search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவில்
    X
    பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவில்

    குருதலமாக போற்றப்படும் பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவில்

    பரக்கலக் கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரக்கலக் கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் அருள் காட்சி தந்து,அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கி பின்பு அந்த மரத்திலேயே சிவபெருமான் ஐக்கியமானார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். தல விருட்சமாக கருதப்படும் ஆலமரத்தைச் சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆல மரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது.

    மரமே மூர்த்தி

    சுவாமியே ஆலமரத்தின் வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருள் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும். ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனக்கலவையைப் பூசி அதன் மேல் வெள்ளியில் ஆன நெற்றிப்பட்டம்,திருக்கண் மலர்கள், திருநாசி, திருவாய் முதலியன பதிக்கப்பெற்று திருவாட்சி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். எதிரே மரத்தைச் சார்ந்துள்ள முகப்புமேடை உள்ளது. அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் மிளிர்கின்றன.

    சோமவாரவழிபாடு

    பரக்கலக் கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றில் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட் களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
    Next Story
    ×