என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகாலக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
    காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

    ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.  

    கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே ஸரஸ்வதீ கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

    நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
    கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர் களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!
    பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    தென்னகத்தின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதேபோல் புதுமண தம்பதிகளும் பவானி கூடுதுறையில் காவிரி தாயை வணங்கி கல்யாணத்தன்று அணிவித்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். மேலும் தாலியும் மாற்றிக் கட்டுவார்கள்.

    பின்னர் புதுமணத் தம்பதிகள் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம்  ஆடிப்பெருக்கு விழா அன்று கோவில்களில் வழிபடவோ, நீர் நிலைகளில் நீராடவோ தடை விதித்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதனையடுத்து இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட ஈரோடு மக்கள் தயாராகி வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக சென்னை, கோவையை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

    இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடிப்பெருக்கு விழாவில் பொது மக்கள் கோவில்களில் சென்று வழிபடவோ, நீர் நிலைகளில் புனித நீராடவோ இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் கொடுமுடி, கொடிவேரி ஆகிய இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆற்றுக்கு செல்லும் வழிகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் சத்திய மங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சிவகிரி தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்பட 19 கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் இன்று அந்தந்த கோவில் பூசாரிகளால் நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் பவானிசாகர் அணையில் உள்ள பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பூங்காவிற்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மேலும் பூங்காவை சுற்றி உள்ள 75 மீன் கடைகளும் இன்று முதல் 3 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் வழக்கத்தை விட ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி களைகட்டியது. பலர் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையடித்து வழிபட்டனர்.
    மதுரை

    ஆடி மாதத்தின் 18-ந் தேதி ஆடிப்பெருக்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடி வழி படுவார்கள்.

    குறிப்பாக புதுமண தம்பதிகள் தாலி மாற்றி ஆடிப்பெருக்கை கொண்டாடுவார்கள். இந்நாளில் எந்த நல்ல காரியங்கள் தொடங்கினாலும் சிறப்பானதாகவும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    மதுரை மாவட்டத்தில் நீராதாரமாக உள்ள வைகை ஆற்றில் வருடத்தில் பல மாதங்கள் தண்ணீர் இன்றி காணப்படும். இதனால் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி வைகை ஆற்றங்கரையில் நடப்பது அரிதாகவே இருக்கும்.

    இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.

    ஆடிப்பெருக்கான இன்று மதுரை நகரில் உள்ள ஏ.வி. மேம்பாலம் வைகை ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வழிபட்டனர்.

    குறிப்பாக புதுமண தம்பதிகள் தாலி மாற்றி வழிபட்டனர். இந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் வழக்கத்தை விட ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி களைகட்டியது. பலர் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையடித்து வழிபட்டனர்.

    இதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும் ஆடிப்பெருக்கு விமரிசையாக நடைபெற்றது.

    வழக்கமாக ஆடிப்பெருக்கு நாளன்று அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட 23 கோவில்கள் மூடப்பட்டதால் ஆடிப்பெருக்கான இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    அம்மன் கோவில் நுழைவு வாயில் முன்பு திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
    ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கிருந்தவாறே காவிரி தாயருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடிப்பெருக்கு நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அது சமயம் பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் ஆடி 18 அன்று நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கிருந்தவாறே காவிரி தாயருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இதற்காக ஆடி 18-ம்நாளான வருகிற 3-ந்தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு வந்து சேர்வார். அங்கு மாலை 4 மணியளவில் அலங்காரம், அமுது கண்டருளுவார்.

    பின்னர் நம்பெருமாள் அங்கிருந்தபடியே மாலை 4.45 மணிக்கு காவிரி தாயாருக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை 5.45 மணிக்கு வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பெருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பெருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கொடைக்கானல் நகரில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு 14, 15-ந்தேதிகளில் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பெருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பெருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வழக்கமாக ஆகஸ்டு 1-ந்தேதி கொடி ஊர்வலம் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நடைபெறுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு கொடியேற்றம் அரசு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடைபெற்றது. இதற்காக புனித சலேத் அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருமாள்மலை பங்குத்தந்தை பிரிட்டோ சுரேஷ் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
    கடந்த ஆண்டு, முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கோவிலுக்குள் உள்திருவிழாவாக ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆடி கிருத்திகையும் ஒன்று. இந்த திருவிழா ஆடி மாதத்தில் கார்த்திகை அன்று ஒரு நாள் மட்டும் வெகு சிறப்பாக நடைபெறும். ஆடிக்கிருத்திகைக்கு என்று சன்னதி தெருவில் கார்த்திகை மண்டபம் அமைந்துள்ளது. ஆடி கிருத்திகை அன்று கோவிலில் இருந்து ஆடி கார்த்திகை மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வலம் வந்து அருள்பாலிப்பார்.

    பின்னர் அந்த மண்டபத்திலேயே இரவு வரை தங்கி இருப்பார். அன்று இரவு 7 மணி அளவில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்தகைய சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது.

