என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றிற்கு இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
    திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம். சப்தவிடத்தலங்களுள் இது இரண்டாவது தலம். சக்தி பீடங்கள் 64 ல் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில். மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு.

    இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோஷம் நீங்கும். இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும். பல ஆண்டுகள் யோகம், தானம், தவம் செய்த பலன்களை அடையலாம். இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.

    இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.

    இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    நேர்த்திக்கடன்:

    குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர். மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.

    வழிகாட்டி:

    நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரிலிருந்து நேரடி பஸ் உள்ளது.

    அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில்
    வேதாரண்யம்(திருமறைக்காடு),
    நாகப்பட்டினம் மாவட்டம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ காண வேண்டிய வழிபாடு ஒன்று நடைபெறுகிறது. இதுபற்றி பலரும் அறிந்திருக்க வாய்பில்லை. அந்த வழிபாட்டைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    தெய்வ திருமணங்கள், பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக, தமிழர்களிடையே காலம் காலமாக நம்பிக்கை நிலவி வருகிறது. குறிப்பாக பரமசிவன்-பார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எமனிடம் இருந்து கணவரை மீட்க போராடி, அதில் வெற்றியும் பெற்ற சாவித்ரி கடைப்பிடித்த காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படுவதும் பங்குனி மாதத்தில்தான். இப்படி சாவித்ரி தன்னுடைய கணவரின் மரணத்தை வென்ற இந்த மாதத்தில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ காண வேண்டிய வழிபாடு ஒன்று நடைபெறுகிறது. இதுபற்றி பலரும் அறிந்திருக்க வாய்பில்லை. அந்த வழிபாட்டைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சிவ பூஜையில் 2 வகை உண்டு. ஒன்று- தன்பொருட்டு செய்யப்படும் ‘ஆத்மார்த்த பூஜை’, மற்றொன்று -பிறர் பொருட்டு செய்யப்படும் `பரார்த்த பூஜை' ஆகும்.

    பெரிய சிவாலயங்களிலும் கூட பரார்த்த பூஜா மூர்த்தியான மூலவர் உறையும் கருவறைக்குள், ஆத்மார்த்த பூஜைக்கென சிறிய லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம். பல கோவில்களில் இந்த வகை ஆத்மார்த்த பூஜைக்கான லிங்கங்கள் மரகதத்தால் செய்யப்பட்ட லிங்கங்களாகவே இருக்கின்றன. உண்மையில் இந்த ஆத்மார்த்த பூஜைக்கான லிங்கங்களின் அருளாற்றல் அளப்பரியது. இதன் பெருமையைச் சொல்லும் வகையில்தான் ‘மூர்த்தி சிறியது ஆனாலும் கீர்த்தி பெரியது’ என்ற சொல்லே உருவானது.

    இந்த லிங்கங்கள் பண்டைய மன்னர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் ஆகும். அந்த மன்னர்களால் கோவிலுக்கென்று எழுதிவைக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்துக்கும் இந்த லிங்கங்களே ‘உடையவர்’ (உரிமையானவர்) என்பதால், இவ்வகை லிங்கங்கள் ‘உடையவர் லிங்கம்’ என அழைக்கப்படுகின்றன. நெல்லையப்பர் கோவிலிலும் ஆத்மார்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய லிங்கம், ‘உடையவர் லிங்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த உடையவர் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு காட்சி தருவது, பங்குனி உத்திர திருவிழா காலங்களில் மட்டுமே. 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவின் 2-வது நாளில் இருந்து 9-வது நாள் வரை, தினமும் மாலை 6.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் உற்சவர்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவர் மண்டபத்தில் வைத்து இந்த உடையவர் லிங்கத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த அபிஷேகத்தை காணும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாய் நீண்ட காலம் வாழ்வார்கள் என்ற ஐதீகம் உள்ளது.

