உணவு அளிப்பது மட்டுமல்ல குழந்தைகளை கவரும் வகையில் பல நிறங்களிலும் வடிவங்களிலும் சாப்பிடும் தட்டுகள் இருக்கின்றன. அதில் உணவு வழங்கினால் சாப்பிடும் ஆர்வம் மேலோங்கும்.

    * குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவை வெறுக்கிளார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்

    * உடலுழைப்பு ஏதுமின்றி வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் களைத்து போகும் வரை குழந்தைகளை ஓடி, ஆடி விளையாட ஆனுமதியுங்கள். உடல் களைத்து போனால் தானாக பசி எடுத்து உணவை ஆர்வமாக உண்ணுவார்கள்.

    * உணவை எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கினால் குழந்தைகளுக்கு அதன் மேல் வெறுப்புதான் உண்டாகும். அதனால் கொடுக்கும் உணவை புதுமையாகவும், அவர்களுக்கு. பிடித்த வகையில் அழகுபடுத்தியும் வழங்கலாம்.

    * எப்போதும் அவர்களிடம் ஓரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சி பேசாதீர்க்ள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்து கொள்ள நீண்ட நேரம் எடுத்து கொள்வார்கள்.

    * குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு விஷயங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்கு கூறிக்கொண்டே உணவு கொடுங்கள். இது குழந்தைகளுக்க குடும்பத்தின் மீதான அன்பை அதிகரிக்கும். கதை கேட்கும் ஆர்வத்தில் உணவையும் முழுமையாக உண்பார்கள். தவிர குழந்தைகளுக்கு மொபைல், டிவி பழக்கத்தை குறைத்து நல்ல உறக்கத்தை கொடுக்க வேண்டும். அது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    * இது போன்று சிறுசிறு யுத்திகளை கையாண்டாலே குழந்தைகளை சாப்பிட வைப்பது வெகு சுலபம்.
    சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. வழிப்பறி காரணமாக பாதிக்கப்படாமலிருக்க சமயோசிதமாக செயல்படுவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேசிய அளவில் அதிகரித்து வரும் குற்றச்செய்ல்களில் வழிப்பறிகள்தான் முதலிடத்தில் உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. அதில் நகையை பறிகொடுப்பதுடன் பலவகையிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தவறு நடந்த பின்னர் வருத்தப்படுவதை விட முன்னரே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது காவல் துறையினரின் அறிவுரையாகும்.

    வழிப்பறி காரணமாக பாதிக்கப்படாமலிருக்க சமயோசிதமாக செயல்படுவது எப்படி என்று பார்க்கலாம்.

    * வெளியிடங்களுக்கு செல்லும்பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.பொது இடங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பதுடன். அதிகமாக போன் பேசுவது அதனுள் மூழ்கியபடி நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது அவையும் வழிப்பறிக்கு காரணமாக அமையக்கூடும்.

    * பணத்தை பொது இடங்களில் வைத்து எண்ணக்கூடாது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதிலும் எச்சரிக்கை வேண்டும்.

    * இரவு நேரத்தில் தனியாக வீட்டிற்கு செல்லும் நிலையில் மக்கள் நடமாட்டம் உள்ள வழியில் தான் செல்ல வேண்டும். அதேபோல் இரவு நேரத்தில் வாகனத்தில் தனியாக செல்ல நேர்ந்தால் வெளிச்சமான பகுதியிலோ, போலீஸ் நடமாட்டம் உள்ள பகுதி வழியாகவோ செல்ல வேண்டும்.

    *  வாகனத்தை நிறுத்தும் போது தனியாக நிறுத்தாமல் மற்ற வாகனங்கள் இருக்கும் இடத்திலேயே நிறுத்த வேண்டும்.

    * வீதியில் நடந்து செல்லும் போது செல்போன் அரட்டை காரணமாக கவனக்குறைவு ஏற்பட்டு பின் தொடரும் நபர்கள் குறித்து கண்டு கொள்ளலாம் விடுவதாலேயே நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.

    * விலையுயர்ந்த நகைகள் அணிந்து கொண்டு வெளியில் செல்ல நேர்ந்தால் துப்பட்டா அல்லது சேலையை கொண்டு மறைத்தபடியே செல்ல வேண்டும். திருமணம், வரவேற்பு உள்ளிட்ட விழக்களுக்கு செல்லும் போது நகைகளை அந்த இடத்திற்கு கொண்டு சென்று அணிவதே பாதுகாப்பானது.

