என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    ‘உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம்’ என்பதை இந்த தருணத்தில் முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே, அதற்கு முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்.
    இரண்டு குழந்தைகள் தேவை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால் இரண்டாவது முறையாக தாய்மையடையும்போது, எல்லா குடும்பங்களிலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகி விடுகிறது. ஆனால் இரண்டாவது குழந்தையின் வரவு, முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடாது. இரண்டாவது குழந்தையின் வரவால், புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்கள் நிச்சயம் ஏங்கிப்போவார்கள்.

    இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோபமாகவும் மாறிப்போக வாய்ப்புள்ளது. கத்துவது, அழுவது, சேட்டை செய்வது என அவர்கள் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். இது மற்றவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியாகும்.

    சில குழந்தைகள் உடல் வளர்ச்சியில் பின்தங்கிப்போகும் சூழ்நிலை உருவாகும். டம்ளரில் பால் குடித்துப் பழகிய அவர்கள், சிறு குழந்தையாக இருந்தால்தான் கவனிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்திற்கு மாறுவார்கள். இதுபோல பேச்சிலும், நடவடிக்கையிலும் சில பின்னடைவுகளை வேண்டுமென்றே முதல் குழந்தை உருவாக்கலாம்.

    இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு, பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் முதல் குழந்தை ‘எதையும் தாங்கும் பக்குவத்திற்கு வந்துவிட்டது’ என்று தவறாக கணிக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

    ‘உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம்’ என்பதை இந்த தருணத்தில் முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே, அதற்கு முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்.

    தாயின் வயிறு பெரிதாகிக் கொண்டே வருவதுகூட முதல் குழந்தைக்கு வித்தியாசமாகத் தெரியும். தாயின் மேடான வயிற்றைத் தொட்டுப் பார்க்கவும், வயிற்றில் தட்டவும் அதற்குத் தோன்றலாம். அப்போதே முதல் குழந்தைக்கு உண்மையை புரியவைத்து, பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்தி, தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அது இயல்பாகிவிடும்.

    பிறக்கப் போகும் பாப்பா உன்னுடன் விளையாட ஓடி வரும். நீ சொன்னதையெல்லாம் கேட்கும், நீதான் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும், என்றெல்லாம் கூறி முதல் குழந்தையிடம் ஆவலைத்தூண்ட வேண்டும்.

    இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே முதல் குழந்தையிடம் முன்பு போல் அக்கறை காட்ட முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதால், கர்ப்பகாலத்திலே முதல் குழந்தைக்கு ஏக்கம் ஏற்படாத அளவுக்கு பாசத்தை புரியவைக்கவேண்டும்.

    இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்று ஆலோசனை கேளுங்கள். பாப்பாவுக்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறும் கருத்து களுக்கு முன்னுரிமை தாருங்கள். அதையே தேர்வு செய்து இரண்டாவது குழந்தைக்கு கொடுங்கள். அது இரு குழந்தைகளையுமே மகிழ்ச்சிப்படுத்தும்.

    பாப்பாவை நானும் தூக்கிவைத்துக்கொள்கிறேன் என்று மூத்த குழந்தை கேட்டால், அவர்களின் மடியில் பாதுகாப்பாக உட்காரவைக்க அனுமதியுங்கள். உன்னால் வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி, புறக்கணிக்காதீர்கள். அந்தக் குழந்தையை கவனிக்க முதல் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.
    கொரோனா தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் சோயா பீன்ஸ் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சோயா பீன்ஸ் - 50 கிராம்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு ,
    கேரட் -  1,
    மிளகுதூள் - சிறிதளவு ,
    தக்காளி - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கு,
    சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,
    கிராம்பு -  2,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு ,
    பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு.

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர்விட்டு தக்காளி, கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிப் போடவும்.

    பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து மிதமான சூட்டில் 2 விசிலுக்கு வைக்கவும்.

    முதலிலே சோயா பீன்சை தண்ணீரில் ஊறவையுங்கள்.

    அதையும் குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள்.

    வெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்டவும்.

    பின்பு இது 300 மி.லி. அளவு வரும்வரை சூடாக்கி வற்றவைக்கவும்.

    பின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பருகவும்.

    காரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம்.

    குறிப்பு:- சூப்பை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதனால் பாத்திரத்தை மூடி வைத்து தயார் செய்யவேண்டும் அல்லது குக்கரை பயன் படுத்தவும்.

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    பொதுவாக நமக்கு நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. எந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சிறப்பான பயிற்சி பெற்று அதன்பிறகு தொழில் தொடங்கினால் சாதிக்கலாம்.
    சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை தற்போது பலருக்கு உள்ளது. ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை. நன்றாக யோசித்து எந்த தொழிலை தொடங்குவது என முதலில் திட்டமிட வேண்டும். தொடங்கிய பிறகு எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது. பிறகு இதற்கான மார்க்கெட் நிலவரம் என்ன?, இதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?, லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிட வேண்டும். பொதுவாக நமக்கு நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. எந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சிறப்பான பயிற்சி பெற்று அதன்பிறகு தொழில் தொடங்கினால் சாதிக்கலாம்.

