என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கருப்பு பூஞ்சை நோய் நாக்கையும், பல் ஈறுகளையும் பாதிக்கும். ஈறுகளில் வீக்கத்தை உருவாக்கி பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பின்னர் வாய் வழியாக நுரையீரல் மற்றும் பிற உள் உறுப்புகளுக்கு பரவி உடல் நிலையை மோசமாக்கிவிடும்.
    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக இருக்கும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பலர் இந்த நோய் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களும், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். இது ஒருவகை பூஞ்சை தொற்று என்பதால் வாய்வழி சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது மூக்கு, வாய்வழி திசுக்கள், நாக்கு, பல் ஈறுகள் போன்ற பகுதிகளுக்கு பரவும் தன்மை கொண்டது.

    குறிப்பாக கருப்பு பூஞ்சை நோய் நாக்கையும், பல் ஈறுகளையும் பாதிக்கும். ஈறுகளில் வீக்கத்தை உருவாக்கி பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பின்னர் வாய் வழியாக நுரையீரல் மற்றும் பிற உள் உறுப்புகளுக்கு பரவி உடல் நிலையை மோசமாக்கிவிடும். அதனால் வாய்வழி சுகாதாரத்தை பேணுவது அவசியமானது.

    தினமும் காலையில் மட்டும் பல் துலக்காமல் தூங்க செல்வதற்கு முன்பும் பல் துலக்குவது நல்லது. அப்படி இரவில் பல் துலக்குவது அன்றைய நாள் முழுவதும் வாய்க்குள் நுழையும் கிருமிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். சாப்பிடும்போது மட்டுமல்ல மற்ற சமயங்களில் எது சாப்பிட்டாலும் வாய்க்கொப்பளிக்க மறக்கக் கூடாது. இல்லாவிட்டால் உணவுத்துகள்கள் பல் இடுக்குகளில் படிந்துவிடும். அவை ஈறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    வாயை சுத்தப்படுத்த உதவும் ‘மவுத்வாஷ்’ போன்ற திரவ கிருமி நாசினியை வாய்க்குள் ஊற்றி 30 விநாடிகள் வைத்திருந்து வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு தினமும் இரண்டு முறை செய்வது பாக்டீரியாக்கள், கிருமிகள் தொற்றை தடுக்க உதவும். உடலில் நீர்ச்சத்தை சீராக பேணுவது சருமத்திற்கு மட்டுமல்ல வாய்வழி ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும். வாயில் பி.எச். அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். பற்களுக்கு இடையில் தங்கியிருக்கும் உணவு துகள்கள், அழுக்குகளை அகற்ற உதவும்.

    வாய்வழி சுகாதாரமும்.. கருப்பு பூஞ்சையும்...

    பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கை சுத்தப்படுத்தும் கிளீனரை குறிப்பிட்ட இடைவெளிக்குள் மாற்றிவிட வேண்டும். குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்கள் புதிய பிரஷ், நாக்கு கிளீனரை உபயோகிக்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தியவற்றை மீண்டும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அது மீண்டும் நோய்த்தொற்றையும், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பையும் உண்டாக்கலாம்.

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பிரஷ்கள், கிளீனர்களை மொத்தமாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பிரஷ், நாக்கு கிளீனரை தனித்தனியாக வைத்திருப்பதுதான் நல்லது. ஒவ்வொருவரும் தங்கள் அறையில் தனியாக வைத்து பராமரிக்கலாம். நாக்கை சுத்தம் செய்த பிறகு நாக்கு கிளீனரை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துவதும் நல்லது. அப்படி கிருமி நீக்கம் செய்வது பாக்டீரியாக்கள், கிருமிகள் நாக்கு கிளீனரின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்வதை தவிர்க்க உதவும். பூச்சை தொற்றையும் தவிர்க்க உதவும்.

    பற்களில் ஒட்டியிருக்கும் உணவுத்துகள்களை அப்புறப்படுத்துவதற்கு குச்சிகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஈறுகளில் வலியோ, நிற மாற்றமோ ஏற்பட்டால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.
    கறிவேப்பிலையை தினமும் உடலில் சேர்த்து கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கையளவு
    பூண்டு - 6 பல்
    தக்காளி - 1
    கடுகு - 1 ஸ்பூன்
    வெந்தயம் - 1/4 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை

    மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு அரைத்த பேஸ்ட் ஊற்றி நன்கு வதக்கி விடவும்.

