என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே பரமபத வாசலை கடந்து தரிசிக்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    ஸ்ரீரங்கம் கோவில் மணவாள மாமுனிகளின் நியமனத்தின் படி 19 வருடங்களுக்கு ஒரு முறை இந்த வைகுண்ட ஏகாதசி (பகல் பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

    அன்று முதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி விழா வந்துள்ளது.

    4-ந்தேதி முதல் தொடங்கிய பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வந்து பரமபத வாசலை கடக்கிறார்.

    கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே பரமபத வாசலை கடந்து தரிசிக்கலாம்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருகிறார். திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணியளவில் கருட மண்டபம் சேருகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ரெங்கநாதர் தன்னை தரிசனம் செய்ய வந்த பக்தர்களை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவற்றை துறக்க வேண்டும் என்றார். இதில் பெண்ணாசையை துறப்பது கஷ்டம் என்றும், நான் பூண்டிருக்கும் மோகினி வே‌ஷத்தில் மயங்கியதால் தான் அசுரர்கள் அமிர்தத்தை அடைவதை இழந்தார்கள்.

    எனவே நீங்களும் பெண்ணாசையில் மயங்காமல் நாளை வைகுண்ட ஏகாதசியன்று நான் காட்டிக் கொடுக்கும் மார்க்கத்தை கண்டுரைத்து சொர்க்க வாசலை கடந்தால் வைகுண்டத்தை அடையலாம் என்றார்.

    இதையொட்டி அதிகாலை முதலே ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்த திரளான பக்தர்கள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை தரிசித்தனர். மாலை 4.30 மணிக்கு மேல் மூலவர் மற்றும் நம்பெருமாள் மோகினி அலங்காரம் சேவை கிடையாது.

