என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
    கடந்த மூன்று மாத கால லாக்டௌனில் அதிகம் விற்பனையான பொருள்களில், கருத்தடை சாதனங்களும் கருத்தடை மாத்திரைகளும் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வு முடிவுகள். குறிப்பாக, இந்த லாக்டௌனில் பெரும்பாலான பெண்கள், தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கக் கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.

    இரண்டு, மூன்று மாதங்கள் எனத் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். ஒருவேளை லாக்டௌனுக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தால் கருவுறுதல் தள்ளிப்போகவும் நேரலாம். வேறு சில உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம்.

    ஏனெனில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் எல்லாம் ஏற்படலாம்? இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    "தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை கருத்தடை மாத்திரைகள். மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாள்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும்.

    இந்த மாத்திரைகள் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (Estrogen) மற்றும் புரோஜெஸ்டரோன் (Progesteron) சுரப்பைக் கட்டுப்படுத்தி கர்ப்பப்பையில் கரு உருவாவதைத் தடுப்பதுடன், மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படாமல் 28 - 30 நாள்களுக்கு ஒருமுறை எனச் சீரமைக்கிறது.

    கருத்தடை மாத்திரைகளை ஒரு மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு 21 நாள்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கருவுறுதலைத் தவிர்க்க முடியும். அவ்வாறன்றி மறதியின் காரணமாக ஓரிரு நாள்கள் தவறவிடும்பட்சத்தில், அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்; தேவையில்லாத கர்ப்பம் நிகழலாம். சிலருக்குக் கர்ப்பப்பை குழாயினுள் கரு உருவாகலாம்.

    மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒரு பெண் தானாகவே கருத்தடை மாத்திரைகளை இரண்டு, மூன்று மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மார்பகங்களில் வலி, எடை அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதிகபட்சமாக, பக்கவாதம்கூட ஏற்படலாம்.

    கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாகப் பக்கவாதம் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் இது அமையலாம்.

    கருத்தடை மாத்திரைகளை மருத்துவப் பரிந்துரையின்றிப் பயன்படுத்துவதுபோல் பெண்கள் செய்யும் மற்றொரு மிகப்பெரிய தவறு, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்துவது. கருத்தடை சாதனங்கள், மாத்திரைகளைப் பயன்படுத்தியும் கருவுற்றுவிட்டால், உடனே பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே கடைகளில் வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கருச்சிதைவு ஏற்படுவோரில் சிலருக்குத் தாங்கமுடியாத வலியும், அதிக ரத்தப்போக்கும் ஏற்படலாம். கருக்கலைப்பு மாத்திரைகள் சிலருக்கு உயிருக்கேகூட ஆபத்தாகலாம்.

    எனவே, பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். 
    தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க நம் எல்லோருக்குமே பிடிக்கும்தானே..? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம்.
    தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க நம் எல்லோருக்குமே பிடிக்கும்தானே..? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம்.

    * காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். உள்ளங்கைகளைக் குவித்து நீரைப் பிடித்து, அதற்குள் உங்கள் கண்களைத் திறந்து திறந்து மூடுங்கள். இப்படிச் செய்வதால் முகத்திலும் கண்களிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள்.

    * நன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.

    * உடலில் கழுத்துப்பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப்போடப்படும்.

    * வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கும்போது உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

    * காலையில் குளிப்பதற்கு முன்னால் உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைஸிங் கட்டாயம் செய்ய வேண்டும். இதற்கு நேரமில்லை என்பவர்கள் பாலேட்டால் முகத்துக்கு மசாஜ் செய்யுங்கள். எண்ணெய்ப்பசை சருமம் என்றால், சோற்றுக்கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

    * அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதாம் மிக மிக அவசியம். அப்படியே சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள் வரலாம் என்பதால், முதல் நாள் இரவே பாதாம் பருப்பை ஊறவைத்து, காலையில் தோலை உரித்துவிட்டுச் சாப்பிடலாம். ஒரு நாளுக்கு 4 அல்லது 5 பாதாம் போதும்.

    * காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதற்கு முன் உலர்ந்த பழங்கள் அல்லது ஃபிரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உலர் பழங்கள் ஒரு கைப்பிடியளவு போதுமானது. ஃபிரெஷ்ஷான பழங்கள் என்றால் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம். கொரோனா தொற்று பயம் இருக்கிற இந்த நேரத்தில் பழங்களின் தோலை நீக்கிவிட்டே சாப்பிடுங்கள். பிறகு முக்கால் மணி நேரம் கழித்து காலை உணவு எடுத்துக்கொள்ளலாம்.

    * காலையில் உலர் பழங்கள், ஃபிரெஷ் பழங்கள் சாப்பிட முடியாதவர்கள் ஒரு தக்காளி, கால் துண்டு பீட்ரூட், ஒரு கேரட், சின்னத்துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து ஜூஸாகக் குடிக்கலாம். ஆரோக்கியத்துடன் சரும அழகும் அதிகரிக்கும்.

    * வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தவறாமல், உங்கள் சருமத்துக்கு ஏற்ற, காலநிலைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை முகத்தில் அப்ளை செய்யவும்.

    * கடைசி பாயின்ட், ஆனால் மிக மிக முக்கியமான பாயின்ட். தாகம் எடுக்கும்போதெல்லாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு அருந்துங்கள். காலையிலேயே பாட்டிலில் பிடித்துவைத்துவிட்டு இரவுக்குள் அருந்தும் வழக்கத்தையும் கடைப்பிடிக்கலாம். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும். தவிர, உடலில் இருக்கிற கழிவுகளும் முழுமையாக வெளியேறும்.
    நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து எப்படியாவது மீண்டுவிடவேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கொரோனா தக்க பாடம் புகட்டியிருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து நகம் கடிக்கும் பழக்கத்தை சிலர் கைவிட்டுள்ளனர்.
    நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயது முதலே சிலரை விடாமல் துரத்தி வருகிறது. கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என பல்வேறு உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருக்கும்போதும், ஏதாவது ஒன்றை பற்றி யோசித்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போதும் விரல்கள் தானாகவே வாய் இருக்கும் பகுதி நோக்கி காந்தத்தை கண்ட இரும்பு போல ஈர்க்கப்படுகிறது.