    இதில் கரைத்து வைத்து உள்ள புளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி ரசம் லேசாக நுரை தட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

    சூப்பரான கறிவேப்பிலை ரசம் தயார்.
    தற்போது அணியும் உடைகளுக்கு பொருத்தமாக சிகை அலங்காரம் செய்வதும் பேஷனாகிவிட்டது. அதற்கேற்ப விதவிதமான ‘ஹேர் ஸ்டைல்கள்’ புழக்கத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன.
    பெண்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமாக அணிகலன்கள், ஒப்பனை செய்வதற்கு மெனக்கெடுவார்கள். இப்போது அணியும் ஆடைகளுக்கு பொருத்தமாக சிகை அலங்காரம் செய்வதும் பேஷனாகிவிட்டது. அதற்கேற்ப விதவிதமான ‘ஹேர் ஸ்டைல்கள்’ புழக்கத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பாரம்பரிய புடவை, சுடிதார், மார்டன் உடைகள் அணியும்போது எந்த மாதிரியான ஹேர்ஸ்டைலை பின்பற்றினால் பார்க்க அழகாக இருக்கும் என்பது பற்றிய தொகுப்பு இது.

    தளர்வான கொண்டை அலங்காரம்: ‘ரப் பன்’ எனப்படும் இந்த சிகை அலங்காரத்தை எளிதாக மேற்கொள்ளலாம். வழக்கமாக கொண்டை அலங்காரம் செய்யும்போது கூந்தல் முடி முழுவதையும் இறுக்கமாக சுற்றி முடிச்சு போட வேண்டியிருக்கும். இந்த அலங்காரத்தில் கொண்டை முடியை தளர்வாக வைத்திருந்தாலே போதுமானது.

    பக்கவாட்டு சிகை அலங்காரம்: பாரம்பரிய அலங்காரத்தில் ஸ்டைலான தோற்றத்தை பெற விரும்பினால், ‘சைடு ஹேர்’ எனப்படும் இந்த வகை சிகை அலங்காரத்தை முயற்சிக்கலாம். கூந்தலை பின்னாமல் ஒரு பக்கமாக தளர்வாக தொங்கவிட வேண்டும். இந்த சிகை அலங்காரத்துக்கு கனமான காதணிகளை அணிய வேண்டும்.

    குதிரை வால்: கூந்தல் ஸ்டைலாக தோற்ற மளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ‘போனி டைல்’ எனப்படும் குதிரை வால் சிகை அலங்காரத்தை பின்பற்றலாம். பின்னந்தலையின் நடுப்பகுதியில் வால் போல் ஸ்டைலாக கூந்தலை சீவி விட வேண்டும். புடவை மற்றும் சுடிதாருக்கு இந்த மாதிரியான ஸ்டைல் நன்றாக இருக்கும்.

    ஸ்டெப் ஹேர்: பாரம்பரிய உடையிலும் எளிமையாக காட்சியளிப்பதற்கு இந்த சிகை அலங்காரம் பொருத்தமாக இருக்கும். அதிக கனம் இல்லாத மென்மையான தன்மை கொண்ட ‘ஷிப்பான்’ போன்ற ஆடை அணியும்போது தலைமுடியை தளர்வாக விட்டுவிட்டு அடிப்பகுதியில் இருக்கும் முடியை வெட்டிவிட வேண்டும். கூந்தல் முழுவதையும் முன்புறமாக தொங்கவிடவும் வேண்டும்.

    அலை கூந்தல்: ‘வேவ்ஸ்’ எனப்படும் அலை அலையாக வருடியபடி சுருள் சுருளாக நீளமாக இருக்கும் இந்த கூந்தல் அலங்காரத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை. நேர்த்தியாக புடவை அணிந்து, கூந்தலை பின்னாமல் தலைமுடியை தளர்வாக விட்டுவிடலாம். கூந்தலின் முனைப்பகுதியில் மட்டும் ‘சீரம்’ போன்ற ஜெல்லை தடவினால் போதும். பார்க்க அழகாக இருக்கும்.

    பின் ஹேர்: பாரம்பரிய உடையில் அழகாக காட்சியளிப்பதற்கு, கூந்தலை ஜடை பின்னாமல் தலைப்பகுதியையொட்டியபடி கிளிப் அணிந்தால் போதும். மங்திகா போன்ற ஆடை அணிந்திருந்தால் இந்த ஹேர்ஸ்டைல் சூப்பராக இருக்கும்.

