என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நாமக்கல் ரெங்கநாதர் கோவில் தேரை ரூ.56 லட்சம் செலவில் மராமத்து செய்து புதுப்பிக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ரெங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் சுமார் 25 ஆண்டுகளாக மராமத்து பணி செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சட்டபேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி இத்தேரை சுமார் ரூ.56 லட்சம் செலவில் மராமத்து செய்து, புதுப்பிக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி தேர் மராமத்து செய்யும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-

    தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள இந்த தேர் மராமத்து பணி இன்னும் 6 மாதங்களில் முடிவடையும். நாமக்கல் அருகே 4 ஆண்டுகளாக மூடி கிடக்கும் தமிழ்நாடு ஓட்டலை ஆய்வு செய்தேன். கொல்லிமலையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 13 ஹெக்டேர் நிலம் கண்டறியப்பட்டு உள்ளது. அதில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த், பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கொரோனா பரவலை தடுக்க தங்கத்தேர் வலம் வரும் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.
    ஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
    ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்
    கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்
    அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்
    பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்
    பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்
    ஞானம் அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்
    நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்
    திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்
    தேஜஸ், ஸௌம்யம் நிறைந்த உருவமாய்
    வெய்யில்,மழை பாராமல் தவமும் செய்தாய்
    பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்
    உன் தாய் தந்தை குலம் யாரும் அறியாரே
    உலகம் என் வீடு,இறை என் தாய் என்றாயே
    சிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்
    சிலர் அறிந்தனர் நீ விஷ்னுவின் ரூபம்
    தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீ தானா?
    பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீ தானோ?
    எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்
    பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்
    எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்
    எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்
    தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதை தான்
    கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்
    மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்
    உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்
    சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்
    திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்
    ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்
    அருளோடு சேர்த்து அற்புத அனுபவங்களும் தந்தாய்
    மசூதித்தாயாம் துவாரகாமாயி!அதில் வசித்து,
    பக்தர்களை ரட்சிக்கும் நீஅன்னையன்றோ? சாயி
    திருகரமளித்த உதி அருமருந்தாகும் - உன்
    திருஅருட்பார்வை என் துயரினை போக்கும்
    அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும்-உன்
    திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்
    அடைக்கலம் புகுந்தோரை அன்புடன் ரட்சித்தாயே-உன்
    அற்புத லீலைகள் அமுதே!அமுதினும் இனிய பேரமுதே
    நீருற்றி அகல் தீபங்கள் எரியச் செய்தாய்
    ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்
    பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,
    துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயே
    தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறு
    வருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறு
    உன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமே
    அளித்தாய் மாங்கனிகள்அடைந்தார் தாமு சந்தானமே
    விதியையும் மீறுமே உன் அற்புத அருளுமே
    நம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலே
    சிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,
    உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலே
    பக்தருக்குள்ளே இல்லை ஏற்றத்தாழ்வே
    மேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயே
    உள்ளேயே அவனை நீ உருமாற்றினாயே
    உன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானே
    கங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயே
    தாஸ்கனுவின் ப்ரயாகை தாகம் தணித்தாயே
    மசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்
    பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்
    ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயே
    ஷீர்டியின் கல்,புல் கூட பேறு பெற்றதே
    உன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததே
    அப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே-உன்
    திருவடியை என் சிரஸேந்தி களித்திறுப்பேனே
    எத்தனை தவம் செய்தேன் நான் அறியேனே
    இக்கணம் உனைத்தொழும் பேறு பெற்றேனே
    இறையருள் பெற்ற மனிதரால் மட்டுமே
    உன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமே
    உன் அருட்பார்வை என்மேல் பட்டாலே
    என் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமே
    உன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயே
    உத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயே
    உன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,
    என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனே
    உன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலே
    நான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனே
    என் கனவினில் என்னை ஆட்கொள்வாயே
    நிஜந்தனிலே நிதமும் என் துனை நிற்பாயே
    அணுவிலும் அணுவானாய்,அகில அண்டமும் நீயானாய்
    எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்
    என் அன்னை நீ! தந்தை நீ! இவ்வுலகையே!
    மூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீ
    அகிலம் உன் இல்லம்,அண்ட சராசரம் உன் ரூபம்
    அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்
    குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே.
    உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்
    சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்
    சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்
    சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலே
    சாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமே
    நோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமே
    துயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமே
    சாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமே
    சாயி விரதத்தால் சுகம் , சாந்தி வீட்டில் நிலவிடுமே
    சாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,
    ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,
    சாயி வருவார்,இரங்குவார் நம்மிடமே,
    துன்பம் களைவார்,தருவார் ஆனந்தமே,
    சாயியே சாச்வதம்!சாயியே சத்தியம்!
    இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்
    சாயியே பரமேஸ்வரன்,சாயியே பரமாத்மன்
    சாயியே பராசக்திரூபன்,சாயியே பரந்தாமன்
    நம்பிக்கை பக்தி ,பொறுமையுடன் சரணடைவோம்
    சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்
    ஸ்ரீ சாயிநாதருக்கே அர்ப்பணம்.
    பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
    ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம். அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள்.

