search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பத்து வயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள்
    X
    பத்து வயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள்

    பத்து வயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள்

    சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் பற்றி புதிய ஆய்வுகள் பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன.
    பத்து வயதில், இருபது வயதுக்குரிய உடல் தோற்றம் கொண்ட சிறுமிகள் இப்போது அதிகரித்து வருகிறார்கள். பருவம் அடைதல் என்பது திடீரென்று அதிரடியாக நிகழும் மாற்றம் அல்ல. அதற்கான ஹார்மோன் மாற்றங்களும், உடல் வளர்ச்சிகளும் ஐந்து வருடங்களாக மெல்ல மெல்ல உருவாகி, பூப்படைதலாக அரங்கேறுகிறது. பெண்கள் வயதுக்கு வரும்போது மார்பக வளர்ச்சி, ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி, உடல் உயரம் அதிகரித்தல், பூசி மொழுகுவது போன்ற தசை வளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.

    சிறுமிகள் பொதுவாக 13 முதல் 15 வயதுக்குள் பூப்படைவார்கள். தற்போது 10 வயது முதலே பூப்படையத் தொடங்கிவிடுகிறார்கள். இப்படி சிறு வயதிலே வயதுக்கு வருவதை மருத்துவ உலகம், ‘பிரிகோசியஸ் பியூபெர்டி’ என்று அழைக்கிறது. சிறுவயதிலே பெண்கள் வயதுக்கு வந்துவிடுவது, அவர்களது உடல் அளவில் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துவதோடு சமூக அளவிலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

    சிறு வயதிலேயே பெண்கள் வயதுக்கு வருவதற்கான காரணங்களை பற்றி உலக அளவில் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. உணவுகள் மூலமாகவும், இதர வழிகளிலும் உடலுக்குள் செல்லும் ரசாயனங்களே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கொழுப்பு கலந்த உணவுகளை அதிகமாக உண்பது, பூச்சி மருந்துகள் கலந்த உணவுகள் உடலுக்குள் அதிக அளவில் செல்வது, ஹார்மோன் அடங்கிய உணவுகளை உண்பது, சில வகை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த கடல் பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை உண்பது போன்ற காரணங்களால் சிறுமி களின் உடலில் ஹார்மோன் சமச் சீரற்றநிலை ஏற்படுகிறது. அதனால் அவர்கள் சிறுவயதிலே வயதுக்கு வந்துவிடுகிறார்கள்’-என்கிறது, புதிய ஆய்வுகள்.

    கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது லெப்டின் என்ற ஹார்மோன் அதில் இருந்து உருவாகிறது. சிறுமி, பருவமடைய தயாராகிவிட்டதை மூளைக்கு உணர்த்துவது இந்த ஹார்மோன்தான். கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் உண்ணும்போது, அதிக அளவு லெப்டின் உருவாகி, மூளைக்கு சமிக்ஞை கொடுப்பதோடு அவர்கள் உடலையும் அளவுக்கு அதிகமாக பருக்க வைத்து விடுகிறது. அதனால் சிறுமிகள் சிறிய வயது, பெரிய உடல் என்ற சிக்கலை சந்திக்கிறார்கள். நாம் பசுக்களிடம் இருந்து அதிக பாலை பெறவும், பழங்களை செயற்கையாக பழுக்கவைக்கவும் மோசமான ரசாயனங்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். அவைகளை சிறுமிகள் அதிகம் சாப்பிடுகிறார்கள். அதுவும் சிறுவயதிலேயே வயதுக்கு வருவதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

    தற்போது பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் பிளாஸ்டிக்கில் தயாரான டிபன் பாக்ஸ்கள், பாட்டில்கள், பைகளை அதிகம் பயன் படுத்துகிறார்கள். அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்களும் அவர்களின் உடலில் சேர்கிறது.

    சிறு வயதிலே பருவ மடைவது பற்றிய இன்னொரு ஆராய்ச்சியில், அசைவ உணவைவிட, சைவ உணவு சிறந்தது என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சைவ உணவை சாப்பிடுபவர்களைவிட , அசைவ உணவை சாப்பிடுபவர்களே அதிக அளவில் சிறுவயதிலே வயதுக்கு வருகிறார்கள்.

    இதில் இருக்கும் சமூக சிக்கல் என்னவென்றால், சிறுவயதிலே வயதுக்கு வரும் பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சிகளில், அவர்களிடம் பாலியல் தூண்டுதல் அதிகமாக இருப்பதாகவும், அது தொடர்பான பிரச்சினைகளில் அவர்கள் அதிக அளவில் சிக்கிக்கொள்வதாகவும் வெளிப்படுத்தியிருக் கிறார்கள். சிறு வயதிலே பருவ மடைவது பாரம்பரியத்தோடும் தொடர்புடையது. தாய் சிறுவயதிலே பருவமடைந்திருந்தால், மகளும் அதே நிலையை அடையலாம். சிறுவயது பருவம், பிற்காலத்தில் மூளையில் கட்டி போன்ற நோய்களை உருவாக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    பருவமடைவதோடு, பெரும்பாலான பெண்களின் உடல் வளர்ச்சி நின்றுபோகிறது என்று சொல்லலாம். பருவம் அடையும்போது அவள் 4 அடி உயரம் என்றால், பின்பு நான்கு அல்லது ஐந்து சென்டிமீட்டர் அளவுக்குதான் வளருவாள் என்கிறார்கள். பருவம் அடைவதோடு மூளையில் இருந்து வரும் கட்டளையால் எலும்புகள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணம். பொதுவாகவே இப்போது பெண்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு அவர்கள் சிறுவயதிலேயே பருவமடைந்துவிடுவதும் ஒரு காரணம்.

    சிறுவயதிலே பருவம் அடையும் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் பற்றி புதிய ஆய்வுகள் பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன. அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 9 முதல் 11 வயதுக்குள் பருவம் அடைபவர் களுக்கு, 12 முதல் 15 வயதுக்குள் பருவம் அடைபவரைவிட நோய் தாக்கும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். பெண்கள் பருவமடைந்த முதல் ஐந்து வருடத்தில் இருந்து 15 வருடங்கள் வரை ஆரோக்கியமான கருமுட்டை உற்பத்தி இருக்கும். ஒரு பெண் 14 வயதில் பருவம் அடைகிறாள் என்றால், 19 முதல் 29 வயது வரை ஆரோக்கியமான கருமுட்டை உற்பத்தியாகும். அதற்குள் அவள் திருமணமாகி கர்ப்பம் தரிக்கவேண்டும். ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க ஆரோக்கியமான கருமுட்டை மிக அவசியம்.

    இப்போது பெண்கள் தாமதமாக திருமணம் செய்துகொண்டு, தாமதமாகத்தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். பத்து வயதிலே பருவ மடைந்துவிட்ட பெண், தாமதமாக திருமணம் செய்துகொள்கிறாள் என வைத்துக்கொள்வோம். அவள் கர்ப்பத்தை பற்றி முடிவெடுப்பதற்குள் அவளது கருமுட்டை ஆரோக்கியமற்றதாகிவிடக்கூடும். அதனால் அவள் குழந்தையின்மை என்ற நெருக்கடிக்கு ஆளாகவேண்டியதாகிவிடுகிறது.

    இதுபோன்ற பாதிப்புகளை தாய்மார்கள் உணர்ந்து, மகள்களை ஆரோக்கியமாக வளர்க்கவேண்டும். அவர்களது உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
    Next Story
    ×