    நிழல்போல தொடரும் நகம் கடிக்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொள்பவர்களும் உண்டு. ஆனால் வானவில்லின் வர்ணம் கொஞ்ச நேரம் இருப்பதுபோல அந்த பழக்கம் சிறிது நேரத்துக்கு பின்னர் தங்களை அறியாமல் மீண்டும் துளிர்விடுகிறது. அந்த பழக்கத்தை விட்டொழிப்பதற்கு கஜினி முகமது போல மீண்டும், மீண்டும் படையெடுப்பவர்களும் உண்டு.

    நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து எப்படியாவது மீண்டுவிடவேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கொரோனா தக்க பாடம் புகட்டியிருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து நகம் கடிக்கும் பழக்கத்தை சிலர் கைவிட்டுள்ளனர். இன்னும் சிலர் அந்த பழக்கத்தை விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நகத்தை சுத்தமாக பராமரிப்பதற்கான உந்துகோலோக, நகம் கடிக்கும் பழக்கத்துக்கு கொரோனா முடிவுரை எழுதியிருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

    இதேபோல தற்போது உமிழ்நீரை தொட்டு யாரும் ரூபாய் நோட்டுகளை எண்ணுவது இல்லை. அரசு அறிவித்த வழிமுறைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றினால் கொரோனாவுக்கும் முடிவுரை எழுதிவிடலாம்.
    மனைவியை சந்தேகப்படும் கணவன்மார் இப்போது அடிதடி என்று அல்லோலப்படுத்தாமல் அமைதியாக இருந்து, நவீன தொழில்நுட்பம் ஒன்றின் மூலமாக தங்கள் சந்தேகத்தை தீர்த்து, அது சரியா- தப்பா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.
    சந்தேகம் என்பது மனிதனுக்கு வந்துவிட்டால் அது, சந்தோஷத்திற்கு சாவு மணி அடித்துவிடும் என்பது உண்மைதான். ஆனாலும் ஆதிகாலத்தில் இருந்து இன்றும் மனிதர்களிடம் சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பலநிலைகளில், பல துறைகளில் சந்தேகம் இருந்துகொண்டிருந்தாலும், கணவன்- மனைவி உறவு இடையேயான சந்தேகம் குடும்ப வாழ்க்கையை ஆட்டிப்பார்த்துவிடுகிறது. மனைவியை சந்தேகப்படும் கணவன்மார் இப்போது அடிதடி என்று அல்லோலப்படுத்தாமல் அமைதியாக இருந்து, நவீன தொழில்நுட்பம் ஒன்றின் மூலமாக தங்கள் சந்தேகத்தை தீர்த்து, அது சரியா- தப்பா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

    அப்படி ஒரு சந்தேகம் மும்பையை சேர்ந்த சந்தீப்புக்கு வந்தது. ‘உண்மை தெரியாமல் மனைவியை குற்றம் சொல்லக்கூடாது’ என்ற முடிவுக்கு வந்தவன், தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அதற்குரிய நவீன தொழில்நுட்பத்தை கையாளும் நிபுணர்களின் உதவியை நாடினான். அவர்கள் கொடுத்த ஆலோசனைபடி, அதற்கான ஆதாரங்களை சேகரிக்க முன்வந்தான். சந்தேகத்திற்குரிய மனைவியின் படுக்கை விரிப்பை உருவி எடுத்தான். காது குடையும் ‘பட்’ ஒன்றை எடுத்து தனது வாயில் நுழைத்து உமிழ்நீரை வழித்தான். இரண்டையும் அதற்குரிய வழிமுறையில் அட்டைப்பெட்டியில் அடைத்து ஐதராபாத்துக்கு கூரியரில் அனுப்பி வைத்தான்.

    முழுமையான ஆய்வுக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சந்தீப்புக்கு பதில் வந்தது. “படுக்கை விரிப்பில் உள்ள ‘கறை’, நீங்கள் சந்தேகப்பட்டமாதிரியே விந்துக்கறைதான். அதன் டி.என்.ஏ.வும் உங்களின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போகிறது. இரண்டும் ஒன்றேதான்” என்றிருந்தது. அப்பாடா என்று அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் அவருக்கு முழுமையாக விலகியது.

    “நான் மட்டும் இப்படி டி.என்.ஏ. டெஸ்ட் செய்திருக்காவிட்டால் சந்தேகமே எங்கள் வாழ்க்கையை நிலை குலைய வைத்திருக்கும்” என்கிறார் இந்த மும்பைவாசி. இப்போது அவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசிக்கொண்டிருக்கிறது. இருவரும் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

    உமிழ்நீரில் உள்ள டி.என்.ஏ. வையும் படுக்கை விரிப்பு விந்துக்கறை டி.என்.ஏ.வையும் ஒப்பிட்டு அவருக்கு ‘ரிசல்ட்’ கூறியது. ஐதராபாத்தில் உள்ள ஒரு நவீன டி.என்.ஏ. ஆராய்ச்சி நிலையம். நிறைய பேருக்கு இது ஆச்சரியத்தை தரலாம். ஆனால் ஐதராபாத் ஆய்வகத்துக்கு ‘நன் நடத்தை சோதனை’ எனப்படும் இந்த சோதனைக்கு மாதந்தோறும் ‘சாம்பிள்கள்’ உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றன. துரோகம் செய்யும் துணையைக் கண்டுபிடிக்க மேலைநாடுகளில் பிரபலமான இந்த டெஸ்ட், இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