    ‘இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்’ என்றாளாம். வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு ‘வெற்றிலை’ என்று பெயர் வந்தது. ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்ப தால் தான்.

    எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை நிமித்தமான பழம். மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள் களுக்கு மிகவும் பிடித்தமான பழம். நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ள தாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச் சம்பழ மாலை சார்த்தி வழிபடு வோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.

    தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். இவருக்கு உகந்த ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    ஜய யோகீஸ்வர தத்த தயாளா,
    ஜகத்தினை ஆக்கிய மூலாதாரா
    அத்ரி அநுசூயா கருவியாய் கொண்டாய்,
    ஜக நன்மைக்காகவே அவதரித்தாய்
    பிரம்மா, ஹரிஹரரின் அவதாரம்,
    சரணாகதர்களின் பிரணாதாரம்
    அந்தர்யாமி,சத்சித் ஆனந்தன்,
    பிரசன்ன சத்குரு இருதோளுடையன்
    அன்னபூரணி யை தோளில் வைத்தாய்,
    சாந்தி கமண்டலம் கரமேந்தினாய்
    நாலு,ஆறு பல தோளுடையான்,
    அளவிலா ஆற்றலுடைய புஜமுடையான்
    நின்சரண் புகுந்தேன் அறியாமூடன்,
    வாரும் திகம்பரா ! போகுதே பிராணன்
    அர்ஜுனனின் தவக்குரல் கேட்டு கிருதயுகத்திலே,
    அக்கணமே பிரசன்னம் ஆனாயே
    அளவிலா ஆனந்தம்.சித்தி அளித்தாய்,
    முடிவில் பரம பத முக்தியும் அளித்தாய்
    இன்று எனக்கருள ஏன் இத்தனை தாமதம்?
    உனையன்றி எனக்கில்லை புகலிடம்
    விஷ்ணுசர்மா பக்திக்கிரங்கினாய்,
    அவனளித்த சிரார்த்த உணவு அருந்தி ரட்சித்தாய்
    ஜம்ப அசுரனால் தொல்லை தேவருக்கே,
    தயை புரிந்தாய் நீ அமரருக்கே
    மாயை பரப்பி திதிசுதனை,
    இந்திரன் கரத்தால் வதம் செய்வித்தாய்
    அளவிலா லீலைகள் புரிந்தாயே,
    அவற்றை வர்ணிக்க இயலுமோ சிவரூபனே
    நொடியில் ஆயுவின் புத்திர சோகம் போக்கினாய்,
    மகனை உயிர்ப்பித்து பற்றற்றவனாக்கினாய்
    சாத்யதேவ,யது,பிரஹ்லாத,பரசுராமருக்கே,
    போதித்தாய் நீ ஞானோபதேசமே
    அளவிலா ஆருள் ஆற்றல் உடையோனே,
    என் குரல் கேட்க ஏன் மறுத்தாயே
    உன் தரிசனம் காணாமல் நானுமே,
    இறுதி காணேன்,வாரீர் இக்கணமே
    த்விஜஸ்திரீயின் அன்பை மெச்சினாயே,
    பிறந்தாய் நீ அவளின் மகனாகவே
    ஸ்மர்த்துகாமி, கலியுக கிருபாளனே,
    படிப்பறியா வண்ணானை உய்வித்தாயே
    வயிற்று வலியில் துடித்த அந்தணனை காத்தாயே
    வல்லபேசனை கயவ காலனிடமிருந்து காத்தாயே
    என்னைப்பற்றிய அக்கறை உனக்கில்லையே,
    என்னை நினைப்பாய் ஒரு முறையேனுமே
    தழைக்கச் செய்தாயே உலர்ந்த பட்டமரம்,
    என்னிடம் ஏன் இத்தனை உதாசீனம்
    முதிய மலட்டு பெண்ணின் கனவினையே,
    சேய் அளித்து பூர்த்தி செய்தாயே
    அந்தனின் வெண்குஷ்டம் நீக்கினாயே,
    அவன் ஆசைகளை நிறைவு செய்தாயே
    மலட்டெருமையை பால் சொறிய வைத்தாய்,
    அந்தணனின் தரித்திரம் போக்கினாய்