    உதாரணமாக டி.வி., செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது நீக்கும் மையத்தை ஒருவர் ஆரம்பிக்க விரும்புகிறார் என்றால், முதலில் அவர் டி.வி. பழுது நீக்கும் பயிற்சி பெற வேண்டும். இதற்கான சிறந்த பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சிக்கு பிறகு சான்றிதழ் கிடைக்கும். இந்த சான்றிதழ் வங்கிக்கடன் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

    பயிற்சி முடிந்த பிறகு சொந்தமாக பழுதுநீக்கும் மையம் வைக்கும் போது அதற்குரிய சரியான இடத்தை தேர்ந்தெடுப்பது மிக மிக அவசியம். கடைகள் அதிகம் உள்ள, மக்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் ரோட்டில் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் நாம் இருக்கும் இடத்தை மக்களுக்கு தெரிவிக்க எளிமையான வழியை தேர்ந்தெடுக்கலாம். அதாவது துண்டு பிரசுரம் அச்சடித்து விளம்பரம் செய்து வாடிக்கையாளரை பிடிக்கலாம். அவ்வாறு பிடித்த வாடிக்கையாளர்களை தக்க வைக்க சிறந்த சேவை வழங்குவது மிகவும் முக்கியமாகும். மையம் தொடங்கிய உடனே வாடிக்கையாளர்கள் வந்து வருமானம் அதிகமாக இருக்கும் என கற்பனை செய்யக்கூடாது. அதற்காக மனம் தளரக்கூடாது. ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் எப்போதும் தளர விடக்கூடாது. முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்!
    வேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.
    பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் பொய் சொல்லக்கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தங்கள் குழந்தை பொய்யே பேசாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று ஒருநாள், அந்தக் குழந்தை அடுக்கடுக்காய் பொய் பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்கள். இது மிகவும் கவனிக்கத் தகுந்த விஷயம். குழந்தைகள் சொல்லும் பொய்யை பெற்றோர் நம்புவதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.

    முதலில் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக பொய் பேச ஆரம்பிப்பார்கள். அதன் பின்விளைவுகள் தெரியாமல், “என் பிள்ளை எவ்வளவு அழகாக பொய் பேசுகிறான் பாரு..” என்று சில பெற்றோர், குழந்தையை பாராட்டுவார்கள். அந்த பாராட்டு அவர்களை அடிக்கடி பொய் பேச வைக்கும்.

    தான் சொல்லும் பொய்யை பெற்றோர்கள் நம்புகிறார்கள் என்று குழந்தை தெரிந்துகொண்டால், தொடர்ந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். நாளடைவில் சகஜமாக அவர்கள் வாயில் இருந்து பொய் வெளிப்படும். பின்பு தனக்கு கஷ்டமான வேலையை தவிர்க்க பொய் சொல்ல பழகிக் கொள்வார்கள். சின்னச்சின்ன தண்டனைகளில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு, பொய் ஒரு கவசமாக பயன்பட்டுவிடும்.

    இதெல்லாம் தெரிந்ததும் பிள்ளையை, பெற்றோர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் தண்டனைகள் குழந்தைகளை திருத்துவதற்கு பதில், அவர்களிடம் வன்மத்தைதான் வளர்க்கும்.

    பெற்றோர்கள் வீட்டில் இருந்துகொண்டே தான் இல்லை என்று சொல் என்று சிறுவர்களை தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மூளையில் அந்தப் பொய் பதிவாகி விடுகிறது. வேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.

    குழந்தைகளின் ஒழுக்கக் குறைவு ஆரம்பமாவதே பொய்யில் இருந்துதான். பொய் ஒரு சாதாரண விஷயமல்ல. ஒரு பொய்யை, ஒரு சிறுவனால் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அதற்காக அவன் ஒரு கணக்கு போடுவான். எப்படி பொய் சொன்னால், யாரை ஏமாற்ற முடியும்? என்று ஆளுக்கு தக்கபடி பொய் சொல்லத் தொடங்குவான். அதில் வெற்றி பெற்றுவிட்டால், அந்த கணக்கு அவனுக்கு அத்துப்படியாகிவிடும். அதன் பின்பு சுவாரசியமாக அதை பற்றி சிந்தித்து, அந்த கோணத்திலே செயல்படத் தொடங்கிவிடுவான். அது அவனது எதிர்காலத்தையே சிதைத்துவிடும்.

