என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.

    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : அங்கும் இங்குமாக அசையாத கடுமையான கட்டிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதோடு அக்குளிலும், கழுத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுதல். மார்பக காம்புகள் உள்அமுங்குதல். அவைகளில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுதல் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.

    சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். அப்போது நடக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் சுவாசத் தடையோடு உடல் நடுக்கமும் ஏற்படலாம். ஆஸ்துமா மூலமான சுவாசத் தடை ஏற்பட்டால் விடாத இருமலும், இழுப்பும் தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : சுவாசத் தடையோடு நெஞ்சுவலி, மூச்சிறைப்பு இருந்தால் கவனியுங்கள். கை, கால்கள் வீங்கி காணப்படுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல், துப்பும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

    தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு தலையை திடீரென்று திருப்பும்போது தலைசுற்றும்.

    கவனிக்க வேண்டியவை : தலைசுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் பேசும்போது நாக்கு உளறுதல், ஒவ்வொரு பொருளும் இரண்டாக காட்சியளித்தல், நடக்கும்போது பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை பக்கவாதம் தோன்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தலைசுற்றலோடு தலைவலியும் இருந்தால் அது ஒற்றைத்தலைவலி பாதிப்பாக இருக்கலாம்.

    பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும். 
    ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இந்தப் பட்டுச் சேலைகள் அதன் அடர்த்தியான வண்ண பார்டர்கள் மற்றும் தங்க நிற ஜரிகைகளால் ஆன பல்லுவால் மங்கையர் மனதில் நீங்காத இடத்தை பல காலமாக பிடித்து உள்ளது என்று சொல்லலாம்.
    ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இந்தப் பட்டுச் சேலைகள் அதன் அடர்த்தியான வண்ண பார்டர்கள் மற்றும் தங்க நிற ஜரிகைகளால் ஆன பல்லுவால் மங்கையர் மனதில் நீங்காத இடத்தை பல காலமாக பிடித்து உள்ளது என்று சொல்லலாம். எம்பிராய்டரி செய்யப்பட்டு சிக்கலான வடிவங்களை ஜரிகையில் பார்டர்கள் மற்றும் பல்லுவில் நெய்வதால் இந்தச் சேலைகள் மணமகள் அணியும் சேலையாகவும் உள்ளது. பாரம்பரிய அழகு மற்றும் நவீன வடிவமைப்புடன் இருக்கும் தர்மாவரம் பட்டுச்சேலைகள் பட்டு குடும்பத்திலும், பேஷன் உலகிலும் புகழ் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.

    தோற்றம் மற்றும் வரலாறு

    ஆந்திராவின் ராயல்சீமா பகுதியில் அமைந்துள்ள அனந்தபூர் மாவட்டத்தின் கிராமப்புறத்தில் அமைந்துள்ள தர்மாவரம் என்ற சிறிய கட்டமைக்கப்பட்ட நகரத்திலிருந்துதான் இந்தப் பட்டுச்சேலைகள் உருவாகின்றன. இந்தப் பட்டுச் சேலைகள் நூற்று இருபது ஆண்டுகள் பழமையானவை.

    மஞ்சள் மற்றும் மெரூன் வண்ணச் சேர்க்கையில் நெசவாளர்களால் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட சேலைகள் திருமணப் புடவையாகவே கருதப்பட்டது. இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்த ஷேட்டுகளுடன் வரும் இந்தப் பட்டுச்சேலைகள் ஒரு தனித்துவமான தோற்றத்தை வெளிப்படுத்தி மக்களின் பேராதரவைப் பெற்ற என்றே சொல்லலாம்.

    இன்றைய நிலை

    குறைந்த எண்ணிக்கையில் துவங்கப்பட்ட தர்மாவரம் நெசவு உற்பத்தியானது இன்று ஆயிரத்து ஐநூறு பட்டு உற்பத்தியாளர்களுடன் ஒரு லட்சம் கைநெசவையும் கொண்டுள்ளது. இந்தப் பட்டுச் சேலைகளின் தூய்மையான ரகம் மற்றும் வடிவமைப்பால் இன்று உலகளவில் லட்சக்கணக்கான மக்களிடையே புகழ் மற்றும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டுச் சேலைகளின் விலை வரம்பானது ரூபாய் இரண்டாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருப்பதும் இதன் புகழுக்கு மற்றொரு காரணியாகும்.

    புடவையில் இடம் பெறும் வடிவமைப்புகள், ஜரிகை மற்றும் எம்பிராய்டரி போன்றவை அதன் விலையைத் தீர்மானிக்கின்றன. தர்மாவரம் புடவையின் இரண்டு வண்ணங்கள் இணைந்து தரும் ஷேடுகள் தர்மாவரம் பட்டின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகின்றது.