    அவரைக்காய் பிச்சையாய் ஏற்றாய்,
    அந்தணனுக்கு தங்கக்குடம் அளித்தாய்
    பதி இறந்த பத்தினியின் துயர் துடைத்தாய்,
    தத்தன் உன்னருளால் உயிர்த்தெழுந்தான்
    கொடூர முன்வினையைப் போக்கினாய்,
    கங்காதரனின் மகனை உயிர்ப்பித்தாய்
    மதோன்மத் புலையனிடம் தோற்றனரே,
    பக்த திரிவிக்ரமரை ரட்சித்தாயே
    பக்த தந்துக் தன்னிஷ்டப்படியே,
    ஸ்ரீ சைலம் அடைந்தான் இமைப்பொழுதிலே
    ஒரே நேரத்தில் எடுத்தாய் எட்டு ரூபங்களே,
    உருவமற்றும் பலரூபமுடையவனே
    தரிசனம் பெற்று தன்யமானரே,
    ஆனந்தம் அடைந்த உன் பக்தருமே
    யவனராஜன் வேதனை நீக்கினாயே,
    ஜாதிமத பேதம் உனக்கில்லையே
    ராம கிருஷ்ண அவதாரங்களிலே,
    நீ செய்த லீலைகள் கணக்கில்லையே
    கல்,கணிகை,வேடம்,பசு,பட்சியுமே.
    உன்னருளால் முக்தி அடைந்தனரே
    நாமம் நவிலும் வேஷதாரியும் உய்வானே,
    உன் நாமம் நல்காத நன்மையில்லையே
    தீவினை,பிணி துன்பம் தொலையுமே,
    சிவன் உன் நாமம் ஸ்மரித்தாலே
    பில்லி, வசிய தந்திரம் இம்சிக்காதே,
    ஸ்மரணையே மோட்சம் தந்திடுமே
    பூத,சூனிய,ஜந்து அசுரர்,ஓடிடுமே,
    தத்தர் குண மஹிமை கேட்டதுமே
    தத்தர் புகழ் பாடும் தத்த பவானியையே,
    தூபமேற்றி தினம் பாடுபவனுமே
    இரு லோகத்திலும் நன்மை பெறுவானே,
    சோகம் என்பதை அறியானே
    யோக சித்தி அவன் அடிமையாகுமே,
    துக்க தரித்திரம் தொலைந்திடுமே
    ஐம்பத்திரு வியாழக்கிழமை நியமமுடனே,
    தத்த பவானி அன்புடன் படித்தாலே
    நிதமும் பக்தியுடன் படித்தாலுமே,
    நெருங்கான் அருகில் காலனுமே
    அநேக ரூபமிருந்தும் இறை ஒன்றே,
    தத்துவமறிந்தவனை மாயை அண்டாதே
    ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவனே,
    தத்த திகம்பரா நீ தான் இறைவனே
    வந்தனம் உனை செய்வேன் பலமுறை நானுமே,
    வேதம் பிறந்தது உன் மூச்சினிலே
    சேஷனும் வர்ணித்து களைப்பானே,
    பல ஜன்மமெடுத்த பாமரன் எப்படி வர்ணிப்பேனே
    நாமம் பாடிய அனுபவம் திருப்தி தந்திடுமே,
    உனை அறியாமூடன் வீழ்ந்திடுவானே
    தவசி தத்வமசிஅவன் இறைவனே,
    பாடு மனமே ஜயஜயஸ்ரீ குருதேவனே
    பாவனி - ஐம்பத்திரு பாட்டு வரிகள்
    ஸ்மர்த்துகாமி - ஸ்மரித்தவுடன் ஓடி வருபவர்
    திதிசுதன் ராக்ஷஸன்
    அர்ஜுனன் - ஸஹஸ்ரார்ஜுனன்
    த்விஜ - இருமுறை பிறவி எடுத்த அந்தண வைசிய
    க்ஷத்திரிய குலத்தோர்
    விநாயகரின் நாபியை பிரம்மா என்றும், முகத்தை விஷ்ணுவின் அம்சம் என்றும், கண்களை சிவனின் அம்சம் என்றும், விநாயகரின் இடதுபாகத்தை சக்தியாகவும், வலதுபாகத்தை சூரிய அம்சமாகவும் சொல்வார்கள்.
    இந்து சமயத்தில் எத்தனையோ கடவுள்கள் வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை கையாளுகிறோம். ஆனால் அவை அனைத்துக்கும் பொதுவாகவும் முதன்மையானதாகவும் இருப்பது விநாயகர் வழிபாடுதான். அதனால்தான் விநாயகரைநாம் முழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம். வேறு எந்த தெய்வத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. எனவே எப்போது இறைவழிபாட்டை தொடங்கினாலும் விநாயகருக்கு முதல் மரியாதையை நாம் அளிக்க வேண்டும்.

