search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணமகளின் தோழியர் பத்துப்பேர்
    X
    மணமகளின் தோழியர் பத்துப்பேர்

    மணமகளின் தோழியர் பத்துப்பேர்

    அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் ஒளி அறிவிலிகளிடம் இல்லை. இதை உணர்வதற்குள், தீர்ப்பு நாளை சந்திக்க நேரிட்டால், என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்...?
    தீர்ப்பு நாளில் நடக்க இருப்பதை, இயேசு உவமையாக விளக்குகிறார். இயேசு இந்த உவமையை ஒலிவமலையில் தம் சீடர்களிடம் கூறினார்.

    ‘‘அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம். மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள், ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

    முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.

    மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், “இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்” என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

    அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, “எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன. உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்” என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, “உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்.

    எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது” என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

    பிறகு மற்றத் தோழிகளும் வந்து, “ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் எனக்கு உங்களைத் தெரியாது” என்றார். எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது” என்பதோடு உவமையை முடித்து கொண்டார்.

    இந்த உவமை அக்கால மக்களுக்கும் பொருந்தியது. இக்கால மக்களாகிய நமக்கும் பொருந்துகிறது.

    இயேசு கூறிய இந்த உவமையின்படி நம்மில் நூற்றுக்கு ஐம்பது பேர் வெளிவேடக்காரராக திருச்சபையில் இருக்கிறோம் என்பதை அறியவேண்டும்.

    திருச்சபையில் இருப்பதாலும், இயேசுவின் நற்செய்தியைக் கேட்பதாலும், நம்மை நேர்மையாளர் என்றும், மீட்கப்பட்டவர் என்றும் எண்ணுகிறோம். நம்பிக்கையுடன் இயேசுவின் இரண்டாம் வருகையையும், நிலைவாழ்வையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் நம்மில் பலர், தீர்ப்பு நாளை எண்ணி எந்தவித ஆயத்தமுமின்றி, அறிவிலிகளை போலவே இருக்கிறோம். குறிப்பாக நற்செய்தியைத் தவறாது கேட்டாலும், அதன்படி வாழாமல் வெளிவேடக்காரராக இருக்கிறோம்.

    அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் ஒளி அறிவிலிகளிடம் இல்லை. இதை உணர்வதற்குள், தீர்ப்பு நாளை சந்திக்க நேரிட்டால், என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்...?

    மணமகன் (இறைமகன்) எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நாம் விளக்குகளோடு (புண்ணியம்) தயாராக இருக்கிறோமா..? என்பதை சிந்தித்து பாருங்கள். முன்மதி உள்ளவர்களை போல, (புண்ணிய காரியங்களை) எண்ணெயை சேமித்து வைத்துக் கொள்வோம். ஏனெனில் உரிய நேரத்தில் (தீர்ப்பு நாளில்), உரிய பொருள் (நல்வினை) இல்லாவிட்டால், நம்மால் திருமண மண்டபத்திற்குள் (இறை ஆட்சிக்குள்) நுழைய முடியாது.

    இப்போதே மனம் மாறி, இறையாட்சியை வெளிப்படுத்தும் ஒளிவீசும் விளக்குகளாகவும், உலகிற்கு உப்பாக இருப்பவர்களாகவும் வாழ முயற்சி செய்வோம்.
    Next Story
    ×