    ஆடைகளுக்கு பொருத்தமான சிகை அலங்காரம்

    நேரான முடி: கூந்தலை எளிமையாக பராமரிக்க விரும்புபவர்கள் இந்த கூந்தல் அலங்காரத்தை பின்பற்றலாம். சீப்பை கொண்டு தலைமுடியை நேராக இழுத்து அப்படியே தளர்வாக விட்டுவிட்டால் போதும். உச்சந்தலையின் நடுப்பகுதியில் உச்சி எடுத்து கூந்தலை இரு பகுதியாக பிரித்துவிட்டுவிட வேண்டியதுதான்.

    தோள்பட்டை: இரு தோள்பட்டை பகுதிகளையும் மூடிய நிலையில் கூந்தலை ஸ்டைலாக முன் பகுதியில் தொங்க விடும் அலங்காரம் இது.

    சைடு கர்ல்ஸ்: கூந்தலை ஜடை பின்னுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த முடியையும் முன்புறத்தில் ஸ்டைலாக தொங்க விட வேண்டும். கூந்தலின் முனைப் பகுதியில் முடியை சுருள் சுருளாக காட்சிப்படுத்தினால் பார்க்க அழகாக இருக்கும்.

    கொண்டை அலங்காரம்: இதனை அனைத்து வயது பெண்களும் விரும்புவார்கள். பாரம்பரிய அலங்காரத்தில் இது நேர்த்தியானது. கனமான சேலை அல்லது லெஹெங்கா அணிந்திருந்தால் கூந்தலை சுருட்டி கொண்டை போட்டு பேண்டு அல்லது கிளிப் அணிந்து கொள்ளலாம்.

    ஒரு பக்க பின்னல்: கூந்தலை நன்றாக ஜடை பின்னிக்கொள்ள வேண்டும். பின்புறத்தில் ஜடையை தொங்க விடுவதற்கு பதிலாக முன் புறத்தில் ஏதாவது ஒரு பக்கவாட்டு பகுதியில் ஸ்டைலாக தொங்கவிட வேண்டும்.

    சைடு ஸ்வெப்ட் ஹேர்: சல்வார் அல்லது குர்தி போன்ற ஆடை அணியும்போது இந்த சிகை அலங்காரம் செய்யலாம். இது எளிமையானது. கூந்தல் முடியை இரண்டாக பிரித்து முன்புறத்தில் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் தொடங்கவிட்டால் போதும்.

    காமைன் ஹேர்: ஆண்களை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஹேர் ஸ்டைல் இது. தலைப்பகுதியை ஒட்டியவாறு கூந்தலை முழுவதும் வெட்டவேண்டியிருக்கும் என்பதால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே இந்த ஹேர் ஸ்டைலை பின்பற்றுகிறார்கள்.
    சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது.
    முன்பெல்லாம் சமையலறை விசாலமானதாக இருக்கும். பெரிய விறகு அடுப்புகள், ஆட்டு உரல், அம்மி, பெரிய பெரிய பானைகள், அண்டாக்கள் என சகலமும் வைக்கும் அளவுக்கு இடவசதியுடன் இருக்கும். ஆனால் இன்றைக்கு நெருக்கடியில் வீடும் சுருங்கி, சமையலறையும் மிகவும் குறுகிவிட்டது. அதாவது குறைந்த இடத்தில் பல வசதிகளை வாரி வழங்கும் வகையில் இன்றைய நவீன சமையலறை அமைக்கப்படுகிறது. சமையலறையை மிகப் பெரிதாக அமைக்க வேண்டிய அவசியம் நவீன சமையலறைகளில் இல்லவே இல்லை. குறைவான இடத்தில் தேவையான அலமாரிகளை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் சமையலறையின் தோற்றமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்துவிடுகிறது.

    சமையலறையின் மேடை மிகவும் வசீகரமாக அமைக்கப்படுகிறது. மேடையிலேயே சமையல் எரிவாயு அடுப்பானது பதிக்கப்படுகிறது. மேடை மீது துருத்திக்கொண்டு அடுப்பு அமையாமல் அடக்க ஒடுக்கமாக, அமைந்துவிடுகிறது. அதன் மீது அமைக்கப்படும் நவீன புகைபோக்கி புகையைச் சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தி விடுகிறது. நவீன புகைபோக்கி, அடுப்புக்கு மேலேயே அமைக்கப்படுவதால் சமையலின்போது ஆவியாகும் எண்ணெய் புகையும், சப்பாத்தி போன்ற உணவைத் தயாரிக்கும்போது ஏற்படும் புகையும் வீட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டு விடுகிறது. இதனால் சமையலறையில் புழங்குவோர் கண் எரிச்சலின்றி, தும்மலின்றி நிம்மதியாக வேலை செய்ய முடியும்.

