என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள்கோவிலில் இன்று மாலை ஹிம்ஹ வாகனம், நாளை காலை ஹம்ச வாகனம், மாலை சூரிய பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது.
    காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றதுடன் தொடங்கியது.

    இதையொட்டி கோவில் கொடி மரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவப்பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் சப்பரத்தில் உற்சவப்பெருமாள் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை ஹிம்ஹ வாகனம், நாளை காலை ஹம்ச வாகனம், மாலை சூரிய பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. நாளை மறுதினம் பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமான கருடசேவை உற்சவம் நடக்கிறது. அன்று மாலை அனுமந்த வாகன வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
    விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக ‘உ’ என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு.
    முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் ‘உ’ என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும். செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். இதன் காரணமாகவே எழுதத் தொடங்குவதற்கு முன்பாக ‘உ’ என்ற எழுத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர் என்பது அறிவுப்பூர்வமான கருத்து.

    இதற்கு ஆன்மிகக் கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துக்களில், ‘உ’கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை ‘பிள்ளையார் சுழி’ என்றும் சொல்வார்கள். விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக ‘உ’ என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு. விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய ‘உ’ என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.

    ‘உ’ என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது. வட்டத்தைத் தொடர்ந்து வரும் கோடு வளைந்து, பின் நேராகச் செல்லும். இதனை ‘ஆர்ஜவம்’ என்பார்கள். இதற்கு ‘நேர்மை’ என்று பொருள். ‘வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே’ என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்குபவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
    வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.
    அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

    சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.
    ஒவ்வொரு சனிப் பிரதோஷத்தன்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உகந்த இத்துதியை பாராயணம் செய்தால் சகல மங்களங்களும் பெருகும்.
    பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
    காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
    பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
    ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய

    (மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)

    பொதுப்பொருள்:

    பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம்.
    திருச்செந்தூர் முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சகல நன்மைகளையும் அடைவார்கள்.
    திருச்செந்தூர் என்றாலே, அங்கு கடற்கரையோரமாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் நினைவுதான் வரும். அந்த அளவிற்கு பிரசித்திப் பெற்ற திருக்கோவில், திருச்செந்தூர். இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகவும் திகழ்கிறது. முருகப்பெருமானின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற இடமாக திருச்செந்தூர் பார்க்கப்படுகிறது. ஆம்.. அவர் சூரபத்மனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்து, ஆட்கொண்ட இடமாக திருச்செந்தூர் திருத்தலம் உள்ளது.

    கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்தக் கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் மறைந்து விட்டன. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஆறு நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது. அசுர படைகள் வீழ்ந்த பின்னர் சூரபத்மன் மாமரமாக உருமாறினான். முருகப்பெருமான் தனது வேலினால் மா மரத்தை இரண்டாகப் பிளந்தார். மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன், சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார். சூரபத்மனுடன் போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது.

    திருச்செந்தூரில் இதற்கு முன்பு, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களை குறிப்பிடும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவற்றில் ‘கந்தபுஷ்கரணி’ என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே இந்த நாழிக்கிணறு ஆகும். இங்கு மட்டுமே பக்தர்கள் தற்போது நீராடி வருகிறார்கள். கோவிலுக்குத் தெற்கே இந்த நாழிக்கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடி பரப்பும், ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உப்பு தன்மையே இல்லாத நன்னீராக இருக்கிறது. கந்தக் கடவுளின் அருளால் அமைந்த இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சகல நன்மைகளையும் அடைவார்கள்.
    ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
    திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியை புண்ணியகாலம் என்பர்.

    இதில், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.

    விரதங்களின் சிறப்பு :

    ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள்.

    ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.

    இதனால், மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது, உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன், ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    உபவாசத்தின்போது, சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

    25 ஏகாதசிகள் :

    1. சித்திரை வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி.

    2. சித்திரை தேய்பிறை ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.

    3. வைகாசி வளர்பிறை ஏகாதசி,  மோகினி ஏகாதசி.

    4. வைகாசி தேய்பிறை ஏகாதசி,  வருதினி ஏகாதசி.

    5. ஆனி வளர்பிறை ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி.

    6. ஆனி தேய்பிறை ஏகாதசி, அபரா ஏகாதசி.

    7. ஆடி வளர்பிறை ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி.

    8. ஆடி தேய்பிறை ஏகாதசி, யோகினி ஏகாதசி.

    9. ஆவணி வளர்பிறை ஏகாதசி, புத்திரத ஏகாதசி.

