என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஆடி மாதம் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்தது. அம்மன் வழிபாடு, ஆடி மாத விரதத்தின் சிறப்புகள் பற்றிய விவரமாக அறிந்து கொள்ளலாம்.
    ஆடி மாதம்   விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்தது. அம்மன் வழிபாடு, ஆடி மாத விரதத்தின் சிறப்புகள் பற்றிய விவரம்:-

    *
    ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

    * ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

    * ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    * ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ‘அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    * ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப் படுகிறது.

    * ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

    * தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது.

    * கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

    * ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    * ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    * தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    * ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவஎன்பது பக்தர்களின் நம்பிக்கை.

    * ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

    * ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    * ஆடி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    * ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

    * ஆடி மாதம்  விரதம் இருந்து முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

    -தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ்
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி வரை 9 நாட்கள் கனகாம்பரம், கோடி மல்லி பூக்களால் மகா புஷ்ப யாகம் நடக்கிறது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி வரை 9 நாட்கள் கனகாம்பரம், கோடி மல்லி பூக்களால் மகா புஷ்ப யாகம் நடக்கிறது.

    அதையொட்டி ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாவதனம், ரக்‌ஷா பந்தனம், அனுஜ்னா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந்தேதி காலை 10.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை மகாபூர்ணஹூதி நடக்கிறது.

    இதோடு மகா புஷ்ப யாகம் நிறைவடைகிறது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்படுகிறது.
    அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் நடைபெற தடை உள்ளது. இதன் காரணமாக ஆடி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் அழகர் கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்களின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    11 நாட்கள் நடைபெறும் ஆடி பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கொடியேற்றம் காலை 7.15 மணிக்கு நடந்தது.

    கொரோனா பரவல் காரணமாக காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடியேற்ற நிகழ்வின் போது கள்ளழகர் என்ற சுந்தர ராஜப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியர்களுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    கொடியேற்ற நிகழ்ச்சியின் போது பக்தர்கள் அனுமதிப்படாததால் அதிகாலை முதலே அழகர் கோவிலில் குவிந்தனர்.

    கோட்டைவாசல் முன்பு நீண்ட நேரம் காத்திருந்து நிகழ்ச்சிகள் முடிந்தபின் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.
    நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலை நகரான நாமக்கல் நகரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. .நாமக்கல் மலைக்கோட்டையின் கீழ் நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனி கோவிலில் காட்சி தருகிறார். .ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும் லட்சுமிதேவிக்கும் காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் உள்ளது.. இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடியாகும் பிரமாண்டமாக இந்த சிலை காட்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான்.

    இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார். மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.

    ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்  என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கு விட்டு கிளம்பினார். இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.

    ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு.  இந்நகருக்கு சுமார் 10 மைல்  தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட “சதுரகிரி”  என்னும் பெருமை வாய்ந்த “கொல்லி மலை” இருக்கிறது.  இங்கு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை  மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை  சாத்துதல், பூ மாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகின்றன.  தவிர  வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.

    பொதுவாக சனியால் பீடிக்கப்பட்டோர் சனிதோஷம், ஏழரை சனி, ஜென்மச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி என அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.
    மாலை 6 மணிக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் புஷ்பப் பல்லக்கில் பவனி வருகிறார்.
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி மாத கடைசி நாளன்று ஆனி வர ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம். ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள் கொண்டு செல்லப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.

    இன்று காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூ மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    9 மணிக்கு கடந்த ஆண்டு கோவிலுக்கு உண்டான வரவு, செலவு கணக்குகள் ஏழுமலையான் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன.

    மாலை 6 மணிக்கு வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் புஷ்பப் பல்லக்கில் பவனி வருகிறார்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தேர் பவனியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் தேர் பவனியில் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தரிசன நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி  :

    ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநில அரசு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.

    இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தரிசன நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு கோவிலில் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்ய வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை கோவிலில் வழக்கம்போல் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை நடக்கும். அதேபோல் கோவிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், எனக் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம்
    விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு. ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’, ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று அர்த்தம். வெண்மை நிற பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டவன் என்பதால் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம்

    விஷ்ணு காயத்ரி மந்திரம் : ஓம் நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி, தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் – பரம்பொருளான நாராயணனை அறிவோம். வாசுதேவன் மீது தியானம் செய்வோம். விஷ்ணுவாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வான் என்பது இதன் பொருளாகும். விஷ்ணுவை வழிபடும் போது, தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.

    விஷ்ணு காயத்ரி மந்திரம்: ஓம் நிரஞ்சனாய வித்மஹே, நிராபாஸாய தீமஹி, தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத். – விஷ்ணு பகவானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதால் நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்; லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்
    திருவானைக்காவல் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி காவிரியில் இருந்து வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4 மணியளவில் கோவிலிலிருந்து அர்ச்சகர்கள் காவிரிகரைக்கு சென்று வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து அதை கோவில் யானை அகிலா மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    அந்த புனிதநீரால் இரவு 7.30 மணிக்கு சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆனந்த நடராஜர் தரிசனம் நடைபெறும். பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் பின்னர் நடராஜரும், சிவகாமி அம்மனும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பகல் 12 மணிக்கு திருஅன்னப்பாவடை நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று வராகி அம்மன் நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
     
    3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    4-ம் நாளான 13-ம் தேதி வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    5-ம் நாளான நேற்று மாலை மாதுளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    6-ம் நாளான நேற்று வராஹி அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை வெண்ணெய் அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.

    ஆஷாட  நவராத்திரி விழா வருகிற 19-ந் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம்  வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய நடராஜப்பெருமானுக்கும் - சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு ஆனி உத்திரத்தையொட்டி திருமஞ்சன உற்சவம் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய நடராஜப்பெருமானுக்கும் - சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை பெரியகோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இதில் வராஹி அம்மனுக்கு தற்போது 10 நாட்கள் நடைபெறும் ஆஷாட  நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

    நடராஜருக்கு ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

    பின்னர் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், கொரேனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆனி திருமஞ்சன விழா எளிமையான முறையில் நடந்தது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், கொரேனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆனி திருமஞ்சன விழா எளிமையான முறையில் நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சபா மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம் என 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு சாமி வீதி உலா நடைபெறவில்லை. இருப்பினும் விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கலந்து கொண்டும் சாமியை தரிசனம் செய்தனர்.
    ×