என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.

    விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    2-ம் நாளான 13-ம் தேதி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும். சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    8-ம் நாளான இன்று குதிரை, 9-ம் நாள் இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடப்பு ஆண்டில் வைகாசி விசாக திருவிழா, ஆனி ஊஞ்சல் திருவிழாக்கள் கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
    தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பன்னிரண்டு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி கார்த்திகை, 1008 திருவிளக்குபூஜை என்று முக்கிய திருவிழாக்கள் நடைபெறும்.

    ஆடிக்கார்த்திகை திருவிழா கொண்டாடத்திற்காகவே சன்னதி தெருவில் சுவாமி எழுந்தருளக்கூடிய ஆடிக்கார்த்திகை மண்டபம் அமைந்து இருப்பது தனி சிறப்பு. ஆடிக்கார்த்திகை அன்று கோவிலிருந்து சுப்பிரமணியசுவாமி(உற்சவர்) தெய்வானையுடன் எழுந்தருளி காலை முதல் மாலைவரை ஆடிக் கார்த்திகை மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு இரவு 7 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடிப்பூரத்தன்று கோவர்த்தனாம்பிகை மட்டும் எழுந்தருளுவது சிறப்பாகும்

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் 1008 திருவிளக்குபூஜை நடைபெறும். இந்த நாளில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். கடந்த 2019-ம் ஆண்டு வரை இந்த நடைமுறை காலம், காலமாக தொன்று தொட்டு நடைபெற்றது. ஆனால் கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஊரடங்கையொட்டி ஆடிக்கார்த்திகை, ஆடிப்பூரம் திருவிழாக்கள் உள் திருவிழாவாக நடைபெற்றது. இதே சமயம் 1008 திருவிளக்கு பூஜை ரத்து செய்யப்பட்டது.

    இந்தநிலையில் நடப்பு ஆண்டில் வைகாசி விசாக திருவிழா, ஆனி ஊஞ்சல் திருவிழாக்கள் கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் ரத்து செய்தது. இந்த நிலையில் ஆடிக் கார்த்திகை, ஆடிப்பூரம், 1008 திருவிளக்குபூஜை மற்றும் ஆடிப் பவுணர்மி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுமா? என்று பக்தர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது ஊரடங்கால் கோவில் திருவிழாக்களை வெளியில் நடத்தவில்லை என்றாலும் மற்ற கோவில்கள் போல கோவிலுக்குள் உள்திருவிழாவாக நடத்த வேண்டும் என்றனர்.
    ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். எனினும் கடந்த சில நாட்களாக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை.

    இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திரளான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது. அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த கோவிலில் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபடுவது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. எனவே இந்த வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    ஸ்ரீமன் நாராயணனின் பல்வேறு திருநாமத்தைத் தினசரி சொல்லுங்கள். தினமும் சொல்ல முடியாதவர்கள் சனிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நற்பயன்களை பெறலாம்.
    ஸ்ரீமன் நாராயணனின் பல்வேறு திருநாமத்தைத் தினசரி சொல்லுங்கள்.

    ஓம் ஹரி, ஸ்ரீஹரி, முரஹரி, நரஹரி, க்ருஷ்ணாஹரி, அம்புஜாக்ஷா, அச்சுதா, உச்சிதா, பஞ்சாயுதா, பாண்டவ தூதா, லக்ஷ்மீ ஸமேதா, லீலாவிநோதா, கமலபாதா, ஆதீ மத்யாந்த ரஹிதா, அநாதரக்ஷகா, அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்டநாயகா, பரமானந்த முகுந்தா, வைகுந்தா, கோவிந்தா.

    பச்சைவண்ணா, கார்வண்ணா, பன்னகசயனா, கமலக்கண்ணா, ஜனார்தனா, கருடவாஹனா, ராக்ஷஸமர்த்தனா, காளிங்கநர்த்தனா, சேஷசயனா, நாராயணா, பிரம்மபாராயணா, வாமணா, நந்த நந்தனா, மதுஸூதனா, பரிபூரணா, சர்வகாரணா, வெங்கடரமணா, சங்கடஹரணா, ஸ்ரீதரா, துளஸீதரா, தாமோதரா, பீதாம்பரா, சீதா மனோஹரா, மச்சகச்ச வராஹாவதாரா, பலபத்ரா, சங்கு சக்ரா, பரமேஸ்வரா, ஸர்வேஸ்வரா, கருணாகரா, ராதா மநோஹரா, ஸ்ரீரங்கா, ஹரிரங்கா, பாண்டுரங்கா, லோகநாயகா, பத்மநாபா, திவ்ய ஸ்வரூபா.