    தன் பக்தனான சுவேத கேது மகராஜாவுக்காக, காலனை காலால் கடிந்த காலசம்ஹார மூர்த்தியாக வீற்றிருப்பவர் நெல்லையப்பர். இவரது ஆலயத்தில் உள்ள உடையவர் லிங்கத்தை, தெய்வீக திருமணமாம் பரமசிவன்-பார்வதி திருமணம் நடைபெற்றதும், சாவித்ரி தனது கணவனை எமனிடம் இருந்து மீட்டு வந்த காரடையான் நோன்பு இருக்கும் காலமுமான பங்குனி மாதத்தில் தரிசித்தால் மங்கல வாழ்வு மங்கையருக்கு அமையும்.
    ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது. இது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாகத் திகழ்கிறது.
    ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது. இது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை பார்ப்போம்.

    பிள்ளை வரம்

    நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜன், பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் வழங்கிய பாயசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார். இதையடுத்து முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர். இதன் அடிப்படையில், குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலை முன்பாக ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பட்டாபிராமன்

    ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் சிவபூஜை ஒன்றை செய்தார், ராமபிரான். பின்னர் திருப்புல்லாணி வந்து இங்குள்ள இறைவனை தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, லட்சுமணருடன் கொடிமரத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இவருக்கு பிரமோற்சவம் நடக்கிறது. சீதையை மீட்பதற்கு முன்பாகவும் இந்த ஆலயத்தில் அருளும் ஜெகந்நாதரை, ராமர் வழிபட்டுச் சென்றுள்ளார். அப்போது திருப்புல்லாணி இறைவன், ராமனுக்கு ஒரு பாணத்தை வழங்கியுள்ளார். அந்த பாணத்தை பிரயோகித்துதான், ராமபிரான் ராவணனை அழித்ததாக சொல்லப்படுகிறது. எனவே எச்செயலை தொடங்கும் முன்பும், இங்குள்ள ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை.

    சயன ராமன்

    ராவணனால் கடத்தப்பட்ட சீதை, இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்தாள். அவளை மீட்க வேண்டிய கட்டாயம் ராமனுக்கு ஏற்பட்டது. இலங்கை செல்ல வேண்டும் என்றால், கடலைக் கடந்துதான் போக முடியும். எனவே கடலில் பாலம் அமைக்க, சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப் புல்லின் மீது சயனம் (படுத்து) கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால், இந்த ஆலயத்தில் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், பாலம் அமைக்க ஆலோசனை செய்த நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் தேவர்கள் காட்சி தருகின்றனர்.

    மனைவியுடன் சமுத்திரராஜன்

    இலங்கைக்கு செல்வதற்கு, கடல் மேல் பாலம் கட்ட வேண்டியது இருந்ததால், அதற்கு அனுமதி கேட்டு, மூன்று நாட்கள் காத்திருந்தார், ராமபிரான். ஆனால் அவரது கோரிக்கையை சமுத்திர ராஜன் கண்டுகொள்ளாமல் இருந்தான். ராமரின் முன்பாகத் தோன்றி எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் கோபம் கொண்ட ராமபிரான், கடலை நோக்கி அம்பு எய்ய முன்வந்தார். ராமரின் வில் மகிமையை அறிந்திருந்த சமுத்திரராஜன், தனது மனைவி சமுத்திர ராணியுடன் அங்கு தோன்றி, ராமபிரானை சரணடைந்தான். இதை நினைவுபடுத்தும் விதமாக, சயன ராமர் சன்னிதியின் முன் மண்டபத்தில், சமுத்திரராஜன் தன் மனைவியுடன் இருக்கும் திருமேனி காணப்படுகிறது. அருகில் ராமருக்கு உதவிய விபீஷணன் உள்ளார்.
    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.
    ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும், புகுந்த வீடும் சரிசமமான சிறப்பைப் பெறுகிறது. பிறந்த இடத்தின் பெருமையை பேணிக்காக்க வேண்டிய கடமையும், புகுந்த இடத்தின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வும் கொண்ட பெண்கள் இங்கு போற்றப்படுகின்றனர். அப்படி.. தான் பிறப்பெடுத்த பிறந்த இடத்தின் பெருமையைக் காப்பாற்றி, அதன் வழி வந்தவர்களின் குலதெய்வமாக வணங்கப்படுபவளே ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி என்னும் பெண்தெய்வம். இவளே ‘வாசவி’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறாள்.

