என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
    பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. தாய்மைக்கானவை. ஒவ்வொரு பெண்ணும் தாயாகி, தனது குழந்தைகளுக்கு பாலூட்ட படைக்கப்பட்ட உறுப்புகள் அவை. அதே நேரத்தில் பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

    பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள். அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள். இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ, அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம், அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.

    தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும் சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல் திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும், கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

    வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்‌ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.

    சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால் பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.

    சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல் 30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும். இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.

    பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில் இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால் ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.

    மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.
    பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி பற்களை கடிப்பது ஏன்? என கேட்கலாம்.
    பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது பல நேரங்களில் அருகில் படுத்திருப்பவர்களின் தூக்கத்தை கெடுத்து விடும். இப்படி பற்களை கடிப்பது ஏன்? என கேட்கலாம்.

    மன அழுத்தத்துக்கான வடிகால் இல்லாமல் போகும்போதுதான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள்.

    வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என்று பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டால், அவை தூக்கத்தின் போது இப்படி வெளிப்படும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.

    பொதுவாக டீன்-ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள்தான் இந்த பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் மன அழுத்தத்திற்கு தேர்வு பயம் முக்கிய காரணமாக இருக்கிறது. அதற்கடுத்து காதல் விவகாரங்களும் சேர்ந்து கொள்கிறது. பிரச்சினை என்னவென்று தெரிந்துகொண்டால் தீர்ப்பதும் சுலபம்.

    பற்கள் தொடர்ந்து இப்படி நறநறவென்று அரைபடுவதால் நாளடைவில் கீழ்த்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்துவிடும். எந்தவொரு இனிப்பான உணவையும், சூடான அல்லது குளிர்ச்சியான பானங்களையும் சாப்பிட முடியாது. வெகுநாட்கள் இந்த பிரச்சினை தொடர்ந்தால் தாடையின் சதைகள் இறுகி முகத்தின் அமைப்பே குலைந்து போய்விடும். தாடை எலும்பை மண்டை ஓட்டோடு இணைத்திருக்கும் மூட்டு பகுதியும் பாதிக்கப்பட்டு வலி உண்டாக்கும்.

    தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தற்காலிக தீர்வாக ‘சாப்ட் ஸ்ப்லின்ட்' என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். படுக்கப்போகும்போது மட்டும் இதை பற்களில் பொறுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பற்களின் கீழ் தாடையும் மேல் தாடையும் ஒட்டாமல், உரசாமல் தடுக்கலாம். ஆனாலும் இது நிரந்தரமான தீர்வு அல்ல.

    மன அழுத்தத்துக்கான காரணத்தை தேடி, அதை சரி செய்த பிறகே இந்த பிரச்சினையில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். இதற்கு மனநல ஆலோசகரின் அறிவுரை, யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை நாடலாம்.
    வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காவே இந்த தொகுப்பு. வாருங்கள்வீட்டிலிருந்தே சம்பாதிப்பதற்கான வழிகளை பார்ப்போம்...
    வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காவே இந்த தொகுப்பு. வாருங்கள்வீட்டிலிருந்தே சம்பாதிப்பதற்கான வழிகளை பார்ப்போம்...

    பிளாகிங்

    பிளாகிங் என்பது இணையத்தில் கட்டுரைகள் எழுதுவது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்காக பிளாக் எழுதும் வாய்ப்பை தருகின்றன. சிறந்த முறையில் எழுதுவதால் அதிகம் சம்பாதிக்க முடியும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்புல இருந்தால் இதில் அசத்தி விடலாம். பயணங்கள் சமையல், கலைப்பொருட்கள் செய்தல் என்று எதைப்பற்ற வேண்டுமானதும் எழுத முடியும்.

    பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த இடங்களை அறிமுகப்படுத்துதல்

    ஒரு சில  நிறுவனங்களில் தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் அந்த தயாரிப்புகளை இணையம் மூலம் வாங்குவதற்கான லிங்கை, நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பிய லிங்க் மூலம் அவர்கள் அந்த நிறுவனங்களில் பொருட்களை வாங்கி விட்டால் உங்களுக்கு ஒரு தொகை கிடைக்கும். இந்த முறையில் அதிகர் பேர் சம்பாதிக்கின்றனர். ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் பிரபல நிறுவனங்களின் இணையதளங்களில் இது நடைமுறையில் உள்ளது.