    பொய் பேசக்கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லும்போதெல்லாம், உண்மையை ஏன் பேசவேண்டும்? என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும். உண்மையை சொல்லும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, நேர்மை போன்றவைகளை விளக்கவேண்டும். பொய் பேசும்போது மனதிலும், உடலிலும் ஏற்படும் மாற்றங்கள், குற்ற உணர்ச்சி போன்றவைகளை எல்லாம் எடுத்துச்சொல்லவேண்டும். ஒவ்வொரு பொய்யாலும் ஒருவரோ, ஒரு குழுவோ பாதிக்கப்படும். ஒவ்வொரு உண்மையாலும் மனதுக்கு திருப்திகிடைக்கும் என்பதை விளக்குங்கள்.
    நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.
    நமது உடலுக்குள்ளே இயற்கையாகவே ஒரு மருத்துவர் உருவாகி இருக்கிறார். அவர் எப்போதும், அதாவது 24 மணி நேரமும் நமது உடல் இயக்கத்தை கண்காணித்து கொண்டே இருக்கிறார். நாம் நமது உடலுக்கு செய்யும் நல்லது, பொல்லாததுகளை உற்று கவனிக்கிறார்.

    எங்கே கோளாறு ஏற்பட்டாலும் அடுத்த கணமே, அந்த இடத்துக்குத் தன் படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்த கோளாறை சரி செய்வதற்காக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார்.

    தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு, அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் செய்துகொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகள் எதையும் தடுக்காதீர்கள், குழப்பாதீர்கள். முடிந்தவரை உடலுக்குள் இருக்கும் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

    நம்முடைய உடலானது நோயில் இருந்து விடுபட்டு நலமடைவதற்குச் செய்யும் முயற்சிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய சமூகப் பழக்கவழக்கம், வேலை, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீத நம்பிக்கை போன்றவற்றால் உடலுக்கு ஒவ்வாத பல செயல்களைப் பல நேரம் நாம் செய்கிறோம். நாம் மனம் உவந்து செய்கிற காரியங்களை, உடலால் தடுக்க முடியாது. சில நேரம் தடுக்க முயற்சிக்கும்.

    புகைக்க பழக ஆரம்பிக்கும்போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் போன்றவை வரும். மது அருந்தப் பழகும்போது உமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உணவுப் பாதையில் எரிச்சல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல் என்று பல வழிகளில் நம்முடன் உடல் பேசிப் பார்க்கிறது, மன்றாடுகிறது. ஆனால், விடாமல் பழகி உடல் இயக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்பு மண்டலம், எல்லாவற்றையும் பல நேரம் பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், கெட்டுப்போன உணவு உடலுக்குள் விஷமாக மாறி உடல்நலத்துக்கு நிரந்தரமாகத் தீமை செய்துவிடக் கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவார்.

    அதிகமான நீர்ச்சத்தைச் சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தைக் குடல் உறிஞ்சி விடும் முன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. இப்படி உடலை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவதுதான் உடலுக்குள் இருக்கும் அந்த மருத்துவரின் பிரதான வேலை ஆகும்.
    சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் பற்றி புதிய ஆய்வுகள் பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன.
    பத்து வயதில், இருபது வயதுக்குரிய உடல் தோற்றம் கொண்ட சிறுமிகள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். பருவம் அடைதல் என்பது திடீரென்று அதிரடியாக நிகழும் மாற்றம் அல்ல. அதற்கான ஹார்மோன் மாற்றங்களும், உடல் வளர்ச்சிகளும் ஐந்து வருடங்களாக மெல்ல மெல்ல உருவாகி, பூப்படைதலாக அரங்கேறுகிறது. பெண்கள் வயதுக்கு வரும்போது மார்பக வளர்ச்சி, ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி, உடல் உயரம் அதிகரித்தல், பூசி மொழுகுவது போன்ற தசை வளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.

    சிறுமிகள் பொதுவாக 13 முதல் 15 வயதுக்குள் பூப்படைவார்கள். தற்போது 10 வயது முதலே பூப்படையத் தொடங்கிவிடுகிறார்கள். இப்படி சிறு வயதிலே வயதுக்கு வருவதை மருத்துவ உலகம், ‘பிரிகோசியஸ் பியூபெர்டி’ என்று அழைக்கிறது. சிறுவயதிலே பெண்கள் வயதுக்கு வந்துவிடுவது, அவர்களது உடல் அளவில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துவதோடு சமூக அளவிலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

    சிறு வயதிலேயே பெண்கள் வயதுக்கு வருவதற்கான காரணங்களை பற்றி உலக அளவில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. உணவுகள் மூலமாகவும், இதர வழிகளிலும் உடலுக்குள் செல்லும் ரசாயனங்களே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கொழுப்பு கலந்த உணவுகளை அதிகமாக உண்பது, பூச்சி மருந்துகள் கலந்த உணவுகள் உடலுக்குள் அதிக அளவில் செல்வது, ஹார்மோன் அடங்கிய உணவுகளை உண்பது, சில வகை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த கடல் பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை உண்பது போன்ற காரணங்களால் சிறுமி களின் உடலில் ஹார்மோன் சமச் சீரற்றநிலை ஏற்படுகிறது. அதனால் அவர்கள் சிறுவயதிலே வயதுக்கு வந்துவிடுகிறார்கள்’-என்கிறது, புதிய ஆய்வுகள்.

    கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது லெப்டின் என்ற ஹார்மோன் அதில் இருந்து உருவாகிறது. சிறுமி, பருவமடைய தயாராகிவிட்டதை மூளைக்கு உணர்த்துவது இந்த ஹார்மோன்தான். கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் உண்ணும்போது, அதிக அளவு லெப்டின் உருவாகி, மூளைக்கு சமிக்ஞை கொடுப்பதோடு அவர்கள் உடலையும் அளவுக்கு அதிகமாக பருக்க வைத்து விடுகிறது. அதனால் சிறுமிகள் சிறிய வயது, பெரிய உடல் என்ற சிக்கலை சந்திக்கிறார்கள். நாம் பசுக்களிடம் இருந்து அதிக பாலை பெறவும், பழங்களை செயற்கையாக பழுக்கவைக்கவும் மோசமான ரசாயனங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அவைகளை சிறுமிகள் அதிகம் சாப்பிடுகிறார்கள். அதுவும் சிறுவயதிலேயே வயதுக்கு வருவதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

    தற்போது பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் பிளாஸ்டிக்கில் தயாரான டிபன் பாக்ஸ்கள், பாட்டில்கள், பைகளை அதிகம் பயன் படுத்துகிறார்கள். அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்களும் அவர்களின் உடலில் சேர்கிறது.

    சிறு வயதிலே பருவ மடைவது பற்றிய இன்னொரு ஆராய்ச்சியில், அசைவ உணவைவிட, சைவ உணவு சிறந்தது என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சைவ உணவை சாப்பிடுபவர்களைவிட , அசைவ உணவை சாப்பிடுபவர்களே அதிக அளவில் சிறுவயதிலே வயதுக்கு வருகிறார்கள்.

    இதில் இருக்கும் சமூக சிக்கல் என்னவென்றால், சிறுவயதிலே வயதுக்கு வரும் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சிகளில், அவர்களிடம் பாலியல் தூண்டுதல் அதிகமாக இருப்பதாகவும், அது தொடர்பான பிரச்சினைகளில் அவர்கள் அதிக அளவில் சிக்கிக்கொள்வதாகவும் வெளிப்படுத்தியிருக் கிறார்கள். சிறு வயதிலே பருவ மடைவது பாரம்பரியத்தோடும் தொடர்புடையது. தாய் சிறுவயதிலே பருவமடைந்திருந்தால், மகளும் அதே நிலையை அடையலாம். சிறுவயது பருவம், பிற்காலத்தில் மூளையில் கட்டி போன்ற நோய்களை உருவாக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    பருவமடைவதோடு, பெரும்பாலான பெண்களின் உடல் வளர்ச்சி நின்றுபோகிறது என்று சொல்லலாம். பருவம் அடையும்போது அவள் 4 அடி உயரம் என்றால், பின்பு நான்கு அல்லது ஐந்து சென்டிமீட்டர் அளவுக்குதான் வளருவாள் என்கிறார்கள். பருவம் அடைவதோடு மூளையில் இருந்து வரும் கட்டளையால் எலும்புகள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணம். பொதுவாகவே இப்போது பெண்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு அவர்கள் சிறுவயதிலேயே பருவமடைந்துவிடுவதும் ஒரு காரணம்.

    சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் பற்றி புதிய ஆய்வுகள் பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன. அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 9 முதல் 11 வயதுக்குள் பருவம் அடைபவர் களுக்கு, 12 முதல் 15 வயதுக்குள் பருவம் அடைபவரைவிட நோய் தாக்கும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். பெண்கள் பருவமடைந்த முதல் ஐந்து வருடத்தில் இருந்து 15 வருடங்கள் வரை ஆரோக்கியமான கருமுட்டை உற்பத்தி இருக்கும். ஒரு பெண் 14 வயதில் பருவம் அடைகிறாள் என்றால், 19 முதல் 29 வயது வரை ஆரோக்கியமான கருமுட்டை உற்பத்தியாகும். அதற்குள் அவள் திருமணமாகி கர்ப்பம் தரிக்கவேண்டும். ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க ஆரோக்கியமான கருமுட்டை மிக அவசியம்.

    இப்போது பெண்கள் தாமதமாக திருமணம் செய்துகொண்டு, தாமதமாகத்தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். பத்து வயதிலே பருவ மடைந்துவிட்ட பெண், தாமதமாக திருமணம் செய்துகொள்கிறாள் என வைத்துக்கொள்வோம். அவள் கர்ப்பத்தை பற்றி முடிவெடுப்பதற்குள் அவளது கருமுட்டை ஆரோக்கியமற்றதாகிவிடக்கூடும். அதனால் அவள் குழந்தையின்மை என்ற நெருக்கடிக்கு ஆளாகவேண்டியதாகிவிடுகிறது.