    “நாங்கள் இந்த ஆய்வகத்தைத் தொடங்கிய காலகட்டத்தில் ‘நடத்தைச் சோதனையில்’ ஆர்வம் காட்டுவோர் யாரும் இல்லை. இன்றோ இந்த சோதனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று கூறுகிறார்கள். இவர்களது ஆய்வகத்துக்கு, பயன்படுத்திய ஆணுறை சிகரெட், பஞ்சு, உடல் ரோமம் அகற்றும் பட்டை, நாக்கு வழிப்பான், காது ‘பட்ஸ்’, நகத் துணுக்கு, ரத்தக் கறை படிந்த படுக்கைவிரிப்பு என்று பலவிதமான பொருட்கள் ஆய்வுக்கு வருகின்றன.

    இந்த மாதிரியான ஆய்வகங்கள் எல்லா பெருநகரங்களை நோக்கியும் படையெடுக்கின்றன. டெல்லியிலும் இதே போன்ற மற்றொரு ஆய்வகம் இயங்குகிறது. அங்கும் அதிகமான ‘சாம்பிள்’கள் வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சோதனைக்கு சாம்பிள் அனுப்பும் நபர்களில் பெரும்பாலானவர்கள், திருமணமான இளம் ஆண்கள்தான். மனைவி மீது சந்தேகம் கொண்டு, அதைச் சரிபார்க்குமாறு கூறுகிறார்களாம்.

    இன்னும் சில வாழ்வியல் விஷயங்களுக்கும் இந்த ஆய்வுக் கூடங்கள் பயன்படுகின்றன. சிலர் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். அதற்கான அடிப்படை காரணத்தை அறிவது முதல்- தலை முன்கூட்டியே வழுக்கை ஆகிவிடுமா என்பது வரை எல்லாவற்றையும் டி.என்.ஏ. சோதனை மூலம் அறியலாம். கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குத்தான் டி.என்.ஏ. பயன்படும் என்பது பழைய கதையாகிவிட்டது. பல புதிய விஷயங்களுக்கு இது பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.

    யாருக்கு சர்க்கரை நோய், புற்றுநோய் ஆபத்து அதிகம், பாதிப்பூட்டும் பரம்பரை வியாதி தமக்கும் வருமா என்று கூட கூறிவிடலாம் என்கிறார்கள் டி.என்.ஏ. ஆய்வு நிபுணர்கள். அவ்வளவு ஏன், உங்கள் குழந்தை கிரிக்கெட்டில் சச்சின் போலவோ, கால்பத்தில் பெக்காம் போலவோ ஜொலிக்க அவனது டி.என்.ஏ.விலேயே ‘பிராப்தம்’ இருக்கிறதா, எந்த விளையாட்டில் அவன் அசத்த வாய்ப்பிருக்கு என்று கூட புட்டுப்புட்டு வைத்துவிடுவார்களாம்.

    தற்போது திருமணத்திற்கு ‘ஜாதகப் பொருத்தம்’ பார்க்கிற மாதிரி, ‘மரபணு பொருத்தம்’ பார்க்கவும் ஆரம்பித்திருக் கிறார்கள். இந்தப் பொருத்தமுள்ள இருவர் வாழ்க்கையில் இணையும்போதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வல்லவர்களாக இருப்பார்களா என்பதை அறிவதோடு, தம்பதியரின் தாம்பத்ய வாழ்க்கையும் ரொம்பவே திருப்திகரமாக அமையுமா என்பதையும் தெரிந்துகொள்ள வாய்ப் பிருப்பதாக சொல்கிறார்கள்.

    எல்லோருக்குமே அவரவர் மூதாதையர் பற்றி அறிய ஆவலாயிருக்கும். ஆனால் நம்மால் நமது தாத்தா-பாட்டி, அதைத் தாண்டினால் கொள்ளுத்தாத்தா- கொள்ளுப்பாட்டி வரை கூற முடியும். அதற்கு மேல் எதுவும் தெரியாது. அதற்கும் இது கைகொடுக்கும் என் கிறார்கள்.

    ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் நடிகை பிரீடா பின்டோவுக்குக்கூட இந்தச் சோதனை செய்துகொள்ளும் ஆசை வந்திருக்கிறது. “போர்த்துக்கீசியர்கள் நான் அவர்கள் வம்சாவளியில் வந்தவள் என்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே இந்தச் சோதனை செய்ய விரும்புகிறேன்” என்கிறார் பீரிடா.

    நீங்கள் உண்மையில் ‘மண்ணின் மைந்தர்களா’ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களா என்றும் டி.என்.ஏ. கூறிவிடுமாம்.

    எத்தனை உண்மைகளை கண்டுபிடித்து அதனால் எந்த நன்மைகள் விளைந்தாலும் ஒன்று மட்டும் புரியுதுங்க.. இந்த தொழில் சக்கைப்போடு போடப்போகுதுங்க..!
    வழுக்கை தலை பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆண்கள் பூசணி விதையை தவறாமல் சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வது நல்லது. முடி பலம் இழந்து அறுந்து போவதை தவிர்க்க பூசணி விதையை பயன்படுத்தலாம்.
    அடர்ந்த கூந்தல் என்பது பெண்களின் ஆசைக்கனவாக இருக்கிறது. ஆனால் முடி உதிர்வு பிரச்சினை கூந்தல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கு சில வகை விதைகள் துணைபுரிகின்றன. அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் கூந்தல் நலனும் மேம்படும்.

    கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் இரண்டுமே கூந்தலுக்கு ஆரோக்கியமும், பளபளப்பு தன்மையும் ஏற்படுத்தக்கூடியவை. அவற்றுள் தாதுக்கள், வைட்டமின்கள், பாலி அன்சச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை குறைக்கும் பைட்டோஸ்டெரால் போன்றவை இருக்கின்றன. அவை இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவும். அன்றாடம் சமைக்கும் காய்கறிகள், உணவுடன் எள்ளையும் சேர்த்துக்கொள்ளலாம். லட்டுக்களாக தயாரித்தும் சாப்பிட்டு வரலாம்.

    சுற்றுச்சூழல் மாசுக்கள், நச்சுகளிடம் இருந்து கூந்தல் முடியை பாதுக்கும் தன்மை சூரியகாந்தி விதைக்கு இருக்கிறது. முடி வளர்ச்சிக்கும் வித்திடும். முடி அடர்த்தியை ஊக்குவிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், வைட்டமின் இ போன்றவைகளும் அதில் இருக்கிறது. ஆதலால் சூரியகாந்தி விதையையும் உணவில் சேர்த்துகொள்ளலாம். வீட்டில் நொறுக்குத்தீனியாக அதை சாப்பிடலாம்.

    முடி பலம் இழந்து அறுந்து போவதை தவிர்க்க பூசணி விதையை பயன்படுத்தலாம். டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு அதிகமாவதன் காரணமாக முடி உதிர்ந்து வழுக்கை தலை பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆண்கள் பூசணி விதையை தவறாமல் சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வது நல்லது. மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகம் உள்ளது. அது முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதோடு, கூந்தலின் வளர்ச்சிக்கும் உதவும். அதில் நார்ச்சத்துகள், புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவைகளும் நிறைந்துள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் ஆளிவிதை பயனுள்ளதாக இருக்கிறது. சாலட்டுகளில் ஆளிவிதையை கலந்து சாப்பிடுவது கூடுதல் நன்மை தரும்.

    வெந்தயத்தை விழுதாக அரைத்து கூந்தலில் தடவி மசாஜ் செய்து வரலாம். இதில் இருக்கும் புரதம், நியாசின், பொட்டாசியம், அமினோ அமிலங்கள் போன்றவை முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும். சமையலிலும் வெந்தயத்தை அதிகம் சேர்க்கலாம்.

    சியா விதைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்யும். செரிமானத்தையும் அதிகரிக்க செய்யும், இதய நோய், நீரிழிவு நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும். ஓட்ஸ் உணவுடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம். இதனை தனியாக சாப்பிடுவதற்கு சிரமமாக இருந்தால் பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.
    காலையில் குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை பிரெட் - 6
    முட்டை - 3
    வெங்காயம் - 1 பெரியது
    மஞ்சள்தூள் - சிட்டிகை
    மிளகாய்தூள் - 1/4 டீஸ்பூன்
    ப.மிளகாய் -1
    கொத்தமல்லி இலை - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் / நெய் - தேவைக்கு

    கொத்தமல்லி சட்னி

    கொத்தமல்லி - கால் கப்
    புதினா - கால் கப்
    தேங்காய் - கால் கப்
    புளி - சிறு துண்டு ( விரும்பினால்)
    ப.மிளகாய் - 2
    உப்பு - தேவைக்கு

    கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட்

    செய்முறை :

    கொத்தமல்லி சட்னிக்கு தேவையனா பொருட்களை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறுது தண்ணீர் தெளித்து திக்காக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    ஒரு பாத்திரத்தில் முட்டை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி இலை, தூள் வகைகள், உப்பு கலந்து நன்றாக கரண்டி வைத்து கலந்து வைக்கவும்.

    கோதுமை பிரெட் துண்டுகளை முக்கோண வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

    கோதுமை பிரெட் இன் ஒரு பகுதியில் கொத்தமல்லி சட்னி தடவி வைக்கவும். மறு புறம் ப்ளேன் பிரெட் வைத்து செட் ஆக ரெடி செய்து வைக்கவும்.

    தோசை தவாவில் சிறிது எண்ணெய்/ நெய் ஊற்றி சூடானதும் ரெடி செய்து வைத்த பிரெட்டை முட்டை கலவையில் முக்கி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட் ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.
    பிரசவம் முடிந்த பிறகு உண்டாகும் இரத்தப்போக்கும் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவித அசெளகரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டாவதுதான். ஆனால் இவை தற்காலிகமானதே என்பதால் பாதுகாப்பாக அவற்றைக் கடக்க சுகாதார முறைகளைப் பின்பற்றினால் போதுமானது. என்ன என்றுதான் தெரிந்துகொள்ளுங்கள்.

    பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் நின்றுவிடும். சில ருக்கு ஆறுவாரங்கள் வரையிலும் ரத்த போக்கு இருக்கும். இது நார்மலான விஷயம்தான். சுகப்பிரச வம் ஆனவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு அப்போதே கருப்பையையும் சுத்தம் செய்துவிடுவதால் இவர்களுக்கு ரத்த போக்கு குறைவாக இருக்கும்.

    இரத்தபோக்கு தொடர்ந்து இருக்காமல் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப அவ்வபோது உண்டாகும். இதனால் திடீரென்று ரத்த போக்கும் பிறகு ரத்த போக்கு இல்லாமல் போவதும் என்று மாறி மாறி நிகழும். இவையெல்லாம் நார்மல் தான்.

    மாதவிடாய் காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கை விட நான்கு மடங்கு இரத்தப்போக்கு அதிக ரிக்கும் போது கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. சில நேரங்களில் கருப்பை யின் நஞ்சுக்கொடியின் சிறு துகள் ஒட்டியிருந்தாலும், தொற்று ஏற்பட்டிருந்தாலும் அதிக ரத்தப் போக்கு உண்டாகும்.