    சமையல் கற்பித்தல்

    சமையல் செய்வதில் நீங்கள் கைதேர்ந்தவரா? அக்கம்-பக்கம் உள்ளவர்களுக்கெல்லாம் டிப்ஸ் கொடுத்து அசத்திக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் சமையல் வகுப்புகள் எடுக்கலாமே. சமையல் தெரியாத பெண்கள் இப்போது நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் மூலம் பயன் பெறலாம். நீங்கள் உங்கள் திறமை மூலம் சாம்பாதிக்கலாம். உங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒரு மெசேஜ் தட்டிவிடுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

    ஸ்டால் போடுதல்

    ஸ்டால் போடுவதில் நிறைய வழிகள் உள்ளன. நீங்கள் ஒருவர் மட்டுமில்லாமல் உங்களைப்போல ஆர்வம் உள்ள தோழிகள் சில பேரை இதில் சேர்த்து கொள்ளலாம், பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷச நாட்களில் உங்கள் சுற்றுவட்டார பகுதியிலேயே துணிகள், அலங்கார பொருட்கள்,உணவு பலகாரங்கள், வீட்டு சாமான்கள் போன்றவற்றை விற்கலாம். இதன் மூலம் நல்ல லாபம் அடைய முடியும். இது தவிர உங்கள் வீட்டில் உபயோகம் இல்லாத நல்ல நிலையில் உள்ள பொருட்களை கூட இந்த முறையில் விற்க முடியும். உங்கள் வீடும் சுத்தமாகும். பணமும் கிடைக்கும்.

    இவ்வாறு வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க நிறையை வழிகள் உள்ளன. கொஞ்சம் யோசித்தால் உங்களுக்கே இன்னும் ஏராளமான யோசனைகள் கிடைக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியாதது இருக்கிறதா என்ன?
    கத்தரிக்காயில் குழம்பு, பொரியல், வறுவல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான். கத்தரிக்காயில் இப்படி துவையல் செய்து பாருங்க.. அப்புறம் அசந்து போய்டுவிங்க..
    தேவையான பொருள்கள்:

    பெரிய கத்தரிக்காய் - 1
    தேங்காய் துருவல் -1 கப்
    து. பருப்பு - 50 கிராம்
    காய்ந்த மிளகாய் - 6
    பெருங்காயம் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கடுகு -2 ஸ்பூன்
    கறிவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    முதலில் கத்தரிக்காயில் எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி தோலை உரித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், து. பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    பிறகு மிக்சியில் துருவிய தேங்காய், கத்தரிக்காய் மற்றும் வறுத்து வைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    கடைசியில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து அரைத்த துவையலில் சேர்த்தால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்..

    இதனை இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்...

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருப்பு உப்பு இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம்.
    வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் இந்து உப்பைவிட சற்று அடர் நிறத்துடன் காணப்படும் கருப்பு உப்பையும் அழகு சாதன மூலப்பொருளாக உபயோகிக்கலாம். இது சருமத்திற்கு பளபளப்பு தன்மையை உண்டாக்குவதோடு இளமையான தோற்றப்பொலிவையும் தக்கவைக்கும். இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம்.

    சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு ஈரப்பதத்தைதக்கவைக்க, கருப்பு உப்புடன் தேனை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள் பாதாம் எண்ணெய்யுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். பாதாம் எண்ணெய்க்கு ஈரப்பதமூட்டும் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி தரும். மூன்று டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். பாதாம் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.

    எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் ஓட்ஸுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். அது சருமத்தில் எண்ணெய் சுரப்பை சமன் செய்ய உதவும். ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பை சிறிதளவு கலந்து அதனுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்பு கைகளால் மென்மையாக துடைத்து மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் தென்படும். சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் முகத்தை கழுவிய பிறகு ரோஸ் வாட்டரை தடவலாம்.