    சமையல் மேடையின் கீழே உள்ள இடத்தை அழகாக மரப் பலகைகளால் அழகுபடுத்தி விதவிதமான கதவுடன் கூடிய அலமாரிகள் அமைக்கப்படுகின்றன. சமையலுக்குத் தேவையான உப்பு, புளி, மிளகாய் போன்ற சமையல் பொருட்களும் காய்கறிகளும் வைப்பதற்கு அவசியமான அலமாரிகள் உள்ளடங்கி அமைக்கப்படுகின்றன. சமையல் பாத்திரங்களை வைப்பதற்கும் இதிலேயே இடம் கிடைத்துவிடுகிறது. சமையல் கருவிகளான மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஒவன் போன்றவற்றை எல்லாம் அழகாக வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடுகின்றன.

    இப்படிச் சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது. பாத்திரங்களைக் கழுவுவதற்கு மேடையில் ஓரத்திலேயே கழுவு தொட்டி அமைத்துவிடுகிறார்கள். அவ்வப்போது சமையல் வேலைகளுக்கிடையே பாத்திரங்களைக் கழுவி அதன் இடத்தில் இருத்திவிட்டு இயல்பாகப் பிற வேலைகளைக் கவனிக்க இயலும்.

    இத்தகைய நவீன சமையலறைகளை உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப விதவிதமாக அமைத்துக்கொள்ள முடியும். நவீன சமையலறையைத் தகுந்த நிபுணர்கள் கொண்டு அமைக்க வேண்டும். செலவு சிறிது அதிகம் ஆகும் என்றாலும் அதன் வசதிகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரம் ஒத்துழைத்தால் நவீன சமையலறையை அமைத்துக்கொள்ளலாம்.
    காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள். நுரையீரலை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    நுரையீரல் பாதிக்கப்பட்டால் மொத்த உடல் இயக்கமும் பின்னடைவை எதிர்கொள்ளும். காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு பழக்கங்கள் நுரையீரல் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள். சுவாச பிரச்சனைகளும் நுரையீரலை பலவீனப்படுத்தும். அடிக்கடி நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தால் நுரையீரல் புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு.

    ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்தவகை மீன்களை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுத்துவிடலாம். வாரம் இருமுறையாவது மீன் சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் ஆன்டிஆக்ஸிடென்டு அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். செரிமான பிரச்சனையும் சரியாகும்.

    கீரைகள் உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடைபெற உதவும். உணவில் அடிக்கடி கீரை சேர்த்து கொண்டால் நுரையீரல் சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்கலாம்.

    நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு கோதுமையும் துணைபுரியும். அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோதுமையில் வைட்டமின்-இ அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

    தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்வதும் அவசியமானது. அதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருக்கிறது. வேகவைக்காமல் அப்படியே சாப்பிடலாம். தினமும் உணவில் பூண்டை சேர்த்து கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 44 சதவீதம் குறையும்.

    கேரட்டை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை சம்மந்தமான பிரச்சனை குறைந்து கண்பார்வை பளிச்சென தெரியும்.
    கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

    கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது கேரட்.

    கேரட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

    * கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண்களுக்கு பார்வை திறனை அளிக்கிறது.

    *. கேரட்டில் உள்ள சத்துக்கள் தோலிற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது.

    *. உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள கேரட் மிகவும் பயன்படுகிறது.

    *. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து குடல் புண் வராமல் தடுக்கலாம்.

    * நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் கேரட் சாறு பருகுவது நல்லது.

    கேரட்

    * கேரட் சாருடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.

    * வயிற்றில் கற்கள், புண்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு கேரட் ஜூஸ் ஒரு சிறந்த மருந்தாகும்.

    * மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.

    * கேரட் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

    * சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணமாக்க, கேரட்டை பச்சடி போல செய்து சாப்பிடலாம்.

    * வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் ஏற்படாது.

