என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார்.
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ளது அழகிய நாகம்மன் கோவில். இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் அன்னை நாகம்மன். இதனால் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    வேடசந்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். இங்கு மூலவராக நாகம்மன் அருள்பாலிக்கிறார்.

    ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார்.  கோவிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும். திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தலவிருட்சத்தில் மாங்கல்யம் கட்டி செல்கின்றனர்.

    மறுவருடமே அவர்கள் திருமணமாகி கணவருடன் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். கலியுக அதிசயமாக இது நடந்து வருகிறது.

    நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.


    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கருடசேவை திருவிழா வருகிற 15-ந்தேதியும், 19-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
    உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவின் முக்கிய திருவிழாவான கருடசேவை திருவிழா வருகிற 15-ந்தேதியும், 19-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் முகப்பில் பிரம்மாண்டமாக பந்தல், தோரணங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளில் 40 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவில் வெளிப்புற வளாகத்தில் இருபுறமும் கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார். அதனால் காந்திரோடு தேரடி முதல் பஸ் நிலையம் வரை நடுபகுதிகளில் போடப்பட்டுள்ள தடுப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி வான்மதி, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதிகள் பற்றி விரிவாக ஆலோசனை நடைபெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில், போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

    இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
    கடலூர் வண்ணாரபாளையத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த கோவிலில் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி போன்ற சாமிகளும் உள்ளன.காவல் தெய்வமாக காத்த வராயன் சாமி உள்ளது. கோவிலில் அம்மன் வடக்கு பார்த்து அமைந்திருப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். அம்மன் சன்ன திக்கு முன்பாக சிங்கம் சிலை அமைந்திருப்பது அம்மன் ஆக்ரோஷமானவர் என்பதை காட்டுகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோவிலில் அரசமரம், வேப்பமரத்தின் அடியில் நாகரும், விநாயகரும் உள்ளது.  நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் நாகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்குரிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

    முத்து மாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடை பெறும். அதன்பின்னர் கோவிலில் சிறப்பு யாக நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள், நோயால் பாதிக்கப் பட் டவர்களுக்கு அவர் களது உடலில் உள்ள பிணிகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள்.

    ஆடி மாத வெள்ளிகிழமைகளில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பான பூஜைகள் செய்யப்படுகிறது.
    இந்த கோவிலில் நவராத்திரி விழா மற்றும் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா போன்ற நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

    நடைதிறப்பு

    முத்துமாரியம்மன் கோவிலில் தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இதேபோல் மாலையில் 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.

    அணையா விளக்கு

    இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுமாறு அம்மனை வேண்டிக் கொண்டு அந்த விளக்கில் எண்ணெயை ஊற்றி செல்வார்கள்.

    இந்த விளக்கு கோவிலில் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதற்கு காரணம் தற்போது இந்த விளக்கு உள்ள இடத்தில் தான் பழங்காலத்தில் அம்மன் சன்னதி இருந்து உள்ளது. கோவிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கோவில் சீரமைக்கபட்டு பெரிதாக கட்டப்பட்டது. அதன் பின்னர் அம்மன் சன்னதி மாற்றி அமைக்கபட்டது.

    அம்மன் சன்னதி இருந்த இடத்தில் இந்த விளக்கு வைக்கப்பட்டது. அம்மன் ஒளி வடிவமாக விளங்குகிறார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த கோவிலில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு 24 மணி நேரமும் 365 நாட்களும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமண தடை

    நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு அம்மனுக்கு திருமாங்கல்ய பொட்டு சாத்துவதாக வேண்டிக் கொண்டு தங்கத்தினால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான பொட்டு போன்ற பொருளை மஞ்சள் கயிற்றில் கோர்த்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.

    நீண்ட நாட்களாக திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய பொட்டு செலுத்தி வழிபட்ட உடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

    முத்துமாரி அம்மன் கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் செடல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி 2 ஆண்டிற்கு பின்னர் நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது.
    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டிற்காக இந்த விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி சிம்மவாகனம், அனுமார் வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    கடந்த 10-ந்தேதி அன்று வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்க தோளுக்கினியாள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(சனிக்கிழமை) காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.50 மணி முதல் 5.25 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை இத்தேரோட்டம் நடக்கிறது.

    இதை தொடர்ந்து நாளைமறுநாள் (15-ந்தேதி) புஷ்ப யாகம் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆஸ்தானம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் 16-ந்தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த கதை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசுவாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார்.
    அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது.

    அந்த குதிரையைத் தேடி சுமதியின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர் தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.

    கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபில முனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும் படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள். கேசினின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந்தான். அவனது மகன் பகீரதன். பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

    உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார். ஆனால் பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே அவன் சிவபெருமானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.

    அவனது தவ வலிமையை மெச்சிய சிவபெருமான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார். அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தாகினி, பிண்டார், பதமா, பிரம்மா புத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது.

    கங்கை நதி வங்கக் கடலில் கலக்கும் இடமான சாகர் என்னுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.

    அதன் பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. பகீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது.

    கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர்களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும்.

    பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
    பூண்டிமாதா பேராலயத்தில் தேர்பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் கும்பகோணம் பிஷப் கலந்துகொள்கிறார்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே எழில் மிகு  சூழலில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் தரும் பூலோகம் போற்றும் பூண்டிமாதா என போற்றிவணங்கப்படும் பூண்டி மாதா  பேராலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
    நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறிய சப்பர பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டன. திருவிழாவின் 8-வது நாளான இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மரியா-பாவிகளின் அடைக்கலம் என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆலய அதிபர் இருதயராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான நாளை(சனிக்கிழமை) காலை பூண்டி மாதா பேராலயத்தில் மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா-விசுவாசத்தின் மாதிரி என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 9.30 மணியளவில் மல்லிகை மலர் அலங்காரத்தில், வண்ண மின்விளக்குகள் ஜொலிக்க பூண்டி மாதாவின் தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார். தேர்பவனி முடிந்ததும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை மரியா-அனைவரின் தாய் என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் நிறைவேற்றுகிறார். அன்று மாலை  கொடி  இறக்கப்பட்டு  பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தையர்கள் ஜான்சன், இனிகோ, அருளாநந்தம்,  மற்றும் பங்கு  மக்கள் செய்து வருகின்றனர். ஆண்டுவிழாவையொட்டி பேராலய வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது. நாடெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலய தேர்பவனியை காண குவிந்து உள்ளனர்.
    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோவில் அப்பர், சுந்தார், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என நால்வரால் பாடப்பெற்ற தலமாக விளங்குகிறது சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய திருவிழாவான 7-ம் நாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. வேதகிரீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மன் கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியே வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து மிக பெரிய தேரான வேதகிரீஸ்வரர் தேரை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து விநாயகர் வேதகிரீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சண்டிகேஸ்வரர் என மொத்தம் 5 தேர்களும் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்தது.

    கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது மற்றும் காவல்துறை சார்பில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதிஸ்வரன் உத்தரவின் பேரில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆங்காங்கே அன்னதானமும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.
    வள்ளியூரில் புனித பாத்திமா அன்னைக்கு 53 பவுனுக்கு தங்க கிரீடத்தை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அணிவித்தார்.
    வள்ளியூர் புனித அன்னை பாத்திமா திருத்தல திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழாவில் தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 9-ம் திருநாளான நேற்று காலையில் சகாய மாதா மற்றும் சவேரியார் அன்பியம் சார்பில் ஜெபமாலையும், நவநாள் திருப்பலியும் நடந்தது.

    பின்னர் பாத்திமா அன்னைக்கு 53 பவுனுக்கு தங்க கிரீடத்தை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அணிவித்தார்.

    தொடர்ந்து தனித்தனி சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், புனித பாத்திமா அன்னை எழுந்தருளி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் மறையுரை நடந்தது.

    இதில் பங்குத்தந்தைகள் அந்தோணி மிக்கேல் லாரன்ஸ், ஜெபநாதன், தேவராஜன், நெல்சன், மரிய அரசு, ராபின், பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தென்மண்டல பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் ராதாபுரம் பங்குதந்தை ராபின் மறையுரை வழங்குகிறார். மாலையில் ஜெபமாலை பவனியும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி மிக்கேல் லாரன்ஸ், அன்பிய பொறுப்பாளர் குழு, அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்....சித்திரை மாத வளர்பிறை பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...
    சித்திரை மாதத்தில் வருகின்ற சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
    பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் சிவனை வழிபடுவதற்குரிய சிறப்பு தினமாக சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினம் வருகிறது இந்தப் பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    பல சிறப்புகள் நிறைந்த சித்திரை மாதத்தில் அனேகமாக அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. அதிலும் மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் மங்களங்களை அதிகம் தரும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

    சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.

    இன்றைய தினம் முழுவதும் சிவபெருமானின் துதியை சொல்லிய படி இருக்க வேண்டும். சிவபெருமான் துதி தெரியாதவர்கள் சிவாயநம என்ற மந்திரத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

    இம்முறையில் சித்திரை வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குவதால் உங்களின் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் நீங்கி வாழ்வில் வளமை பெருகும். திருமண தடை, குழந்தை பேறில்லாமை போன்ற குறைகள் நீங்கும். நவகிரகங்களில் புதன் பகவான் பெருமாளின் அம்சமாக இருப்பதால், அவரின் அருட்பார்வை உங்களுக்கு வாழ்வில் சுகங்கள், செல்வ சேர்க்கை உண்டாக்கும்.

    திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக மலைக்கோவிலில் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 5ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் வெவ்வேறு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் 7வது நாளான நேற்று மரத்தேரோட்டம் கோயில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த மரத் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா.. அரோகரா.. என்ற கோஷம் எழுப்பினர்.

    சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை உற்சவர் முருகப்பெருமான் யாளிவாகனத்தில் காட்சியளித்தார். மாலையில் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இதைத்தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமரிசையாக மலைக்கோவிலில் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் இன்றி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெரு–மாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது.

    கொரோனா தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் வீரராகவர் கோவிலில் கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    48 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேரில் காலை 7.30 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரடியில் இருந்து புறப்பட்ட பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் இன்றி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    முன்னதாக தேர் செல்லும் முக்கிய சாலையான பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட தெருக்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    வருகிற 14ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    தேரோட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரெண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×