    வகைகள்

    தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகை, பார்டர்கள் மற்றும் அவற்றில் பிரிண்ட் செய்யப்பட்ட கலைப் படைப்புகளுக்கு தர்மாவரம் புடவைகள் மிகவும் பிரபலமானவை. இவை தவிர கோயில்களிலும் பிற மத வழிபாட்டுத் தலங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள மதச் சின்னங்களை ஒத்த தங்க ப்ரோக்கேட் வடிவங்கள் மற்றும் உருவங்களும் இந்த பட்டுச் சேலைகளில் பொரிக்கப்படுகின்றன.

    யானை வடிவமைப்புகள், மயில்கள் அல்லது அழகிய கோயில் எல்லைகளாக இருந்தாலும், இந்த கருக்கள் மற்றும் வடிவமைப்புகள் இந்த புடவைகள் மூலம் மதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. இதனால் இவை உலகளவில் மட்டுமல்லாமல், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்படுகின்றன.

    இன்றைய தர்மாவரம் புடவைகள் அலங்காரக்கற்கள், சம்கிகள், சீக்வின்ஸ்கள் மற்றும் குந்தன்கள் ஆகியவற்றால் புதுமையாக அலங்கரிக்கப் படுகின்றன. அவை ஒரே நிறத்திலோ அல்லது பல வண்ணங்களைக் கொண்டோ புடவையின் வண்ணத்திற்கு ஏற்றாற்போல் வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த கலைப்படைப்பானது தர்மாவரம் பட்டுப் புடவைகளில் மட்டுமல்லாமல் தர்மாவரப் பட்டில் தயாரிக்கப்படும் சல்வார் கமீஸ், குர்திஸ், ஸ்கார்ஃப்ஸ் மற்றும் ஸ்டோல்களிலும் இருப்பதைக் காண முடியும்.

    பொருந்தக்கூடிய தன்மை

    தர்மாவரத்தில் தயாராகும் பட்டுப்புடவைகள் முக்கியமாக தென்னிந்திய மணப்பெண்களுக்கான ‘திருமணப் புடவை’ என்ற அடையாளத்துடனும் குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பட்டுப்புடவைகளின் கம்பீரமான தோற்றமும், பாரம்பரிய வடிவமைப்பும் மத விழாக்கள், திருமணங்கள், குடும்ப விழாக்கள், பூஜைகள் என அனைத்திற்கும் அணிந்து கொள்ளும் விதமாக உள்ளது.

    இந்தப் பட்டுச் சேலைகள் இந்திய அளவில் மட்டுமல்லாமல், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் என சர்வதேச அளவிலும் கால் பதித்துள்ளன. பல வெளிநாடுகள் தர்மாவரம் பட்டு வெளிப்படுத்தும் ராயல்டி மற்றும் நேர்த்தியைப் பாராட்டுகின்றன. அத்துடன் இந்த பட்டுப்புடவைகளின் பாரம்பரிய அம்சத்தையும் அங்கீகரித்து வருகின்றன.

    இந்தப் பட்டுப்புடவைகள் தங்கம் மற்றும் வைர நகைகளுடன் அணிய ஏற்றவை என்று சொல்லலாம்.

    தர்மாவரம் பட்டுத்துணியானது கனமாகவும், அதே நேரத்தில் மென்மையாகவும் இருப்பதால் இவற்றை உலர் சலவை செய்து இஸ்திரி போடுவதே உகந்ததாகக் கூறப்படுகின்றது.

    இந்தச் சேலைகளின் பிரத்யேக வண்ணச் சேர்க்கைகள் மற்றும் பல்வேறு வகையான இன வடிவமைப்புகளால் ராஜ்வாடி புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இயந்திரம் மற்றும் கைநெசவின் மூலம் தயாரிக்கப்படும் இந்தப் பட்டுப் புடவைகளில் அடிப்படையாக இருபத்தி ஆறு டிசைன்கள் உள்ளன.

    ஒரு புடவையை கைநெசவின் மூலம் உருவாக்க இரண்டு நெசவாளர்கள் தொடர்ச்சியாக நான்கிலிருந்து எட்டு நாட்கள் வரை தங்கள் உழைப்பைத் தர வேண்டியுள்ளது. பிரம்ம கமலம் மற்றும் நட்சத்திர டிசைன்கள் இந்தச் சேலைகளில் மிகவும் பிரபலம் என்றே சொல்லலாம்.