    “கணபதி பூஜை கைமேல் பலன்” என்று சொல்வார்கள். நாம் எந்த செயலை தொடங்கினாலும் முதலில் விநாயகரை நினைத்துக் கொண்டு அந்த செயலை தொடங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும் என்பது இதன் அர்த்தமாகும். கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்று சொல்வது இதனால்தான்.
    கணபதி என்றால் பக்தர்களின் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானம் கொடுத்து பரிபூரண முக்தி நிலையை தரும் தலைவன் என்று அர்த்தமாகும்.
    விநாயகர் என்றால் தனக்கு ஒப்பாரும் இல்லை, மிக்காரும் இல்லை என்று பொருள். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லை என்றும் விநாயகருக்கு அர்த்தம் சொல்வார்கள்.

    அதுபோல பிள்ளையார் என்றால் தந்தையார் வழியில் வந்த சிறு துகள் என்று அர்த்தமாகும். இப்படி விநாயகருக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அவை அனைத்தையும் தெரிந்து கொண்டு வழிபாடு செய்தால் விநாயகரின் அருளை நிரம்ப பெறமுடியும்.

    விநாயகரின் கருணையை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. 10 வகையான விரதங்கள் மூலம் விநாயகரை வழிபடலாம். விநாயகருக்கு உகந்த 21 நைவேத்தியங்களை படைத்து வணங்கலாம். விநாயகருக்கு பிடித்த 21 இலைகளை அர்ச்சனை செய்து வழிபட்டால் அவருக்கு இன்னமும் பிடிக்கும்.
    விநாயகருக்கு எத்தனையோ வடிவங்கள் உள்ளன. அவற்றில் 32 வடிவங்களை குறிப்பிட்டு சொல்வார்கள். ஆனால் அவரது அனைத்து உருவங்களிலும் பொதுவான சில அம்சங்கள் உண்டு. விநாயகரின் நாபியை பிரம்மா என்றும், முகத்தை விஷ்ணுவின் அம்சம் என்றும், கண்களை சிவனின் அம்சம் என்றும், விநாயகரின் இடதுபாகத்தை சக்தியாகவும், வலதுபாகத்தை சூரிய அம்சமாகவும் சொல்வார்கள். எனவே விநாயகரை வழிபட்டாலே அனைத்து கடவுள்களையும் வழிபட்டதாக அர்த்தமாகும்.

