என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையெட்டி கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனால் ஹாசனாம்பா கோவிலில் தரிசனம் செய்ய கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறந்தாலும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 28-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட உள்ளது. வருகிற 28-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இந்த ஆண்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என்று கேள்விக்குறி எழுந்தது. மேலும், பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில், ஹாசனாம்பா கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து நேற்று ஹாசனில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கிரீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஹாசனாம்பா கோவிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா? அவ்வாறு அனுமதித்தால் எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கலாம்? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தின் முடிவில், ஹாசனாம்பா கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, ஹாசனாம்பா கோவிலுக்கு தரிசனத்துக்கு வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் அதனுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை) வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் 3 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட உள்ளது.

    வயதானவர்களும், சிறியவர்களும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவிலில் நேரடி தரிசனம் ெசய்ய டிக்கெட் கட்டணம் ரூ.1,000 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உள்ளதால், கோவிலை சுற்றி கிருமிநாசினி திரவம் தெளிக்கப்பட உள்ளது.

    ஹாசனாம்பா கோவில் நடை 28-ந்தேதி (அதாவது நாளை) திறக்கப்பட்டாலும், 29-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் ஒளி அறிவிலிகளிடம் இல்லை. இதை உணர்வதற்குள், தீர்ப்பு நாளை சந்திக்க நேரிட்டால், என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்...?
    தீர்ப்பு நாளில் நடக்க இருப்பதை, இயேசு உவமையாக விளக்குகிறார். இயேசு இந்த உவமையை ஒலிவமலையில் தம் சீடர்களிடம் கூறினார்.

    ‘‘அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம். மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள், ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

    முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.

    மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், “இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்” என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

    அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, “எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன. உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்” என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, “உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்.

    எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது” என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

    பிறகு மற்றத் தோழிகளும் வந்து, “ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் எனக்கு உங்களைத் தெரியாது” என்றார். எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது” என்பதோடு உவமையை முடித்து கொண்டார்.

    இந்த உவமை அக்கால மக்களுக்கும் பொருந்தியது. இக்கால மக்களாகிய நமக்கும் பொருந்துகிறது.

    இயேசு கூறிய இந்த உவமையின்படி நம்மில் நூற்றுக்கு ஐம்பது பேர் வெளிவேடக்காரராக திருச்சபையில் இருக்கிறோம் என்பதை அறியவேண்டும்.

    திருச்சபையில் இருப்பதாலும், இயேசுவின் நற்செய்தியைக் கேட்பதாலும், நம்மை நேர்மையாளர் என்றும், மீட்கப்பட்டவர் என்றும் எண்ணுகிறோம். நம்பிக்கையுடன் இயேசுவின் இரண்டாம் வருகையையும், நிலைவாழ்வையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் நம்மில் பலர், தீர்ப்பு நாளை எண்ணி எந்தவித ஆயத்தமுமின்றி, அறிவிலிகளை போலவே இருக்கிறோம். குறிப்பாக நற்செய்தியைத் தவறாது கேட்டாலும், அதன்படி வாழாமல் வெளிவேடக்காரராக இருக்கிறோம்.

    அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் ஒளி அறிவிலிகளிடம் இல்லை. இதை உணர்வதற்குள், தீர்ப்பு நாளை சந்திக்க நேரிட்டால், என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்...?

    மணமகன் (இறைமகன்) எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நாம் விளக்குகளோடு (புண்ணியம்) தயாராக இருக்கிறோமா..? என்பதை சிந்தித்து பாருங்கள். முன்மதி உள்ளவர்களை போல, (புண்ணிய காரியங்களை) எண்ணெயை சேமித்து வைத்துக் கொள்வோம். ஏனெனில் உரிய நேரத்தில் (தீர்ப்பு நாளில்), உரிய பொருள் (நல்வினை) இல்லாவிட்டால், நம்மால் திருமண மண்டபத்திற்குள் (இறை ஆட்சிக்குள்) நுழைய முடியாது.