    முகத்தில் கரும்புள்ளி, வெண் புள்ளி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் இருந்தால் எலுமிச்சை பழத்துடன் கருப்பு உப்பை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீரில் கழுவி விடலாம்.
    பெற்றோர்கள் பேச்சுப்பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுமாறு நடந்துக் கொள்ளவேண்டும்.
    ஒருவருக்கு சரளமாக பேச முடியாமல் விட்டு விட்டு பேசும் நிலை இருந்தால் அவருக்கு திக்குவாய் குறை இருக்கிறது எனலாம். அவர்கள் பெரும்பாலும் சில சொற்களை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேசும் போது தங்கள் உடல் அசைவுகளால் தங்கள் குறையை ஈடு கட்ட முயலுவார்கள். பொது மக்கள் இந்த குறைபாட்டின் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டும் திக்குவாய் பாதிக்கப் பட்டவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22-ம் தேதி திக்குவாய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    திக்குவாய் குறைபாட்டுக்கு பின்வரும் பல காரணங்கள் காரணிகளாய் அமைகின்றன. அவையாவன: மரபியல் ரீதியாக குடும்ப பரம்பரை, நரம்பு சம்பந்தமான பிரச்சினை, மனதை பாதிக்கும் சில பிரச்சினை, அதிக மனஉளைச்சல்கள் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படும். திக்குவாய் உள்ள நண்பர்களை போல் பாவனை செய்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அந்தக் குறை ஏற்பட வாய்ப்புண்டு. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் இந்த குறையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் இந்த குறை உள்ளவர்கள் இருக்கின்றனர். பெண்களை விட ஆண்களே இந்த குறையால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். திக்குவாய் குறைபாட்டை குணப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லை. இதன் அடிப்படை காரணத்தைத் தெரிந்துக்கொண்டு அதற்கு உண்டான பேச்சுப் பயிற்சி கொடுத்து தன்னம்பிக்கை ஊட்டுவதன் மூலமே இந்த குறையை குணப்படுத்த முடியும். இந்தப் பயிற்சி அளிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவை அறுதியிட்டு கூறமுடியாது. இந்த குறைபாட்டின் தீவிரத்தன்மையைப் பொறுத்தே இதனுடைய பயிற்சிக் காலம் தீர்மானிக்கப்படும்.

    இந்த குறை உள்ளவர்கள் தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சூழல்களை எதிர்கொள்ள அச்சப்படுவார்கள். மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பார்கள். சில சமயங்களில் பெற்றோரிடமும், நெருக்கமான நண்பர்களுடனும் பேசும்போது இவர்கள் திக்காமல் சரளமாகப் பேசுவார்கள். பாட்டுப் பாடும்போது இவர்களால் திக்காமல் பாடமுடியும். இவர்கள் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் பேசும்போதும், மிகவும் புதியவர்களிடம் பேசும்போதும், தன் மேல் அதிகாரிகளிடத்தில் பேசும்போதும், தொலை பேசியில் பேசும் போதும், மற்ற பாலினத்தவர்களுடன் பேசும் போதும், அந்நிய மொழியில் பேசும்போதும் அதிகமாக திக்குவார்கள்.

    சிலர் தான் பேச நினைப்பதை வேகமாக பேசி முடிக்க முயல் வார்கள். இத்தகையவர்களுக்கு பேச்சுப் பயிற்சியாளர்கள் இவர்களின் எதிர் மறை எண்ணங்களை மாற்றி அவர்களுக்கு நல்ல தன்னம்பிக்கையை ஊட்டி அவர்களை ஊக்குவிப்பார்கள். ஒரு குழந்தையின் பேச்சு குறைபாட்டை அதன் பேச்சு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்குரியப் பேச்சுப் பயிற்சி அளிப்பதன் மூலம் குறைந்த கால அளவிலேயே அதை குணப்படுத்த முடியும்.

    பெற்றோர்கள் பேச்சுப்பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுமாறு நடந்துக் கொள்ளவேண்டும். அவர்களின் மனதை பாதிக்கும் விதமாக எதையும் எப்போதும் செய்யக்கூடாது. மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிடக்கூடாது. குறை கூறக்கூடாது. அவர்கள் பேசும் போது பொறுமையுடன் கூர்ந்து கவனிப்பதுவும், உற்சாகப் படுத்துவதும், அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுவதும், அவர்களுக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வதும் அவசியம் நல்ல பலனைத்தரும்.

    சிலர் பழைய மூட நம்பிக்கையின் படி திக்குவாய் உள்ள குழந்தையின் வாயில் கூழாங்கற்களைப் போட்டு குழந்தையை சத்தமாகப் பேசச் சொல்வார்கள். இது குழந்தைக்கு சரியான சிகிச்சை கிடையாது. மேலும் குழந்தை தவறுதலாக அதை விழுங்க நேரிட்டு தொண்டையில் அடைத்துக் கொள்ளும் ஆபத்தும் விளைய வாய்ப்புண்டு. பேச்சுப் பயிற்சியாளர்கள் திக்குவாய் உள்ள குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி அளித்து நிதானமாகப் பேச வைப்பார்கள். அவர்களை முதலில் தனித்தனியாக பேசப் பயிற்சியளிப்பார்கள்.