    ஒரு சமயம் ஈசனும் அம்பாளும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். கயிலையின் முதன்மை காவலாளியான நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார். தான் சென்றால், இறைவனுக்கு காவல் வேண்டுமே என்பதற்காக, சமதி என்ற மகரிஷியிடம், தான் வரும் வரை கயிலையின் வாசலில் காவல் காக்கும்படியும், யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார்.

    சமதி முனிவரும் கண்ணும் கருத்துமாக காவல் காத்து வந்தார். அப்போது கோபத்திற்கு பிரசித்தி பெற்ற துர்வாச முனிவர், அங்கு வந்தார். அவரை சமதி மகரிஷி உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவரை, பூமியில் மனிதனாக பிறக்கும்படி துர்வாசர் சாபமிட்டார். அதன்படி சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார்.

    அதன்பின் வந்த நாள் ஒன்றில், ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது தன் காலிலும் விழாமல் அவமதித்து விட்டதாக நினைத்த பார்வதி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

    தவறு செய்யாத தன்னை சபித்ததால் பார்வதி மீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார்.

    அவர்கள் இருவரும், துர்வாசரால் சாபம் பெற்று ஏற்கனவே பூமியில் அரசராக வாழ்ந்து வந்த குசும ஸ்ரேஷ்டி- குசுமாம்பிகை தம்பதிக்கு பிள்ளை களாக பிறந்தனர். விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர்.

    வாசவாம்பா மணப் பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி, இந்த நாட்டிற்கு வந்தான். அவன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால் அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களில் தகவல் சொல்வதாகவும் கூறினார்.

    பின்னர் தன்னுடைய குலத்தைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி அரசன் விவாதித்தான். பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க, சம்மதம் தெரிவித்த 612 கோத்திரத்தார் தங்கள் குடும்பங்களுடன் ஊரை விட்டு வெளியேறினர்.

    இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, தன் திருமணம் தொடர்பாக வாதிட்டு, தன் இனத்தவர்கள் பிரிந்ததை நினைத்து வேதனை அடைந்தாள். தன்னால் தான் அனைவருக்கும் வேதனை என்று நினைத்தவள், தன் குலப்பெருமை காப்பதற்காக தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். அதற்கு பெரியவர்களின் சம்மதத்தையும் வாங்கினாள்.

    அதன்படி அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவியின் அக்னிப் பிரவேசம் நிகழ்ந்தது.

    வாசவி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள்.

    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    ஒரு நாளைக்கு 5 ஆயிரம் என்ற விகிதத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்” என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் “திரு” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்” ஆனது. அதுவே திருப்பத்தூர்.
    சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அஷ்ட பைரவர் தலங்கள் உள்ளன. பொதுவாக பைரவர், ஆடையில்லாமல், நாய் வாகனத்துடன் காட்சி தருவார். ஆனால், இவர் வெண்ணிற பட்டாடை அணிந்து, நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.

    முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி, கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் “புற்றீஸ்வரர்” எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது. புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்” என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் “திரு” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்” ஆனது. அதுவே திருப்பத்தூர். பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.

    சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவ பெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார். அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார்.

    இவரே இத்தலத்தில் “யோகபைரவராக” காட்சி தருகிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு “நாய்” வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். “ஆபத்துத்தாரண பைரவர்” என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.

    வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான். தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஜெயந்தனுக்கு இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார்.

    இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், “யோகநாராயணர்” என்று அழைக்கப் படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர். இராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. இராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.

    திருவிழா: சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பகசஷ்டி.