    * கேரட்டை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு, விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    சமைக்கும் உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
    சமைக்கும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள  உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

    உணவுப்பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்கிவந்தால் அவற்றை சரியான வெப்பநிலையில் சேமித்துவைக்க வேண்டும். அப்போதுதான் அவை கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். நுண்ணுயிரிகளால் பாதிப்பும் நேராது. சமைத்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்கு மேல் திறந்த நிலையில் வைக்கக்கூடாது. விரைவில் கெட்டுப் போகும் உணவுகளை குளிர் சாதன பெட்டியில் 5 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம்.

    சமைத்த இறைச்சி வகைகளை குளிர் சாதன பெட்டியில் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. அதன் வாசம் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் மற்ற பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிலர் இறைச்சி வகைகளை அதிகமாக வாங்கி வந்து அவ்வப்போது பயன்படுத்துவார்கள். அப்படி வாங்கி வந்த இறைச்சியையும், சமைத்த இறைச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது. இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வைத்திருப்பது தான் நல்லது.

    ஏனெனில் முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இருக்கலாம். அவற்றை சமைத்த இறைச்சியோடு சேர்த்து வைத்திருந்தால் தொற்று ஏற்படவழிவகுத்து விடும். அவற்றுள் இருக்கும் நுண்ணுயிரிகள் சமைத்த உணவுக்கும் கேடுவிளைவித்து விடும்.

    முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை சமைக்கும்போது குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவை நன்றாக வேகவைக்கப்படவில்லை என்று அர்த்தம். நன்றாக சமைத்தால் தான் தீங்குவிளைவிக்கும் நுண் கிருமிகள் இறந்துபோகும். 70 டிகிரி வெப்ப நிலையில் சமைத்தால்தான் அது நன்றாக சமைக்கப்பட்ட உணவு என்பது சமையல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    சமைக்கும்போது இறைச்சியை நன்றாக சுத்தம் செய்வதோடு கைகளையும் நன்றாக பராமரிக்க வேண்டும். சமையல் அடுப்பின் மேல்பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் முன்பு கைகளை கழுவ வேண்டியதும் அவசியம். கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற பூச்சி இனங்களிலிருந்து சமையலறையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அவைதான் தீங்கு விளைவிக்கும் தொற்று நோய்களுக்கு முதன்மை காரணியாக அமைந்திருக்கும். உணவு தயாரிக்கும் போது எப்போதும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சுத்தமில்லாத நீர் உணவை மாசுபடுத்தும். தொற்றுநோயை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை கழுவும் போது நன்றாக வடிகட்டிய நீரைப் பயன்படுத்த வேண்டும்.
    ஆண் மூளையிலும் மூன்று மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து கொஞ்சம் 'வளவள' என்று இழுத்துக் கூறமுடியாது.
    ஆண், பெண் இருவருக்கும் உடல் அமைப்பில்தான் வித்தியாசம் உள்ளது. மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான், என்று நினைக்கிறார்கள்.

    உண்மையில் இருபாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது.

    இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன, என்பதுதான் உளவியல் சொல்லும் உண்மை.

    பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் ரசிக்கும் தன்மைக்கொண்டது.
    மூன்றாவது மையம் முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

    ஆண் மூளையிலும் இந்த மூன்று மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து கொஞ்சம் 'வளவள' என்று இழுத்துக் கூறமுடியாது. தான் உணரும் அந்த உணர்வுகளை ஒரு பெண்ணைப்போல் ஆணால் மொழியால் விவரிக்க முடியாது. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடியும் திறனும் குறைவு.

    ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளைப் பார்த்தால் ஆண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவதற்கு ஆணின் மூளை அமைப்பே காரணம். ஆனால், பெண்ணின் மூளை அமைப்பு அப்படியல்ல.

    இதுபோன்ற அடிப்படையான குணவேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப்பற்றி சரியான புரிதல் இருபாலருக்கும் இல்லாததால் காதலிக்கும் போதும் திருமணத்திற்கு பிறகும் பல தம்பதியினர் ஏமாற்றம் அடைகிறார்கள்.

    ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது ஆசைகளை பெண் நிறைவேற்றுவதில்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே மணவாழ்க்கையிலும் காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க இருபாலரும் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம், என்கிறார்கள் உளவியலாளர்கள்.
    தேன் ஆரோக்கியம் நிறைந்த இனிப்புப் பொருளாகும். அதே வேளையில் தேனை தினமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உபயோகிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
    தேன் ஆரோக்கியம் நிறைந்த இனிப்புப் பொருளாகும். ஆனால் தேனில் சர்க்கரை இல்லாமல் இல்லை. இயற்கைத் தன்மை கொண்ட இனிப்பு தேனில் அதிகமாக இருக்கிறது. அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல் நலனுக்கு ஆபத்தை விளைவித்துவிடும். பிரக்டோஸ், குளுக்கோஸ், தண்ணீர் போன்றவை தேனில் இருக்கும் முக்கிய பொருட்களாகும். என்சைம்கள், பி வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் தேனில் உள்ளன.

    இயற்கையான ஆன்டிமைக்ரோபியல் பண்புகளும் தேனில் இருக்கின்றன. அவை காயங்களை விரைவாக குணப்படுத்தும் தன்மை கொண்டது. இருமல், தொண்டை புண் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். கொரோனா வைரஸ் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு பயன்படுத்தும் இயற்கை பொருட்களில் ஒரு அங்கமாக தேனும் இருந்துகொண்டிருக்கிறது. அதே வேளையில் தேனை தினமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உபயோகிப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    அதிகரிக்கும் சர்க்கரை: இயற்கை இனிப்பான தேனில் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. அது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் தன்மை கொண்டது. ஆதலால் நீரிழிவு நோயாளிகள் தேனை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். தேனை உபயோகிப்பதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    எடை அதிகரிப்பு: தேனில் உள்ள கார்போஹைட்ரேட்டும், சர்க்கரையும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் தேனை அதிகமாக உட்கொள்வது கலோரி எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்துவிடும்.

    பற்களில் பாதிப்பு: தேனை அதிகமாக உட்கொள்வது என்பது சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதாக அர்த்தமாகிவிடும். அது வாய்வழி சுகாதாரத்திற்கு நல்லதல்ல. தேன் எளிதாக பற்களில் ஒட்டும் தன்மை கொண்டது. ஆதலால் தேன் உட்கொண்டதும் நன்றாக வாய் கொப்பளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பற்களில் படிந்து பற்சிதைவுக்கு வழிவகுத்துவிடும்.

    வயிற்றுப் பிடிப்பு: தேன் சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். வயிற்றுப் பிடிப்பும் தோன்றலாம். தேன், சர்க்கரை போன்ற இனிப்புகளை குறைவாகவே உட்கொள்ளவேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்தான் உபயோகிக்க வேண்டும். மற்றவர்களும் இந்த அளவைத்தான் பின்பற்ற வேண்டும்.
    பெண்கள் தேவையற்ற முடிகளை நீக்க வாக்சிங் செய்து கொள்கிறார்கள். வாக்சிங் செய்த பின்பு சரியான முறையில் பராமரிக்காவிட்டால், அது பல்வேறு விதமான சரும பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
    பெண்கள் தேவையற்ற முடிகளை நீக்க வாக்சிங் செய்து கொள்கிறார்கள். வாக்சிங் செய்த பின்பு சரியான முறையில் பராமரிக்காவிட்டால், அது பல்வேறு விதமான சரும பிரச்சினைகளை உருவாக்கிவிடும். வாக்ஸ் செய்த 24 முதல் 36 மணி நேரம் வரை சருமத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பாக்டீரியா தொற்று, படை, சொறி, சிவப்பான திட்டுகள் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    வாக்ஸ் செய்த பின்பு அதில் ரோம வளர்ச்சியை தடுக்கும் லோஷனை பூசலாம். இந்த லோஷன் வாக்சிங்குக்கு பின்பு சருமத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கும். அதோடு உள்ளே தோன்றும் முடி வேரின் வளர்ச்சியையும் தடுக்கும். சிவப்பு திட்டுகள் உருவாகுவதை தடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. இந்த லோஷன், சருமத்தின் தண்ணீர்த்தன்மையை தக்கவைக்கவும் உதவும்.

    வாக்ஸ் செய்த பின்பு ஐஸ் கியூப் பயன்படுத்தி மசாஜ் செய்வது மிகவும் நல்லது. சருமத்தில் நீர்க்கட்டு, வீக்கம் போன்றவை தோன்றுவதை ஐஸ் கியூப் கட்டுப்படுத்தும். ஐஸ் கியூபை சருமத்தில் நேரடியாகவோ, காட்டனில் சுற்றி பொதிந்துவைத்தோ மசாஜ் செய்யலாம்.