    நாளை ராப்பத்து நிகழ்ச்சி தொடங்குவதையொட்டி ஆயிரங்கால் மண்டபம் வண்ண திரைச்சீலைகளால் மேற்கூரை அலங்காரம் செய்யப்பட்டதோடு, மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் ஊழியர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானதாக திகழ்கிறது. மற்ற திருத்தலங்களின் பெயர், ஊர் மற்றும் கடவுள்கள் விபரம் வருமாறு:
    1. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்- ரெங்கநாயகி,
    2. திருச்சி உறையூர் பகுதி-அழகிய மணவாளன்- வாசலட்சுமி,
    3.உத்தமர் கோவில் புருஷோத்தமன்-பூர்ணவல்லி,
    4.திருவெள்ளறை புண்டரீகாட்சன்- பங்கயச் செல்வி,
    5.அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள்- வடிவழகியநம்பி,
    6.கோவிலடி அப்பக்குடத்தான்-இந்திரா தேவி,
    7.திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோவில் ஹரசாபவிமோசனர்- கமலவல்லி,
    8. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரட்சகன்- பத்மாசானவல்லி,
    9.கபிஸ்தலம் கஜேந்திரவரதர்- ரமாமணிவல்லி,
    10.புள்ள பூதங்குடி வல்வில் ராமன்- பொற்றாமறையாள்,
    11. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில் ஆண்டளக் குமய்யன்-ரங்கநாயகி,
    12. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் சாரங்க பாணி, ஆராவமுதன்- கோமளவல்லி,
    13. குடந்தை ஒப்பி லியப்பன்-பூமிதேவி,
    14.நாச்சியார் கோவில் நறையூர்நம்பி-நம்பிக்கை நாச்சியார்,
    15. திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவில் சாரநாதன்- சாரநாயகி,
    16. நாதன் கோவில் ஜகந்நாதர்- செண்பகவல்லி,
    17. திருவெள்ளியங்குடி கோலவில்லிராமர்- மரகதவல்லி,
    18. திருக்கண்ணமங்கை பக்தவத்சலன்- அபிஷேகவல்லி,
    19. திருக்கண்ணபுரம் (சீர்காழி) சவுரிராஜன்-கண்ணபுர நாயகி,
    20. திருக்கண்ணங்குடி லோக நாதன்-லோகநாயகி,
    21. நாகப்பட்டினம் (திருநாகை) சவுந்தர்யராஜன்- சவுந்தர்யவல்லி,
    22. திருத்தஞ்சை மாமணிக்கோவில் நீலமேகம்-செங்கமலவல்லி,
    23. தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் ஆமருவியப்பன்-செங்கமலவல்லி,
    24. திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோவில் அருள்மாகடல்-திருமாமகள்,
    25. தலைச்சங்காடு நாண் மிதியப்பெருமாள்-- தலைச் சங்கநாச்சியார்,
    26. திருஇந்தளூர், மாயவரம் பரிமளரங்க நாதர்- புண்டரீகவல்லி,
    27. திருக்காழிச்சீராமவிண்ணகரம், சீர்காழி தாடாளன்- லோகநாயகி,
    28. திருக்காவளம்பாடி கோபாலகிருஷ்ணன்- செங்கமல நாச்சியார்,
    29. அரிமேய விண்ணகரம் குட மாடு கூத்தர்- அம்ருதகடவல்லி,
    30. வண்புருடோத்தமம் (சீர்காழி) புருஷோத்தமர்-புரு ஷோத்தமநாயகி,
    31. செம்பொன் செய்கோ வில் (சீர்காழி) செம்பொன்ன ரங்கர்-சுவேதபுஷ்பவல்லி,
    32. திருமணிமாடக் கோவில் சாச்வததீபநாராயணர்- புண்டரீகவல்லி,
    33. வைகுந்த விண்ணகரம் வைகுண்ட நாதர்- வைகுண்ட வல்லி,
    34.திருத்தெற்றியம்பலம் செங்கண்மால்- செங்கமல வல்லி,
    35. திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன்-திருமகள் நாச்சியார்,
    36. திருப் பார்த்தன் பள்ளி தாமரை நாயகி-தாமரையாள் கேள்வன்,
    37. திருவாழி-திருநகரி கோவில்கள் வயலாளி மணவாளன்-அம்ருதகடவல்லி, வேதராஜன்-அமிர்தவல்லி,
    38. திருத்தேவனார்த் தொகை தேவநாயகர்-சமுத்ரதனயா,
    39.திருவெள்ளக்குளம் சீனி வாசன்-பத்மாவதி,
    40. திருச்சித்ர கூடம், சிதம்பரம் கோவிந் தராஜர்-புண்டரீகவல்லி,
    41. கடலூர் திருவந்திபுரம் தேவநாதன்-ஹேமாப்ஜவல்லி,
    42. திருக்கோவிலூர் திரிவிக் ரமன்- பூங்கோவல் நாச்சி யார்,
    43. திருக்கச்சி வரதரா ஜன்- பெருந்தேவி,
    44. அட்ட புயக்கரம் ஆதிகேசவன்- அலர்மேல்மங்கை,
    45. திருத்தண்கா (தூப்புல்) தீபப் பிரகாசர்-மரகதவல்லி,
    46. திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவில் முகுந்தநாயகன்-வேளுக்கை வல்லி,
    47.திருநீரகம் (காஞ்சி புரம்) ஜகதீசப்பெருமாள்- நிலமங்கைவல்லி,
    48.திருப் பாடகம் (காஞ்சிபுரம்) பாண் டவதூதர்-ருக்மணி, சத்ய பாமா,
    49.நிலாத்திங்கள் (காஞ்சிபுரம்) நிலாத்திங்கள் துண்டத்தான்- நேரொரு வரில்லாவல்லி,
    50.திரு ஊர கம் (காஞ்சிபுரம்) உலகளந்த பெருமாள்- அம்ருதவல்லி,