    இப்போதே மனம் மாறி, இறையாட்சியை வெளிப்படுத்தும் ஒளிவீசும் விளக்குகளாகவும், உலகிற்கு உப்பாக இருப்பவர்களாகவும் வாழ முயற்சி செய்வோம்.
    இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டி ஆடும் அற்புத நடனம்.
    நடனத்தின் அரசனாக பார்க்கப்படுபவர், சிவபெருமான். அதனால்தான் அவருக்கு ‘நடராஜர்’ என்ற பெயரும் வந்தது. ஈசன் பல்வேறு நடனங்களை ஆடியிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

    இவை ‘சிவ தாண்டவங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

    சிவபெருமான் ஆடிய தாண்டவங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது.

    அதில் ஒரு அரிய தாண்டவ காட்சி இது. இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை பின்புறமாக தலைக்கு மேல் உயர்த்தி, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டி ஆடும் அற்புத நடனம்.
    கால புருஷ தத்துவப்படி சனி பகவான் ஜீவனகாரகனாகவும், கர்மாதிபதியாகவும் இருப்பதால் ஒருவரின் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானின் பங்கு அளப்பரியது.
    மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த அஷ்டமத்துச்சனி பாதிக்குமா அல்லது நன்மை தருமா என்பதை அவரவர் பிறப்பு ஜாதகத்தை வைத்தே சரியான பதிலைக் கூற முடியும்.

    விதிவிலக்காக மிதுன ராசியில் குரு இருந்தால் ஜாதகரை அஷ்டமத்து சனி பாதிக்காது. மிதுன ராசியில் சந்திரனுடன் ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு குடும்பம், தொழில், மன ரீதியான பாதிப்பு இருக்கும். இவர்கள் அஷ்டமத்துச் சனி முடியும் வரை திருமணம் செய்யக்கூடாது. மிதுன ராசிக்கு எட்டாம் இடமான மகரத்தில் ராகு-கேது செவ்வாய், சனி இந்த கிரகங்கள் இருந்தால் அவருக்கு அஷ்டமத்துச் சனியால் பாதிப்பு உண்டு. அவர்களுக்கு நல்ல திசையாக இருந்தால் பாதிப்பின் அளவு குறையும்.

    மகரத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் இந்த அஷ்டமச்சனி அவர்களை பாதிக்காது. சனி அவர்களுக்கு 200 மடங்கு யோகமான அஷ்டமத்துச் சனியாக நடக்கும். இக்காலகட்டத்தில் அவர்கள் பணம், பொருளாதாரம் அதிகரிக்கும். வீடு, வாகனம் தொழில் என அபிவிருத்தி அடையும்.

    ஒருவரின் ஜனன கால ஜாதகத்தை வைத்துக் கொண்டு தான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது, கெட்டது செய்யும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பதால் தேவையற்ற பய உணர்வை தவிர்த்து சிவ வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் நன்மை உண்டாகும்.

    ஜெபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக் கூடாது.
    பெருமாள் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாக இருப்பது துளசி இலை. இந்த இலையை தீர்த்தத்தில் போட்டு, துளசித் தீர்த்தமாகவும் தருவார்கள். இது தவிர துளசி மாலையை உடலில் அணிபவா்களும் உண்டு. துளசிச் செடியின் சின்ன சிறிய மரத் துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும்.

    இந்த மாலையை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு மட்டுமல்லாமல் இந்த துளசிமாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.

    கடையில் இருந்து புதியதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையாக இருந்தால், அதை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊற வைக்கவேண்டும்.

    மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துளசி மாலையை, இரண்டு மணிநேரம் அந்த மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அல்லது மகாலட்சுமி படத்திற்கு சாத்திவிட்டு இறைவனை நன்றாக வேண்டிக் கொண்டு அதன் பின்பு துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வதுதான் சரியான முறை.

    சிலர் இந்த மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜெபம் செய்வதற்கு மட்டுமே பயன் படுத்துவார்கள். அல்லது மந்திரத்தை உச்சரிக்க கணக்கு வைத்துக் கொள்வதற்காகவும் பயன் படுத்துவார்கள்.

    கழுத்தில் அணிந்து கொள்வதற்காக வாங்கினாலும் சரி, ஜெபம் செய்வதற்காக வாங்கினாலும் சரி, மேற்குறிப்பிட்ட முறையை செயல்முறை படுத்திய பின்புதான் துளசி மாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.

    ஜெபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக் கூடாது.