    விநாயகரின் உருவத்தில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. அவரது யானை முகம் ஓங்கார தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்து மதத்தின் மூலவிதை ஓம் என்னும் பிரணவ மந்திரமாகும். அதன் வடிவமாக விநாயகர் முகம் திகழ்கிறது. எனவே விநாயகரை நாம் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் நமக்குள் ஓம் என்னும் பிரணவ மந்திரம் ஒலிக்க வேண்டும். அது நமது உடல் உறுப்புகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி ஆத்ம ஞானத்தை அதிகரிக்க செய்யும்.

    இந்த சமயத்தில் நாம் ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும். “ஓம் சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம், பிரசன்ன வதனம், த்யாயோத் சர்வ விக்னோப சாந்தயே” என்று சொல்ல வேண்டும். அப்போது சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம், பிரசன்ன வதனம் ஆகிய ஐந்தையும் சொல்லும்போது தலையில் 5 தடவை குட்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகரை மகிழ்வித்து நாமும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மகிழ முடியும்.

    விநாயகரை வழிபடும் போது மூன்று விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 1. விநாயகர் முன்பு தோப்புகரணம் போடுவது. 2. தலையில் குட்டிக்கொள்வது. 3. சிதறு தேங்காய் உடைத்தல். இந்த மூன்றையும் விநாயகர் விரும்புகிறார். எனவே விநாயகர் சன்னதி முன்பு இவற்றை அவசியம் செய்தல் வேண்டும்.

    விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல். உலகில் முதலில் தோன்றியது அருகம்புல்தான். அதில் இருந்துதான் ஜீவ ஆத்மாக்கள் உருவம் எடுத்தன. எனவே அருகம்புல்லால் நாம் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் நமது யோக நிலையில் முன்னேற்றம் தருவார் என்பது ஐதீகம் ஆகும்.
    சிலர் மோதகம் தயாரித்து விநாயகருக்கு படைத்து வணங்குவார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் பக்தி கலந்த வாழ்க்கையே சுவையானது என்பதாகும். எனவே விநாயகருக்கு தொடர்புடைய ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து, புரிந்து கொண்டு வழிபட வேண்டும்.

    விநாயகர் வீற்றிருக்கும் தல விருட்சங்களிலும் சிறப்புகள் உள்ளன. வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமணம் கைகூடும். புன்னை மரத்தடி விநாயகரை வழிபட்டால் கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கும். மகிழம் மரத்தடி விநாயகரை வழிபட்டால் இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். மா மரத்தடி விநாயகரை வழிபட்டால் கோபம் அடங்கும். வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட்டால் மனம்போல் வாழ்வு கிடைக்கும். ஆல மரத்தடி விநாயகரை வழிபட்டால் நோய்கள் தீரும். அரச மரத்தடி விநாயகரை வழிபட்டால் பயிர்கள் விளைச்சல் அதிகமாகும். வில்வ மரத்தடி விநாயகரை வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள்.

    அதுபோல விநாயகர் படத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து 21 வெள்ளிக்கிழமை விநாயகர் அகவல் படித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று யார் ஒருவர் விநாயகரை மனப்பூர்வமாக வழிபடுகிறார்களோ அவர்களை ராகு, கேது தோஷம் நெருங்காது. இப்படி விநாயகரின் சிறப்புகளையும், வழிபாடு பலன்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
    விநாயகரை நாம் முழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம். எப்போது இறைவழிபாட்டை தொடங்கினாலும் விநாயகருக்கு முதல் மரியாதையை நாம் அளிக்க வேண்டும்.
    குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ சக்தி பால நரமுக விநாயகர்

    சிதம்பரம் நகரின் தெற்குத் தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பால விநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் இருந்த போது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு அருளும் விநாயகர் இவர்.

    சித்தி புத்தி விநாயகர்

    விநாயகர் எப்போதும்பிரம்மச்சாரியாக விளங்குபவர். தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள். தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர். அந்த பண்புகளையே தன் இரு மனைவியராககொண்டுசித்தி புத்தி விநாயகராக வீற்றிருக்கின்றார்.