    அதனால் அதிகமாக உதிரப்போக்கு உண்டாகும் போது அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானது. அதிக இரத்த போக்கு அதிகநாட்கள் தொடர்ந்தால் கண்டிப்பாக அலட்சியப்படுத்த கூடாது. அதே போன்று இரத்தப்போக்கு பழுப்பு நிறத்தில் கசிவு உண்டாகும். இது எந்த வித பாதிப்பையும் உண்டாக்காது ஆனால் இரத்தப்போக்கு நார்மலாக இருந்தாலும் கசிவின் போது துர்நாற்றம் வெளிப்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    உதிரப்போக்கு ஏற்படும் போது தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்வது அவசியம். பிறப்புறுப்பில் பாதிப்பில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிலும் குழந்தை பிறந்த 10 நாட்கள் கூடுதல் கவ னத்தோடு இருக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரத்தப்போக்கை பொறுத்து 4 அல்லது 5 தரமான காட்டன் நாப்கின்கள் வரை மாற்றுவது பாதுகாப்பானது.

    கர்ப்பக்காலத்தில் சேமித்த நீர் மற்றும் தாது உப்புகள் சிறுநீர் பையில் தேங்கியிருக்கும். இது பிரசவித்ததும் சிறுநீராக வெளியேறும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் நாப்கினை மாற்றுவது நல்லது.

    ஒவ்வொரு முறை நாப்கின்மாற்றும் போதும் மிதமான வெந்நீரில் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவி பிறகு நாப்கின் மாற்றுங்கள். இதனால் அந்த இடத்தில் இருக்கும் ஒருவித எரிச்சல், வலி உணர்வு விரைவில் ஆறக்கூடும். மேலும் அதிகபட்சமாக மூன்று மணிநேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற் றுங்கள். இரவு நேரங்களில் இரண்டு முறையாவது மாற்றிவிடுங்கள். இது தொற்றுகளிலிருந்து உங்க ளைக் காப்பாற்றும்.

    சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பை சுத்தமாக நோய்த்தொற்றில் லாமல் வைத்திருக்க வேண்டும். பிறப்புறுப்பில் தையல் இடப்பட்டிருந்தால் (இப்போது நவீன மருத்து வத்தில் அவை வலியையும் எரிச்சலையும் உண்டாக்குவதில்லை) நீங்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.

    முதலில் மலச்சிக்கல் பிரச்சனையின்றி பார்த்துக்கொள்வது நல்லது. முதல் நான்கு நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு மருத்துவரே மருந்துகளையும் மலச்சிக்கல் பிரச்சனைகளை இயல்பாக தீர்க்கும் உணவுகளையும் பரிந்துரைப்பார். அதன்படி உணவுவகைகளை எடுத்துகொள்வதையும் தவிர்க்க கூடாது.

    மருத்துவரின் பரிந்துரையோடு கிருமி நாசினி(டெட்டால் போன்று) கலந்த நீரில் சுத்தம் செய்வது நல்லது. அதே போன்று சுத்தம் செய்யும் போது எப்போதும் முன்பிருந்து பின்பாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தொற்று பரவ வாய்ப்புல்லது. அதே போன்று குழந்தையை தூக்கும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு தூக்குவது நல்லது.

    பிரசவக்காலத்தில் ஏற்கனவே அதிகப்படியான இரத்தப்போக்கு உண்டாகியிருக்கும். பிரசவக்காலத் துக்கு பிறகும் இரத்தப்போக்கு தொடரும். அதனால் உடலில் போதுமான அளவு சத்தும் வலுவும் குறையத் தொடங்கியிருக்கும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுப்பதால் அதிகளவு ஊட்டச்சத்தை பிரசவித்த பெண் பெற வேண்டும்.

    மருத்துவர் பரிந்துரையின் பேரில் சத்து மிக்க உணவை கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டும். அரிசி உணவை 30 சதவீதமும் காய்கறிகளை 30 சதவீதமும், கீரை வகைகளை 20 சதவீதமும், அசை வம் சாப்பிடுபவர்களாக இருந்தால் 20 சதவீதம் அசைவ உணவையும் திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். இவற்றில் குழந்தையின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    மேலும் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பூண்டு, பால், பச்சை வேர்க்கடலை போன்றவற்றையும் எடுத்துகொள்ள வேண்டும். தினமும் பாலில் 5 பல் பூண்டை தட்டி போட்டு பாலில் கொதிக்க வைத்து குடித்துவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

    கர்ப்பக்காலத்தில் தொடரும் பராமரிப்பை பிரசவக்காலத்துக்குப் பிறகும் எடுத்துகொள்வதும் முக்கியம். இது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதோடு அடுத்த குழந்தை பிறப்பின் போதும் ஆரோக்கியம் தொடரும்.
    ‘ஆன்-லைன்‘ கல்வி என்ற புதிய டிஜிட்டல் கல்வி முறையுடன் போராடிக் கொண்டு இருக்கிறோம். ‘ஆன்-லைன்‘ கல்வியால் நமக்கு ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கல்கள் என்ன?. அதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இப்புதிய கல்வி முறையினால் ஏற்பட போகும் நன்மைகள் அல்லது தீமைகள் என்னவென்று அலச போகிறோம்.
    ‘ஆன்-லைன்‘ கல்வி என்ற புதிய டிஜிட்டல் கல்வி முறையுடன் போராடிக் கொண்டு இருக்கிறோம். ‘ஆன்-லைன்‘ கல்வியால் நமக்கு ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கல்கள் என்ன?. அதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இப்புதிய கல்வி முறையினால் ஏற்பட போகும் நன்மைகள் அல்லது தீமைகள் என்னவென்று அலச போகிறோம்.

    நன்மைகள்

    நன்மைகள் என்று எடுத்துக்கொண்டால், யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இருந்து இந்த கல்வியைப் பயில இயலும். தான் வேறு துறையை சார்ந்தவராக இருப்பினும், தான் விரும்பும் மற்றொரு துறையின் படிப்பையும் படிக்க இயலும்.