    பெண்களாக இருந்தால், தங்களுடைய முந்தானையில் ஜெபமணி மாலையை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் தங்களுடைய அங்கவஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொண்டுதான் ஜெப மாலையை உருட்ட வேண்டும் என்பது சாஸ்திரம்.
    நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே, ஜப்பானிய பென்சைட்டெனும், தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறார்.
    இந்து மத சிந்தனைகளும், ஆன்மிக கருத்துக்களும், கடல்கடந்தும் பல நாட்டு மக்களை கவர்ந்தவை. இந்து மதத்தில் உள்ள சில வழிபாட்டு முறைகள், சிறு மாறுதல்களுடன், பிற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருவதை இன்றும் நாம் காண முடியும். அந்த வகையில் நாம் செய்யும் சரஸ்வதி வழிபாடு, ஜப்பான் நாட்டிலும் சிறு வித்தியாசங்களுடன் நடைபெற்று வருவதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய ‘யமாடோ’ வம்ச சக்கரவர்த்திகள் ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில்தான், முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடுகள், சடங்குகள் அதிகம் நிறைந்த ஷிண்டோ மதமும், புத்த மதமும் பரவின.

    இந்த இரண்டு மதங்கள் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால், ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அந்நாட்டு ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சரஸ்வதி வழிபாடு, ஜப்பானில் பரவி இருக்கிறது.

    ஜப்பானில் வணங்கப்படும் 7 அதிர்ஷ்ட தேவதைகளில், சரஸ்வதியும் ஒருவர். ‘பென்சைட்டென்’ -இதுதான் அங்கு சரஸ்வதியின் பெயர். ஜப்பானிய மொழியில் ‘பென்தென்’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். ‘பென்சைட்டென்’ சக்தி மிக்க தெய்வமாகவும், ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

    அதற்கு காரணம், ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. அதைக் காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்பதாக அவர்களது நம்பிக்கை. மேலும், இனிமையான குரல், அதிர்ஷ்டம், அழகு, மகிழ்ச்சி, ஞானம், சக்தியை அருளும் தெய்வமாகவும் அவள் போற்றப்படுகிறாள்.

    கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவதைப்போல, ஜப்பானிலும் நீர்நிலைகள், குளங்கள் ஆகியவற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது, ‘பென்சைட்டனை’ வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ‘ஷோட்டன்’ எனவும், கருடன் ‘கருரா’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும், வாயு, வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.

    சரஸ்வதிதேவி, விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்ததாக, ரிக் வேதத்தில் தகவல் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார். டோக்கியோ நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட, ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன.

    வழிபாட்டு முறை

    கல்விக் கடவுளான சரஸ்வதி, புத்த மதத்தில் ஞானம் அருளும் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறார். இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி வழிபாட்டை இன்றும் அங்குள்ள மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே, ஜப்பானிய பென்சைட்டெனும், தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறார். அந்த நாட்டு மக்கள் அனைவரும் அவரது பிள்ளைகள் என்ற நிலையில், கல்வி, கலைகளில் சிறக்கவும், முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்குச் சென்று மக்கள் வழிபடுகின்றனர். ஜப்பான் பாரம்பரிய விழாக்களில் ‘பென்சைட்டென்’ தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து வணங்குகிறார்கள்.
    விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கத்திற்கு ஒரு புராண கதை உள்ளது. அந்த கதை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.

    விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை விநாயகர்அப்படியே விழுங்கி விட்டார்.

    வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைச் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். இப்படித்தான் விநாயகருக்கு அருகம்புல் சாற்றும்பழக்கம் ஏற்பட்டது.
    விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச் சிறப்புடையவர். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும்.
    நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களை கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச் சிறப்புடையவர்.

    ஒன்பது கிரகங்களை யும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்க மலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார்.

    நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் ஒரே நேரத்தில் நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும்.
    சகுஜராத் மாநிலம் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது.
    குஜராத் மாநிலம் விஜாபூர் நகரத்தின் அருகில் ஆர்ஜோதியா என்ற இடத்தில் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

    இங்குள்ள சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஆனால் இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.

    பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும்.
    சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வல்லக்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது, துளசீஸ்வரர் திருக்கோவில். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று என்கிறது, தல புராணம். பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும்.

    சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றபோது, அதனைக் காண்பதற்காக அனைவரும் கயிலாயமலையில் குவிந்தனர். இதனால் வடக்கு பகுதி தாழ்ந்தும், தென் பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. உலகம் சமநிலையை அடைவதற்காக, குறுமுனிவரான அகத்தியரை, தென்பகுதிக்குச் செல்லும்படி சிவபெருமான் கட்டளையிட்டார். அதன்படி கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு புறப்பட்டு வந்த அகத்தியர், வரும் வழியில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இப்படி அவர் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதில் ஒன்றுதான், இங்குள்ள துளசீஸ்வரர் என்ற பெயரில் உள்ள சிவலிங்கம். அகத்தியர் இந்தப் பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசிச் செடிகளால் சூழப்பட்டு இருந்தது. அப்போது அங்கு ஈசனின் அசரீரி கேட்டது. “அகத்தியா.. என்னைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்” என்றார்.

    ஈசனின் குரல் வந்த திசையை நோக்கி சென்ற அகத்தியருக்கு, துளசி செடிகளுக்கு இடையே, சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அந்தப் பகுதியில் வேறு எந்த பூக்களும் கிடைக்க வாய்ப்பில்லாததால், துளசி இலைகளைக் கொண்டே இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டார், அகத்தியப் பெருமான். சிவபெருமானும் தலைசாய்த்து அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டார். மேலும் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில், அகத்தியருக்கு காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.

    பிற்காலத்தில் இங்கு ஈசனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இன்றும் இத்தல இறைவனுக்கு துளசி இலை கொண்டுதான் அர்ச்சனை செய்கிறார்கள். பொதுவாக சிவபெருமானுக்கு வில்வ இலையால்தான் அர்ச்சனை செய்யப்படும், துளசி இலை என்பது, பெருமாளுக்கு உகந்தது. ஆனால் இங்கு சிவனுக்கு துளசி இலை அர்ச்சனை செய்யப்படுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால், இறைவனுக்கு ‘துளசீஸ்வரர்’ என்று பெயர். அதே நேரம் அம்பாளின் திருநாமம் ‘வில்வநாயகி.’ ஆனந்தவல்லி என்ற திருப்பெயரும் உண்டு.

    துளசீஸ்வரரை திங்கட்கிழமை அன்று, துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சிவனருள் கிட்டும். ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்திருப்பவர்கள், திங்கட்கிழமை அன்று சந்திர ஓரையில் இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம். இதனால் சந்திர தோஷம் விலகும். பவுர்ணமி அன்று, அர்த்த ஜாம வழிபாட்டு வேளையில், வெள்ளை அரளி மலர் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஒளிமயமான வாழ்வு அமையும். மகாசிவராத்திரி அன்று இங்கு 4 கால பூஜை நடைபெறும். இதில் மூன்றாம் கால பூஜையில், இத்தல ஈசனை மகாவிஷ்ணு வழிபடுவதாக ஐதீகம்.

    அமைவிடம்

    செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள்கோவில் என்ற ஊரில் இருந்து, ஒரகடம் செல்லும் மார்க்கத்தில் திருக்கச்சூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து இரண்டாக பிரியும் சாலையில் நேராகச் சென்றால், சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கொளத்தூர் என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    பிற்காலத்தில் பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்க, வலது காலை தூக்கியும், இடதுகாலை ஊன்றியும் நடனக் காட்சி தந்ததாக ஆலய வரலாறு சொல்கிறது.
    சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களும் நடைபெற்ற இடம், மதுரை. இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், உலக பிரசித்திப் பெற்றது. சக்தி பீடங்களில் முதன்மையானதாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

    மீனாட்சி, அங்கையற்கண்ணி போன்ற பெயர் கொண்ட இத்தல அம்பாளின் சிலை மரகத கல்லால் ஆனது. இந்த ஆலயத்தில் அம்பாளே பிரதானம் என்பதால், அவருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என்தால், ‘மீனாட்சி’ என்ற பெயர் வந்தது. அம்பாள் வீற்றிருக்கும் பீடத்திற்கு, ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

    கொலை பாவத்தால் பீடிக்கப்பட்ட இந்திரன், இந்த தலத்திற்கு வந்து சுயம்பு சிவலிங்கத்தைக் கண்டு வழிபட்டு விமோசனம் பெற்றான். அதன் பயனாக விமானத்துடன் கூடிய பெரிய கோவிலை இங்கு அமைத்தான். இதனாலேயே கோவில் விமானம், ‘இந்திர விமானம்’ எனப் பெயர்பெற்றது.