    ஆனால் கடந்த ஆண்டு, முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கோவிலுக்குள் உள்திருவிழாவாக ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டும் 2-வது முறையாக ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கோவிலுக்குள் பக்தர்கள் இன்றி உள்திருவிழாவாக நடந்தது.

    இதனையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரமும், மகா, தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து மேள, தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வந்தார்.

    ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    3-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * ஆடிப்பெருக்கு
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் விழா தொடக்கம்
    * சந்திராஷ்டமம் - விசாகம்

    4-ம் தேதி புதன் கிழமை :

     
    * சர்வ ஏகாதசி
    * திருத்தணி முருகன்கோவில் தெப்ப திருவிழா
    * சந்திராஷ்டமம் - அனுஷம்
     
    5-ம் தேதி வியாழக்கிழமை :

    * கரிநாள்
    * துவாதசி திதி
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கு
    * சந்திராஷ்டமம்- கேட்டை

    6-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * மாத சிவராத்திரி
    * பிரதோஷம்
    * சந்திராஷ்டமம் - மூலம்

    7-ம் தேதி சனிக்கிழமை :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை
    * சதுர்த்தசி திதி
    * சந்திராஷ்டமம் - பூராடம்

    8-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * ஆடி அமாவாசை
    * புனித நீராடல், பிதுர்கடன் செலுத்துதல் நன்று
    * சந்திராஷ்டமம் - உத்திராடம்

    9-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சித்த-மரணயோகம்
    * பிரதமை திதி
    * சந்திராஷ்டமம் -  திருவோணம்
    கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, தாமிரபரணி ஆகிய 7 புனித நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கலசத்தில் காவிரி அன்னையின் முகம் அமைத்து மலர் அர்ச்சனை செய்யப்பட்டது.
    ஒவ்வொரு ஆடிப்பெருக்கு நாளின்போதும் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் காவிரி அன்னைக்கு சீர்வரிசை வழங்குவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றில் பூஜைகள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நேற்று ஆடி கிருத்திகை நாளில் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதன்படி திருச்செங்கோடு பேரவை அலுவலகத்தில் உள்ள காவிரி அன்னை சிலைக்கு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மாலை அணிவித்தார். பொதுச்செயலாளர் குமரவேல், பொருளாளர் மனோகரன் ஆகியோர் பட்டு வஸ்திரம் அணிவித்தனர். இதையடுத்து கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை, தாமிரபரணி ஆகிய 7 புனித நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கலசத்தில் காவிரி அன்னையின் முகம் அமைத்து மலர் அர்ச்சனை செய்யப்பட்டது.

    பின்னர் கொக்கராயன்பேட்டை காவிரி கரைக்கு சென்று தேங்காய், பழம் வெற்றிலைப்பாக்கு, பட்டு வஸ்திரம், வளையல், மஞ்சள், குங்குமம், திருமஞ்சன பொடி உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் மற்றும் 7 புண்ணிய நதிகளின் தீர்த்தம் காவிரி நதியில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் காவிரிக்கரையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் பேரவை நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஸ்ரீஹரி, தனபால், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பக்தர்கள் கோவில் வாசலில் சூடம்-விளக்கேற்றி வழிபட்டனர். கோபுரத்தை கையெடுத்து வணங்கி ‘ஓம் முருகா... கந்தனுக்கு அரோகரா...’ என்று பக்தி முழக்கத்துடன் மனமுருக வேண்டி சென்றனர்.
    முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் துன்பங்கள் அகலும், செல்வம் பெருகும், நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    எனவே ஆடிக்கிருத்திகை அன்று திருச்செந்தூர், திருத்தணி, பழனி உள்பட முருக பெருமானின் அறுபடைவீடுகளான 6 திருத்தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பால்குடம், பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி முருக கடவுளை வழிபடுவார்கள்.

    தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கி வருகிறது. அந்தவகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று களையிழந்து காணப்பட்டது.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் வாசலில் சூடம்-விளக்கேற்றியும் வழிபட்டனர். கோபுரத்தை கையெடுத்து வணங்கி ‘ஓம் முருகா... கந்தனுக்கு அரோகரா...’ என்று பக்தி முழக்கத்துடன் மனமுருக வேண்டி சென்றனர்.

    கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் 3 கால பூஜைகள் வழக்கம் போல் நடத்தன. மேலும் ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.

    வடபழனி கோவில் நிர்வாகத்தின் முடிகாணிக்கை கூடம் மூடப்பட்டிருந்ததால் வெளியே சிலர் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களிடம் பக்தர்கள் சிலர் முடிகாணிக்கை செலுத்தி சென்றனர்.