    புண்ய புருஷா, புருஷோத்தமா, ஸ்ரீராமா, ஹரிராமா, பரந்தாமா, ந்ரஸிம்ஹா, த்ரிவிக்ரமா, பரசுராமா, ஸஹஸ்ர நாமா, பக்த வத்சலா, பரமதயாளா, தேவானுகூலா, ஆதிமூலா, ஸ்ரீலோகா, வேணுகோபாலா, மாதவா, மாதவா, ராகவா, கேசவா, வாஸுதேவா, தேவதேவா, ஆதிதேவா, ஆபத்பாந்தவா, மஹானுபாவா, வஸுதேவதனயா, தசரத தனயா, மாயாவிலாசா, வைகுண்டவாசா, சுயம் ப்ரகாசா, ஸ்ரீவெங்கடேசா, மாயா, ஆயா, வெண்ணெயுண்ட சேயா, அண்டாகளேத்தும் தூயா, உலகமுண்டவாயா, நானா உபாயா, பக்தர்கள் சகாயா  சதுர்புஜா, கருடத்வஜா, கோதண்டஹஸ்தா, புண்டரீகவரதா,

    ஓம் விஷ்ணோ, ஓம் பரந்தாமா,  ஓம் பரமதயாளா, ஓம் நமோ நாராயணா, ஸ்ரீமத் நாராயண ஸரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம: ஸ்ரீமதே ஆதிநாராயணாய நம: ஸ்ரீமதே லக்ஷ்மீ நாராயணாய நம: ஸ்ரீமதே ஸுர்ய நாராயணாய நம: ஸ்ரீமதே சங்கர நாராயணாய நம. ஓம் கோவிந்த கோவிந்த, ஓம் கோபால கோபால கோபாலா.
    ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நேற்று காய்கறி அலங்காரத்தில் வராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    4-ம் நாளான 13-ம் தேதி வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    5-ம் நாளான 14-ம்தேதி மாலை மாதுளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    6-ம் நாளான 15-ம் தேதி வராஹி அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டது.

    7-ம் நாளான 16-ம் தேதி வராஹி அம்மனுக்கு  வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது.

    9-ம் நாளான நேற்று காய்கறி அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்றுடன் ஆஷாட  நவராத்திரி விழா நிறைவடைகிறது. அன்றைய தினம்  வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
    கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான பக்தர்களே கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    கடையம் அத்ரி மலை கோவிலில் நித்திய பூஜைகளுக்கு வனத்துறையினர் விதித்த தடையால் கடந்த 3 ஆண்டுகளாக நித்திய பூஜைகள் நடைபெறாமல் இருந்தது.
    கடையம் அருகே உள்ள கடனாநதி அணைப்பகுதிக்கு மேல் அமைந்துள்ளது அத்ரி மலை கோவில். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் நித்திய பூஜைகளுக்கு வனத்துறையினர் விதித்த தடையால் கடந்த 3 ஆண்டுகளாக நித்திய பூஜைகள் நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையம் பகுதிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், கோவிலில் நித்திய பூஜைகள் நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து நித்திய பூஜைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, நேற்று முதல் அத்ரி மலைக்கோவிலில் நித்திய பூஜைகள் நடைபெற தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.
    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி சனீஸ்வரர் கோவிலும் திறக்கப்பட்டது.
    உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக சனீஸ்வரர் கோவில் மூடப்பட்டது.

    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி சனீஸ்வரர் கோவிலும் திறக்கப்பட்டது.

    அரசு அனுமதித்துள்ளதையடுத்து புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். ஆனால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகவே இருந்தது.

    கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனவே பக்தர்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு.
    மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து 281 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓங்காரம். இங்கு ஓம்காரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அமலேஸ்வரர் என்றும் இவரை அழைப்பார்கள். இது மலை முகட்டில் உள்ள சுயம்புலிங்கமாகும். இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு.