    எழிலான தோற்றம் தரும் தர்மாவரம் பட்டுச்சேலைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய புகழைப் பரப்பியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
    முருங்கை இலையில் இருந்து தேநீரும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    முருங்கைக்கீரை பொடி - ஒரு தேக்கரண்டி 
    கிரீன் தேநீர் பொடி - ஒரு தேக்கரண்டி 
    புதினா இலைகள் - 4, 
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி , 
    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி 

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முருங்கைக்கீரை பொடி, கிரீன் தேநீர் பொடி, புதினா இலைகள் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்த பின் அதனை இறக்கி எலுமிச்சை சாறு, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தம்ளரில் ஊற்றி குடிக்கலாம்

    காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது மோரிங்கோ தேநீர் பருகலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இப்போது நிறைய பேர் ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான மதுதான் அதற்கு முக்கிய காரணம். அதன் மூலம் உடல் முழுவதும் தளர்ந்துவிடும்.
    ஈரல், மனித உடலில் இன்றியமையாத உறுப்பு. ஜீரணம் உள்பட உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிர்வகிக்கக்கூடிய மிகப்பெரிய செயலை ஈரல் செய்கிறது.

    சிறு குடலுக்கு போய் சேரும் உணவு மூலமான கொழுப்பில் இருந்து, தேவையானவற்றை பிரித்தெடுக்க, பித்த ரசம் தேவை. அது ஈரலில் இருந்துதான் கிடைக்கிறது. கொழுப்பு, புரோட்டின், சர்க்கரை போன்றவைகளை ரத்தத்தில் போதுமான அளவு கட்டுப்படுத்தி சீராக்குவதும் ஈரலின் பணிதான். ரத்தத்தில் கலக்கும் தொற்றுகளையும், வைரஸ்களையும் வெளியேற்றவும் ஈரலின் பணி அவசியம். அதனால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் சிறப்பாக நடைபெற வேண்டுமானால், ஈரல் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அதிக அளவில் மது அருந்தினால், ஈரல் கெட்டுப்போகும். அதன் மூலம் உடல் முழுவதும் தளர்ந்துவிடும்.

    இப்போது நிறையபேர் ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அளவுக்கு அதிகமான மதுதான் அதற்கு முக்கிய காரணம்.

    மதுவில் எது சரியான அளவு? அளவுக்கு அதிகம் என்று சொல்லப்படுவது என்ன? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவது கடினம். ‘அளவுக்கு அதிகம்’ என்ற கணக்கு ஆளுக்கு ஆள் மாறுபடும். பலருக்கு தினமும் 4 ‘பெக்’ என்பது அதிக அளவு. ஆனால் சிலருக்கு ஒரு ‘பெக்’ என்பதே அதிக அளவாகிவிடுகிறது.

    தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களாலும் ஈரல் வீங்கியிருப்பதை முதலிலே அறிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் தொடக்கத்தில் லேசாக ஏற்படும் பாதிப்புகளை வெளிப்படுத்திக்கொள்ளாமல் சீரமைத்துக்கொள்ளும் தன்மை ஈரலுக்கு உண்டு. தன்னைத்தானே சுயமாக அது சீரமைத்துக்கொண்டே இருப்பதால், 70 சதவீதம் அளவுக்கு பாதிப்பு ஏற்படும்போது அது தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவித்து நோய் அறிகுறியாக வெளிப்படுத்தும். ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி எனப்படும் மஞ்சள் காமாலை ஏற்பட்டாலும் ஈரல் வீங்கும்.

    ஈரலில் உருவாகும் பித்த ரசம், பித்தப் பை வழியாக வெளியேறும். பித்தப்பையில் கல் உருவாகிவிட்டால், பித்த ரசம் வெளியேற முடியாத நிலை தோன்றும். அதனால் அது ஈரலிலே தங்கிவிடும். தங்குவது தொடரும்போது ஈரல் வீங்கும் சூழல் உருவாகும். சில வகை மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டாலும் ஈரல் பாதிப்படையும்.

    ‘லிவர் பங்ஷன் டெஸ்ட்’ மூலம் ஈரலின் பாதிப்பையும், எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதையும் கண்டறிய முடியும். எதனால் பாதித்தது என்பதை கண்டறிய ஈரலை ‘பயோப்சி’ செய்ய வேண்டும். ஈரலில் ஊசியால் குத்தி திசுக்களை எடுத்து ‘பயோப்சி’ செய்வார்கள்.

    மதுவால் ஈரல் வீக்கம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மது அருந்துவதை நிறுத்திவிடவேண்டும். மஞ்சள் காமாலையால் ஏற்பட்டிருந்தாலும் மது அருந்தக்கூடாது. ஈரல் வீக்கநோய்க்கு மருத்துவ சிகிச்சைகள் பெறவேண்டும். சிகிச்சையால் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது, ஈரல் மாற்று சிகிச்சை தேவைப்படும். ஆனால் அது எளிதான காரியமில்லை.

    ஈரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பழம், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். புரோட்டின் நிறைந்த பால், முட்டை, பயறு வகைகள் நல்லது.

    ஈரல் வீக்கத்தின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

    - வாந்தி, குமுட்டல், பசியின்மை.

    - திடீரென்று எடை அதிகரித்தல் அல்லது அதிகமாக எடை குறைதல்.

    - கண் மற்றும் சருமத்தில் மஞ்சள் நிறம் படர்தல்.