    சகோதர ஒற்றுமை உண்டாகும்

    சிறு வயதாக இருக்கும் போது தனது சகோதரன்,சகோதரி மீது இருக்கும் பாசம்,பெரியவர்களான பிறகுமாறிவிடுகிறது. நாரதர் கொடுத்தபழத்திற்காக, உலகைச்சுற்றி வரக் கூறிய போது, பெற்றோரை சுற்றி வந்து அவர்கள் தான் உலகம் என்பதை உணர்த்தியவர் விநாயகர். இவரேசகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதரவிநாயகராகவும் அருள்பாலிக்கிறார். தன் தம்பி முருகன் வள்ளி திருமணத்திற்கு மிகவும் உதவினார். இந்த ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிந்திருக்கும் சகோதரர்கள் விநாயகரைவணங்கினால் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

    இனிமையான குரல் வளம் பெற....

    நன்றாக பாடுவதற்கு, அதுவும் சங்கீதம் பாட இனிமையான குரல் வேண்டும். இதற்கு தினமும் பாடி பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்தாலும் பலன் வருவதற்கு இறைவனின் அருள் வேண்டும் அல்லவா. விதைப்பதை அறுவடை செய்ய பகவான் துணை இருந்தால்தான் அறுவடை செய்ய முடியும் என்பார்கள்.
    அதுபோலதான். இறைவனை வணங்கி இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குரல் இனிமை பெறும். தியாகராஜ சுவாமிகளுக்கு செய்யும் தேன் அபிஷேகத்தை பிரசாதமாக சாப்பிட்டாலும், சுவாமிகளின் அருளாசியால் குரல் இனிமையாக இருக்கும்.

    செல்வம் கல்வி மேம்படும்

    விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டா கும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டா கும். சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

    பிரார்த்தனைப்பலன்

    ஆடை சார்த்தினால் மானம் காக்கப்படும். செம்பருத்தி பூமாலையிட்டால் இட மாற்றம் நல்லபடி அமையும். வீட்டில் படம் வைத்து 21 வெள்ளிக்கிழமை அரைத்த சந்தனம் குங்குமம் இட்டு, அவ்வையார் பாடிய விநாயகர் அகவலை 3 முறை ஓதிட திருமணம் கைகூடும். விநாயகர் ஆவணியில் சதுர்த்தியில் அவதரித்த நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். இவர் கன்னி ராசிக்கு உரியவர். கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும் கன்னியில் புதனும் உச்சம் பெற்றுள்ளனர். சூரியன் சொந்த வீடான சிம்மத்தில் உள்ளார். செவ்வாய் சூரிய விருச்சிகமே இவரது லக்னம். உத்தி ராடத்திற்கு இவர் அதிதேவதையாகத் திகழ்கிறார். இவரது ஜாதகத்தை வழிபட்டால் இந்த நட்சத்திரத்தினர்பலன் பெறுவர் என்பது ஐதீகம்.

    21 நைவேத்தியங்கள்

    சோறு, நெய் மிளகுப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு பொங்கல், பால்பொங்கல், பால்சாதம், அக்கார வடிசில், சம்பா சாதம், தயிர்சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தானியப்பொடி சாதம், மருந்துக்குழம்பு சாதம், சாம்பார் சாதம், நாரத்தங்காய் சாதம், மாங்காய்சாதம், துவையல் சாதம், அரிசி உப்புமா, ரவா உப்புமா, மாவுக்கனி ஆகிய 21 வகை நைவேத்தியங்களை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம்.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 2-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 2-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேஸ்தானம் தெரிவித்துள்ளது.
    எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.
    1). இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம்.

    2) விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

    3) எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும்

    4) காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.

    இந்த விரதத்தைபழ,திரவியஆகாரங்கள்(பால்,டீ,காபி,பழங்கள்,இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும்.அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை(மதியமோ,இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது

    5) ஓரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்

    6)மஞ்சள் நிறமலர்கள் மாலை சாயிபாபா படத்திற்கு அணிவித்து,தீபம்,ஊதுபத்தி ஏற்றி ,பிரசாதம்.(பழங்கள், இனிப்புகள்,கற்கண்டு எதுவானாலும்) நைவேத்தியம் வைத்து,விநியோகம் செய்து சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும்.

    7. முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். அல்லது வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். சாயி விரத கதை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.

    8) வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    9) விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

    விரத நிறைவு விதிமுறைகள்

    1) ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.