    இங்கு ஜோதிர்லிங்கம் தோன்றக் காரணமான விந்திய மலை, முதலில் ஓம்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து, அதில் சிவலிங்கம் வைத்துப் பூஜித்ததால் இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது என்பர். மற்றும் ஒரு காரணம் கூறுகின்றனர். நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று கூடி, ஓங்காரத்தின் வரிவடிவம் போலக் காட்சி தருவதால், இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது எனவும் கூறுகின்றனர். கோயில் மூன்று அடுக்குகளாக உள்ளது. கீழ் தட்டில் ஓங்காரீசுவரரும், நடுத்தட்டில் மகாகாளரும், மூன்றாம் தட்டில் சித்தீசுவரரும் உள்ளனர். மூலஸ்தானத்தில் உள்ள ஓங்காரீசுவரர் மீது, கீழே இருபனைமர ஆழத்திலுள்ள நர்மதை ஆற்று நீர் மேலே வந்து தானே அபிஷேகம் ஆகிறது.

    சிவபெருமானை மாந்தாதா வழிபட்ட தலம் ஓம்காரேஷ்வர். யாக வேள்விகளுடன் முக்கடவுள்களையும் மகிழ்வித்த மாந்தாதா பதிலுக்குப் பெற்றது சிவபெருமானின் இந்த ஓம்கார லிங்கத்துடன் தானும் வாசம் செய்யவேண்டும் என்பது மட்டுமே. ஓம்கார மாந்தாதா என்றே இந்தச் சிறு குன்று இன்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குன்றை சிரத்தையுடன் பக்தர்கள் வலம் வருகின்றனர். பரிக்கிரமா என்ற கிரிப்பிரதட்சண வழியில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல அமைந்துள்ளன. ஓம்காரேஷ்வர் நர்மதையின் போக்கில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் அதிக புனிதமும் முக்கியத்துவம் பெற்றது  ஓம்காரேஷ்வரர் தீர்த்தம். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் உறைந்திருக்கும் தலம் இது என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    நூற்றியெட்டு சிவலிங்கங்களைப் பெற்ற புண்ணியத் தலம். சிவபுரி, விஷ்ணுபுரி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. ஓம்காரேஷ்வர். சிவபுரியில் ஓம்காரேஷ்வர் எனவும், விஷ்ணுபுரியில் அமரேஸ்வர் (அல்லது மமல்லேஷ்வர்) எனவும் இறைவர் எழுந்தருளியுள்ளார். ஓம்காரேஷ்வர், மாந்தாதா என்ற திருநாமத்தாலேயே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறார். நர்மதையும் காவேரி எனப்படும் அதன் துணை நதியும் சங்கமமாகும் இடம் ஓம்காரேஷ்வர். இரண்டு நதிகளும் அவற்றின் போக்கில் ஓம்காரா மாந்தாதா என்ற குன்றுள்ள தீவை ஏற்படுத்தி உள்ளன. குன்றும் இரு பாகங்களாகப் பிரிந்திருப்பதால் மேற்புறத்திலிருந்து நோக்கும்போது இத்தீவு ஓம் என்ற எழுத்தைப் பிரதிபலிக்கிறது. விந்திய மலை தன் வளர்ச்சிக்காக ஓம்காரேஷ்வரை வேண்டியது. தேவர்கள் பின்னர் வேண்டியதற்கு இணங்க இறைவர் ஓம்காரேஷ்வர், அமரேஸ்வர் இரண்டு லிங்கங்களாகப் பிரிகிறார்.

    ஒரு முறை நாரதமுனி விந்திய மலைப் பகுதியில் சஞ்சரித்து விந்தியராஜனைக் காண்கின்றார். அவரைத் தொழுது வணங்கிய கிரிராஜன் சகல வளங்களுடன் மேன்மையையும் கீர்த்தியும் உடைய விந்திய பர்வதம் தாங்கள் வருகையால் மேலும் மேன்மை பெறுகிறது என கர்வமும் பெருமையும் பொங்க உரைக்கிறான். கிரிராஜனுக்கு ஆசி வழங்கிய நாரதர் பதிலுக்கு ஒரு பெருமூச்சை மட்டும் எழுப்புகிறார். துணுக்குற்ற விந்தியராஜன், என்ன நாரதரே, பெருமூச்சு விடுகிறீர்கள்? விந்திய பர்வதத்துக்கு என்ன குறை? என்று வினவுகிறான்.