    காலை 5.30 முதல் 12.30வரை, மாலை 3.30 முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும்.

    சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், “அஷ்டபைரவ யாகம்” நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது.

    இருப்பிடம்: திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.

    அருள்மிகு வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில்,
    திருப்புத்தூர்,
    சிவகங்கை மாவட்டம்.
    சேவலின் தலை, மயில் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி மற்றும் மானின் கால்கள், மனிதனுடைய கை ஆகியவை இணைந்த உயிரினமே ‘நவ குஞ்சரம்.’
    மகாபாரதம் என்னும் மிகப்பெரிய இதிகாசத்தில், ஓரிடத்தில் ‘நவ குஞ்சரம்’ என்னும் விசித்திரமான பறவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒடிய மொழி கவிஞரான சரளதாசர் என்பவர் எழுதிய மகாபாரதக் கதையில்தான், இந்த நவ குஞ்சரம் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ‘நவ’ என்பது ‘ஒன்பது’ என்ற எண்ணைக் குறிக்கும். ‘நவ குஞ்சரம்’ என்பது, வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் இணைந்த, ஒரு அபூர்வ உயிரினத்தைக் குறிப்பதாகும். சேவலின் தலை, மயில் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி மற்றும் மானின் கால்கள், மனிதனுடைய கை ஆகியவை இணைந்த உயிரினமே ‘நவ குஞ்சரம்.’

    ஒரு முறை வனத்திற்குச் சென்ற அர்ச்சுனன், அங்கு மலை மீது அமர்ந்து கடுமையான தவம் புரிந்தான். அப்போது கிருஷ்ணர், நவ குஞ்சர உருவம் கொண்டு, அர்ச்சுனனின் முன்பாக வந்து நின்றார்.

    ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அர்ச்சுனன், தன் அருகில் இருந்த வில்லை எடுத்து, அதில் அம்பைப் பொருத்திய பின்னர், தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்தான். அப்போது தன் எதிரில் நின்ற அதிசய உயிரினத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். திகைக்கவும் செய்தான்.

    அந்த உயிரினத்தின் மனித கையில் ஒரு தாமரைப்பூ இருந்தது. அதைப் பார்த்த அர்ச்சுனனுக்கு, ஒரு முறை கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ‘மனிதர்களின் எண்ணங்கள், ஒரு வரையறைக்கு உட்பட்டவை. ஆனால் உலகமோ எல்லையற்றது’ என்ற அந்த வார்த்தையின் உண்மையை, அர்ச்சுனன் உணர்ந்தான்.

    ஆம்.. இந்த உலகத்தில் நாம் கண்டது மட்டுதான் இருப்பதாக எவரும் நினைக்கக்கூடாது. இதுவரை பார்த்திராத ஓர் உயிரினம், இன்னும் கூட இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று அர்ச்சுனன் புரிந்துகொண்டான். தன்னை சோதிப்பதற்காக கிருஷ்ணரே இந்த உருவத்தில் வந்ததாக உணர்ந்த அர்ச்சுனன், தன் கையில் இருந்த வில்லை கீழே போட்டு விட்டு, நவ குஞ்சரத்தை வணங்கினான் என்கிறது, அந்த மகாபாரதக் கதை.

    ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஓவிய பாணியான, ‘படா சித்ரா’ ஓவியத்தில் நவ குஞ்சரம் பல வகைகளிலும் வரையப்படுகிறது. பூரி ஜெகன்நாதர் கோவிலின் வடக்குபுரத்தில், நவகுஞ்சரத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
    பொய்யுரைக்காமல், புறம் பேசாமல், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் தனது மனோ இச்சைகளை அடக்கி பொறுமையாக நடந்து கொள்ளும் நோன்பாளிகளுக்கு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சுபச் செய்தி இது:
    கல் மனதையும் கரைந்து போகச் செய்து, அதனை இரக்கமுடையதாக மாற்றிடும் தன்மை என்பது, பசியினை உணர்வது கொண்டு நிகழ்வதாகும். அந்த பசியினை அனைவரும் உணர்ந்து தன்னை அறிய வேண்டும் என்பதே அருள்வளம் நிறைந்த ரமலானின் புண்ணிய நோக்கமாகும்.