    - சிறுநீர் மஞ்சள் நிறமாக தோன்றுதல்.

    - ரத்தம் கலந்த கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்.

    - திடீரென்று உடலில் சொறி ஏற்படுதல்.

    - காலிலோ, பாதங்களிலோ வீக்கம் ஏற்படுதல்.

    - தூக்கத்தில் தடை தோன்றுதல்.

    - ஆண்களுக்கு தாம்பத்ய ஈர்ப்பு இல்லாமல் இருப்பது.

    - பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு தோன்றுதல்.

    - அடிவயிற்றில் வீக்கம் ஏற்படுதல்

    - ரத்தவாந்தி எடுத்தல்.

    இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்!
    டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
    கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தலால் கல்வி முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள். வீடியோக்கள் வழியாக வகுப்பில் பாடம் நடத்தும் சூழலையும் மாணவர்களிடத்தில் ஏற்படுத்துவதற்கு மெனக்கெடுகிறார்கள்.

    ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை வீடியோவாக பதிவு செய்வதற்கு உபயோகப்படுத்தும் செல்போன் அல்லது கேமராவை நிறுவி வைப்பதற்கு முக்கோண வடிவ ஸ்டாண்டு தேவைப்படும். இது பெரும்பாலும் தொழில் ரீதியான வீடியோ பயன்பாட்டுக்குத்தான் அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அது இல்லாத சூழலில் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையை வீடியோவாக பதிவு செய்யும் செல்போனை நிறுவி வைப்பதற்கு, பலவிதமான மாற்று வழிமுறைகளை கையாள்கிறார்கள். அவை பலருடைய கவனங்களை ஈர்த்திருப்பதோடு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு பலருடைய பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

    அத்தகைய புதுமையான வழிமுறையில் ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களில் ஒருவர், மவுமிதா. புனேவை சேர்ந்த இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்போனை நிறுவி வைப்பதற்கு துணிகளை உலர வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘ஹேங்கரை’ ஸ்டாண்டாக மாற்றி இருக்கிறார். அதன் நடுப்பகுதியில் துணியை கொண்டு செல்போனை கட்டிவைத்திருக்கிறார். ஹேங்கரின் இருமுனைகளிலும் நாடா போல் துணியை கட்டி தொட்டில்போல் தொங்கவிட்டிருக்கிறார். ஹேங் கரின் கீழ் பகுதியில் நாற்காலி ஒன்றை வைத்து அதிலும் நாடா துணியை இழுத்துப்பிடித்து செல்போன் கீழே விழாத அளவுக்கு இறுக்கமாக கட்டிவைத்திருக்கிறார்.

    மவுமிதா நடத்தும் பாடத்தை செல்போன் அந்தரத்தில் தொங்கியபடி வீடியோவாக பதிவு செய்கிறது. அந்த வீடியோ வழியாக வீட்டில் இருந்தபடி மாணவர்கள் மவுமிதா நடத்தும் பாடத்தை ஆன்லைனில் கற்கிறார்கள். “என்னிடம் இதற்கான நவீன முக்காலி இல்லாததால் எனது வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கு இந்த யுக்தியை கையாண்டிருக்கிறேன். எனது ஒரே நோக்கம் மாணவர்களுக்கு வகுப்பறை சூழலை உருவாக்கிக்கொடுக்கவேண்டும் என்பதுதான். பள்ளிக்கூடத்தில் எப்படி பாடம் நடத்துவேனோ அதுபோலத்தான் இப்போதும் ஆன்லைன் வழியாக பாடங்களை கற்கிறார்கள். இந்த வழிமுறை மாணவர்களுக்கு பலனளிப்பதாக அமைந்திருக்கிறது” என்கிறார்.

    மவுமிதா தனது வீட்டில் செல்போனை ஹேங்கரில் கட்டி தொங்கவிட்டு பாடம் எடுத்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது முயற்சியை பலரும் பாராட்டியதோடு அதுபோல் மாற்றுவழி முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் மவுமிதாவுக்கு உதவி செய்வதற்கும் முன்வந்திருக்கிறார்கள்.

    “உங்களுக்கு இதற்காக தேவைப்படும் நவீன முக்காலி வழங்குவதற்கு விரும்புகிறேன். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். உங்களுடைய சக ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கும் அனுப்பிவைக்கிறேன். உங்கள் பணியை மேலும் சிறப்பாக தொடருங்கள்” என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    குஜராத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி மற்றொரு நாற்காலியில் நோட்டை வைத்து எழுதுகிறார். அந்த நாற்காலியின் கைப்பிடிப்பகுதிகள் மீது நீளமான ஒரு பொருளை சொருகிவைத்து அதன் மீது செல்போனை வைத்திருக்கிறார். அந்த செல்போன் அந்த ஆசிரியர் எழுதுவதை வீடியோவாக பதிவு செய்கிறது. அது ஆன்லைன் வழியாக மாணவர்களை சென்றடைகிறது. மற்றொரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் நீளமான குச்சியில் செல்போனை கட்டிவைத்து ஆன்லைன் வகுப்பு நடத்துகிறார். சில ஆசிரியர்கள் செல்பி எடுப்பதற்கு பயன்படுத்தும் ஸ்டிக்கை ஸ்டாண்டாக மாற்றி இருக்கிறார்கள். 
    பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.
    40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் மூல நோய் முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்க தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசன வாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்த சோகை என பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

    சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்கு செலுத்துவதுடன், ரத்தம் தேவையில்லாமல் சிரை குழாய்களில் தேங்கி நிற்பதையும் தவிர்க்கிறது. ஆனால் நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயில் இருந்து குடலுக்கு செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை. இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள 2 சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போல திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.

    மலச்சிக்கல் மூல நோய்க்கு முக்கிய காரணம். வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூல நோயை ஏற்படுத்தும். கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர, வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கி தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

    சிலருக்கு பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், மாமிச உணவு வகைகள், விரைவு உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும் ரத்தக் குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

    நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதை கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.

    40 வயதை கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.
    தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீடு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி பிரபல செக்ஸாலஜிஸ்டு கூறும் கருத்துக்கள்:
    திருமண வாழ்க்கை முறையில், இந்திய கலாசாரத்திற்கும்- மேலைநாட்டு கலாசாரத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. மேலைநாடுகளில் தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு இன்னொருவரோடு முரண்பாடான உறவு உருவாகிவிட்டால், பின்பு அந்த தம்பதிகள் ஒன்றாக வாழ்வதில்லை. மூன்றாம் நபரால் அவர்கள் தங்கள் உறவை முறித்து, விவாகரத்து பெற்றுவிடுவார்கள். அந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இருந்தாலும்கூட விவாகரத்து செய்துவிடுவதுதான் பெரும்பாலானவர்களின் முடிவாக இருக்கிறது. சட்டரீதியாகவும், மனிதாபிமானத்துடனும் அவர்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவார்கள்.

    ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் மூன்றாம் நபரின் வருகை இருந்தாலும், அந்த தம்பதிகள் விவாகரத்து செய்துவிடாமல் எப்படியாவது பொருந்தி வாழவேண்டும் என்றுதான் சமூகம் எதிர்பார்க்கிறது. அதனால் பல குடும்பங்களில் பூகம்பமே ஏற்படுகிறது. கொடூரங்களும் நடந்துவிடுகிறது. சில குடும்பங்களில் உள்ளே நடப்பதை எல்லாம் மறைத்துவிடுகிறார்கள். வெளி உலகிற்கு மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

    தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீடு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி பிரபல செக்ஸாலஜிஸ்டு கூறும் கருத்துக்கள்:

    “நிறைய பேர் வீட்டை விட்டு வெளியே சென்று வேலைபார்ப்பதும், செல்போன் இன்டர்நெட் வழியாக மற்றவர்களுடன் நட்பை உருவாக்கிக்கொள்வது எளிதாகிவிட்டதும், திருமண பந்தத்திற்கு வெளியே உறவுகள் தோன்ற காரணமாகிவிட்டன. திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்கள் நுழைவது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. திருமணம் என்பது எப்போது நடைமுறைக்கு வந்ததோ அப்போதிருந்தே திருமணத்திற்கு வெளியேயான உறவுகளும் தோன்றிவிட்டன. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகம், ‘இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அங்கம்’ என்ற மனநிலையில்தான் இருந்தது. பண்ணையார்களாக வலம் வந்தவர்கள், ஊருக்கு வெளியே இன்னொரு குடும்பம் உருவாக்குவதும், அவர்களுக்கு தேவையான வீடு- வசதி-வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பதும் அப்போதெல்லாம் சில இடங்களில் நடைமுறையில் இருந்தது.

    தனது வாழ்க்கைத்துணைக்கு தெரியாமல் மற்றவர்களிடம் உறவை உருவாக்கிக்கொள்ள யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்களில் சிலர் திருமணத்திற்கு வெளியே இன் னொரு உறவை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்து விலகிவிடுகிறவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

    மணவாழ்க்கையில் இணைந் தவர்கள் அந்த வாழ்க்கை பிடிக்காமல் போனால் அதில் இருந்து விலகிவிடுவது நமது கலாசாரப்படி எளிதல்ல. அதனால் தாம்பத்ய வாழ்க்கை வெறுமையும், சூன்யமும் ஆகிவிட்ட நிலையிலும் விவாகரத்து பெற விரும்பாமல் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். விவாகரத்துக்களில் இருக்கும் சிக்கல்களே வெளியே தெரியாமல் இன்னொரு உறவை உருவாக்கவும் சில நேரங்களில் காரணமாகிவிடுகிறது.

