search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வீரராகவர்
    X
    திருவள்ளூர் வீரராகவர்

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் இன்றி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெரு–மாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது.

    கொரோனா தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் வீரராகவர் கோவிலில் கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    48 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேரில் காலை 7.30 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரடியில் இருந்து புறப்பட்ட பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகள் இன்றி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    முன்னதாக தேர் செல்லும் முக்கிய சாலையான பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு உள்ளிட்ட தெருக்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    வருகிற 14ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    தேரோட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரெண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×