    இதுபோன்ற பாதிப்புகளை தாய்மார்கள் உணர்ந்து, மகள்களை ஆரோக்கியமாக வளர்க்கவேண்டும். அவர்களது உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
    கிரெடிட் கார்டு உங்களுக்கு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்த அவசரம் காட்டக்கூடாது. முதலில் அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் போன்ற அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
    நமது நாட்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பிறகு நாட்டில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் நோட்டில்லா பணம் வர்த்தகம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் கவனம் தேவை. அதனை மட்டும் சரியாக பின்பற்றினால் கிரெடிட் கார்டு உங்களுக்கு அட்சய பாத்திரம் தான்...முதலில் கிரெடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது வசதிகள் மற்றும் சலுகைகள் தரும் கார்டுகள் எது? என்பதை அறிந்து கொண்டு அந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். கிரெடிட் கார்டு உங்களுக்கு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்த அவசரம் காட்டக்கூடாது. முதலில் அதற்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் போன்ற அனைத்தையும் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    அதில் சந்தேகம் இருந்தால் அதனை அதன் நிறுவனத்திடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு விசாரித்து அறிந்து கொள்ளாமல் பின்னர் ஏதாவது அதிக கட்டம் விதிக்கப்பட்டால் இப்படி ஒரு விதிமுறை இருப்பது எனக்கு தெரியாது என்று அவர்களிடம் கூற முடியாது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார்கள். அப்புறம் உங்களது பணம் வீணாகி விடும்.

    பில்களுக்கு உரிய தொகை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி விட வேண்டும். இல்லையென்றால் கூடுதல் வட்டி மட்டுமின்றி அபராதமும் விதிப்பார்கள். ஒரு வேளை ஒரே பில் மிக அதிகமாக இருந்தால் அதனை மொத்தமாக செலுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தினிடம் பேசி தவணை முறையில் கட்டுவதற்கு அனுமதி கேட்கலாம். அதற்கு ஒரு சிறிய அளவு வட்டி மட்டுமே விதிப்பார்கள்.

    கிரெடிட் கார்டுகளுக்கான மாத பில்லை பார்த்து விட்டு குப்பை தொட்டியில் போடும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். அந்த பில்களை தனியாக ஒரு கோப்பில் பாதுகாத்து வைத்திருங்கள். ஏனெனில் அப்போது தான் கணக்கு சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவற்றை அழித்து விடலாம். இது போன்ற பல்வேறு அம்சங்களை நீங்கள் நினைவில் கொண்டால் கிரெடிட் கார்டு உங்களுக்கு நன்மை தரும். சிலர் மலிவாக கிடைக்கிறதே என்பதற்காக 3, 4 கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பிரச்சினை தான். எனவே கிரெடிட் கார்டு விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
    பூசணிக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. இன்று பூசணிக்காய் வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பூசணிக்காய் துருவல் - பெரிய துண்டு
    இட்லி அரிசி -  1 கப்
    சாமை அரிசி - 1 கப்
    உளுத்தம்பருப்பு - 1/4 கப்
    சின்ன வெங்காயம் - 10
    காய்ந்த மிளகாய் - 7
    எண்ணெய்  - தேவையான அளவு
    உப்பு  -  தேவையான அளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, சாமை அரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பூசணிக்காயை நன்கு பூ போன்று துருவி வைத்துக்கொள்ளவும்.

    வாணலையில் எண்ணெயை விட்டு அதில் காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூசணிக்காய் துருவல், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியவுடன் அந்த கலவையை ஊறவைத்த அரிசி, உளுந்துடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவை 7 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    மாவு நன்கு புளித்த பின் தோசைகல்லில் ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான பூசணிக்காய் சாமை அரிசி தோசை ரெடி..

    இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    முட்டிக்காலிற்கு கொஞ்சம் கீழே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நீண்ட டிஷர்டானது ‘ஒன் ட்ரெஸ்’ என்று கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடையாக உள்ளது.
    பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட கச்சிதமான பேன்ட்டுகளுக்கு பிளெயின் நிறத்தில் வாசகங்கள் பொரிக்கப்பட்ட கச்சிதமான முழுக்கைச் சட்டைகளுடன் வரும் ஆடைகளை சிறு பெண் பிள்ளைகளிலிருந்து நடுத்தரப் பெண்கள் வரை விரும்பி அணியக்கூடிய வகையில் வடிவமைத்து விற்பனைக்கு வந்திருப்பது அருமையான மாடல் என்றே சொல்லலாம்.

    * இன்னும் சிலவற்றில் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பேன்ட்டுகளுக்கு அதே பூக்கள் பிரிண்ட்டானது கைகளில் மட்டும் இருப்பதுபோல் வடிவமைக்கப் பட்டிருக்கும் முழுக்கைக்சட்டைகள் சூப்பரோ சூப்பர் என்று சொல்லலாம். இது போன்ற ஆடைகள் பனியன் துணிகளில் மென்மையாக இருப்பதால் வீட்டில் அணிந்து கொள்ள வசதியாக இருக்கின்றது.

    * முட்டிக்காலிற்கு கொஞ்சம் கீழே இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நீண்ட டிஷர்டானது ‘ஒன் ட்ரெஸ்’ என்று கல்லூரி மாணவிகளால் பெரிதும் விரும்பி அணியக்கூடிய பிரபலமான ஆடையாக உள்ளது.

