என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை மற்றும் இரவில் கோவில் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற உள்ளது. அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

    கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் சாமி உலா கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. விழா நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    வழக்கமாக 7-ம் நாள் விழாவன்று கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகம விதிகளின்படி கோவில் வளாகத்திற்குள்ளே உற்சவ உலா நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
    * தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

    * உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக் கொடு.

    * ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

    * உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

    * உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்.

    * ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.

    * துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.

    * சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

    * நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.

    * இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

    * இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

    * சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

    * நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.
    கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த 9 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளியின் அடுத்த நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
    ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறை தீபாவளியையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை அதாவது 9 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். மேலும் ஹாசனாம்பா கோவிலில் நடை சாத்தப்படும் போது ஏற்றப்படும் தீபம் அடுத்தாண்டு திறக்கப்படும் வரை அணையாமல் இருக்கும். அத்துடன் சாமிக்கு படைக்கப்படும் பிரசாதம் கெடாமல் அப்படியே இருக்கும். இந்தாண்டு(2021) ஹாசனாம்பா கோவில் கடந்த மாதம்(அக்டோபர்) 28-ந்தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா முன்னிலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அடுத்த நாளில்(29-ந்தேதி) இருந்து கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நாளும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த 9 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளியின் அடுத்த நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு 9 நாட்கள் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று ஹாசனாம்பா கோவில் நடை சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய சம்பிரதாயங்கள் செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு பிரசாதம் படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து பிற்பகல் 1.05 மணி அளிவில் மந்திரி கோபாலய்யா ஹாசனாம்பா தேவி வீற்றிருக்கும் கருவறையின் கதவை மூடினார். பின்னர் கோவிலின் தலைமை அர்ச்சகர் கருவறையின் கதவுக்கு பூட்டு போட்டு சீல் வைப்பதன் மூலம் கோவிலின் நடை சாத்தப்பட்டது. இதில் பிரீத்தம் ஜே கவுடா எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக மந்திரி கோபாலய்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உண்டியல் காணிக்கை விவரம்

    ஹாசனாம்பா கோவிலில் முக்கிய பிரமுகர்கள் முதல் சாதாரண பக்தர்கள் வரை சிறப்பான முறையில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. எந்தவொரு அசம்பாவிதம் இன்றி ஹாசனாம்பா கோவில் நடை திறந்து சாத்தப்பட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நல்லாட்சி செய்வதன் மூலம் மாநில மக்கள் நல்வாழ்வு வாழ அருள் புரியவேண்டும் என்று ஹாசனாம்பா தேவியிடம் வேண்டினேன். அதேபோல் அனைத்தும் நடக்கும் என்று நம்புகிறேன். ஹாசனாம்பா கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு அதன் விவரம் 3 நாட்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில், சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அசுரர்களான தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் முருகப்பெருமான் வதம் செய்வார்.

    இந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. பழனியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பொம்மைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3 தலைமுறைகளாக பொம்மை செய்யும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றவுடன், அவை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த பொம்மைகள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு அசுரர்கள் தலை, கால், கை அடங்கிய பொம்மைகள் விசுவ பிராமண மகாஜன சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மீண்டும் அதை தயார் செய்தவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதற்காக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று கிரிவீதிகளில் பக்தர்கள் வருவதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட உள்ளது.

    தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பழனிக்கு நேற்று பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. குறிப்பாக கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை உள்ளிட்ட இடங்களிலும், தரிசன வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் நின்று உள்ளூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று எல்லை தெய்வங்கள் உற்சவ நிகழச்சிகள் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கொடியேற்றத்தன்றும், 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளதால் அந்த நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

    மேலும் 17-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதனை தவிர்த்து மற்ற விழா நாட்களில் தினமும் உள்ளூர் பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி சீட்டு பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 4 அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அலுவலகங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி சீட்டு வழங்கும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகலை வழங்கி அனுமதி சீட்டு பெற்று சென்றனர்.

    தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) மேற்கண்ட 4 அலுவலகங்களிலும் அனுமதி சீட்டு வழங்கும் பணி நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
    சனி, ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து, பணி உயர்வு, திருமண வாய்ப்பு, குழந்தைப்பேறு, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.