    ஒரு குடும்பத்தலைவி ‘ஒரே ஒரு மிஸ்டுகாலில் மயங்கிவிட்டாள்’ என்பது போன்ற பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நபரின் பேச்சில் அவள் விழுந்துவிட்டாள் என்று சொல்வது, உண்மையல்ல. தனது கணவரிடம் இருந்து அவள் அகன்று நின்றதுதான் அதற்கான உண்மையான காரணம். அதுவே அவளை அந்த மிஸ்டுகால் நபரிடம் விழவைத்திருக்கும். சொந்த வாழ்க்கையில் யாரெல்லாம் திருப்தியில்லாமல் இருக்கிறார்களோ அவர்களில் சிலரே மூன்றாம் நபர் உறவுகளில் மூழ்கிப்போகிறார்கள்.

    வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கும் பெண்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு வலைவீசுவதையே தங்கள் வாழ்க்கை கடமையாகக்கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஏமாறும் பெண்கள் அதிகம். ‘கணவரை விட பலவிதங்களில் நல்லவர்.. அன்பானவர்.. திறமையானவர்..’ என்று இந்த மூன்றாம் நபர்களை நம்பும் பெண்கள் ஏமாற்றத்தின் எல்லை வரை சென்றுவிடுகிறார்கள்.

    தம்பதிகள் தங்கள் துணைக்கு தெரியாமல் இன்னொரு நபருடன் உறவை வளர்த்துக்கொள்ளும்போது குற்றஉணர்ச்சியால் மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளாகுவார்கள். அவர்களது எதிர்காலம், வளர்ச்சியை அந்த உறவு கடுமையாக பாதிக்கும். அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். அதனால் பெண்கள் தங்கள் இணையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும். இருவருக்கும் இடையேயான உறவை மேம்படுத்திக்கொள்ள சரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தாம்பத்ய வாழ்க்கையை சீர்படுத்தி சிறப்பாக்கிக்கொள்ளலாம். அதே நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் தங்கள் குடும்ப விஷயத்திற்குள் மூன்றாம் நபர்கள் யாரையும் எக்காரணத்தைக்கொண்டும் பெண்கள் அனுமதித்துவிடக்கூடாது. அனுமதித்தால் அது ஆபத்தாகிவிடும்” என்கிறார்.

    கவனிக்க வேண்டிய விஷயம்தான் இது..!
    தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.
    தாய்ப்பால் கிடைக்காமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.

    சைப்ரஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்பாலை இணையதளம் வழியாக ஆண்களுக்கு வழங்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். பாடி பில்டிங்க் பயிற்சி பெறுபவர்கள் உடல் கட்டுறுதிக்காக இதனை வாங்கி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்படி தாய்ப்பாலை விற்பவர் பெயர் ரபேலா லாம்ப்ரூ. 26 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஹைலே என்ற மகளும், அஞ்சலோ என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களில் இளைய மகனான அஞ்சலோ பிறந்தபோது அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார், ரபேலா.

    மகனுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்து ஏழு மாதங்களை கடந்த பிறகும் தினமும் இரண்டு லிட்டர் தாய்ப்பால் சுரந்து கொண்டிருந்திருக்கிறது. அதனை சேமித்து வைத்து, தாய்ப்பால் சுரக்காமல் சிரமப்படும் பெண்களின் குழந்தைகளுக்கு தானமாக வழங்கி வந்திருக்கிறார்.

    “எனக்கு தாய்ப்பால் சுரந்து கொண்டே இருந்தது. அதனை வீணாக்க விரும்பவில்லை. அதை சேமிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. பின்னர் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் இரண்டு தாய்மார்களிடம் பேசினேன். தங்களின் குழந்தைகளுக்கு எனது தாய்ப்பாலை கொடுப்பதற்கு சம்மதித்தார்கள். அந்த குழந்தைகளுக்கு உதவ முடிந்ததை நினைத்தபோது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. அதனால் இந்த சேவையை தொடர்வதற்கு விரும்பினேன்” என்கிறார்.

    ஆரம்பத்தில் சைப்ரஸ் நாட்டில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை சேமித்து பாதுகாத்து அனுப்பி வந்திருக்கிறார். பிறகு இங்கிலாந்து நாட்டை ரபேலாவின் தாய்ப்பால் சென்றடைந்திருக்கிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரபேலாவை ஏராளமானோர் நாடி இருக்கிறார்கள். ஆண்களும் அதிக அளவில் ரபேலாவிடம் தாய்ப்பால் கேட்டு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் கட்டுக்கோப்பான உடல் கட்டமைப்பின் மீது ஆர்வமுள்ள ஆண்கள் தங்கள் உடல் தசையை பலப்படுத்துவதற்கு தாய்ப்பால் பருகும் விஷயம் ரபேலாவுக்கு தெரியவந்திருக்கிறது.

