search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் வேண்டுதல் தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.
    X
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் வேண்டுதல் தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.

    புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா: வேண்டுதல் தேர் எடுத்து வழிபாடு

    ஈரோடு புனித அமல மாதா சொரூபத்தை தோளில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். அப்போது தேரின் முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் அன்னை மரியாள் வாழ்த்து பாடல்கள் பாடியபடியும், ஜெபமாலை ஜெபித்தபடியும் பங்குபெற்றனர்.
    ஈரோடு மாநகரின் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக இருப்பது புனித அமல அன்னை ஆலயம். ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் அமைந்து உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி (பூஜை), பிரார்த்தனை மற்றும் மறையுரை வழிபாடுகள் நடந்தன. நேற்று முக்கிய விழாவான தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஈரோடு மறை வட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.

    இந்த திருப்பலியை கோவை மறைமாவட்ட வக்கீலும், சீமா தொண்டு நிறுவன இயக்குனருமான பங்குத்தந்தை ஆரோக்கிய பிரதீப் தலைமை தாங்கி நடத்தி, மறையுரையாற்றினார். இதுபோல் நேற்று மாலை திருவிழா சிறப்பு திருப்பலி கோவை புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் நடந்தது.

    இந்த 3 திருப்பலிகள் நிறைவிலும் வேண்டுதல் தேர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி மாதாவின் சொரூபம் (சிலை) அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் மாதா சொரூபத்தை தோளில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். அப்போது தேரின் முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் அன்னை மரியாள் வாழ்த்து பாடல்கள் பாடியபடியும், ஜெபமாலை ஜெபித்தபடியும் பங்குபெற்றனர்.

    திருவிழா வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
    Next Story
    ×