    2) சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9ஆவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்,சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும்( 5 அல்லது11அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).

    3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும்.இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்

    4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும்,விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .

    100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் மதுக்குடங்கள் தலையில் சுமந்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து மாணிக்கநாச்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மன் குளத்தில் கரைத்தனர்.
    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் அருகே உள்ள தெற்குப்பட்டியில் அமைந்துள்ள மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத விழாவை முன்னிட்டு மதுக்குடம் எடுப்பு விழா நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் மழை வேண்டி கண்டரமாணிக்கம் நாட்டார்களால் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்கிழமை காப்பு கட்டப்பட்டு, தொடர்ந்து 2-ம் செவ்வாய் கிழமை மது எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு நாட்டார்களால் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதே போன்று இந்த ஆண்டும் கடந்த 19-ம் தேதி, ஐப்பசி மாதம்முதல் செவ்வாய்கிழமையில் அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

    விழாவில் நேற்று வடக்குத்தெரு, கண்டர மாணிக்கம் தெற்குத்தெரு ஆகிய பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புனிதநீர், வேப்பிலை, தென்னம்பாலை கலந்த மதுகுடம் மற்றும் முளைப்பாரி எடுத்து கண்டரமாணிக்கம் சவுக்கையில் வைத்து கும்மி கொட்டி வழிபாடு செய்தனர்.

    பின்பு அங்கிருந்து முளைப்பாரி மற்றும் மதுக்குடங்கள் தலையில் சுமந்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து மாணிக்கநாச்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மன் குளத்தில் கரைத்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கண்டரமாணிக்கம் நாட்டார்கள் செய்திருந்தனர்.

    மேலும் தற்சமயம் அரசு ஆணையின்படி நோய் தொற்று பரவுவதை தவிர்க்க திருவிழா போன்ற மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் கூட அனுமதி இல்லாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் 5 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், அறப்பளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி, தங்களது தேவாரப் பாடல்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தேவார வைப்பு தலமாகும்.
    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ளது, அறப்பளீஸ்வரர் திருக்கோவில். முன்காலத்தில் இந்த மலை ‘அறமலை’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. தர்மதேவதையே, மலையாக உருக்கொண்டிருப்பதால் இந்தப் பெயர். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், அறப்பளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி, தங்களது தேவாரப் பாடல்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தேவார வைப்பு தலமாகும்.

    இங்குள்ள மூலவரான அறப்பளீஸ்வரர், சுயம்பு மூர்த்தி ஆவார். அம்பாளின் திருநாமம், அறம்வளர்த்த நாயகி. ‘அறை’ என்பது ‘மலை’ என்றும் பொருள்படும். ‘பள்ளி’ என்பதற்கு ‘தங்கியிருத்தல்’ என்று பொருள். மலையின் மீது அமைந்துள்ள ஆலயத்தில் வீற்றிருப்பவர் என்பதால், இத்தல இறைவனுக்கு ‘அறைப்பள்ளீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. இதுவே காலப்போக்கில் மருவி ‘அறப்பளீஸ்வரர்’ என்றானது. இத்தல சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.

    இங்கு ஒரே இடத்தில் நின்று மூலவரான அறப்பளீஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான் ஆகிய நால்வரையும் தரிசிக்க முடியும். அம்பாள் அறம்வளர்த்த நாயகியின் சன்னிதி முன்பாக உள்ள மண்டபத்தின் மேற்கு பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்கர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

    இத்தல தீர்த்தம் சக்தி மிக்கதாக சொல்லப்படுகிறது. ஒரு முறை இந்த தீர்த்தத்தில் இருந்த மீனைப் பிடித்து ஒருவர் சமைக்க முயன்றார். அப்போது ஈசனின் அருளால் வெட்டுப்பட்ட அந்த மீன்கள் மீண்டும் உடல் பொருந்தி தண்ணீருக்குள் தாவிச் சென்றதாக இந்த ஆலய இறைவனின் திருவிளையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. ஆலயத்தின் அருகில் ‘ஆகாய கங்கை’ என்ற பெயரில் அருவி உள்ளது. கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள், இந்த அருவிக்கு சற்று தொலைவில் காணப்படுகின்றன.

