search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காரகன், விநாயகர்
    X
    அங்காரகன், விநாயகர்

    சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானது

    அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.
    சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.

    அங்கராக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளங்குகிறது.

    பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிச யத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள். அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள்.

    குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்துவாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.

    உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.

    அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்பெருமானின் பாதகமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.

    அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார். வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.

    அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும். பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும்.

    எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.

    அங்காரகனால் துவங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம். கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.

    Next Story
    ×