    * எதிர்பாராமல் வழிப்பறி நடந்து விட்டால் பதற்றப்படாமல் நிதானித்து வாகன எண், வந்த நபர்கள், வண்டியின் வகை ஆகியவற்றை கவனித்து காவல் துறையினரிடம் தெரிவித்தால் குற்றவாளிகளை உடனே பிடிக்க முடியும்.

    * தனியாக அமைந்துள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியில் சென்று விட்டு வந்து வீட்டு கதவை திறக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    * குழந்தைகளை பள்ளிகளில் இருந்து அழைத்து வரும் போது அறிமுகமான வாகனங்களில் பயணிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் இதர வாகனங்களில் திரும்பி வர நேர்ந்தால் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் பயணம் செய்யும் வாகனம் குறித்த விவரங்களை குடும்பத்தாருக்கு சரியாக தெரியப்படுத்த வேண்டும். தனியாக செல்லும் போது பாதிப்பு ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சென்று விட வேண்டும். ஆபத்தான சமயங்களில் உடனடியாக காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்
    பெண்கள் தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம்.
    இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பொறுப்புகள் கூடிக்கொண்டே இருக்கிறது. குடும்ப நலன் மீது காண்பிக்கும் அக்கறையை தங்களுடைய உடல் நலன் மீது காண்பிப்பதில்லை. தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம்.

    பல் வலி: பல் வலியை நிறைய பேர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். பல் மற்றும் ஈறுகளில் அடிக்கடி வலியை அனுபவித்தால் முறையாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பல் வலி என்பது இதய பிரச் சினையின் அறிகுறியாக கூட இருக்கலாம். சிலருக்கு மாரடைப்புக்கு முந்தைய அறிகுறியாக பல் வலி பிரச்சினை வெளிப்படும். பல் வலியுடன் லேசான தலைவலி அல்லது வியர்த்தல் பிரச்சினை ஏற்பட்டால் கூடுதல் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

    வயிற்று வலி: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சதை பிடிப்பு, உணவு விஷத்தன்மைக்கு மாறுதல், குடல் பகுதியில் எரிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் வயிற்றுவலிக்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று வலி பிரச்சினையை எதிர்கொண்டால் அது வயிற்றுப்புண், குடல் அழற்சி, சிறுநீரக கற்கள், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். பெண்களுக்கு, வலது அல்லது இடது அடிவயிற்றில் திடீர் வலி ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். கரு குழாயிலேயே கரு தங்கி இருக்கும் ‘எக்டோபிக்’ கர்ப்பமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகிவிடக்கூடும். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    வயிற்றின் வலது பகுதியில் திடீரென்று கடுமையான வலியை அனுபவித்தால் அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி கொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றின் கீழ் பகுதி யில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலி ஏற்பட்டால் அது சிறுநீரக கற்கள் படிந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து வயிற்று போக்கு, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு எடை குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அது செரிமான அமைப்பில் வீக்கத்தை ஏற் படுத்தும் ‘க்ரோன்’ நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆதலால் வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

    தலை வலி: கண்களில் ஏற்படும் அழுத்தம், மன அழுத்தம், பருவ காலநிலை மாற்றம், முறையற்ற உணவு பழக்கம், காய்ச்சல் போன்றவற்றால் தலைவலி ஏற்படலாம். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றைத்தலைவலி ஏற்படு வது பொதுவானது. அப்போது கண் பார்வை மங்குதல், தலைச்சுற்றல், காதுகளில் இரைச்சல், கண்கள் கூசுதல் போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும். அடிக்கடி ஒற்றைத்தலைவலியை அனுபவிக்கும் பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடது பக்க தாடை வலி: மெல்லுவதற்கு கடினமான உணவை சாப்பிடுவது, எப்போதும் ஏதாவது மென்று கொண்டே இருப்பது, சாப்பிடும்போது பற்களில் உராய்வை ஏற்படுத்துவது போன்ற காரணங்களால் தாடை வலி ஏற்படக்கூடும். பெண்களுக்கு பெரும்பாலும் தாடையின் இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றல், லேசான தலைவலி, மயக்கம், சோர்வு, முதுகுவலி போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். தொடர்ந்து தாடையில் வலி இருந்து கொண்டிருந்தால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    எலும்பு வலி: எலும்பு வலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. எலும்பு பகுதி யில் காயம், வைட்டமின் டி, கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களால் வலி ஏற்படக்கூடும். வைட்டமின் டி அல்லது கால்சியம் இல்லாத உணவுகளை சாப்பிடுவது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய்க்கு வழிவகுக்கும். வயதான பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் நின்றவுடன், எலும்புகளை பாதுகாக்கும் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். எலும்பு பகுதியில் புற்று நோயும் ஏற்படக்கூடும்.

