search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனியில், அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணி நடந்தபோது எடுத்த படம்.
    X
    பழனியில், அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில், சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அசுரர்களான தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் முருகப்பெருமான் வதம் செய்வார்.

    இந்த சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக அசுரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. பழனியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பொம்மைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3 தலைமுறைகளாக பொம்மை செய்யும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அசுரர்களின் பொம்மைகள் தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றவுடன், அவை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த பொம்மைகள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு அசுரர்கள் தலை, கால், கை அடங்கிய பொம்மைகள் விசுவ பிராமண மகாஜன சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மீண்டும் அதை தயார் செய்தவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதற்காக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று கிரிவீதிகளில் பக்தர்கள் வருவதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட உள்ளது.

    தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பழனிக்கு நேற்று பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. குறிப்பாக கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை உள்ளிட்ட இடங்களிலும், தரிசன வழிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×