    ஆனால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இது எப்படி இருக்கிறது?. அவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இது எப்படி இருக்கிறது?. இதை பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள்?. இதை நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

    வித்தியாசமான அனுபவம்

    இதுவரை பள்ளிக்கு சென்று மட்டுமே படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள், ஆசிரியர் முன் தன்னுடைய கவனத்தை வைத்திருந்த பிள்ளைகள், இன்று நம் கணினியின் திரை முன் தன்னுடைய கவனத்தை வைக்க வேண்டியிருக்கிறது.

    இது அவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. மேலும், இவர்களுக்கு பள்ளி செல்லும் காலங்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இதற்கு தயாராகிறார்கள். ஆனால், இந்த ‘ஆன்-லைன்‘ கல்வியில் மேற்கூறியவற்றுக்கு எதற்கும் தேவை கிடையாது. உனக்கு ஒரு கணினி மட்டுமே தேவை. அதற்கு முன் இருக்க வேண்டியது அவசியமே தவிர வேறு எதுவும் அவசியமில்லை.

    கவன சிதறல்

    இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு முன்தயாரிப்பு, அதாவது பள்ளி செல்லும் பிரிபரேஷன் கிடையாது. பள்ளிச் சூழலில் தனக்கு அருகாமையில் தன்னுடைய தோழனோ, தோழியோ இருப்பார்கள். ஆனால், எதுவுமே இல்லாமல் வீட்டில் வித்தியாசமான சூழ்நிலையில், அம்மா, அப்பா அங்கே பேசிக்கொண்டிருப்பார்கள். சகோதரனோ, சகோதரியோ டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள். தாத்தா, பாட்டி பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த சூழ்நிலையில்தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    இந்த சூழலில் ‘ஆன்-லைன்’ மூலம் கல்வி கற்பது, பிள்ளைகளுக்கு சற்று கடினமாக இருக்கும். மேலும் கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    சந்தேகத்தை போக்க...

    கணினியின் திரையில் அவர்கள் முகமும், மற்ற தோழர்கள் முகமும் நேராக தெரிகிறது. அப்போது ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் காட்டிலும், தோழனோ, தோழியோ என்ன செய்கிறார்கள்?, அவர்கள் வேறு எப்படி இருக்கிறார்கள்? என்பதையே மனம் கவனிக்க செல்கிறது.

    பள்ளிக் கூடத்தில் உட்கார்ந்து இருக்கும்பொழுது, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடமும், தோழிகளிடமும் தன்னுடைய சந்தேகங்களை கேட்க வாய்ப்பிருக்கிறது ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை.

    கால அட்டவணை

    இது பிள்ளைகளின் பிரச்சினை என்றால், ஆசிரியர்களின் பிரச்சினை என்ன?. பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் அந்த எட்டு மணி நேரம் ஒரு ஆசிரியராக மட்டுமே இருந்தார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஒரு ஆசிரியை தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் அல்லது தகப்பனாகவும் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதாவது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அதே நேரத்தில் ஆசிரியர் பணியையும் செய்ய வேண்டி இருக்கிறது.

    அவர்களுக்கு கால அட்டவணை இல்லாததால் மனதில் குழப்பம் தோன்றுகிறது.

    கண்காணிப்பு

    இரண்டாவது அவர்களுக்கும் இந்த கணினி மூலம் பயிற்றுவிப்பது என்பது புதிதான ஒன்று. பள்ளி வகுப்பறையில் ஆசிரியை மற்ற பிள்ளைகள் எல்லோரும் தன்னை கவனிக்கிறார்களா? என்று நோட்டமிட முடியும். ஆன்-லைனில் அதற்கு வாய்ப்பு கிடையாது. அப்படி வாய்ப்பு இருப்பினும் அந்த ஆசிரியரால் ஏதும் செய்ய இயலாது.

    இதைத் தாண்டி சில பெற்றோர்கள் வகுப்பில் பாடம் நடக்கும் பொழுது, தன் பிள்ளைகள் அதை கவனிக்கிறார்களா? என்று பார்ப்பதற்காக அந்த கணினியின் பின்புறமோ அல்லது அருகிலோ அமர்ந்திருக்கிறார்கள். இது ஆசிரியர்களுக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனை ‘ஹெலிகாப்டர் பேரன்டிங்’ என்று கூறுவோம். அதாவது தன் பிள்ளைகளை சகஜமாக இருக்க விடாமல், எல்லா நேரமும் தங்கள் கண்காணிப்புக்கு கீழேயே வைத்திருப்பார்கள்.

    பெற்றோர்கள்

    தங்கள் பிள்ளை கல்வி கற்பது எப்படி? என்று பார்க்க வேண்டும். அதற்காக ஆன்-லைன் கல்வி நடக்கும் இடத்தில் நான் உட்கார்ந்து இருக்கிறேன். அல்லது ஆசிரியர் பயிற்றுவிப்பதை நானும் கற்றுக் கொண்டு என் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்று இருப்பார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். இருப்பினும் இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதை இவர்கள் உணர வேண்டும். ஆசிரியர் ஆகட்டும், உங்கள் பிள்ளைகள் ஆகட்டும், நீங்கள் அங்கு இருப்பதை நிச்சயமாக ஒரு இடைஞ்சலாக தான் பார்ப்பார்கள்.

    பெற்றோர்களும் இதை புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு அந்த நேரத்தில் தனிமையை கொடுத்து, பாடத்தில் கவனத்தை செலுத்த உதவ வேண்டும்.

    தவறான வகையில் பயன்படுத்த...