    மார்பக வலி: கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவுவது மார்பக வலிக்கான முக்கிய காரணங்களாகும். மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் மார்பகங்கள் வீங்கக்கூடும். பொருத்தமற்ற பிரா அணிந்திருந்தாலோ, மார்பக பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தாலோ மார்பக வலி ஏற்படலாம். தொடர்ந்து மார்பகத்தில் வலி, கட்டி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.

    குதிகால் வலி: நாள் முழுவதும் ஹீல்ஸ் அணிவது அல்லது பொருத்தமற்ற காலணி அணிவதால் குதிகால் வலி ஏற்படக்கூடும். கால்களில் உணர்வின்மை, கால்களில் சிவத்தல், வீக்கம் இருந்தால் அது ‘ஹீல் ஸ்பர்’ என்று அழைக்கப்படும். நடக்கும்போது அசவுகரியமோ, கடுமையான வலியோ ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

    யோனி வலி: யோனி பகுதியில் வறட்சி, நோய் தொற்று ஏற்பட்டு வலி உண்டாகலாம். தசை பிடிப்பு, கர்ப்பப்பை வாய் பிரச்சினை, கருப்பை புற்றுநோய், இடுப்பு அழற்சி நோய் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

    நெஞ்சு வலி: மார்பு வலியை அஜீரணம் அல்லது மன அழுத்தம் என்று கருதி நிறைய பெண்கள் நிரா கரிக்கிறார்கள். கடுமையான மார்பு வலி இதயத்தில் ஏற்படும் பாதிப்பை உணர்த்தக்கூடும். குறிப்பாக கரோனரி மைக்ரோ வாஸ்குலார் நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களை பாதிக்கும். இதயத்திற்கு செல்லும் ரத்த வினியோகத்தை கட்டுப்படுத்தி பாதிப்பை அதிகப்படுத்திவிடக்கூடும். ஆண்களை விட பெண்கள்தான் இத்தகைய நோய் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். கழுத்து, மார்பு, தாடை, தொண்டை, முதுகு பகுதிகளில் அசவுகரியத்தை உணர்தல், வியர்த்தல், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளை அடிக்கடி எதிர்கொண்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.
    தண்ணீர் பருகும் அளவையோ, திரவ உணவுகளை உட்கொள்வதையோ குறைத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
    கோடை காலத்தில் வெப்ப தாக்கத்தை சமாளிப்பதற்கு வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் பருக வேண்டியிருக்கும். மழைக்காலம் தொடங்கியதும் பருகும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கும். உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிக்க எல்லா பருவ காலநிலையிலும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது.

    தண்ணீர் பருகும் அளவையோ, திரவ உணவுகளை உட்கொள்வதையோ குறைத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

    சிலருக்கு உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும். அப்படி வியர்ப்பவர்களுக்குத்தான் உடல் வறட்சி ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒருவருக்கு திடீரென்று உடலில் வறட்சி ஏற்பட்டால் அவரது உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். உடல் வறட்சி காரணமாக சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படும்.

    நீர்ச்சத்து குறைவாக இருந்தால் வாயில் போதுமான அளவு உமிழ் நீர் சுரக்காது. அப்படி உமிழ் நீர் அளவு குறைந்துபோனால் வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால் வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும்.

    தொடர்ந்து உடல் வறட்சி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் வெப்பம் அடைந்து காய்ச்சல் ஏற்படுவது அல்லது உடல் குளிர்ச்சி தன்மை அடைவது போன்ற அறிகுறிகள் தென்படும்.

    நீர்ச்சத்து இல்லாதபோது உடல் வெப்பமடையக்கூடும். எந்த அளவுக்கு உடல் வெப்பமடைகிறதோ அந்த அளவுக்கு தசைப்பிடிப்பு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

    உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்து கொண்டிருந்தால் வழக்கத்தை விட இனிப்பு பொருட்களை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும். அப்போது இனிப்பு பலகாரத்திற்கு மாற்றாக வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, தக்காளி, கீரை, சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ளலாம். அது உடல் வறட்சியை போக்கி நீர்ச்சத்தை தக்கவைக்க துணை புரியும்.