    10. ஆவணி தேய்பிறை ஏகாதசி, காமிகா ஏகாதசி.

    11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி, பரிவர்த்தன ஏகாதசி.

    12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி, அஜ ஏகாதசி.

    13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி.

    14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, இந்திரா ஏகாதசி.

    15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி, பிரபோதின ஏகாதசி.

    16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி.

    17. மார்கழி வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி.

    18. மார்கழி தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி.

    19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி

    20. தை தேய்பிறை ஏகாதசி, சபலா ஏகாதசி.

    21. மாசி வளர்பிறை ஏகாதசி, ஜெய ஏகாதசி.

    22. மாசி தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி.

    23. பங்குனி வளர்பிறை ஏகாதசி, ஆமலகி ஏகாதசி.

    24. பங்குனி தேய்பிறை ஏகாதசி, விஜயா ஏகாதசி.

    25.   அதிக ஏகாதசி, கமலா ஏகாதசி.
    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சமணர் படுகைக்கு செல்லும் வழியை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருப்பரங்குன்றம் மலையின் மேற்கு பகுதியில் கல்வெட்டு குகைக் கோவில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டு கோவிலானது பாண்டியர் காலத்தை சேர்ந்தது. கிழக்கு நோக்கி சிறிய கருவறையும் தெற்கு நோக்கிய முன் மண்டபத்துடன் காணப்படுகிறது. கருவறையில் அர்த்த நாரீஸ்வரரும், முன்மண்டபத்தில் நடராஜர், வள்ளி தெய்வானை சிற்பங்கள் உள்ளன.

    மேலும் கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டு குகை கோவில் இந்திய தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதேபோல கிரிவலப்பாதையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைமேல் சுமார் 150 அடி உயரத்தில் மலை குகைகளில் இயற்கையாக சமணர் படுகைகள் அமைந்து உள்ளது. அதில் பெரிய குகை தளத்தில் கற்படுகைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. சிறிய குகையானது சமணர் படுகைகளாக கொண்டுள்ளது.

    இதுவும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமணர் படுகை மற்றும் கற்படுகைக்கு சென்று வருவதற்கு மலையிலேயே படிக்கட்டுபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சமணர் படுகை இருப்பது பெரும்பாலான உள்ளூர் பொதுமக்களுக்கு தெரியாத நிலையே இருந்து வருகிறது. இதேபோல கல்வெட்டு குகை கோவிலின் முக்கியத்துவம் சுற்றுலா பயணிகளுக்கு கொண்டு செல்லாத நிலை இருந்து வருகிறது.

    மேலும் இங்கு மின்விளக்கு வசதி இல்லாத பெரும் குறையும் உள்ளது. சுற்றுலா பயணிகள் வந்து செல்லுவதற்கு ஏற்ப அனைத்து வசதிகள் ஏற்படுத்த சுற்றுலாத்துறையினர் முன்வரவேண்டும். கல்வெட்டு குகை கோவில் பாதுகாப்பு பணிக்கு ஊழியர் இருப்பதுபோல சமணர் படுகை பாதுகாப்பு பணிக்கு என்று தனியாக ஊழியர் நியமிக்கப்பட வேண்டும்.

    மேலும் சமணர் படுகைக்கு சென்று வர மிக சிறிய, குறுகிய பாதை திறந்து உள்ளது. ஆனால் அது இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. சமீபத்தில் சுற்று சுவர் கட்டப்பட்டு பெரிய வழி அமைக்கப்பட்ட போதிலும் பிரதான பாதையின் வழி பூட்டப்பட்டு உள்ளது. அதை உரிய நேரத்திற்கு திறந்து வைக்க வேண்டும்.

    மேலும் சமணர் படுகைகள் மற்றும் கல்வெட்டு குகை கோவில் பற்றி சுற்றுலாபயணிகள் அறிந்துகொள்ள சுற்றுலா நகரங்களில் அறிவிப்பு பலகைகள் வைப்பதோடு விழா காலங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சமணர் படுகைகள் மற்றும் கல்வெட்டு கோவில் வரலாறு தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
    நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஆலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் உள்ளே மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தால் முடி சூட்டுவிழா நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை செயலாளர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதில் வேளாங்கண்ணி பேராலய உதவி பங்குதந்தை டேவிட்தன்ராஜ், கருங்கண்ணி பங்கு தந்தை சவரிமுத்து, திருப்பூண்டி பங்குதந்தை ஆரோஆரோக்கியசாமி மற்றும் அந்தோணிபெர்ணாடு, பிரான்சிஸ், விக்டர் பவுல்ராஜ் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, நற்கருணை ஆசிர், சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
    மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 10-ம் தேதி காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்ற மகா தீபாராதனைகள் நடந்து வந்தது.