    முக்குறுணி விநாயகர்

    தனது வயிற்றுவலியை நீக்கிய இத்தல இறைவனுக்கு ஆலயத்தில் ஒரு தெப்பக்குளம் வெட்டினார், திருமலை நாயக்கர். தெப்பக்குள பணியின்போது, பிரமாண்டமான விநாயகர் சிலை கிடைத்தது. அவரை சுவாமி சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தார். அவரே ‘முக்குறுணி விநாயகர்.’ விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டை செய்து படைக்கப்படும்.

    சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவன், ‘சுந்தரேஸ்வரர்’, ‘சொக்கநாதர்’, ‘சோமசுந்தரர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

    மதுரையில் பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் நடன தரிசனம் அளித்த வெள்ளியம்பலம் உள்ளது. இங்குள்ள நடராஜர் முன்காலத்தில் வலது காலை ஊன்றி, இடதுகாலை தூக்கி நடனம் புரிந்தபடிதான் காட்சியளித்துள்ளார். பிற்காலத்தில் பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்க, வலது காலை தூக்கியும், இடதுகாலை ஊன்றியும் நடனக் காட்சி தந்ததாக ஆலய வரலாறு சொல்கிறது.

    எட்டு கால பூஜை

    ஆறுகால பூஜை என்பதுதான் அனேக ஆலயங்களில் இருக்கும் நடைமுறை. ஆனால் மீனாட்சி கோவிலில், திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என எட்டு கால பூஜை நடக்கிறது. இந்த எட்டு கால பூஜையிலும் எட்டுவிதமான கோலத்தில் அம்மன் காட்சி தருவார்.

    5 வாசல்கள்

    பொதுவாக ஆலயங்களில் ஒன்று அல்லது அதிகபட்சமாக திசைக்கு ஒன்று என 4 வாசல்கள் இருக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் 5 வாசல்கள் உள்ளன. கிழக்கு பகுதியில் சுவாமி சன்னிதிக்கு ஒரு வாசல், அம்மன் சன்னிதிக்கு ஒரு வாசல் என 2 வாசல்கள் உண்டு. தவிர தெற்கு ராஜகோபுரம் (160 அடி), மேற்கு ராஜகோபுரம் (154 அடி), வடக்கு ராஜகோபுரம் (152 அடி) ஆகிய வாசல்களும் உள்ளன.

    உள்- வெளி ஆவரணம்

    மீனாட்சி கோவிலுக்கு வெளியே நான்கு திசைகளிலும் நான்கு புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. வடக்கே பழைய சொக்கநாதர் கோவில், மேற்கே இம்மையில் நன்மை தருவார் கோவில், கிழக்கே ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோவில், தெற்கே தென்திருவாலவாய் கோவில் ஆகியவை ‘உள் ஆவரணங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அதே போல் மதுரைக்கு வெளியே நான்கு திசைகளில் உள்ள ஆலயம் ‘வெளி ஆவரணங்கள்’ எனப்படுகின்றன. அவை, தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம்.

    பொற்றாமரைக் குளம்

    நந்தி மற்றும் தேவர்களின் வேண்டுகோள்படி, சிவபெருமான் உருவாக்கியதே ‘பொற்றாமரைக்குளம்.’ ஆலயத்தின் முதன்மையான இந்த தீர்த்தத்திற்கு ‘சிவகங்கை’ என்ற பெயரும் உண்டு. சிவபூஜை செய்வதற்காக, இந்தக் குளத்தில் இருந்து இந்திரன் பொன் தாமரை ஒன்றை பெற்றான். இதனால் ‘பொற்றாமரைக் குளம்’ என்றானது. 165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்ட இந்த குளத்தில் மீன்கள் கிடையாது.

    கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
    புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 69-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 4-ந்தேதி மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலையில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 10-ந் தேதியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாணமும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 23-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    ×