    “ஆண்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து தாய்ப்பால் பற்றி விசாரித்தார்கள். என்னிடம் தாய்ப்பாலை வாங்கி என்ன செய்கிறார்கள் என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. உடல் தசைகளை வலுப்படுத்துவதற்காக அதை உட்கொள்வதாக கூறினார்கள்” என்பவர், இரண்டு ஆண்டுகளில் இணையதளம், சமூகவலைத்தளங்கள் வழியாக தாய்ப்பாலை விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார். அதே நேரத்தில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் பச்சிளம் குழந்தைகளுக்கும் தொடர்ந்து தாய்ப்பாலை தானமாகவும் வழங்குகிறார்.
    தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.
    தேவையான பொருட்கள்

    பால் - 1 லிட்டர்
    நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
    பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    நன்கு கனிந்த வாழைப்பழம் - 2

    செய்முறை

    வாழைப்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்றாக கொதிக்க வைத்து பால் அரை லிட்டராக சுண்டியதும் இதில் நாட்டு சர்க்கரை அல்லது தேனை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பழத்தை கலந்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும். 

    சத்தான வாழைப்பழ பால் தயார். 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவதற்கு மிகவும் சோம்பலாக இருக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

    * உங்கள் தலைமுடியை அடிக்கடி தொடாதீர்கள். ஏனென்றால் உங்கள் விரல்களிலிருந்து அழுக்கை உங்கள் உச்சந்தலைக்கு கொண்டு செல்வது இதுதான்.

    * உங்கள் தலைமுடியை சரியான இடைவெளியில் கழுவுங்கள். ஆனால் உடலானது உலர்ந்த உச்சந்தலையை ஈடுசெய்ய முயற்சிக்கும் போது, அதிகப்படியாக தலைமுடியை அலசினால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறுபுறம், குறைவான முறை தலைமுடியை அலசுவதால் எண்ணெய்கள் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

    * உங்கள் தலையணைகள் மற்றும் சீப்புகளை சுத்தமாக வைத்திருங்கள் மற்றும் இறுக்கமாக முடியைக் கட்டுவதைத் தவிர்க்கவும். கெமோமில் க்ளென்சரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் தலைமுடியை உள்ளே இருந்து வலிமையாக்கும்.

    * அதிகமான முடி பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும், உங்கள் தலைமுடிக்கு வழக்கமான ஷாம்பூவுடன் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைக்கவில்லை என்றால், உங்கள் தோல் மருத்துவரை அணுகவும். இல்லையெனில், அதிகப்படியான எண்ணெய் பசையுடனான முடி காரணமாக உங்களுக்கு உச்சந்தலையில் தடிப்புத் தோல் அழற்சி மற்றும் செபொர்ஹெக் டெர்மடிடிஸ் இருக்கலாம், அதன் பிறகு உங்களுக்கு சிகிச்சை தேவைப்படலாம்.

    * ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறுடன், கற்றாழை ஜெல்லைக் கலந்து ஒரு கண்டிஷனரைத் தயாரிக்கவும். இந்தக் கலவையை கண்டிஷனராகப் பயன்படுத்துங்கள். இந்தக் கலவை கூந்தலில் இருந்து எண்ணெயைக் குறைக்க உதவும்.

    குறிப்பாக எண்ணெய் பசை முடிக்கு ஏற்ற ஷாம்பூக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஷாம்பூவின் சாதாரண ஜீபி நிலை 4.5, 6.7 ஆகும். அத்தகைய சூழ்நிலையில், எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்களுக்கு, அதிக பி.எச் கொண்ட ஷாம்பு தேவை. கண்டிஷனர்கள் கூந்தலில் பூசப்படுகின்றன, எனவே எண்ணெய் நிறைந்த முடிக்கு கண்டிஷனர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான தகவல்களை பகிர்ந்து, வீடியோ உருவாக்கியும் பிரபலமாகி, இன்று யூ-டியூப் குழந்தை பிரபலமாக ஜொலிக்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு இது.
    ‘யூ-டியூப்’, குழந்தைகளுக்கு பரீட்சயமான தளம். பள்ளிப்படிப்பில் தொடங்கி பொழுதுபோக்கு வரை குழந்தைகளுக்கு தேவையான எல்லா தகவல்களும் இதில் கிடைக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கான வீடியோக்களை, குழந்தைகளே உருவாக்குவதால் மழலைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி பார்க்கிறார்கள். இத்தகைய யூ-டியூப் தளத்தில் சில குழந்தை நட்சத்திரங்களும் மின்னுகிறார்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான தகவல்களை பகிர்ந்து, வீடியோ உருவாக்கியும் பிரபலமாகி, இன்று யூ-டியூப் குழந்தை பிரபலமாக ஜொலிக்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு இது. யார் இவர்கள்?, எப்படி பிரபலமானார்கள், யூ-டியூப்பில் என்ன செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வோம்.