    இறை உணர்வில் ‘தனித்து இரு’, இறைவனுக்கு நன்றி செலுத்தி அவனது அருளைப் பெற விழிப்புடன் ‘விழித்து இரு’, இறைவனை பற்றியும் அவனது வல்லமைகள் குறித்தும் அறிந்து கொள்வதில் ‘பசித்திரு’. (அதில் ஆவல் கொண்டவனாக இரு).

    “தனித்திரு-விழித்திரு-பசித்திரு” என்ற மூன்று நிலை பயிற்சிகளையும் செயல்படுத்தி காட்டிட கடமையாக்கப்பட்டது தான் ரமலான் நோன்பாகும். மனிதனின் பாவங்களை எரித்து அழித்து, நன்மைகளை அதிகமாக பெறும் வகையில் ரமலான் நோன்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

    மனித வாழ்வியலானது சிறந்தோங்க இஸ்லாம் வலியுறுத்தும் 5 கடமைகளில் 3-வது கடமையாக, நடுநாயகமாக நின்று முந்தைய இரண்டு கடமைகளான கலிமா (ஏகத்துவ உறுதி மொழி), தொழுகை என்ற ஞானப் பயிற்சி இவை இரண்டையும் ஓர்மையுடன் ஒழுங்காக நிறைவேற்றிட ரமலான் நோன்பு துணைபுரிகிறது.

    அதுபோன்று இஸ்லாத்தின் பிந்தைய கடமைகளான ஏழைகளுக்கு ஜக்காத் கொடுப்பதற்கும், சகோதர எண்ணத்தை மனதில் வளரச்செய்து ஹஜ் பயணத்தில் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்து எதிர்கொள்ள அடித்தளமிடுவது தான் ரமலான் நோன்பாகும்.

    11 மாதங்கள் விரும்பியதை சாப்பிட்டு மகிழ்ந்த மனித மனதை, வருடத்தில் ஒரு மாதம் உடலாலும் மனதாலும் செயலாலும் பசித்திருக்கச் செய்து மனிதனை ஞானப்பக்குவ நிலைக்கு உயர்த்துவது தான் ரமலான் நோன்பாகும்.

    சுகபோகங்கள் எல்லாம் தன்னைச் சூழ இருந்த போதிலும் அதனை பகல் பொழுதில் தீண்டாமல் இருந்து, ஐம்புலன்களையும் அடக்கி, அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற பயிற்சியினை தருவதும் ரமாலான் நோன்பாகும்.

    இது மனித மனங்களில் ஏற்படும் பாவமான எண்ணங்களை எல்லாம் போக்கி, அதனைப் பரிசுத்தப்படுத்திட உதவுகிறது. பிறரின் இன்னல்களை, கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவுவதற்கும் இந்த ரமலான் நோன்பு துணை செய்கிறது.

    பொய்யுரைக்காமல், புறம் பேசாமல், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் தனது மனோ இச்சைகளை அடக்கி பொறுமையாக நடந்து கொள்ளும் நோன்பாளிகளுக்கு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சுபச் செய்தி இது:

    “சொர்கத்தில் ‘ரய்யான்’ என்ற நுழையும் வாசல் உள்ளது, மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். நோன்பாளிகளை தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்”. (நூல்: புகாரி)

    ரமலானின் சிறப்பை நாம் உணர்ந்திட வேண்டும் என்பதற்காக நபிகளார் ரமலான் மாதம் தொடங்க இரண்டு மாதங்கள் முன்பிருந்தே இவ்வாறு பிரார்த்தனை புரிய தொடங்கி விடுவார்கள், “யா அல்லாஹ், எங்களுக்கு நீ ரஜப், ஷஅபான் மாதங்களில் ‘பரகத்’ என்ற நல்வளர்ச்சியினை தந்து, ரமலான் மாதத்தை அடைந்திடும் நற்பேற்றினையும் எங்களுக்கு அருள்வாயாக, என்பார்கள்”, (நூல்: புகாரி).