    கோவில் சிறப்புகள் :

    இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை,விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

    அறம்வளர்த்தநாயகி சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தேவசேனாவுடன் முருகனும், விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி,தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

    இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் சிறப்பும் உடையது.

    நாமக்கல்லில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்கிறது. டிசம்பர் மாதம் 14-ந்தேதி பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
    தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்ததாக 11-ம் நாள் வருவது ஏகாதசி திதி. ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

    பெருமாளை வழிபட உகந்த திதியாக ஏகாதசி இருக்கிறது. அதிலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும்.

    வைணவ தலங்கள் பலவற்றில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பிரமாண்டமாக கொண்டாடப்பட்டாலும் வைகுண்ட ஏகாதசி என்றதும் திருச்சி ஸ்ரீரங்கமே நினைவுக்கு வரும். ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு வரலாறு உண்டு.

    திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட ெரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் டிசம்பர் 3-ந்தேதி திருநெடுங்தாண்டகத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 4-ந்தேதி திருமொழி திருநாள் தொடக்கம் (பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள்) விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் பரமபதவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, "பாஞ்சராத்ர ஆகமம்' முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, "கைசிக ஏகாதசி' என அழைக்கப்படுகிறது. மார்கழியில் வரும் ஏகாதசி, "வைகுண்ட ஏகாதசி' எனப்படுகிறது. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.

    சிலவேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகல் பத்து உற்சவம் அரையர் சேவையுடன் டிசம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 24-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.

    திருமங்கைமன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன்னர் பாடினார். பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு அவர் வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை கேட்டருள வேண்டும் என்று கேட்க, அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.

    நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாதமுனி காலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும், மற்ற ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    “ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    உலகை ஒரு சேர அச்சுறுத்தி வரும் சொல் “கொரோனா”. பலரது வாழ்க்கையைக் கேள்விக் குறிபோல் நிமிரவிடாமல் துரத்துகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் சிலர், அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்குச் செவி மடுக்காமல் செயல்படுவது வேதனைக்குரியது. தொற்று நோய் காலங்களில் சமூக விலகலை பின்பற்றுவதே சிறந்தது. இதையே இஸ்லாம் வரவேற்கிறது.

    தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு இல்லாத வாழ்க்கை முறைகளை அமைப்பது சமூக பொறுப்புணர்வாகும். இது ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய அழகிய பண்புகளில் ஒன்றாகும்.

    தும்மல், இருமல் போன்றவை நோய்கள் பரவ ஒரு காரணியாகும். இது இயற்கையானது என்றாலும் அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு எதுவும் வராமல் செயல்படுவது இஸ்லாம் வகுத்த சமூக நலன் கலந்த ஒழுக்க முறைகளாகும்.

    நபி (ஸல்) அவர்கள் தும்மல் வரும் போது முகத்தை மூடுதலை நோய்த் தடுப்புச் சார்ந்தவையாகக் கருதி, இரு கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக் கொண்டு முகத்தை மூட கட்டளையிட்டுள்ளார்கள். இதை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.

    “நபி (ஸல்) அவர்களுக்குத் தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் - திர்மிதி - ஹாக்கிம்)

    எச்சிலும், நோய்க்கிருமிகள் பரவ காரணமாக அமைகிறது. இதனால் பல நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புதல் குற்றமாகக் கருதப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புவதை நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கின்றார்கள். இதுதொடர்பான நபிமொழிகள் வருமாறு:

    “ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதாகக் கண்டேன்” (நூல்: முஸ்லிம்).

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்”. (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).

    நபி (ஸல்) கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (நூல்: புகாரி).

    கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருந்தாலும், அரசின் கட்டளைகளை பின்பற்றி, நாம் சமூக விலகலை கடைப்பிடித்து, முறையாக முகக்கவசம் அணிந்து, தடுப்பூசிகளையும் பிற மருத்துவ ஆலோசனைகளையும் பயன்படுத்தி வாழ்வோம். நோயற்ற சமூகத்தை உருவாக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.

    ஏ.எச். யாசிர் ஹசனி, லால்பேட்டை.
    ×