    * காட்டன் கேப்ரி மற்றும் ஷார்ட்ஸ்சுடன் அரைக்கை டிஷர்ட் அணிந்து கொள்வதும் வசதியாக அணிந்து கொள்ளக்கூடிய ஆடையாகவே இருக்கின்றது.

    * டிராக் பேன்ட்டுகளில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டு வருவது நடுத்தர வயதுப் பெண்களும் விரும்பி அணியக்கூடிய ஆடையாகவே உள்ளது. அதேபோல் ஆஃகானி பேன்ட்களிலும் பிளெயின் நிறம் மட்டுமல்லாது பிரிண்டட் டிசைன்கள் வருவதும் புது வரவாக உள்ளது.

    * பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட கனுக்காள் உயரமுடைய ஹாரம் பேன்ட்டுகளுக்கு நீண்ட குர்த்தி அல்லது ஷார்ட் குர்த்தி கைகளில்லாமல் அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    * காட்டன் மற்றும் ரேயான் துணிகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பளாஸோ பேண்டுகளுடன் காலர் வைத்த ஷார்ட் டாப்பை வீட்டிலிருக்கும் பொழுது டக்இன் செய்யாமலும் வெளியில் செல்லும் பொழுது டக்இன் செய்து கொண்டும் செல்லலாம். வீட்டில் அணிந்து கொள்ளக்கூடிய வசதியான ஆடைகளின் அணி வகுப்பில் இந்த ஆடையானது முதல் இடத்தைப் பிடிக்கும் என்றே சொல்லலாம்.

    * அதேபோல் ஜிப்ஸி எலாஸ்டிக் யோகா பேன்ட்டுகளும் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் ஒன்றாக உள்ளது. இவ்வகை பேன்ட்டுகள் மிகவும் தொள தொளப்பாக இருப்பதால் இவற்றை அணிந்து கொண்டே யோகா செய்வது மிகவும் வசதியாகவே உள்ளது என்றே சொல்லலாம். இவ்வகை பேன்ட்டுகளுடன் கச்சிதமான ஷார்ட் டிசர்ட்டுகளை அணிந்து கொள்வதைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

    * கார்கோ பேன்ட்டுகளுக்கு தொள தொளப்பான சட்டைகளை அணிந்து கொள்வதும் வசதியான உடையாகவே உள்ளது.

    * சஸ்பென்டர் ( இடுப்பிலிருந்து தோள்பட்டை வரை இனைக்கப்பட்டிருக்கும் பட்டைகள்) பேன்ட்டுகளுக்கு ரவுண்டு நெக் டிஷர்ட் அணிந்து கொள்வது பொருத்தமாகவும் , பேஷனாகவும் உள்ளது.

    * பிரிண்டட் பைஜாமாக்களுக்கு பிரிண்டட் டாப் அணிவதும், பிளெயின் டாப் அணிவதும் பிரபலமாகி வருகின்றது.

    * காட்டன் லாங் ஃப்ராக்குகளும் வீட்டில் அணிந்து கொள்ள வசதியான உடையாகவே கருதப்படுகின்றது.

    * பெக்டு பேன்ட்டுகளுக்கு முக்கால் கை வைத்த பனியன்களை அணிந்து கொள்ளலாம்.

    * பேகி பேன்ட்டுகளுக்கு பிளெயின் ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டுகளை அணியலாம்.

    * ஜம்ப்ஷூட்ஸ்களும் வீட்டில் அணிந்து கொள்ளக் கூடிய வசதியான உடையாகவே உள்ளது.

    * லாங் அண்டு வொய்ட் ஸ்கர்ட்டுகளுக்கு க்ராப் டாப்புகளை அணிந்து கொள்ளலாம்.

    * பெண்களுடன் ஆண்களும் ஓரே டிசைன் மற்றும் வண்ணங்களுடன் அணிந்து கொள்ள ஜோடியாக டிஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    * ஸ்ட்ராப்புகளுடன் கூடிய ஸ்லீவ்லெஸ் டாப்பிற்கு அதே டிசைனில் இருக்கும் ஷார்ட்ஸ்கள் குழந்தைகள் முதல் குமரிவரை விரும்பி அணியக்கூடிய ஆடையாக உள்ளது.

    * ஒரே டிசைனில் முழுக்கால் சட்டை மற்றும் அரைக்கால் சட்டை, காலர் வைத்த முழுக்கை சட்டை, ஸ்ட்ராப் இணைக்கப்பட்ட ஸ்லீவ்லெஸ் டாப் என செட்டாக வரும் ஆடைகளை நம் வசதிக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் எப்படி வேண்டுமானாலும் மேட்ச் செய்து அணிந்து கொள்ளலாம். இது போன்ற ஆடைகள் பார்பதற்கும் புதுமையாகவும் அதே நேரத்தில் அணிந்து கொள்ள வசதியாகவும் இருக்கின்றது.