    கடந்த 17-ம் தேதி ரிஷப வாகனம், 18-ம் தேதி பூத வாகனம், 19-ம் தேதி குதிரை வாகனம், 20-ம் தேதி காமதேனு வாகனம், 21-ம் தேதி யானை வாகனம், 22-ம் தேதி ரிஷப வாகனம், 23-ம் தேதி முத்துப் பல்லக்கு, 24-ம் தேதி வெட்டு குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில், தினமும் இரவில் சாமி வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

    இதனைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, இன்று காலை 9 மணிக்கு நடந்தது. அம்மனுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்க சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள ஊர் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேர்த் திருவிழாவை துவக்கி வைத்தனர்.

    தேரானது, மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்று வந்து, பின்னர் தன் நிலையை வந்தடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும்.
    ராமாயண இதிகாசத்தில் இடம் பிடித்திருக்கும் நபர்களில் முக்கியமானவர், சுசேணர். இவர் வானர அரசனான வாலியின் மாமனார் ஆவார். இவர் சிறந்த வானர மருத்துவரும் கூட. ராவணனுடனான யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ராவணனின் மகன் மேகநாதன் வீசிய நாகாஸ்திரம் தாக்கி, லட்சுமணன் சுயநினைவை இழந்தான்.

    அவனது உயிரைக் காப்பதற்கான மூலிகை , சஞ்சீவி மலையில் இருப்பதாக குறிப்பறிந்து சொன்னது, சுசேணர்தான். ராமருக்கும் ராவணனுக்கும் உச்சகட்ட போர் நடைபெற்று, ராவணன் கொல்லப்பட்டான். பின்னர் ராமர், சீதை மற்றும் தனக்கு உதவி புரிந்தவர்களுடன் அயோத்தி புறப்பட்டுச்சென்றார் . அப்போது சுசேணர், சுமங்சபர்வம் என்ற மலையில் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்ய முடிவு செய்தார். அவர் அங்கு சென்ற சமயத்தில் அங்கிருந்த மக்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

    அவர்களுக்கு உதவ நினைத்து சுசேணர், அந்தப்பகுதியிலேயே தங்கிவிட்டார். திடீரென்று ராமருக்கு சுசேணரின் நினைவு வர, அவர் எங்கிருக்கிறார் என்று பார்த்து வரும்படி அனுமனை அனுப்பினார். அனுமனும் அங்கு இங்கென்று அலைந்து திரிந்து விட்டு, இறுதியாக இந்தப் பகுதிக்கு வந்தார். ஆனால் அங்கு, சுசேணர் சமாதி அடைந்திருந்தார். இதனால் வருத்தம் கொண்ட அனுமன், அவர் உடல் மீது மான் தோலை வைத்து மூடி, அதன் மேல் சில மல்லிகை மலர்களை வைத்து விட்டு, ராமரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

    ராமரும், சீதை மற்றும் லட்சுமணனுடன் அங்கு வந்து மான்தோலை அகற்றி பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் வளரத் தொடங்கியிருந்தது. அந்த இடத்தில் இருந்த புஷ்கரணியில் அனைவரும் நீராடிவிட்டு அங்கிருந்து சென்றனர். சிவலிங்கம் வளர வளர, அந்தப் பகுதி மக்கள் அனைவரும் உடல்நலம் பெறத்தொடங்கினர்.

    இங்குள்ள சிவலிங்கம் அந்தப் பகுதி மக்களால் 'மல்லிகார்ஜூன சுவாமி' என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் மான் தோலுக்கு 'அஜினா' என்று பொருள். மான் தோலும், மல்லிகைப் பூவும் வைக்கப்பட்ட இடத்தில் தோன்றிய சுயம்புலிங்கம் என்பதால் இதற்கு 'மல்லிகாஜினா சுவாமி' என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தை, பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வழிபட்டதாகவும், அதனால் இத்தல இறைவனின் பெயர் 'மல்லிகார்ஜூன சுவாமி' என்று மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும். இந்தப்பகுதியை ஆட்சி செய்த மன்னன், சுயம்பு லிங்கத்திற்கு கோவில் அமைக்க எண்ணினான். ஆனால் அவனது கனவில் தோன்றிய ஈசன், தான் கருவறைக்குள் இருக்க விரும்பவில்லை என்றும், என்னை தொட்டு பக்தர்களை சென்றடையும் காற்று, அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றும் கூறினார். இதனால் கோவில் அமைக்கப்படவில்லை.