    உடலில் நீர்ச்சத்து குறையும்போது மூளையின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    தினமும் ஆண்கள் 4 லிட்டர் திரவ உணவுகளையும், பெண்கள் 3 லிட்டர் திரவ உணவு களையும் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மது, உடலுக்கு எனர்ஜி தரும் குளிர்பானங்கள், கார்பைன் கலந்த பானங்கள் உடல் வறட்சியை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நீர்ச்சத்து அளவை பராமரிக்க உதவும் திரவ பானங்களை தேர்ந்தெடுத்து பருக வேண்டும். அதோடு தண்ணீர் பருகுவது நல்லது.
    கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
    தேவையான பொருட்கள்:

    2 நடுத்தர அளவுள்ள சுரைக்காய் பகுதிகள் , (சமைத்த, உரித்த, நறுக்கிய வகையில் இருக்க வேண்டும்)
    நெல்லிக்காய் - 4
    புதினா இலைகள் - 15 முதல் 20 வரை
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 முதல் 3 தேக்கரண்டி
    இஞ்சி - 2 சிறு துண்டுகள்  (நறுக்கியது )
    உப்பு - தேவைக்கேற்ப
    ஐஸ் க்யூப்ஸ் - தேவைக்கேற்ப

    செய்முறை

    சுரைக்காய், சீரகம், நெல்லிக்காய், இஞ்சி, புதினா இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். பின்னர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் அரைக்கவும்.

    மற்றொரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாறு, ஐஸ் க்யூப்ஸ் அரைத்த ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும் . பின்னர், தனி கண்ணாடி டம்ளர்களை வடிகட்டி, குளிர்ச்சியுடன் குடிக்கவும்.

    இந்த பழச்சாறை தயாரிக்கும் முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது.

    சுரைக்காய் ஜூஸ் அளவுக்கு அதிகப்படியாக உட்கொண்டால், சாத்தியமான அசுத்தங்கள் காரணமாக சில நச்சு அறிகுறிகள் ஏற்படலாம்.

    கசப்பாக இருந்தால் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது அவசியம். பச்சையாக அல்லது சமைக்காத சுரைக்காய் ஜூஸ் உடல்நலத்திற்கு ஆபத்தானதும் கூட. சமைத்த சுரைக்காய் சாறு சிறந்தது, ஒருவேளை தீங்கற்றதும் கூட. ஒரு சிறிய சுரைக்காய் சுவைத்தால் (அதன் இரண்டு முனைகளிலும்) கசப்பாக இருக்கும். அது கசப்பாக இருந்தால், தயவு செய்து அதை எடுக்க வேண்டாம்.

    சுரைக்காய் சாறு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், தயார் செய்ய எளிதாகவும் உள்ளது. அது உங்கள் காலை உணவு பழக்கத்தில் ஒன்றாக சேர்த்து கொள்ளலாம். தொடர்ந்து சாறு உட்கொள்வதன் மூலம், தேவையான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை மீண்டும் நிரப்பலாம்.

    ஆனால் நச்சுத்தன்மையை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டிலேயே ஜூஸ் தயார் செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம். மேலும், பச்சை காய்கறியில் இருந்து ஜூஸ் போட்டு குடிப்பதை தவிருங்கள். எப்போதும் மறக்காமல் சுரைக்காயை கண்டிப்பாக சமைத்திருக்க வேண்டும்.
    மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும்
    பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.

    மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது அவை சருமத்தில் முழுமையாக உறிஞ்சப்பட வேண்டும். சருமத்திற்குள் ஊடுருவுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் கூடாது. மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது உருவாகும் கூடுதல் ஈரப்பதம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக சரும செல்கள் பலவீனமடையும். சரும துளைகள் முழுவதும் அடைபடும் அபாயமும் உண்டாகும். அதனால் முகப்பரு மற்றும் வறண்ட சரும பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம்.

