search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹாசனாம்பா கோவில்
    X
    ஹாசனாம்பா கோவில்

    ஹாசனாம்பா கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

    தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையெட்டி கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனால் ஹாசனாம்பா கோவிலில் தரிசனம் செய்ய கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறந்தாலும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 28-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட உள்ளது. வருகிற 28-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இந்த ஆண்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என்று கேள்விக்குறி எழுந்தது. மேலும், பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில், ஹாசனாம்பா கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து நேற்று ஹாசனில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கிரீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஹாசனாம்பா கோவிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா? அவ்வாறு அனுமதித்தால் எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கலாம்? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தின் முடிவில், ஹாசனாம்பா கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, ஹாசனாம்பா கோவிலுக்கு தரிசனத்துக்கு வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் அதனுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை) வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் 3 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட உள்ளது.

    வயதானவர்களும், சிறியவர்களும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவிலில் நேரடி தரிசனம் ெசய்ய டிக்கெட் கட்டணம் ரூ.1,000 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உள்ளதால், கோவிலை சுற்றி கிருமிநாசினி திரவம் தெளிக்கப்பட உள்ளது.

    ஹாசனாம்பா கோவில் நடை 28-ந்தேதி (அதாவது நாளை) திறக்கப்பட்டாலும், 29-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. 29-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×