    பெரிய தண்ணீர் தொட்டிக்கு இருப்பது போல கீழே சில தூண்களும், சிவலிங்கத்தின் மேற் பகுதியை தரிசிக்கும் வகையில் பக்தர்கள் நிற்கும் வகையில் சுற்று பாதை போன்ற மேற்தளமும் அமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் கோவில் அமைப்பு போன்ற சுவர் மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.
    அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
    சைவநெறியை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும். தேவாரம், திருவாசகம் பாடி அன்பையும், பக்தி நெறியையும் வளர்த்த இவர்களை சமயக்குரவர்கள் என்றும் அழைப்பார்கள். அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். (இவர்களில் அகசந்தானக் குரவர்கள், புற சந்தானக்குரவர்கள் என்று இருவகை உண்டு. நாம் இங்கே பார்க்கப்போவது புற சந்தானக்குரவர்கள்.) சமயக்குரவர்கள் மற்றும் சந்தானக் குரவர்களின் அவதார தலம் மற்றும் முக்தி தலங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சமயக்குரவர்கள்

    திருஞானசம்பந்தர்:
    அவதார தலம் - சீர்காழி
    முக்தி தலம் - ஆச்சாள்புரம்

    திருநாவுக்கரசர்:

    அவதார தலம் - திருவாமூர்
    முக்தி தலம் - திருப்புகலூர்

    சுந்தரமூர்த்தி சுவாமிகள்:

    அவதார தலம் - திருநாவலூர்
    முக்தி தலம் - திருவஞ்சைக்களம்

    மாணிக்கவாசகர்:

    அவதார தலம் - திருவாதவூர்
    முக்தி தலம் - தில்லை (சிதம்பரம்)

    சந்தானக் குரவர்கள்

    மெண்கண்டார்:

    அவதார தலம் - திருப்பெண்ணாடகம்
    முக்தி தலம் - திருவண்ணாமலை

    அருள் நந்திதேவநாயனார்:

    அவதார தலம் - திருத்துறையூர்
    முக்தி தலம் - சீர்காழி

    மறைஞானசம்பந்தர்:

    அவதார தலம் - பெண்ணாடகம்
    முக்தி தலம் - சிதம்பரம்

    உமாபதி சிவம்:

    அவதார தலம் - சிதம்பரம்
    முக்தி தலம் - சிதம்பரம்
    விநாயகப்பெருமானை ஒரு முறையும், சிவன் மற்றும் முருகப்பெருமானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும் வலம் வந்து வணங்க வேண்டும்.
    கோவிலுக்குச் சென்று வழிபடும்பபோது, இறைவனுக்கு தீபாராதனை காட்டும் வேளையில், பலரும் இருகரம் குவித்து கண்களை மூடி வழிபடுவார்கள். ஆனால் அப்படிச் செய்யக் கூடாது. நாம் இறை தரிசனத்தை காணத்தான், தீபாராதனையே காட்டப்படுகிறது. எனவே தீபாராதனையின் போது, கண்களை திறந்தபடியே தான் வழிபட வேண்டும்.

    கோவிலில் உள்ள சுவாமிகளை வலம் வந்து வழிபடுவது மிகவும் அவசியம். விநாயகப்பெருமானை ஒரு முறையும், சிவன் மற்றும் முருகப்பெருமானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும் வலம் வந்து வணங்க வேண்டும். இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது என்பது, மிகவும் விசேஷமான வழிபாடு. அகல் விளக்கு தீபம்தான் அனைத்து தெய்வத்திற்குமான பிரதான தீபம்.

    சில ஆலயங்களில் தேங்காய் மூடியில் தீபம், எலுமிச்சை பழத்தில் தீபம் என்று ஏற்றுகிறார்கள். ஆனால் துர்க்கை அம்மனுக்கு மட்டும்தான் எலுமிச்சைப் பழத்தில் தீபம் ஏற்ற வேண்டும். இல்லத்தில் நாம் வைத்திருக்கும் இறைவனின் திருவுருவப்படங்கள் அனைத்தும், கிழக்கு நோக்கியபடி அமைந்திருப்பது நல்லது.

    கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்ததும் குளிக்கக்கூடாது. சிறிது நேரம் கழித்து முகம், கை, கால்கள் வேண்டுமானால் கழுவலாம். தாயார் உடல்நலத்துடன் வாழவேண்டும் என்று விரும்புபவர்கள், திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வது அவசியம்.
    ×