    மேலும் தேவைக்கு அதிகமாக மாய்ஸ்சுரைசரை உபயோகிக்கும்போது சருமம் புத்துணர்ச்சியை இழந்துவிடும். சோர்வு எட்டிப்பார்க்கும். சருமத்தில் தென்படும் ஒருசில அறிகுறிகளை கொண்டே மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவி இருப்பதை அறிந்து கொள்ளலாம். சருமத்தில் கருப்பு புள்ளிகள் தென்படுவது, சரும துளைகள் அடைப்பட்டிருப்பது, அதிக எண்ணெய் பசைத்தன்மை தென்படுவது, சருமத்தில் புள்ளிகள், தடிப்புகள் எட்டிப்பார்ப்பது, இறந்த செல்கள் வெளிப்படையாக தெரிவது போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். மாய்ஸ்சுரைசரை அதிகம் தடவும்போது சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்களும் தோன்றும். அதனை பயன்படுத்திய பிறகு முகத்தில் ஏதேனும் மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் அது சருமத்தில் ஒட்டிக்கொள்ளாது.

    மாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் அதிக ஈரப்பதம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். மேலும் முகத்தின் இயற்கையான அழகை குறைத்துவிடும். ஒப்பனை செய்யும்போது அது சரியாக சருமத்தில் கலப்பதற்கும் அனுமதிக்காது. முகத்தில் புள்ளிகள், திட்டுகளை ஏற்படுத்தும். மாய்ஸ்சுரைசரை சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க முடியும். மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

    * பட்டாணி அளவிலோ அல்லது அதை விட சற்று அதிகமாகவோ மாய்ஸ்சுரைசரை எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்த்து கைகளை சூடாக்க வேண்டும். பின்பு கன்னங்களில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். பிறகு நெற்றி, தாடை பகுதியில் தடவ வேண்டும். கழுத்தில் தேய்க்கும்போது கீழிருந்து மேல்நோக்கி தடவ வேண்டும்.

    * காலையில் எழுந்ததும் முகம் கழுவிய பிறகு லேசாக டவலில் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே சருமம் ஈரப்பதமாக இருப்பதால் அதிக அளவில் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு அது வழிவகுக்கும்.

    * இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண் டும். அது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.

    * சருமம் ஏற்கனவே வறண்டு போய் இருந்தால் அதற்கேற்ப மாய்ஸ்சுரைசரை சற்று அதிகமாக பயன்படுத்தலாம். ஆனால் சருமம் எண்ணெய் தன்மையுடன் இருந்தால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

    * வாரத்திற்கு ஒரு முறை இறந்த செல்களை அகற்றவும் வேண்டும். இதனால் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு மாய்ஸ்சுரைசரை சரியாக செயல்பட வைக்கும். இதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
    குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
    குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை' குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.

    குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

    5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.

    வீ்ட்டில் எத்தனையோ பொம்மைகள் இருந்தாலும், கடைக்குச் செல்லும்போது புதிதாக பார்க்கும் இன்னொரு பொம்மையை பார்த்ததும், அதையும் வாங்கித்தந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்பு. பிடிவாதம் பிடிப்பது அதன் இயற்கை குணாதிசயம். அதை காரணங்காட்டி `பிடிவாதக்காரன்' என்று முத்திரை குத்தினால், அந்த குழந்தை அப்படியே ஆகிவிட வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பிடிவாதம் பிடித்து எதையும் சாதிக்க அனுமதிக்கவும்கூடாது. சிறிய விஷயங்களில் பிடிவாதம்பிடித்து சாதிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் பிரச்சினைக்குரிய பெரிய விஷயங்களையும் பிடிவாதத்தால் சாதிக்க முயற்சிப்பார்கள்.

    பெற்றோரும், தங்கள் இயல்பு என்ன என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்திவிடவேண்டும். `தேவையானதை கேட்டாலே வாங்கித்தந்துவிடுவார்கள். தேவையில்லாததை எப்படி பிடிவாதம் பிடித்தாலும் வாங்கித்தரமாட்டார்கள்' என்ற தெளிவு அவர்களுக்கு கிடைத்திட வழிகாணவேண்டும்.

    சிறுவனோ, சிறுமியோ தொடர்ந்து பிடிவாதம்காட்டினால் பெற்றோர் உஷாராகிவிடவேண்டும். அடிக்கடி பிடிவாதம்காட்டும் பிள்ளைகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களது மனஅழுத்தத்திற்கு காரணமான சம்பவம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலேயோ, பள்ளியிலோ, வெளி இடங்களிலோ ஏற்படலாம். மனம்விட்டுப் பேசி அதற்கான காரணத்தை கண்டறியவேண்டும்.
    பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
    பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. தாய்மைக்கானவை. ஒவ்வொரு பெண்ணும் தாயாகி, தனது குழந்தைகளுக்கு பாலூட்ட படைக்கப்பட்ட உறுப்புகள் அவை. அதே நேரத்தில் பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

    பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள். இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ, அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம், அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.

    தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும் சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல் திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும், கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

    வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்‌ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.

    சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால் பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.

    சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல் 30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும். இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.

    பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில் இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால் ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.

    மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.
    வாழ்க்கையின் பாதிவெற்றி விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது. மீதி வெற்றி கணவனிடமிருந்து மனைவியும், மனைவியிடமிருந்து கணவனும் இன்பத்தை கேட்டுப் பெறுவதில் உள்ளது.
    இனிமை நிறைந்தது, இல்லறம். அந்த இனிமையை அனுபவிக்காமல் முட்டி மோதிக்கொண்டிருக்கும் ஜோடிகள் மிக அதிகம். இல்லறத்தின் இனிமை அனுபவிக்க கணவன்- மனைவி இருவரும் பரஸ்பரம் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கையின் பாதிவெற்றி விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது. மீதி வெற்றி கணவனிடமிருந்து மனைவியும், மனைவியிடமிருந்து கணவனும் இன்பத்தை கேட்டுப் பெறுவதில் உள்ளது. இதில் முழுவெற்றியை பெறவேண்டுமானால் கணவன்- மனைவி இருவரும் எல்லாவற்றையும் மனம்விட்டுப் பேசவேண்டும். அதுவும் இருவரும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகள் அனைத்தும் தானே ஒதுங்கிப்போய்விடும்.

    நிறைய ஆண்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை மனைவியிடம் கூறுவதில்லை. ஆனால் கூறு வதில் தப்பில்லை. தனது உடல் -மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ஒருவர் மீது இன்னொருவருக்கு நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.

    தம்பதிகளுக்கு இடையே பிரச்சினைகள் எப்படியாவது முளைத்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் நல்ல தீர்வு கிடைத்துவிடும். ஒருவர் மவுனத்தை இன்னொருவர் புரிந்துகொண்டு தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரையும் சிந்திக்கத்தூண்டும். அதுவே தவறு யார் பக்கம் என்பதை புரிய வைத்துவிடும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.

    கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான் அவரே இறங்கிவரட்டும்’ என்று மனைவி வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினையின் வீரியத்தை அதிகரித்துவிடும். இருவருக்குமே தன்மான உணர்வுஉண்டு என்பதால் விட்டுக்கொடுப்பதில் இருவரும் போட்டிபோட்டு பிரச்சினைகளை தீர்க்கமுன்வரவேண்டும்.

    துணைவரிடம் மரியாதை காட்டுங்கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது. தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் அவர்களுக்குள் பேசி தீர்வு காணவேண்டும். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி விட்டு பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது.

    மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங் கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கா விட்டால் அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை பிரிவை வளர்த்துவிடும். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண் - பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை இருவருமே தவிர்க்கவேண்டும்.

    மனைவி, கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்யம் தம்பதியரின் அடிப்படை உரிமை. தாம்பத்யம் ஆரோக்கியமாக இருந்தால், ஜோடிகளுக்குள் ஏற்படும் பெரிய பிரச்சினைகள்கூட தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்யத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே தங்கள் பாலியல் தேவைகளை தங்களுக்குள் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். பேசித்தான் பாருங்களேன்.
    வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், செரிமான கோளாறு, தலைவலி மற்றும் சரும பிரச்சனைகளை உணவில் மூலமாகவே சீர் செய்ய இயலும் என்று உணவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
    அக்னி வெயில் தொடங்கி வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெயிலில் தலைகாட்ட முடியாமல் பலரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். சிலருக்கு உடல் உஷ்ணம், செரிமான கோளாறு, தலைவலி மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்களை உணவில் மூலமாகவே சீர் செய்ய இயலும் என்று உணவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    கோடைக்கேற்ற பழங்களில் முக்கியமானவை தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழம் ஆகியவை. அவற்றை பழமாகவோ அல்லது சாலட் மற்றும் பழச்சாறு வடிவிலோ சாப்பிடலாம். பூசணி வகை பழங்களில் 95 சதவீத நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் , புரோட்டின், வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் செரிமான கோளாறு, சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

    உடல் புத்துணர்ச்சியாக இருக்க தினமும் ஒரு நெல்லிக்கனியை  சாப்பிடலாம். இதயம், கூந்தல் , சருமம் ஆகியவற்றை இளமையாக பராமரிக்க உதவும் வைட்டமின் சி சத்து இதில் பெருமளவு உள்ளது. உடலுக்கு தேவையான உடனடி சக்தியை நெல்லிக்கனி தரும்.