    ஒவ்வொரு சொல்லாக பேசப்பயிற்சி அளித்துப் பின்னர் வாக்கியமாக பேச வைப்பார்கள். குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு பேராக குழுக்களாகப் பிரித்து அவர்களுக்குள் உரையாட வைப்பார்கள். அவர்களுக்கு துணிவை ஏற்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசவைத்து பயிற்சி அளிப்பார்கள். இதே போல் கையின் கட்டை விரலை நாக்காகவும், மற்ற விரல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சொல்லாகவும் நினைக்க வைத்து எந்த விரல் கட்டை விரலைத் தொட வைக்கிறோமோ அதற்கு ஒதுக்கப் பட்ட சொல்லை சொல்லிப் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுக்கப்படுவதில்லை. வயதுக்கு ஏற்றாற் போலும், சூழலுக்கு ஏற்றவாறும் மற்றும் திக்குவாய் குறையின் அளவிற்கு ஏற்றவாறும் பயிற்சிகள் மாறுபடும்.

    கலையரசி,
    சிறப்பு கல்வி பயிற்சியாளர்
    ஆரோக்கிய வாழ்வுக்கு தூக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. தூங்கும் போது இதை பிடித்துக்கொண்டு தூங்கினால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஆரோக்கிய வாழ்வுக்கு தூக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இரவு நன்றாக தூங்கியும் காலையில் சோர்வாக எழுந்தால் தூங்கும் முறை அதற்கு காரணமாக இருக்கலாம். படுக்கையில் முதுகு பகுதிக்கு அழுத்தம்கொடுத்து தூங்குவது, வயிற்றுப்பகுதிக்கு அழுத்தம்கொடுத்து குப்புறப்படுத்து தூங்குவது, இடதுபுறம், வலதுபுறம் திரும்பிப்படுப்பது என தூங்கும் விதம் மாறுபடுகிறது. தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது, காலில் தலையணையைவைத்து தூங்குவது, ஒரு காலை தூக்கியபடி தூங்குவது என பலவிதமான முறைகளை நிறையபேர் கையாள்கிறார்கள்.

    முதுகை பின்னோக்கி சாய்த்து தூங்குவது, இடதுபுறமாக உடலை திருப்பி தூங்குவதுதான் தூக்கத்தில் சிறந்த நிலையாக கருதப்படுகிறது. வயிற்றுப்பகுதியை படுக்கையில் அழுத்திக்கொண்டு தூங்குவது குடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்றும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக எந்த தூக்க முறை சிறந்தது என்று பார்ப்போம்.

    * முதுகுப் பகுதியை சாய்த்து நேராக படுப்பது சிறந்த நிலையாக கருதப்படுகிறது. அப்போது முதுகு மற்றும் தலை பகுதியை நேராக வைத்திருப்பதும் உடலுக்கு நல்லது. அதற்கு காரணம், இந்த நிலையில் தூங்கும்போது உடலின் அனைத்து பாகங்களின் எடையும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படாது. படுக்கை நேரத்தில் உடலில் உள்ள பல நரம்புகள் ஒருங்கிணைக்கப்படுவதால் உடலின் ரத்த ஓட்டத்தை மூளை சீராக கட்டுப்படுத்தும்.

    * உடலை சுருட்டிக்கொண்டு படுக்க விரும்புபவர்கள் இடது பக்கமாக திரும்பி தூங்கலாம். பெரும்பாலானோர் இந்த நிலையில்தான் படுப்பதற்கு விரும்புகிறார்கள். அவ்வாறு படுப்பதால் உடலுக்கு முக்கிய உறுப்பாக இருக்கும் இதயத்திற்கும், அதை சார்ந்த இதய கட்டமைப்புகளுக்கும் பெரிய அளவில் அழுத்தம் ஏற்படாது.

    * வலது பக்கத்தில் தூங்குவது அவ்வளவு மோசமான நிலை அல்ல. ஆனால் தொடர்ந்து அப்படியே தூங்கும்போது ரத்த நாளங்களுக்கும், ரத்த ஓட்டத்திற்கும் இடையூறு ஏற் படலாம். இது தவிர நுரையீரலும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம். நெஞ்செரிச்சல், அசி டிட்டி பாதிப்புக்குள்ளாகுபவர்கள், கர்ப்பிணி பெண்கள் வலது பக்கமாக ஒருக்களித்து தூங்கக்கூடாது.

