என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் முடிக்காணிக்கை செய்தும், கரும்பு தொட்டில்களில் குழந்தையை சுமந்தும் கோவிலை வலம் வந்தனர்.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு அரசு தடை விதித்து இருந்தது. தற்போது, தளர்வு காரணமாக கோவில்களில் சாமியை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அமாவாசையான நேற்று சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் முடிக்காணிக்கை செய்தும், கரும்பு தொட்டில்களில் குழந்தையை சுமந்தும் கோவிலை வலம் வந்தனர். மேலும், விளக்கு ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

    அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு கிருமி நாசினி தெளித்தும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னர், முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு உள்ளே செல்ல கோவில் பணியாளர்கள் அனுமதித்தனர். மேலும் திருச்சியிலிருந்து சமயபுரம் நோக்கி வந்த அனைத்து பஸ்களும், புதிய பஸ் நிலையம் வரை மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசை விழாவான நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து விழாக்களும் நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இருந்தாலும் ஆனி மாத அமாவாசை விழாவான நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    பாரம்பரியம் மாறாமல் உட்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் மதுரகாளி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் அசைந்தாடியபடி அருள்பாலித்தார். பக்தர்கள் அனுமதியின்றி சமூக இடைவெளியுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஊஞ்சல் உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    ஆனி அமாவாசையையொட்டி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தென்மாவட்ட அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெறும்.

    நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் பத்ரகாளி அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை, சேலைகள் சாத்தி வழிபடுவார்கள்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு தடை விதித்திருந்தது. கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது. அது முதல் தினமும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று ஆனி அமாவாசைையயொட்டி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். முககவசம் அணிந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினி கைகளில் கழுவிய பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் சென்றனர்.

    உச்சிக்கால பூஜையின் போது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசனம் முடிந்த பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக வெளியே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வெளியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நெடுந்தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.பின்பு போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றன. இதேபோல் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோவிலிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்ற ஊஞ்சல் சேவையின் போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 5-ம் தேதியில் இருந்து கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஊஞ்சல் சேவையின் போது சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பக்தர்கள் முகக்கசவம் அணிந்து சமூக இடைவெளியுடனும் சாமி தரிசனம் செய்தனர்.
    நமது சுய ஜாதகத்தில் எந்த திசை, எந்த புத்தி நடக்கின்றது என்பதைப் பார்த்து அதற்குரிய தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும்.
    நமது சுய ஜாதகத்தில் எந்த திசை, எந்த புத்தி நடக்கின்றது என்பதைப் பார்த்து அதற்குரிய தெய்வ வழிபாடுகளை நாம் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும்.

    குறிப்பாக செவ்வாய் திசையில் சனி புத்தியோ, வியாழன் திசையில் சுக்ர புத்தியோ நடைபெறுமேயானால் அந்த ஜாதகருக்குத் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. ஆரோக்கியத் தொல்லையும் உண்டு. அருகில் இருப்பவர்களாலும் தொல்லை ஏற்படலாம். இதுபோன்ற பகை கிரகத்தின் திசாபுத்தி நடைபெறும் பொழுது வைரவர் வழிபாடும், வராஹி வழிபாடும், துர்க்கை வழிபாடும், பிரதோஷ காலத்தில் நந்தி தேவர் வழிபாடும் நன்மைகளை வழங்கும்.

    பொதுவாக சூரிய திசை நட்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

    சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

    செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் தரும்.

    புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

    வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

    சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

    சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

    ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வரவும்.
    ஆனி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆனி மாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹரநாத சாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊரடங்கு காரணமாக 2 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, கம்பு கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

     அதன்படி நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, கம்பு கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி யில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு விடுமுறை நாட்களில் தமிழகத்தில் பல்வேறுமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது.

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் வருகிற 12 -ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.

    அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகின்றனர். இதனால் பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. கடல் சீற்றத்தினால் கடற்கரையில் உள்ள மணல் அரிக்கப்பட்டுள்ளதால் கரையில் சுற்றுலா பயணிகள் நின்று கடலின் அழகை ரசிக்க முடியவில்லை.

    ஓட்டல்கள், அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், முடி எடுக்கும் கடைகள். பூ கடைகள். மெழுகுவர்த்தி கடைகளில் ஒரு சில வாடிக்கையாளர்களே இருந்தனர்.

    மேலும் பொரி, பட்டானி கடைகள் உள்ளிட்டவைகள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
    ஆஷாட நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    தஞ்சை பெரியகோவிலில் வராஹி    அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது.

    பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான இனிப்புகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வராஹி அம்மனுக்கு இன்று (சனிக்கிழமை) மாலை மஞ்சள் அலங்காரமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) குங்கும அலங்காரமும், 12-ந் தேதி சந்தன அலங்காரமும், 13-ந் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14-ந் தேதி மாதுளை அலங்காரமும், 15-ந் தேதி நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.

    ஆஷாட  நவராத்திரி   விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம்  வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆனி அமாவாசையையொட்டி, மறைந்த முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் செய்தனர்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையிலும் ஒவ்வொரு அமாவாசையன்றும் மறைந்த முன்னோர்களுக்கு உறவினர்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அங்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது ஊரடங்கில் பெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், திருச்சி அம்மா மண்டபத்திலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த உறவினர்கள், நேற்று ஆனி அமாவாசையையொட்டி ஏராளமானோர் அம்மா மண்டபம் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால், அம்மா மண்டபம் படித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பகுதியில் திருச்சி மாநகராட்சி சார்பில் இலவச ஆர்.டி.-பி.சி.ஆர். என்னும் கொரோனா பரிசோதனை முகாமும் நடைபெற்றது. படித்துறைக்கு வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். அங்குபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து வரும்படியும் அறிவுறுத்தினர்.

    அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த புண்ணியம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பித்ரு தோஷம் நீங்கும் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
    ஆனி அமாவாசை வெள்ளிக்கிழமையான நேற்று திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்த சிறப்பு நாளாக அமைந்தது. இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த புண்ணியம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பித்ரு தோஷம் நீங்கும் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க நாளான நேற்று ஏராளமானோர் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    இதையொட்டி திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில் தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றன. இதற்காக நேற்று அதிகாலையிலேயே ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க அங்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள், வாழைஇலை விரித்து அதில் அரிசி, காய்கறிகள், பூ, பழம் வைத்து புரோகிதர்கள் மந்திரங்கள் கூற முன்னோர்களை நினைத்து எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து சூடம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் தர்ப்பணம் கொடுத்த அரிசியில் சிறிதளவு வீட்டிற்கு எடுத்துச்சென்று சமையலில் சேர்த்து விரதம் விட்டனர். மேலும் பலர் அன்னதானம் செய்து, பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை வாங்கி, உண்ண கொடுத்து விரதத்தை நிறைவு செய்தனர்.
    முருகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.
    கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
    கவலையை நீ விடுவாய் - மனமே
    கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
    மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

    சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்
    செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்
    சரவணன் அவனே ஷண்முகன் அவனே
    சிவசக்தி வடிவானவன் - முருகன்.

    தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்
    தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்
    தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற
    ஸ்வாமிமலையில் நின்றான் - தகப்பன்
    சாமியாக நின்றான்.

    பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்
    பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்
    பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்
    பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் - திருப்பரங்குன்றில்.

    கந்தனும் வருவான் காட்சியும் தருவான்
    கவலையை நீ விடுவாய் - மனமே
    கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை
    மறவாமல் நீ இருப்பாய் - மனமே.

    முருகா சரணம்.
    ×