    அப்போது மேரு மலையின் சிகரங்கள் எப்படி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்திருக்கின்றன என்பதை நாரதர் விந்தியராஜனுக்கு விளக்குகிறார். எனவே, மேரு மலையின் உச்சத்தை விஞ்ச எண்ணிய விந்தியராஜன் ஓம்காரேஷ்வர் தலத்துக்கு வந்து மண் வடிவில் சிவலிங்கத்தை எழுப்பி கடுந்தவம் புரியலானான். ஆறு மாத காலம் இம்மியளவும் அசையாமல் கடும் தவம் இருந்த விந்தியராஜனின் பக்தியை மெச்சிய ஈஸ்வரன், கிரிராஜனுக்கு வேண்டிய வரத்தையும் அளிக்கிறார் (பின்னர் விந்திய மலையின் வளர்ச்சியை நிறுத்த அகஸ்தியர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்துவிட்டுத் தெற்கிலேயே தங்கிவிடுகிறார்).

    விந்தியராஜனுக்கு வரமளிக்கத் தோன்றிய இறைவனை தேவர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் ஓம்காரேஷ்வரிலேயே நிலையாகத் தங்கும்படி இறைஞ்சுகின்றனர். அதுவரை பிரவண சொரூபமாய் ஒன்றாக இருந்த ஓம்கார் லிங்கம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பாதி சதாசிவமாக ஓம்காரேஷ்வர் ஆகிறது. மறுபாதி மண் லிங்கத்துடன் ஜோதியாய்க் கலந்து அமரேஸ்வர் அல்லது மமலேஷ்வர் ஆகிறது. இவ்விரண்டும் ஓம்காரேஷ்வர் தீர்த்தத்தின் இருகரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. காவேரி என்கின்ற சிறிய நதி ஓம்காரேஷ்வர் அருகில் நர்மதையுடன் இணைகிறது. விசித்திரம் என்னவென்றால் அது நர்மதையை இரண்டு முறை சந்திக்கிறது. முதல் முறை அது நர்மதை நதியுடன் கலக்காமல் கடந்து செல்வதாக நம்பப்படுகிறது! மாந்தாதா குன்றை வலம் வந்த பின் காவேரி நர்மதையுடன் இணைகிறது எனக் கருதுவோரும் உண்டு.
    ஆடி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ஆடி மாத பிறப்பையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பழம், சந்தனம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பகவதி அம்மன், காளியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர், திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதேபோல் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான சேவையில் மின் இழுவை ரெயில் மட்டும் இயக்கப்படுவதால் நேற்று அங்கு கூட்டம் காணப்பட்டது.

    மேலும் பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பக்தர்களின் நலனுக்காக கோவில் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டது.

    இதற்கிடையே மாத பிறப்பையொட்டி மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற தென்திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவில் (ஸ்ரீவாரி ஆனந்த நிலையம்) உள்ளது. இந்த கோவிலில் பூராபிஷேகம், தட்சிணாயன புண்ணிய காலம் மற்றும் ஆனி வரை ஆஸ்தான நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாலை 5.55 மணிக்கு சுப்ரபாதத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது அதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், காலை நேர பூஜை, பூராபிஷேகம், ஆஸ்தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 5.15 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க மாடவீதியில் திருவீதி உலா நடைபெற்றது. இதை யடுத்து மாலை நேர பூஜைகள், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
    ஆடி மாதப் பிறப்பையொட்டி கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று திரளான பக்தர்கள் வந்தனர்.
    ஆடி மாதப் பிறப்பையொட்டி கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று திரளான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் கோவிலில் வரிசையாக சென்று அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து, ராஜகோபுரம் முன்பு அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போலீசார், கோவில் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் இணைந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று பெரும்பாலான பக்தர்கள் முகக் கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிப்பதை கோவில் நிர்வாகமும் போலீசாரும் உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
    ×