    51.திருவெக்கா (காஞ்சி புரம்) யதோத்தகாரி-கோமள வல்லி,
    52. திருக்காரகம் (காஞ்சிபுரம்) கருணாகரர்- பத்மாமணி,
    53.திருக்கார்வானம் (காஞ்சிபுரம்) கள்வர்பெருமாள்-கமலவல்லி,
    54. திருக்கள்வனூர் (காஞ்சிபுரம்) ஆதிவராகர்-அஞ்சிலைவல்லி,
    55.திருப்பவள வண்ணம் (காஞ்சிபுரம்) பவள வண்ணப்பெருமாள்-பவள வல்லி நாச்சியார்,
    56. திருப்பர மேச்சுர விண்ணகரம் பரமபத நாதன்- வைகுந்த வல்லி,
    57. திருப்புட்குழி விஜயராகவன்- மரகதவல்லி,
    58.திருநின்றவூர் பத்தவத்சலர்-சுதாவல்லி,
    59. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் வைத்ய வீரராகவர்-கனகவல்லி,
    60.திரு வல்லிக்கேணி பார்த்த சாரதி- ருக்மணி,
    61. திருநீர்மலை நீர்வண்ண பெருமாள்- அணிமாமலர் மங்கை,
    62. திருவிடவெந்தை நித்யகல்யாணர்-கோமள வல்லி,
    63. திருக்கடல்மல்லை தல சயனப்பெருமாள்- நில மங்கை நாச்சியார்,
    64. திருக் கடிகை (சோளிங்கர்) யோக நரசிம்மர்-அம்ருதவல்லி,
    65.திருவயோத்தி கோதண்ட ராமர்- சீதாபிராட்டி,
    66. நைமிசாரண்யம் தேவராஜன்- ஹரிலட்சுமி,
    67. திருப்பிரிதி பரமபுருஷன்- பரிமளவல்லி,
    68.தேவபிரயாகை நீலமேகம்- புண்டரீகவல்லி,
    69. பத்ரிகாச்ரமம் பத்ரீநாராயணன்- அர விந்தவல்லி,
    70. முக்திநாத் ஸ்ரீமூர்த்தி-ஸ்ரீதேவி,
    71. உத்தர பிரதேசம் வடமதுரை கோவர்த்தனகிரிதாரி- சத்யபாமா,
    72. (உ.பி.) ஆயர்பாடி ஹரிகிருஷ்ணப்பெருமாள்- ருக்மணி, சத்யபாமா,
    73. குஜராத் திருத்துவாரகை கல்யாணநாராயணன்- கல்யாணநாச்சியார்,
    74. ஆந்திரம் அகோபிலம் (சிங்க வேள் குன்றம்) லட்சுமி நரசிம்மர்-செஞ்சுலட்சுமி,
    75. ஆந்திரம் திருவேங்கடம் திருவேங்கடமுடையான்- அலர்மேல்மங்கை,
    76. கேரளம் திருச்சூர் திருநாவாய் நாராயணன்-மலர்மங்கை நாச்சியார்,
    77.கேரளம் திருவித்துவக்கோடு உய்ய வந்த பெருமாள்- வித்துவக் கோட்டுவல்லி,
    78.கேரளம் திருக்காட்கரை காட்கரையப் பன்-வாத்ஸல்யவல்லி,
    79. கேரளம் திருமூழிக்களம் திருமூழிக்களத்தான்- மதுர வேணி,
    80. கேரளம் திருவல்லவாழ் கோலப்பிரான்-செல்வத் திருக்கொழுந்து,
    81. கேரளம் திருக்கடித்தானம் அற்புத நாராயணன்-கற்பகவல்லி நாச்சியார்,
    82.கேரளம் திருச்செங்குன்றூர் இமைய வரப்பன்- செங்கமலவல்லி,
    83.கேரளம் திருப்புயூர் மாயப்பிரான்-பொற்கொடி நாச்சியார்,
    84.கேரளம் திருவாறன்விளை திருக்குறளப் பன்-பத்மாசனி,
    85. கேரளம் திருவண்வண்டூர் பாம்பணையப்பன்- கமலவல்லி,
    86. கேரளம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் அனந்த பத்ம நாபன்-ஸ்ரீஹரிலட்சுமி,
    87. திருவட்டாறு ஆதிகேசவன்- மரகதவல்லி,
    88. திருவண்பரிசாரம் (திருப்பதி சாரம்) கமலவல்லி- திருக்குறளப்பன்,
    89. திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி-குறுங்குடிவல்லி,
    90. வானமாமலை தோத் தாத்ரி நாதர்-சிரீவரமங்கை,
    91. ஸ்ரீவைகுண்டம் நவதிருப் பதி கள்ளப்பிரான்- வைகுந்த வல்லி,
    92. திருவர குண மங்கை (நத்தம்) விஜயாசனர்- வரகுணவல்லி,
    93.திருப் புளிங்குடி காய்ச்சினவேந் தன்-மலர்மகள்,
    94.திருத்து லைவில்லி மங்கலம் அரவிந்த லோசநர்- விசாலக்ருஷ் ணாட்சி,
    95.திருக்குளந்தை மாயக்கூத்தர்-குளந்த தைவல்லி (அலமேலுமங்கை),
    96.திருக்கோளூர் வைத்த மாநிதி-கோளூர்வல்லி,
    97. திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர்-குழைக்காது வல்லி நாச்சியார்,
    98.ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் கோவில், திருக்குருகூர் ஆதி நாதர்-ஆதிநாதவல்லி,
    99. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி -ஆண்டாள்,
    100. திருத்தண்கால் தண் காலப்பன்-அன்னநாயகி,
    101.கூடல் அழகர் கோவில் கூடலழகர்-மதுரவல்லி,
    102.மதுரை திருமாலிருஞ்சோலை அழகர்-சுந்தரவல்லி,
    103.திருமோகூர் காளமேகம்- மோகனவல்லி,
    104.திருக் கோஷ்டியூர் சவும்யநாராயணர்-மகாலட்சுமி,
    105.ராம நாதபுரம் திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர்-கல்யாணவல்லி,
    106. திருமெய்யம் சத்யகிரிநாதன்-உஜ்ஜீவன நாச்சியார்,
    107. திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள்-கடல்மகள் நாச்சியார்,
    108. பரமபதம் பரமபத நாதர்-பெரியபிராட்டியார்.

    குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திக்கை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.

    இதையொட்டி குத்தாலம் சோழீஸ்வரர் கோவில், மன்மதீஸ்வரர் கோவில், ஆதிகேசவபெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக வந்து காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.

    இதை தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    கடைஞாயிறு தீர்த்தவாரியையொட்டி குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குத்தாலம் பகுதியில் 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. சூரிய புஷ்பகரணியில் நீராட அனுமதி மறுத்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
    கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்களில் ராகுபகவான் தனி சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி என இரு தேவியருடன் மங்களராகுவாக அருள்பாலித்து வருகிறார்.

    சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று பஞ்சமூர்த்தி சாமிகள் தனி்த்தனியாக வெள்ளி ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு சூரிய புஷ்கரணி முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் ஒருசேர எழுந்தருளினர். அப்போது ஏராளமான பக்தர்கள் பஞ்சமூர்த்தி சாமிகளை ஒரே நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    பின்னர் சூரியபுஷ்கரணி தீர்த்த குளத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சூரிய புஷ்கரணியில் நான்கு புறமும் பக்தர்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

    கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் குளத்தில் பக்தர்களை புனித நீராட அனுமதி வழங்கினர். ஆனால் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட காத்திருந்தும் அவர்களை குளத்துக்குள் புனித நீராட அனுமதிக்கவில்லை. இதனால் கரைகளில் காத்திருந்த பக்தர்கள் பஞ்சமூர்த்தி சாமிகளை தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். முன்னதாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் நித்யா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.
    பொதுவாகவே திங்கட்கிழமை அன்று, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம். இந்த நாளை ‘சோமவாரம்’ என்றும் அழைப்பார்கள். ‘சோம’ என்பது சந்தி ரனைக் குறிப்பதாகும். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை தினத்தில் சிவபெருமானை வணங்குவது கூடுதல் பலனைத் தரும். ஒரு முறை சாபத்தால், தேய்ந்துகொண்டே சென்ற சந்திரன், தன்னுடைய சாபத்தில் இருந்து மீள சிவபெருமானை நினைத்து விரதம் இருந்தான். இதையடுத்து தன்னுடைய சடைமுடி மீது சந்திரனை சூடிக்கொண்ட சிவன், அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். சந்திரனின் சாபம் நீங்க, அவனது மனைவி ரோகிணியும் இந்த விரதத்தை மேற்கொண்டாள். இந்த சோமவார விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் கிடைப்பதுடன், கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் விலகும்.

    ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அதில் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் சிவபெருமான், தானே வெற்றிபெற்றதாக கூறினார். இதனால் கோபமடைந்த பார்வதி, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவரை அழைத்து நியாயம் கேட்டார். அதற்கு அந்த முனிவர், ‘ஆட்டத்தைப் பார்க்காமல் தீர்ப்பு கூற முடியாது’ என்று சொல்ல, பார்வதியும் சிவனும் மீண்டும் விளையாடினர். அப்போதும் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் முனிவரும் கூட ‘சிவபெருமானே வெற்றிபெற்றார்’ என்று சொன்னார்.

    இதனால் ஆத்திரம் கொண்ட பார்வதி தேவி, துர்க்கையாக மாறி முனிவருக்கு சாபம் கொடுத்தார். இதனால் தொழு நோய் பாதிக்கப்பட்டு முனிவர் அவதிப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள துணிந்தார். அப்போது ஒரு பெண், முனிவரை தடுத்து நிறுத்தினாள். அவரது கதையைக் கேட்டவள், பின்னர் “நான் ஒரு தேவலோகப் பெண். இந்திரனின் சாபத்தால், பூலோகத்தில் பிறந்தேன். இங்கு சோமவார விரதத்தை மேற்கொண்டதால் எனக்கு விமோசனம் கிடைத்து, தற்போது தேவலோகம் சென்று கொண்டிருக்கிறேன். நீங்களும் சோம வார விரதம் மேற்கொண்டால், உங்களுடைய சாபமும் நீங்கும்” என்று கூறிச் சென்றாள். அதன்படி முனிவரும் விரதம் மேற்கொண்டு நோயில் இருந்து விடுபட்டார்.