    ஆடிக்கிருத்திகை வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவிலை சுற்றி கடை வைத்துள்ள வியாபாரிகள் சோகத்துடன் காணப்பட்டனர். பக்தர்கள் வருகையையொட்டிதான் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வியாபாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    சென்னையில் கந்தக்கோட்டம் உள்பட பெரும்பாலான முருகன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் சிறிய முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ‘எல்லா விஷயங்களிலும் மென்மையைக் கையாளுவதையே இறைவன் விரும்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
    மென்மையான போக்கு இறைவனின் உயர்வான பண்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு எதிரான போக்கு வன்மை. மென்மையை ஆதரிப்பவர் இறைநேசராக இருப்பார். வன்மையை ஆதரிப்பவர் ஷைத்தானின் உடன்பிறப்பாக உலா வருவார்.

    மென்மையான போக்கு என்பது நமது பேச்சில் வெளிப்பட (குளிர) வேண்டும். நமது செயலில் மிளிர வேண்டும். நாம் எடுக்கும் முடிவில் ஒளிர வேண்டும். இவ்வாறு நமது அணுகுமுறையை அமைத்துக் கொண்டால் சர்வமும் நன்மை மயமாக ஆகிவிடும்.

    “ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ஆயிஷாவே! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும், பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்’ என்று கூறினார்கள்”. (நூல்: முஸ்லிம்)

    ‘மென்மை எதில் இருந்தாலும் அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘எல்லா விஷயங்களிலும் மென்மையைக் கையாளுவதையே இறைவன் விரும்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    பெற்றோர் குழந்தைகளிடமும், குழந்தைகள் பெற்றோர்களிடமும், பெரியவர் சிறியவரிடமும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

    கணவன் மனைவியிடம், ஆசிரியர் மாணவ-மாணவிகளிடம் மென்மையை கையாள வேண்டும். மேலும் பொதுமக்களிடமும், அனைத்துவிதமான உயிரினங்களிடமும் மென்மையான அணுகுமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இறைவனுக்கு அடுத்தபடியாக மென்மையான போக்கை ஆயுள்முழுவதும் கடைப்பிடித்த ஒரு மாமனிதர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

    “இறைவனின் கிருபையின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப் போயிருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 3:159)

    “இறைவன் புறத்திலிருந்து எவருக்கு மென்மையான போக்கிலிருந்து பங்கு கொடுக்கப்பட்டதோ, அவருக்கு இவ்வுலக, மறுவுலக நலவுகளில் இருந்து பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எவர் மென்மையான சுபாவத்தின் பங்கை இழந்து விட்டாரோ, அவர் இருவுலக நலவுகளையும் இழந்துவிட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: பஹவீ).

    “எந்த வீட்டாருக்கு அல்லாஹ் மென்மையை வழங்குகிறானோ, அதன் மூலம் அவர்களுக்குப் பலன் அளிக்கிறான். எந்த வீட்டாருக்கு மென்மை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு கடினத்தன்மையின் மூலம் நஷ்டமடையச் செய்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: பைஹகீ)

    மென்மை பரிபூரண இறைநம்பிக்கையின் ஆதாரமாகவும், அழகிய இஸ்லாமின் ஆதாரமாகவும் அமைகிறது. அது இறைநேசத்தையும், மக்களின் பாசத்தையும் பலனாகத் தரும். அது ஒருவரின் சீர்திருத்தத்தையும், அவரின் நற்குணத்தையும் பிரகடனப்படுத்தும். மென்மையின் முடிவு நற்குணமாகும். மென்மை மனிதனுக்கு நன்மையை அடைய வைக்கும் அற்புதமான செயலாகும். மென்மையே நன்மை, நன்மையே மென்மை.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    இன்று ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருச்சி :

    இன்று(செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழா ஆகும். இந்நாளில் காவிரி கரையோர பகுதிகளில் காவிரி அன்னைக்கு படையலிட்டு பூஜைகள் செய்வது வழக்கம். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், புதுப்பெண்கள் புதிதாக தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த விழா குறிப்பாக திருச்சி காவிரி கரையோரம், அம்மா மண்டபம் படித்துறைகளில் விமரிசையாக நடைபெறும். கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    ஆனால், கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு முக்கிய கோவில்களை அடைக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் வயலூர் முருகன் கோவில்கள் முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் வழக்கமான பூஜைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    இதனால், வழக்கமாக நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா திருச்சியில் களையிழந்து உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்குமா? அல்லது தடை நீக்கப்படுமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே இன்று தெளிவான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராமேசுவரம் :

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான கோவில்களில் வருகிற 8-ந் தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 2-வது நாளாக நேற்றும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆடி பதினெட்டாம் பெருக்கான இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 3 நாள் தடையானது இன்றுடன் முடிவடைகிறது.

    இதனால் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்குமா? அல்லது தடை நீக்கப்படுமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே இன்று தெளிவான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடும்பட்சத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ராமேசுவரம் வருவதை தவிர்ப்பதோடு, நீண்ட தூரத்தில் இருந்து வந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலின் சாமி சன்னதி மற்றும் மூன்றாம் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் கோவிலின் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    ×