    அனுமன் வரலாறு

    அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை, ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி– அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது, வானத்தில் தெரிந்த சூரியனைப், ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.

    வளர்ந்து பெரியவனான அனுமன், சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன், ராமனிடம் கொண்ட பக்தியும், வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.

    அனுமன், சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன், சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.

    அனுமன் கோவில்கள்

    தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும், பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

    தல வரலாறு

    பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன், இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர், ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து, இடுப்பில் கத்தி சொருகியபடி, கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.

    நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி, செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி, ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின், மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும், கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி, சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.

    ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது, இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும், சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.

    சிறப்பு வழிபாடுகள்

    ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5,008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

    இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    அமைவிடம்

    திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

    –தேனி மு.சுப்பிரமணி.
    வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
    திருவிளக்கு பூஜை நடைபெறும் பொழுது, பஞ்சமுக விளக்கேற்றி வைத்து, அந்த விளக்கிற்கே தீபம் காட்டச் சொல்லி வழிபாடு செய்வார்கள். ஜோதிக்கே ஜோதி வழிபாடு என்பதை நாம் உணர முடியும்.

    இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது விளக்கு ஆகும். இருள்மயமான சூழ்நிலையை மாற்றி ஒளிமயமான வாழ்விற்கு உத்திரவாதம் தருவது, இந்த ஜோதி வழிபாடுதான். அதனால் தான் வள்ளலார் என்று அனைவராலும் அறியப்படும் ராமலிங்க சுவாமிகள், அணையா விளக்கு என்று வடலூரில் ஏற்றி வழிபட்டார்.

    ஆலயங்களில் கூட சிவனுக்குப் பின்னால் பிம்ம விளக்கு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் தெய்வ சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டால் கலக்கம் அகலும். காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
    எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.
    இன்று (சனிக்கிழமை) எம துவிதியை தினமாகும். இந்த தினத்தை சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை தினமாக ஆதி காலத்தில் இருந்து கொண்டாடுவதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. சூரியனின் குழந்தைகளான எமனும், யமுனையும் அண்ணன், தங்கையாகும்.

    இவர்களது அண்ணன், தங்கை பாசம் மிக உயர்வானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யமுனாதேவி ஒரு சமயம் தனது சகோதரன் எமனை தனது வீட்டிற்கு வரவழைத்தாள். எமனும் தனது சகோதரியின் அழைப்பை ஏற்று நிறைய உடைகள், நகைகள் முதலிய சீர்களுடன் யமுனையின் வீட்டிற்குச் சென்றார்.
    யமுனையும் தனது கையாலேயே பலவிதமான உணவு வகைகளை தயார் செய்து சாப்பிடச் செய்து சகோதரனை உபசரித்தாள்.

    எமனும் பரிசுகளை கொடுத்து சகோதரியை மகிழ்வித்தார். அந்த திருநாள்தான் தீபாவளிக்குப் பிறகு வரும் எம துவிதியை ஒற்றுமையை வளர்க்கும் நன்னாள் என்று மரமாகி உள்ளது.

    இந்த நாளில் ஆணாக பிறந்த ஒவ்வொருவரும் தனது வீட்டில் சாப்பிடக் கூடாது. தனது உடன்பிறந்த சகோதரியின் வீட்டில் தான் சாப்பிட வேண்டும். சகோதரிக்கு நிறைய பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். பெண்ணாகப் பிறந்தவர்கள் தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து விருந்து சாப்பாடு போட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதனால் ஒருவருக்கொருவர் அன்பு வளரும். இருவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், உடல் வலிமை, செல்வம் முதலிய நன்மைகள் உண்டாகும். எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.

    சகோதரிகளின் வீட்டிற்கு செல்ல முடியாதவர்கள் தனது சகோதரிக்கு சிறிய பணம், பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம். உடன்பிறந்த சகோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா பெண், மாமா பெண், பெரியம்மா பெண், சின்னம்மா பெண் முதலியவர்களை உடன் பிறந்த சகோதரியாக பாவிக்கலாம். எந்த ஒரு உபவாசமோ, பூஜையோ, மந்திரமோ இல்லாத சுலபமாக செய்யப்படும் இந்த எம துவிதியை விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு நன்மையை அடைவோம்.
    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோவில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.
    மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை.

    இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.

    நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் தட்டிப்போவோருக்கு - திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோவில்களில் பரிகார பூஜை செய்து வழிபடலாம்

    குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).

    மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்).

    மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது.

    குருவருள் பெற (குருஸ்தலம்) - ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்).

    தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது.

    பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ( சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும்.

    கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும்.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும்.

    பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.

    செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்).

    விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். இராமநாதபுரம் அருகே உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.

    வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.

    சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.

    ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில்.

    மேற்கண்ட கோயில்களில் உரிய காலங்களில் சென்று இறைவனை வழிபட்டு பரிகார பூஜைகள் செய்வது சிறப்பு. உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் இந்த பரிகார பூஜைகளை செய்வது நலம் பயக்கும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப விழாவையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு தொடங்குகிறது.

    காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மனின் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர், 8-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், 9-ந்தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் ரி‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதையடுத்து, அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதிமுன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் 10-ந்தேதி காலை 6.30 மணிமுதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற கூடிய விநாயகர், சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் ஆரம்பமாகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர்சன்னதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    அண்ணாமலை உச்சியில் ஜோதி வடிவமாக அருணாசலேஸ்வரர் காட்சி கொடுப்பதால், கோவில் மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்படும். பின்னர், மறுநாள் அதிகாலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

    மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் நிகழ்வு நடைபெறும்.

    இதையடுத்து அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பஉற்சவம் 20-ந்தேதி தொடங்குகிறது. பின்னர் 23-ந்தேதி வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா நிறைவு பெற உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபவிழா நாட்களில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும் மற்றும் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். 17-ந்தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் நடைபெறும் சுவாமிகளின் உற்சவம், ஆகம விதி களின்படி கோவில் வளாகத்தில் கடந்தாண்டை போல் இந்தாண்டு நடைபெறும்.

    அதேபோல், மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம், இந்தாண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, கோவில் வளாகத்தில் உள்ள 5ம் பிரகாரத்தில் சாமிகளின் உலா நடைபெறும்.

    மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய 19-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அய்யங்குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெறும்.

    தீபத் திருவிழா நடைபெறும் 17 நாட்களுக்கு திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படாது.

    ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கும் அனுமதி இல்லை. பவுர்ணமி மற்றும் மகா தீபத் திருநாள் என 17-ந்தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ந்தேதி வரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப விழாவையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

    அவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். www.arunacha leswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் இலவச தரிசனத்துக்கான முன் பதிவு இன்று தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரம் உள்ளூர் பக்தர்களுக்கான அனுமதி சீட்டு, சிறப்பு மையங்கள் மூலம் நேரடியாக வழங்கப்படும். தீபத் திருவிழா நாட்களில் கட்டளைதாரர்கள் மற்றும் உபய தாரர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
    ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
    பிரசித்திப் பெற்ற கேதார்நாத் சிவன் கோவிலில் ஆதிசங்கரர் ஜீவசமாதியும், அதன் மீது அவரின் உருவச்சிலையும் இருந்தது. அது, இயற்கை சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டது. கேதார் நாத்தில் புதிதாக ஆதி சங்கரர் ஜீவசமாதியும், அவரின் உருவச்சிலையும் அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

    அதையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மன் கோவில் அருகில் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது மடாதிபதிகள் மற்றும் ஆன்மிக பிரமுகர்களின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுதொடர்பாக நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு காணொலி காட்சி மூலம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஒளி பரப்பப்பட்டது. பின்னர் ஆதிசங்கரர் உருவப்படத்துக்கு நைவேத்தியம் மற்றும் மந்திர புஷ்பம் நிகழ்ச்சி நடந்தது. மாலை ஆதிசங்கரர் உருவப்படத்தை ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள முக்கிய வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. கோலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×