    ஹெய்லி-ஹெய்லி மேஜிக்கல் பிளே ஹவுஸ் 1.2 மில்லியன் சந்தாதாரர்கள்
    குழந்தைகளுக்கான புத்தம் புது ஆடைகளை யூ-டியூப்பில் விமர்சிப்பது ஹெய்லியின் வேலை. மிக்கி மவுஸ், டோரா, புரோசன், கேப்டன் அமெரிக்கா, அயன்மேன், ஸ்பைடர்மேன்... என சந்தைகளில் இறக்குமதியாகும் புதுப்புது உடைகளை வாங்கி அணிந்து, அதன் தரம், விலை பற்றி ரொம்ப கூலாக பேசுகிறார். 

    போரம்-போரம் டியூப் விலாக் 14 மில்லியன் சந்தாதாரர்கள்

    7 வயது மட்டுமே நிரம்ப பெற்றிருக்கும் போரம், சூப்பர் மார்க்கெட்டுகளை விமர்சிப்பதில் கில்லாடி. உலக பிரபல சூப்பர் மார்க்கெட் பற்றியும், அங்கு கிடைக்கும் உணவுகள் பற்றியும் விமர்சிக்கிறார். குறிப்பாக நூடுல்ஸ், பாக்கெட் தின்பண்டங்கள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி, அதை பிரித்து காண்பித்து, சிலவற்றை சமைத்து காண்பித்தும் ரகளை செய்வார். அதனால்தான், இந்த குட்டி சுட்டியின் யூ-டியூப் சேனலை 14 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள். இவர் யூ-டியூப்பில் கிடைத்த பணத்தில், தனி அலுவலகமும் உருவாக்கி இருப்பதோடு, சூப்பர் மார்க்கெட் அமைக்கும் பணியிலும் ஆர்வம் காட்டுகிறார். 

    ஜில்லியன் மற்றும் அடிலைட்- பேபிடீத்4 1.8 மில்லியன் சந்தாதாரர்கள்

    சகோதரிகளான ஜில்லியன் மற்றும் அடிலைட் இருவரும் பென்சில்வேனியாவை சேர்ந்தவர்கள். பெற்றோர் வாங்கிக்கொடுத்த இனிப்பு மிட்டாய்கள், தின்பண்டங்களை விமர்சிக்க தொடங்கி பிரபலமானவர்கள். குழந்தைகளை குறிவைத்து சந்தைகளில் புதிதாக களமிறக்கப்படும் இனிப்பு மிட்டாய்களையும், தின்பண்டங்களையும் இருவருமாக சுவைபார்த்துவிட்டு, அதுபற்றிய விமர்சனங்களை தைரியமாக முன்வைக்கிறார்கள். 

    ஈதன்- ஈதன் கேமர்1.9 மில்லியன் சந்தாதாரர்கள்

    12 வயது சுட்டியான ஈதன் இங்கிலாந்தை சேர்ந்தவர். குழந்தைகள் விளையாடக்கூடிய வீடியோ கேம்களை ஆராய்வது, விளையாடி காண்பிப்பது, விளையாட்டுகளுக்கு தரவரிசை கொடுப்பது என ரொம்ப விளையாட்டாக பொழுதை கழிக்கிறார். சில சமயங்களில் ஆன்லைனில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள் விளையாடக்கூடிய ஆன்லைன் கேமிங் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அந்த வீடியோக்களையும் யூ-டியூப்பில் பதிவேற்றுவார்.

    அலிசா டெசிக்-லாகு உன்டக் கமு3.5 மில்லியன் சந்தாதாரர்கள்

    குழந்தைகளுக்கு பாட்டு பாட சொல்லிக்கொடுப்பதும், கிட்டார் வாசிக்க சொல்லிக்கொடுப்பதும் அலிசா டெசிக்கின் வேலை. சில நேரங்களில் தோழிகளுடன் சேர்ந்து நடனமாடி, அதையும் யூ-டியூப் தளத்தில் பதிவிடுவார். மழலை மொழியில் இவர் பாடுவதை ரசிக்கவும், இசை வாத்திய பயிற்சி பெறவும் இவரை அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதன் காரணமாக சொகுசு கார் வாங்கும் அளவிற்கான பணம் யூ-டியூப் மூலமாக கிடைத்தது.
    காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது.
    காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இது, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய். கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும். 

    முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்கைக்காய் நீக்குகிறது. பசியை அதிகரிக்க உதவுகிறது.

    முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஏ‘ மற்றும் ‘சி‘ ஆகிய சத்துகள் உள்ளன. முருங்கைக்காயை ‘சூப்’ செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். முருங்கைக்காயை வேக வைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும். 

    முருங்கைக்காய் சாறை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு அதிகரிக்கும். 
    ×