    ஆன்-லைன் கல்வி கற்கிறேன் என்ற பெயரில், சில பிள்ளைகள் தவறாக கணினியைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணித்து தடுக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியர்களும் சரியான முறையில் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். காலை, மதியம், மாலையில் எத்தனை மணிக்கு வகுப்பு என்று மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் மூலம் ஆசிரியர் தெரிவிக்க வேண்டும். அந்த நேரத்தை கடந்தும் கணினி முன்பு மாணவர்கள் அமர்ந்து இருந்தால், அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    எப்படி ஹெலிகாப்டர் பேரன்டிங் தவறு என்று கூறுகிறோமோ, அதேபோல் நீ என்ன வேணாலும் செய், நான் சும்மா வேடிக்கை பார்க்கிறேன் என்பதும் தவறு.

    தேர்வு

    மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்-லைனில் தேர்வு நடத்துகிறார்கள். இதை மாணவர்கள் எவ்வளவு நேர்மையாக செய்யப்போகிறார்கள் என்பது கேள்வி. இதற்கு அவர்களை தயார்படுத்த வேண்டும்.

    ஆன்-லைன் கல்வியில் இவ்வளவு குழப்பங்கள் இருக்கிறதா? என்று பயப்படவேண்டாம். இதில் நன்மைகளும் இருக்கிறது, சிறுசிறு தீமைகளும் இருக்கிறது. முதலாவதாக நாம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். இரண்டாவதாக பிள்ளைகளை பெற்றோர்கள் சற்று கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆனால் எல்லா நேரமும் அவர்கள் கண்காணிப்பில் வைத்துக் கொண்டு பயமுறுத்த கூடாது. ஆசிரியர்களும் இந்தக் கல்வியை எதன் வழியாக போதித்தாலும் திறம்பட போதிப்பேன் என்ற எண்ணத்துடன் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

    அவ்வாறு பயிற்றுவித்தால், ஆன்-லைனில் படித்தாலும் சரி, வகுப்பறையில் படித்தாலும் சரி, அதிக மதிப்பெண்கள் பெறுவது திண்ணம்.

    -நப்பின்னை சேரன், உளவியல் வல்லுனர்,

    அகில இந்திய உளவியல் சங்க செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு பிரதிநிதி.
    கொரோனா நோய் தொற்றால் கதி கலங்கிப் போயிருக்கும் சென்னைவாசிகள் தங்கள் வீடுகளில் வேப்பிலையை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகளைத் தேடித்தேடி வாங்கி சாப்பிடுகிறார்கள்.
    தமிழகத்தில் தலைநகர் சென்னை கொரோனாவால் கதி கலங்கிப் போயிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. முன்பு அருகில் உள்ளவர்கள் யாராவது இருமினால் ‘உடம்புக்கு என்ன ஆச்சு?‘, என்று நலம் விசாரித்த காலம் போய், இன்று யாராவது இருமினாலோ, தும்மினாலோ அவர்களை விட்டு பல மீட்டர் தூரம் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு காரணியாக வேப்பிலையை பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்த தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. தினமும் வீட்டைச் சுற்றிலும் வேப்பிலை சாறு, மஞ்சள் கலந்த நீரை தெளித்து விடுகிறார்கள். வீட்டின் கதவுகள், கைப்பிடிகள், ஜன்னல் கம்பிகள் போன்ற அனைத்து இடங்களிலும் வேப்பிலையை சொருகி வைத்து இருக்கிறார்கள். மிளகு, வேப்பிலை, சுக்கு, இஞ்சி கலந்த மூலிகைச் சாறை தினமும் குடித்து வருகிறார்கள். இது தவிர நெருப்பில் வேப்பிலை, சாம்பிராணி தூள் சேர்த்து வீடுகளில் புகை போடுகிறார்கள். பெண்களில் பலர் வேப்பிலையை தலையில் சொருகி செல்கிறார்கள். விதவிதமான பூக்கள் அலங்கரித்த பெண்களின் தலையில் தற்போது வேப்பிலை இருப்பதை பார்க்க முடிகிறது.

    இப்படி சென்னைவாசிகளின் வீடுகளில் தற்போது அதிகம் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருளாக வேப்பிலை மாறி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. வீடுகளின் அருகில் வேப்ப மரம் உள்ளவர்கள் தேவையான அளவு வேப்பிலையை பறித்து பயன்படுத்துகிறார்கள். சிலர் பொடி நடையாக சென்று அருகில் உள்ள மரங்களில் வேப்பிலையை பறித்து வீடுகளுக்கு எடுத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொருவரின் பையிலும் இன்றியமையாத பொருளாக வேப்பிலை மாறியிருக்கிறது.

    பூண்டு, இஞ்சி, மிளகு

    அதேபோல உண்ணும் உணவிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பொருட்களை மக்கள் சேர்க்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் தூள் போன்றவற்றை சமையலில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தலைவலிக்கு டீ குடித்தால் கூட அதில் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானோர் வீடுகளில் சுடுதண்ணீர் அருந்துகிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பழங்களை அதிகமாக உண்கிறார்கள். அதேபோல ஆடாதொடை இலைகளை பயன்படுத்தி கசாயம் தயாரித்து அடிக்கடி பருகி வருகிறார்கள்.
    புரோட்டின் ஹேர் பேக் கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும்.இந்த ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கூந்தலின் வெளிப்புறத்துக்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் போஷாக்கு அளிக்க வேண்டும். அதற்கு சிறப்பாக உதவும் இந்த புரோட்டின் ஹேர் பேக். இவை கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும். அப்படி பயன்படுத்தகூடிய புரதம் நிறைந்த ஹேர் பேக் குறித்து பார்க்கலாமா?

    உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை மூன்றையும் தனித்தனியாக சிறிதளவு நீரில் மூழ்க வைக்கவும். மறுநாள் காலை முதலில் உளுந்தை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, பிறகு வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் சுற்றி அதன் பிறகு கறிவேப்பிலையை சேர்த்து மைய அரைக்கவும். இந்த விழுது எல்லாமே குளிர்ச்சி நிறைந்தது என்பதால் தேவையெனில் இதில் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் அளவு சேர்க்கலாம். இவை கூடுதலாக கூந்தலில் இருக்கும் பொடுகையும் நீக்கவல்லது.

    இதை நன்றாக கலந்ததும் பிறகு கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முதல் வேர்ப்பகுதி வரை நன்றாக தடவி விடவும். மண்டை முதல் நுனி வரை இதை தடவினால் போதும். பிறகு சுத்தமான டவலை வெந்நீரில் பிழிந்து தலையில் இறுக கட்டிகொள்ளவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலசவும். ஷாம்பு கொண்டு தேய்க்க வேண்டாம். சாதம் வடித்த கஞ்சியை மட்டும் கொண்டு அலசலாம்.

    முதல் முறை இந்த பேக் பயன்படுத்தும் போது அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம். மாலை நேரங்களில் இதை பயன்படுத்தினால் குளுமை தரக்கூடும் என்பதால் காலை வேளையில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயன்படுத்த கூடாது. மாதம் ஒருமுறை அல்லது அதிகம் இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தகூடாது. 
    நண்பர்களிலே நல்ல நண்பர் யார்? என்பது அனுபவத்தின் மூலம் தான் தெரியுமே தவிர, சாதாரணமாக கண்டுகொள்ள முடியாது. நாம் நண்பர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே...
    “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

    அகநக நட்பது நட்பு”

    என்பது வள்ளுவரின் நட்பு இலக்கணம் ஆகும். நண்பர்களிலே நல்ல நண்பர் யார்? என்பது அனுபவத்தின் மூலம் தான் தெரியுமே தவிர, சாதாரணமாக கண்டுகொள்ள முடியாது. நாம் நண்பர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே...

    நல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு. கஷ்டம் வந்தபோது கைகொடுத்தால் அது நல்ல நட்பு. புறம்பேசி மகிழ்ந்தால் தீயநட்பு. நீ இல்லாத இடத்தில் உன்னை பற்றி நல்லவிதமாக கூறுபவன் நல்ல நண்பன். பிறர் உன்னைப் பற்றி தவறாகப் பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்துப் பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    நண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசிய காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்றைக்கு சக நண்பர்களோடு பேசுவதைவிட, கையிலிருக்கும் மொபைல்போன் அல்லது கணினி முன்னோடியே தங்கள் காலத்தை கழித்துவிடுகிறார்கள்.

    நண்பர்களிடம் நேரில் பேச முயற்சி எடுங்கள். நல்ல நட்பு அமைய, ஒருவரோடு நேரில் பேசுவதைவிட சிறந்த வழி வேறு எதுவுமில்லை. ஏனென்றால் நேரில் ஒருவருடன் பேசும்போது அவர் எப்படி பேசுகிறார். அவர் என்ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். அவருடைய சலுகைகள் எப்படி இருக்கிறது? என எல்லா விஷயத்தையும் நாம் கவனிக்க முடியும். ஆன்லைனில் தொடர்பு இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்துவிடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்டி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், உங்கள் நட்பு நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும். இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா? யோசித்து பாருங்கள்.

    தாய், தந்தையைவிட தன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாது பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம். பெற்றோரது அன்பு, உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.

    நட்பு, தோழமை என்பது இருவர் இடையே அல்லது பலரிடம் ஏற்படும் ஒரு உன்னத உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி புரிந்து கொள்ளுதல், அனுசரித்தலை அடிப்படையாக கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து இன்பத்திலும், துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.

    ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப்போல நண்பர்களையும், நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்களை தெரிந்து கொள்ளலாம். நல்ல நண்பன் தனது நட்பை முதலில் தனது சிந்தனை, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படையாகவே வழங்குவான். புகை பிடித்தல், போதை பொருள், பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட தீயநடத்தைகளைக் கொண்டவர்களை நட்பாக பெறக்கூடாது. அது போன்றவர்களிடம் விலகி இருக்க, பெற்றோரும், நல்ல நண்பர்களும் அவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.

    நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது நாம் விட்டுக் கொடுக்கும் போதும், மனதை திறந்து உள்ளத்தை சொல்ல முற்படும்போதும், மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்தி கொள்ள முற்படலாம். அவர்களிடம் எந்த சூழ்நிலையிலும் நெருங்காமல் இருப்பது நல்லது.

    பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். எல்லோரும் நல்லவரே என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம்தான். நண்பன் நல்லவனா? என்பதை ஆராய்ந்துதான் நட்பு கொள்ளவேண்டும். நல்ல நண்பர்களோடு பழகுவோம். நட்புறவுடன் வளர்வோம்.. உயர்வோம்.
    பலாக்கொட்டை குடல் புண்கள் மற்றும் வயிறு தொடர்பான பிர்ச்சனைகள் வராமல் தடுக்கச் செய்கிறது. உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்வதுடன், குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.
    தேவையான பொருட்கள்

    பலாக் கொட்டை - 10 (தோல் நீக்கி, மெலிதாக நறுக்கவும்),
    பால் (காய்ச்சி ஆற வைத்தது) - அரை கப்,
    எண்ணெய் - அரை டீஸ் பூன்,
    நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் - தலா 2 டீஸ்பூன்,
    உப்பு - சிறிதளவு.

    பலாக்கொட்டை

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் விட்டு பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    ஆறியவுடன் மிக்ஸியில் பலாக்கொட்டை, தேங்காய்த் துருவல், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுது, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    சூடான பலாக்கொட்டை இனிப்பு கஞ்சி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×