    * கெளன்களிலும் எத்தனையோ விதமான மாடல்கள் வந்துவிட்டன. அவை பெண்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் விரும்பி அணியப்படும் ஆடைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.
    அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன.
    கொரோனாவால் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கும் குடும்பத்தினரால், சமூகத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களின் சமையல் பணிகளில் ஆண்களும் இணைந்திருக்கிறார்கள். அதனால் சமையலில் இப்போது புது ருசி கிடைத்திருக்கிறது என்று குடும்பமே மகிழ்ந்துகொண்டிருக்கிறது.

    பெண்களின் வேலை என்று கருதப்பட்ட, குழந்தை வளர்ப்பிலும் கூட இனி மாற்றம் ஏற்படப்போகிறது. ஆண்களும் இனி அந்த வேலையை செய்ய பொறுப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் குழந்தை வளர்ப்பதிலும் புதிய மாற்றங்கள் உருவாகும் என நம்பலாம்.

    பொதுவாக குழந்தைகள் அப்பாவைவிட, அம்மாவிடம்தான் அதிக நெருக்கம் காட்டும். அது உடலியல், விஞ்ஞானம், தாய்மை ரீதியான உண்மை. தாயின் அரவணைப்பில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பையும், சவுகரியத்தையும் உணரும். தாயின் பராமரிப்பில் இருக்கவே குழந்தைகள் பிரியப்படவும் செய்யும். ஆனால் காலத்தின் கட்டாயமாக அதை அப்பாக்களும் செய்ய வேண்டியதாகிவிட்டது.

    மேலை நாடுகளில், குழந்தைகள் பராமரிப்பில் அப்பாக்களும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அமெரிக்காவில் இதற்கென ஆண்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    இங்கு அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்தவுடன் அப்பாவிற்கும் சேர்த்து அலுவலகத்தில் விடுமுறை அளித்து விடுகிறார்கள். அதனால் மனைவியோடு சேர்ந்து கணவரும் குழந்தையோடு ஒட்டி உறவாடி பிணைப்பை உருவாக்குகிறார். நாளடைவில் அம்மாக்கள் பிரிந்து வேலைக்கு சென்றாலும், அப்பாவின் அருகாமை மூலம் குழந்தைகள் திருப்தியடைகின்றன.

    குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, வெளியே உள்ள சத்தங்களை அதனால் உணர்ந்துகொள்ள முடியும். அதில் முக்கியமாக தாய் மற்றும் தந்தையின் குரலைதான் குழந்தைகள் அடிக்கடி கேட்டு உணர்ந்து கொள்கின்றன. பிறந்ததும் அந்த குரலுக்கு சொந்தமானவர்களை அறிந்து, அவர்களோடு நெருங்கிவிடும் தன்மை குழந்தைக்கு உண்டு. அதனால் அப்பாக்களிடம் குழந்தைகள் எளிதாக ஈடுபாடுகாட்டத் தொடங்கிவிடும். அந்த ஈடுபாட்டை மேம்படுத்தினால் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளும்.

    குழந்தைகளின் தேவை என்ன என்பது, எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்ததுதான். அவைகளுக்கு பசிக்கும்போது உணவு தேவை. விளையாடுவதற்கான சூழல் தேவை. தூங்க நினைக்கும்போது அதற்கான வாய்ப்பு தேவை. அவைகளை எல்லாம்விட, ‘அப்பா நம்மை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை அவசியம். இவை அனைத்தும் கிடைத்துவிட்டால், குழந்தை அப்படியே அப்பாவோடு ஒட்டிக்கொள்ளும்.

    குழந்தை தனது எரிச்சலையோ, அசவுகரியத்தையோ அழுகை மூலம்தான் வெளிப்படுத்தும். அழுகை மட்டுமே அதன் தகவல் தொடர்பு. குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்க அகராதி ஒன்றும் இல்லை. அதோடு பழகுவதன் மூலம்தான் அதற்கான அர்த்தத்தை உணர முடியும். பசிக்கான அழுகை, தூக்கத்திற்கான அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, எறும்பு கடித்தலுக்கான அழுகை, பயத்தினாலான அழுகை என்று எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    ‘அம்மாக்களிடம் மட்டுமே பொறுமை உண்டு என்று நினைப்பது தவறு. அப்பாக்கள் தங்கள் பொறுப்பை உணரும்போது அதிக பொறுமைசாலிகளாக ஆகிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கவில்லை என்பதை அதன் முக மாற்றத்தால் அப்பாக்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அம்மாக்களாவது, உணவை திணிப்பார்கள். அப்பாக்கள் திணிக்காமல் ருசிக்க வைப்பார்கள்’ என்று அப்பாக்களுக்கு பயிற்சி தரும் அமெரிக்க நிறுவனங்கள் சொல்கின்றன.