    கோடை காலத்தில் மாம்பழ சீசன் ஆரம்பமாகும் என்றாலும் அவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது. மாம்பழச்சாறு உடலுக்கு உடனடி சக்தி தரும் என்றாலும் அதிக அளவில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் திடீர் உடல் உபாதை ஏற்படக்கூடும். அதனால் மாமப்பழச்சாறுடன் சீரகம், உப்பு சேர்த்து பருகலாம்.

    சுத்தம் செய்த புதினா இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கலாம். அதனால் உடல் உஷ்ணம் அகலும். வாந்தி, மயக்கம் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

    சோற்று காற்றாழையின் சதைப்பகுதியின் வழவழப்பான தன்மை அகலும் வரை தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னர் அதனுடன் சிறிதளவு நீர் மோர், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து ஜூஸாக பருகலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து வயிறு சுத்தமாகி பசியை தூண்டுவதுடன் உடலில் புத்துணர்ச்சியும் ஏற்படும்.

    நீர்ச்சத்து நிறைந்த பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும்.

    நீர்ச்சத்து நிறைந்த தக்காளியை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் அடங்கியுள்ள லைக்கோபீன் என்ற ரசாயனப்பொருள் வெயிலால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.

    சாம்பார் வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். அதில் உள்ள குவர்சடின் என்ற ரசாயனப்பொருள் வெப்பத்தால்  ஏற்படக்கூடிய அரிப்பை தடுக்கும்.

    தண்ணீர், பால் அல்லது தயிரில் அவலை ஊறவைத்து கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை மற்றும் பழங்கள் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிடலாம்.
    சங்க காலத்தில் வாழ்ந்த மகளிர் கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய நுங்கின் நீரும், கரும்பின் இனிய சாறும், இளநீரும் கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகை பானத்தை அருந்தியிருக்கின்றனர்.
    தேவையான பொருட்கள் :

    பனை நுங்கு - 5
    கம்புச்சாறு - 100மி.லி
    இளநீர் - 1

    செய்முறை :
     
    பனை நுங்கை ஓட்டைப் போட்டு, அதன் நீரைத் தனியே எடுக்கவும்.

    அதனுடன் சீவி உடைத்த இளநீரைச் சேர்க்கவும்.

    இனிப்புச் சுவை, சீரணச் சக்தியை தரக் கூடிய கரும்புச் சாற்றை மிக்ஸ் செய்து, தனியே எடுத்து வைத்த நுங்கின் தோலைச் சீவி பானத்துடன் கலந்து இனிதாகப் பருகவும்.

    சுவையான கோடை கால முந்நீர் பானம் ரெடி.

    குறிப்பு :

    சங்க காலத்தில் சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை பயன்பாட்டில் இல்லை. சங்க காலத்தில் கரும்பாளை நிறைய இருந்தது. காளை மாட்டைக் கொண்டு
    செக்கில் கரும்பைப் பிழிந்து ஆளையில் கரும்புச் சாற்றை எடுத்துள்ளனர் என்பதை சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியலாம். நம் சுவைக்கு ஏற்ப இஞ்சிச் சாறு & எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.

    பயன்கள் :

    இயற்கை அன்னை கொடுத்த நுங்கிலும், இளநீரிலும் உடலுக்குப் பயன்கள் தரக்கூடிய கால்சியம், மெக்னீசியம், பாஸ்பொரஸ், பொட்டாசியம், சோடியம், விட்டமின்கள் & மினரல்கள் உள்ளது. வறத்தேங்காயின் நீரைவிட இளநீரில் சத்துக்கள் அதிகம் உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இளநீரையும் நுங்கையும் சாப்பிடலாம். ஆனால் கரும்புச்சாற்றைத் தவிர்க்கவும். உடல் சூட்டைக் குறைக்க கூடிய அனைத்து தாதுக்கள் & மினரல்கள் நுங்கிலும் & இளநீரிலும் உள்ளது.

    P.Priya Baskar

    9843456520.
    ×