    அன்பு, இரக்கம், பிரியம் ஆதரவு, தர்மம், ஒழுக்கம், பண்பாடு, பணிவு இணக்கம், வணக்கம் போன்ற நற்செயல்களை வளர்த்து காமம், பேராசை, போட்டி, பொறாமை, விரோதம், குரோதம், கர்வம் போன்ற கீழான செயல்களை தடுப்பதும் ரமலானின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

    பாவங்களை எரித்து, அதனை கரித்திடும் ரம்மியம் மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடித்து இறைவனின் பேரன்பை அனைவரும் பெற்றிடுவோம்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    கும்பகோணத்தில் தண்ணீரின்றி காணப்படும் பொற்றாமரை குளத்தை தூர்வாரி சீரமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புண்ணிய குளமான பொற்றாமரை குளத்தில் தான் தாமரை மலரில் இருந்து மகாலட்சுமியான கோமளவல்லி தாயார் தவமிருந்து சாரங்கபாணியை திருமணம் செய்தார் என்பது புராண வரலாறு. சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த புனித குளத்தில் ஆண்டு தோறும் மாசிமகத்திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த குளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மாகாமத்தின் பொழுது ரூ.72 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்றது.

    மேலும், குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக காவிர் ஆற்றிலிருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக காவிரி ஆற்றிலிருந்து ரெட்டியார்குளம் வடக்கு, ரெட்டியார்குளம் கிழக்கு, கும்பேஸ்வரர்கோவில் திருமஞ்சன வீதி, வடக்குவீதி வழியாக பொற்றாமரை குளத்திற்கு பிளாஸ்டிக் குழாய் பூமிக்கு அடியில் பதிக்கபட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் போது பொற்றாமரை குளம் நிரம்பியது.

    இந்தநிலையில் கடந்த மாசிமகத்தின் போது பொற்றாமரை குளத்துக்கு தண்ணீர் நிரப்பட்டது. தெப்பத்திருவிழாவும் நடைபெற்றது. பின்னர் கோடைகாலம் நெருங்கநெருங்க குளத்தில் இருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்ற தொடங்கியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தற்போது இந்த குளம் தண்ணீர் இல்லாமல் வற்றி உள்ளது. இதனால் குளம் முழுவதும் செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளது.

    இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

    ஆண்டு தோறும் இந்த பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதற்காக காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பி வந்தனர். இதனால், இந்த குளத்தை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். மாலை நேரங்களில் இந்த குளத்தின் அருகில் வரும் போது குளிர்ந்த காற்று வீசும். இதனால் இது மனதுக்கு இதமாக இருக்கும், தற்போது இந்த குளம் வறண்டு காணப்படுகிறது. குளத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கியிருக வேண்டும். எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீரின்றி காய்ந்து செடிகள், கோரைப்புற்கள் முளைத்துள்ள குளத்தை சுத்தம் செய்து, குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
    நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 1

    வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 2

    கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா பாவங்களையும் அழிப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 3

    உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
    மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 4

    அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 5

    முதலும் முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 6

    பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 7

    பத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்.
    ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 8

    தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவள். பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவள். பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா 9 மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர். ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம் மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா 10 தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.
    சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன.
    சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஐந்து வகையான முக்கிய பிரதோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஏகாட்சர பிரதோஷம்

    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    பிரம்மப் பிரதோஷம்

    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம், தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    அர்த்தநாரி பிரதோஷம்

    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    திரிகரண பிரதோஷம்

    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால், அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    அட்சரப் பிரதோஷம்

    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால், அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள், `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
    மன பயம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீரலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
    தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
    ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா

     அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
    சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
    தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே

    - வீரலக்ஷ்மி ஸ்லோகம்

    பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.
    ×