    * வயிற்று பகுதியை படுக்கையில் அழுத்திக்கொண்டு குப்புறப்படுத்து தூங்குவது சரியான நிலை அல்ல. அப்படி தூங்கும்போது வாய், கைகளை உள்புறமாக வைத்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த முறையில் தூங்கும்போது உறுப்புகளின் அத்தியாவசிய செயல்பாடுகள் தடைபடக்கூடும். சில சமயங்களில் உடல் வலி மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

    * ஒரு காலை மேலே தூக்கிக்கொண்டு தூங்குவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதனால் இடுப்பு பகுதிக்கு பாதிப்பு நேரும். மேலும் காலை தூக்கும்போது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்வதற்கும் ரத்த நாளங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். முதுகுவலி ஏற்படும் சமயத்தில் இந்த நிலையில் சில மணி நேரம் தூங்கலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல.
    வேலை, குடும்பம், என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்களுக்கு எப்போதும் சவால் தான். பணி அழுத்தம் மன அழுத்தமாகி உடலையும், மனதையும் பாதிக்காமல் தவிர்க்க மூன்று ஆலோசனைகள் இதோ...
    வேலை, குடும்பம், என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்களுக்கு எப்போதும் சவால் தான். பணி அழுத்தம் மன அழுத்தமாகி உடலையும், மனதையும் பாதிக்காமல் தவிர்க்க மூன்று  ஆலோசனைகள் இதோ...

    குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செய்துமுடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது உங்களுக்கு மட்டுமே என்றில்லாமல் பொதுவாக பலரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான். இதனை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் அவசியம். இன்று என்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும்?எதை முதலில் முடிக்க வேண்டும். அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எது? அவசர வேலை எது? அவசிய வேலை எது? என் ஒரு பட்டியலிட்டால் வேலை சுலபமாகும். பட்டியலிட ஆகும் நேரத்தை மிச்சப்படுத்துவதாக எண்ணி அதனை தவிர்க்க வேண்டாம். சரியான திட்டமிடலுடன் கூடிய பட்டியலால் நேரமும் மிச்சமாகும்.

    ஓய்வு என்பது உறங்குவதுஅல்ல. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலையை மாற்றி செய்வதும் ஒய்வுதான். எனவே வேலை நேரம் தவிர்த்து மீதி நேரங்களில் நடைப்பயணம், சூடான குளியல், யோகா மற்றும் தியானம் என உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்தால் மனம் ஒருநிலைப்படும். பணி நேரத்தில் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க வழிவகுக்கும். பாடல் கேட்பது, டான்ஸ் ஆடுவது ஏன் சற்றுநேரம் மொபைலோ, டிவியோ பார்க்காமல் கண்கள் மூடி சும்மா இருப்பதும் கூட நல்லது தான்.

    சில நேரங்களில் நாம் நினைத்தபடி வேலை நடக்காமல் போகலாம். அப்போது எரிச்சலும் கோபமும் வரக்கூடும். அந்த சூழலை எப்படி எளிதாக கையாள்வது என்று அடுத்த கட்டத்தை நோக்கிதான் சிந்திக்க வேண்டும். இப்படியாகிவிட்டதே என்று எதிர்மறையாக எண்ணாமல், அடுத்து என்ன செய்வது என்று நேர்மறையாக யோசிப்பதே சரியானதாகும். எல்லாம் சீராகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு வேலையை தொடங்கினால் அந்த சூழல் பாஸிட்டிவாக மாறும்.
    கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
    கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் ஆண்களின் உயிரணுக்களைப் பாதிப்பதால், அவர்களுக்கு குறைபாடான அணுக்கள் உருவாகும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குழந்தை எடை குறைவாகவும் பிறக்க நேரிடும். புகையிலையின் பாதிப்பு உள்ளவர்களின் குழந்தை, அப்பழக்கம் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட இருநூறு கிராம் குறைவான எடையுடன் இருக்கும்.

    கணவர் வெளியிடும் புகையை மனைவியும் சுவாசிக்கும் சூழ் நிலை உருவாகும். மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே செல்லும் நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, மனைவியின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ஆக்சிஜனில் பற்றாக்குறை தோன்றும். இதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

    அதோடு பிரசவத்தின்போது, தாய் வேறு சில நெருக்கடியான கட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் மனைவி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்களும், எதிர்கால வாரிசு நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபடவேண்டும். அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது, அவர்களது எதிர்கால சந்ததியின் சிறப்பான வாழ்க்கைக்கு வழங்கும் பரிசாக இருக்கும்.