    விரதம் இருக்கும் முறை

    சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். சோம வார தினத்தில், ராகு காலத்துக்கு முன்பாகவே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்ட வேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

    கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி - பரமேஸ்வரனாக நினைத்து வணங்க வேண்டும். அவர்களுக்கு ஆடை தானமும், அன்னதானமும் அளித்து, அட்சதையை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.

    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ, அல்லது 12 ஆண்டுகளோ கடைப் பிடிக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை களிலாவது இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால், முற்பிறவி பாவங்களும், தீராத நோய்களும் நீங்கும்
    ஈரோடு புனித அமல மாதா சொரூபத்தை தோளில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். அப்போது தேரின் முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் அன்னை மரியாள் வாழ்த்து பாடல்கள் பாடியபடியும், ஜெபமாலை ஜெபித்தபடியும் பங்குபெற்றனர்.
    ஈரோடு மாநகரின் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக இருப்பது புனித அமல அன்னை ஆலயம். ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் அமைந்து உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி (பூஜை), பிரார்த்தனை மற்றும் மறையுரை வழிபாடுகள் நடந்தன. நேற்று முக்கிய விழாவான தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஈரோடு மறை வட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.

    இந்த திருப்பலியை கோவை மறைமாவட்ட வக்கீலும், சீமா தொண்டு நிறுவன இயக்குனருமான பங்குத்தந்தை ஆரோக்கிய பிரதீப் தலைமை தாங்கி நடத்தி, மறையுரையாற்றினார். இதுபோல் நேற்று மாலை திருவிழா சிறப்பு திருப்பலி கோவை புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் நடந்தது.

    இந்த 3 திருப்பலிகள் நிறைவிலும் வேண்டுதல் தேர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி மாதாவின் சொரூபம் (சிலை) அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் மாதா சொரூபத்தை தோளில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். அப்போது தேரின் முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் அன்னை மரியாள் வாழ்த்து பாடல்கள் பாடியபடியும், ஜெபமாலை ஜெபித்தபடியும் பங்குபெற்றனர்.

    திருவிழா வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் அருகே காயாமொழியை அடுத்த தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    கோவிலில் இந்த ஆண்டு கள்ளர் வெட்டு திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வில்லிசை நடைபெற்றது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஐவராஜா பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை, மதியம் சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு உற்சவர் வீதி உலா நடைபெறும்.

    விழாவின் சிகர நாளான வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணியளவில் கோவில் பின்புறமுள்ள செம்மணல் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 2,500 பக்தர்களும், நேரடியாக வரும் 500 பக்தர்களும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இ்ல்லை.

    16, 17-ந்தேதிகளில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மாவிளக்கு, முளைப்பாரி, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் அனுமதி கிடையாது. 16-ந்தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறந்து இருக்கும்.

    18-ந்தேதியில் இருந்து கோவில் வளாகத்தில் புனித மண் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜித், உதவி ஆணையாளர் ரோஜாலி சுமதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    பரக்கலக் கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரக்கலக் கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் அருள் காட்சி தந்து,அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கி பின்பு அந்த மரத்திலேயே சிவபெருமான் ஐக்கியமானார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். தல விருட்சமாக கருதப்படும் ஆலமரத்தைச் சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆல மரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது.

    மரமே மூர்த்தி

    சுவாமியே ஆலமரத்தின் வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருள் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும். ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனக்கலவையைப் பூசி அதன் மேல் வெள்ளியில் ஆன நெற்றிப்பட்டம்,திருக்கண் மலர்கள், திருநாசி, திருவாய் முதலியன பதிக்கப்பெற்று திருவாட்சி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். எதிரே மரத்தைச் சார்ந்துள்ள முகப்புமேடை உள்ளது. அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் மிளிர்கின்றன.