    வாக்ஸ் செய்த பின்பு கற்றாழை, டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகை சேர்த்த ஜெல்களையும் பூசலாம். தொடர்ந்து சில நாட்கள் அவைகளை பூசி வருவது நல்லது.

    எண்ணெய்த்தன்மை கொண்ட அழகுசாதன பொருட்களையும், வறட்சியை உருவாக்கும் பொருட்களையும் சருமத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மணம் கொண்ட மற்றும் நிறம்கொண்ட பாடி வாஷ்கள், ஸ்பிரேக்கள், லோஷன்கள், டியோடரன்டுகள், வாஸ்லின், எண்ணெய் வகைகள் போன்றவைகளை வாக்சிங் செய்த பின்பு பயன் படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது சரும துவாரங்களை அடைத்து, சரும திட்டுக்களை உருவாக்கிவிடும். மணமும், நிறமும் வழங்கும் பொருட்களை வாக்சிங் செய்த பின்பு பயன்படுத்தினால் அது சருமத்தை வெகுவாக பாதிக்கும்.

    வாக்சிங் செய்த இடத்தில் குறைந்தது 48 மணி நேரமாவது சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. சூரிய ஒளிபட்டால் சருமம் பாதிக்கப்படும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

    குறைந்தது 48 மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. உப்பு கலந்த நீர் வாக்சிங் செய்த சருமத்தில்படுவது நல்லதல்ல. நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் கலக்கப்பட்டிருக்கும். அதுவும் சருமத்திற்கு ஏற்புடையதல்ல. நீச்சல் குளத்தில் உள்ள நீரில் பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கும். அதுவும் சரும ஆரோக்கியத்தை பாதிக்கும்.

    வாக்சிங் செய்த இரண்டு நாட்களுக்கு உடற்பயிற்சியை தவிர்க்கவேண்டும். கடுமையான உடல் உழைப்பையும் தவிர்ப்பது சிறந்தது. தவிர்க்காவிட்டால் உடலில் உருவாகும் அதிக வியர்வை, பாக்டீரியாக்களை உருவாக்கி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை.
    கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக, மருத்துவமனை பணி நேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து, முன்பக்கம் பிரித்து அணியக்கூடிய வகையில் தைக்கப்பட்ட பருத்தித் துணியாலான நைட் கவுன்கள் 3 அவசியம். நைட் கவுன் இவ்வாறு இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் மருத்துவர் பரிசோதிப்பதற்கும் வசதியாக இருக்கும். அதுபோல் தாய்ப்பால் கொடுக்கத்தக்க உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் ஜட்டிகள், பேன்டீஸ்கள், சானிட்டரி நாப்கின்கள், சுத்தமான பழைய சேலைகள், டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சோப்பு, சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், ஃப்ளாஸ்க், சில புத்தகங்கள், வார இதழ்கள், மொபைல் போன், மொபைல் சார்ஜர், மூக்குக் கண்ணாடி (ஒருவேளை கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், பிரசவத்தின்போது அதை எடுத்துவிடுவார்கள்), வசதியான செருப்புகள், கொசுவத்திகள் போன்றவற்றை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ளலாம்.

    நிறைய பணம் எடுத்துச்செல்ல வேண்டாம். டெபிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. விலை மதிப்புள்ள ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.

    குழந்தைக்குத் தேவையான பொருட்களை மற்றொரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தியாலான ஆடைகள், உடல் துடைக்கத் துணிகள், டயாபர்கள், பஞ்சு, குழந்தையைப் படுக்க வைக்க பருத்தி டவல்கள், ரப்பர் ஷீட்கள், தொட்டிலுக்குரிய கொசு வலை, பேபி சோப், பேபி பவுடர் போன்றவை முக்கியத்தேவைகள். குழந்தைக்கு பழைய சட்டைகளைப் போடுவதாக இருந்தால், அவற்றை கிருமிநாசினி சேர்த்து கொதிநீரில் ஊறவைத்து, காயவைத்து, பின்னர் பயன்படுத்துவது நல்லது. கைக்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே இந்த யோசனை.
    கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
    தேவையான பொருட்கள்

    கறிவேப்பிலை - 1 கப்,
    மைசூர் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்,
    புளி - சிறிது,
    பெருங்காயம் - 1 சிட்டிகை,
    சிவப்பு மிளகாய் - 7,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    அத்துடன் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து வதக்கவும்.

    ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

    சூடான சாதத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்தப் பொடியை தேவைக்கு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.
    ×