    கொரோனா தடை நீட்டிப்பு முடிவதற்குள், குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று அப்பாக்களுக்கு தெரிந்து தான் ஆகவேண்டும். அதற்கும் இப்போதே தயாராகிவிடுங்கள்.
    ‘தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    ‘தாம்பத்ய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்ய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘இந்தியர்களின் தாம்பத்ய வாழ்க்கை எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சுவாரசியமான பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

    * தான் சொல்வதைக் கேட்டு மனைவி நடந்துகொள்ளவேண்டும் என்று 72 சதவீத ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். (முன்பு இந்த எண்ணம் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருந்தது கவனிக்கத்தகுந்தது)

    * பெரும்பாலான ஆண்கள், மனைவி தங்களை குழந்தை போன்று பராமரித்து பாசம் செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அதில் 60 சதவீத ஆண்கள் தங்கள் எதிர்பார்ப்பு ஈடேறுவதாகவும் சொல்கிறார்கள்.

    * உயர்ந்த கல்வியும், அதிக சம்பளத்துடன்கூடிய வேலையும் பெண்களுக்கு கிடைத்திருந்தாலும் அவர்களுக்கு உரிய முழு அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை என்பது 22 சதவீத ஆண்களின் கருத்தாக இருக்கிறது.

    * 8 சதவீத ஆண்கள், வேலைபார்க்கும் தங்கள் மனைவி நண்பர்களுடனான பார்ட்டிகளில் பங்குபெறுவதை ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.

    * மனைவியின் அலுவலக நண்பர்கள் வீடு தேடி வந்து உரையாடிவிட்டு செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்று 52 சதவீத ஆண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

    * மனைவி மீது அதிக பாசம் இருந்தாலும், மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் மனைவியை விட்டு விலகி இருப்பது பாசத்தை அதிகரிக்க உதவும் என்பது 70 சதவீத ஆண்களின் கருத்து. அதே நேரத்தில் அது சரியான முடிவுதான் என்று 48 சதவீத பெண்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது பெண்களில் பெரும்பாலானவர்கள் கணவர் தங்களைவிட்டு ஒருசில நாட்கள் கூட விலகியிருக்க கூடாது என்றே இப்போதும் விரும்புகிறார்கள்.

    * சினிமா கதாநாயகர்கள் போன்றவர்களோ, கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்களோ கணவராக வேண்டும் என்று முன்பு தாங்கள் எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், இப்போது அப்படிப்பட்ட கனவுகள் காண்பதில்லை என்றும், சராசரி மனிதர்களையே கணவராக எதிர்பார்ப்பதாகவும் 81 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

    * தாம்பத்ய செயல்பாடுகளில் தங்களுக்கு முழுதிருப்தி ஏற்படுவதாக 38 சதவீத பெண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தில் கணவர் தங்களது கருத்துக்களை கேட்பதில்லை என்பது 48 சதவீத பெண்களின் குறையாக இருக்கிறது.

    * ‘நாங்கள் தாம்பத்ய செயல்பாட்டு விஷயத்தில் புதுமைகளுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் கணவர்தான் அதில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை’ என்பது 22 சதவீத நடுத்தர வயது பெண்களின் கருத்தாக பதிவாகி இருக்கிறது.

    * கணவரிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன என்ற கேள்விக்கு, ‘சுகாதாரத்தை கடைப்பிடிக்காதது, எப்போதும் எரிச்சலடைவது, அலட்சியமாக இருப்பது, பொறுப்பாக நடந்துகொள்ளாதது, புகைப்பிடிப்பது, பொய் சொல்வது, மது அருந்துவது..’ என்று நீளமாக பெண்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

    இந்த கருத்துக்கணிப்பு பற்றி மனோதத்துவ நிபுணர் அளித்திருக்கும் விளக்கம் :

    “இந்த சர்வேயில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கணவன்மார்களிடம் பிடிக்காதவைகளை பற்றி பெண்கள் வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதை ஒரு பாசிட்டிவ்வான கருத்தாக ஆண்கள் ஏற்றுக்கொண்டு, தங்களிடம் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை இனிக்கும்.

    தாம்பத்ய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆணும், பெண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து கணவன்- மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். அதனால் எடுத்த எடுப்பிலே அவர்களுக்குள் ஐக்கியம் ஏற்பட்டுவிடாது. அதை புரிந்துகொண்டு படிப்படியாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இருவரும் முன்வரவேண்டும். அதற்கு அன்பும், நம்பிக்கையும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதும் மிக அவசியம்” என்கிறார்.
    யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
    யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.

    ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நோய். தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.

    அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது. புற்று நோய்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்க வழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு.

    இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

    உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன.

    புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?

    வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான் ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

    நுரையீரல் புற்று: புகை பிடித்தல், ஆஸ்பெட்டாஸ் சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

    வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைபிடித்தல், வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

    ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

    மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

    கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது)

    சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண். (இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே‘ என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்)

    இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?

    தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பரக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

    ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

    ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்தி விடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர் என்று பெயர்.

    இப்போது எளிதான ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து, நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று ரிஸ்க்தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

    புற்றுநோய்க்கு ஆபரேஷன், கீமோ தெரபி(மெடிக்கல் ட்ரீட்மென்ட்), ரேடியேஷன்(எக்ஸ்ரே ட்ரீட்மென்ட்) ஆகிய 3 சிகிச்சை முறைகள் உள்ளன.

    -டாக்டர் சரவணன்
    ×