    சோமவாரவழிபாடு

    பரக்கலக் கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றில் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட் களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
    பழனி முருகன் கோவிலில் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழாக்கள் மட்டுமின்றி தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை மாதம் என்பதால், தற்போது வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

    குறிப்பாக சபரிமலை சீசன் என்பதால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளிமாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் காரணமாக மலைக்கோவில் செல்வதற்காக ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதேபோல் பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகளிலும், மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனவே 3 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்த பக்தர்கள் அடிவாரம் பகுதியில் உள்ள ‘செல்பி ஸ்பாட்' பகுதியில் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

    பழனி அடிவார பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருட்டு, ஜேப்படி உள்ளிட்டவற்றை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் மழை பெய்த நிலையில் நேற்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் பகல் முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். வழக்கமாக மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி வரும். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வருகிறது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அபூர்வ நிகழ்வு வரும் என்று கூறப்படுகிறது.

    இதன்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் (லக்னப்படி) எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

    சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட சுழலும் கேமராக்கள் மற்றும் 4 வீதிகளிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிக்கலாம்...திருமண வரம் அருளும் மஞ்சமாதா
    மஞ்சமாதா காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பது கண்கூடாகக் கண்ட உண்மை.
    சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம் படியின் வடதிசையில் மஞ்சமாதா கோவில் உள்ளது. சாஸ்தா சந்நிதியில் இருந்து கீழே இறங்காமல் மேம்பாலம் வழியாகவே அம்பாள் கோவிலுக்குச் சென்று விடலாம். திருநடை திறக்கப்படாத சமயங்களில் திரிசூலம் விளக்கு இவைகளை தரிசிக்கலாம். மஞ்சள்பொடி நிறைந்த தட்டில் எரியும் ஊதுபத்தி, கற்பூரம் சகிதமாக பன்னீரை பக்தர்கள் மீது தெளித்தவாறே மஞ்சள் மாதா தரிசனம் பெறச்செய்வார்கள். மஞ்சமாதா சந்நிதியில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவது ஒரு சடங்காகும்.

    மஞ்சள் மாதாவுக்கு மஞ்சள் ஜாக்கெட் துணிகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அம்மன் காலடியில் வைத்து வரப்படும் துணியைத் தைத்துப் போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பதும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் கண்கூடாகக் கண்ட உண்மை. அம்மன் கோவிலின் தென்மேற்குப் புறத்தில் மணி மண்டபம் உள்ளது. இங்கு தேவி உபாசனை, அர்ச்சனை, பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது.
    ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
    தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். மாணிக்கவாசகரிடம் தாங்கள் எழுதிய ‘திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகரும் 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் அவற்றை எழுதிக் கொண்டார். பின்பு திருவாசகம் எழுதப்பட்ட அத்தனை ஓலைச் சுவடிகளையும் நடராசர் சன்னிதி முன்பு வைத்து விட்டு பெருமான் மறைந்து விட்டார்.

    மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னிதியில் கிடந்த நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போனார்கள். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் ‘மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்’ எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்ததை பார்த்து மீண்டும் திகைத்து போனார்கள். உடனே மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு மாணிக்கவாசகரிடம் நடந்த சம்பவத்தை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

    அவரும் ஓலைச்சுவடிகளில் உள்ள ஒவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். கடைசியில் பெருமானின் கையொப்பத்தை கண்டு பிரமித்தவராய் ‘‘ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டது தான்’’ என்றார். தன்னை நாடி வந்தது பெருமான்தான் என்பதை நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

    தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினார்கள். மாணிக்கவாசகர், புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராஜப் பெருமானைக் காட்டி ‘‘இந்த பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்’’ என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார். இந்த திருவாசகம் சிவபுராணம் என்றும் அழைக்கப் டுகிறது.

    திருவாசகத்தின் சிறப்புகள்

    * நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகம் தொடங்குகிறது.

    * முதல் பதிகத்தில் 6 இடங்களில் ‘வாழ்க’ என முடியும். 2-வது பதிகத்தில் 5 இடங்களில் ‘வெல்க’ என முடியும்.

    * 3-வது பதிகத்தில் 8 இடங்களில் ‘போற்றி’ என முடியும்.

    * இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

    * 32-வது வரியில் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’ என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

    * திருவாசகத்தின் 18-வது வரியான ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

    * ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

    * இறந்த வீட்டில் கட்டாயம் திருவாசகம் படிக்க வேண்டும்.

    * `புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்’ என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
    ×