    அதுபோல் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதையும் முடிந்த அளவு தவிர்த்திடவேண்டும். உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பல பரம்பரை நோய்கள் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அந்த ஜோடிகளுக்குள் ரத்தப்பொருத்தம் சரியாக அமையாவிட்டால், பெண்ணின் வயிற்றிலே குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம். இப்படி பலவிதமான சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.

    திருமணமான இளம்பெண்களில் பலர் தொடக்கத்தில் தாங்கள் கருத்தரித்திருப்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். சில அறிகுறிகளை வைத்து கர்ப்பமாகியிருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், உடல் நலன் குன்றியிருப்பது போன்ற உணர்வைத் தரும் மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ- எரிச்சலோ இல்லாமல் வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்றுதல் போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.

    கர்ப்பமாகிவிட்டால் மார்பகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகும். மார்பகங்கள் பெரியதாவதோடு வலி மற்றும் உறுத்தல் தோன்றும். மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகியும், முன்பக்கம் சற்று நீட்டியவாறும் மாறும். மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். புளி, களிமண் அல்லது ஐஸ்கட்டி போன்ற வழக்கத்துக்கு மாறான பொருள்களை சுவைக்கும் ஆசை ஏற்படலாம்.

    இவைதவிர, நாட்கள் செல்லும்போது வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறி ஏற்படும் என்று சொல்லமுடியாது. கர்ப்பத்தை துல்லியமாக அறிந்துகொள்ள அதற்குரிய பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ளவேண்டும்.
    பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகளில் மீன் சூப்பும் ஒன்று. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முள் நீக்கிய மீன் - 4 துண்டு
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 5 பல்
    சாம்பார் வெங்காயம் - 6 (நறுக்கவும்)
    பட்டை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    ஏலக்காய் - 3
    வெங்காயத்தாள், பிரியாணி இலை - சிறிதளவு
    உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகிய மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    பின்னர் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காய், பட்டை ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும்.

    கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகள், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.

    மீன் துண்டுகள் நன்கு வெந்ததும் பிரியாணி இலை, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

    சுவையான மீன் சூப் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது.
    சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.

    2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.

    3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டுவை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.

    4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.

    5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் சர்க்கரை கொடுக்கக்கூடாது.
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சில உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. குறிப்பாக சர்க்கரை கலந்த உணவு பதார்த்தங்களை கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

    ஆப்பிள் சாப்பிட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்ற எண்ணம் பெற்றோரிடம் இருக்கிறது. ஆப்பிளை மென்று சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு அதனை ஜூஸ் ஆக்கி கொடுக்கிறார்கள். அதை எப்படியாவது பருக வைத்துவிட வேண்டும் என்பதற்காக அதில் சர்க்கரையை கலந்து கொடுக்கிறார்கள். அது தவறான பழக்கம். குழந்தைகளுக்கு சர்க்கரை ஏற்றதல்ல. சிறுவயது முதலே சர்க்கரையை பயன்படுத்தும்போது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் எதிர் காலத்தில் உருவாகும்.

    இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் சர்க்கரை கொடுக்கக்கூடாது. குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் வழக்கமும் நிறைய பெற்றோரிடம் இருக்கிறது. அதை சிறிதாவது கொடுத்தால்தான் எந்த உணவாக இருந்தாலும் குழந்தை சாப்பிடும் என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்கள். தேனில் அதிக அளவு பிரக்டோஸ் சேர்ந்திருக்கிறது. அது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஒருவயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அறவே தேன் கொடுக்கக் கூடாது. குளிர் பானங்களையும் பருக கொடுக்கக்கூடாது. 500 மி.லி. அளவு கொண்ட குளிர் பானத்தில் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது.

    செயற்கை வண்ணங்கள், சுவை நிறமிகள் சேர்க்கப்பட்ட பானங்கள் மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொடுக்கக் கூடாது. அத்தகைய உணவுகள் தலைவலி, மனநிலையில் மாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கலந்திருக்கும் நைட்ரேட்டுகள் புற்றுநோயுடன் தொடர்புடையவை. நிறைய குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். நூடுல்ஸ் அரிசி மாவில் தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவு எளிதில் குளுக்கோஸாகவும் பின்னர் கொழுப்பாகவும் மாறும் தன்மை கொண்டது. அதனால் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது.

    பாலாடைக்கட்டியையும் அதிகம் சாப்பிட அனுமதிக்கக்கூடாது. அவை குழந்தைகளிடம் இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும். ஹார்மோன் சுரப்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
    ×