என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்களை ஒரு கூடையில் வைத்து திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
    தனுர் மாதத்தின் கடைசிநாளான நேற்று திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் திருப்பாவை பாராயண நிகழ்ச்சி நிறைவுநாள் நடந்தது. அதையொட்டி கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் சிறப்புப்பூஜைகள் நடந்தது. அப்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்களை ஒரு கூடையில் வைத்து திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

    அந்த மாலை மற்றும் மங்கள பொருட்களை பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவிலில் பூஜைகள் செய்து, மூலவர் ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பட்டு வஸ்திரம் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பெரிய ஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர்.
    பழைய நூல்களிலிருந்தும், தீர்க்கத் தரிசனங்களிலிருந்தும் இயேசுவைக் குறித்த செய்திகள் இருக்குமோ என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்தது. இயேசுவின் புகழ் பரவியது.
    இயேசுவின் சீடரான பேதுரு போதனைகளைக் கேட்பதிலும் இயேசுவோடு பயணிப்பதிலுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அவருடைய மாமியார் நோயில் விழுந்தார். பயங்கரமான கொடிய காய்ச்சல் அவளைப் பிடித்தது. அது சாதாரணக் காய்ச்சல் அல்ல, வயதானவர்களை வாட்டி எடுக்கும் கொடிய காய்ச்சல். உடலெல்லாம் அனலாய்க் கொதிக்க பேதுருவின் மாமியார் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அந்தகாலத்தில் நடைமுறையில் இருந்த வைத்தியம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் விலங்குகளின் மண்டை ஓடுகளை எரித்த சாம்பலை நெற்றியில் பூசுவதே மருந்து. சர்வ நிவாரணி போல அவர்கள் கலாச்சார மருந்து ஒன்று உண்டு. நரியின் மண்டைஓடு, எலியின் தலை, நண்டுகளின் கண்கள், ஆந்தையின் மூளை, தவளையின் ஈரல், யானையின் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேன் போன்ற உயிரினங்கள் இவற்றையெல்லாம் கலந்து சுட்டு சாம்பலாக்கியது தான் அந்த சர்வ நிவாரணி !. இப்போது வாசித்தால் சிரிப்பை உண்டாக்கும் வைத்தியங்களும் அந்நாட்களில் ஏராளம் உண்டு. ஜலதோஷம் தீரவேண்டுமானால் எலியின் மூக்கில் முத்தமிடுவது, தவளையை வினிகரில் சமைத்து உண்டால் பல்வலி பறக்கும் என்பவையெல்லாம் அவற்றில் சில.

    எந்தவிதமான மருந்தும் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணப்படுத்தவில்லை. மாறாக காய்ச்சலின் வீரியத்தை அதிகரிக்கவே செய்தன. பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்பதை விட வேறு வழியில்லை. இயேசுவின் காதுக்கு செய்தி சென்றதும் இயேசு பேதுருவின் வீட்டுக்கு விரைந்தார். பேதுருவின் மாமியார் இறந்து விடுவார் என்றே சுற்றத்தினர் நம்பியிருந்தனர். பேதுரு கூட அவளுடைய நிலைமையைப் பார்த்து அவ்வாறே நினைத்திருக்கக் கூடும். இயேசு நேராக பேதுருவின் மாமியார் படுத்திருந்த படுக்கை அருகே சென்றார். அவருடைய கைகளைத் தொட்டார். அவ்வளவு தான், காய்ச்சல் சட்டென்று விலக மாமியார் எழுந்தாள். அனலடித்த தேகம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது. மூட்டுகளில் இருந்த வலி மறைந்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு இயல்பாக இருந்தது. இயேசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் பனித்தாள். ஒரு தொடுதல் மூலம் தன்னை குணப்படுத்திய இயேசுவின் மீதும் அவருடைய பணிகளின் மீதும் நம்பிக்கை கொண்டாள்.

    பேதுருவின் மாமியார் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார் என்னும் செய்தி சடுதியில் வீதிகள் தோறும் விரைந்தோடியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். இயேசு அப்போது அவர்களுடைய பார்வையில் ஒரு மருத்துவர். காய்ச்சல், தொழுநோய், புற்று நோய், வாதம் என அனைத்து விதமான நோயாளிகளும் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள். இயேசு வந்தார். வந்திருந்த அனைவரையும் குணமாக்கினார் ! அதுவும் மக்களோடு பேசிக்கொண்டே, சிரித்துக் கொண்டே, ஒரு நண்பனைப் போல அவர்களிடையே நடந்து அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

    சுகமாக்கும் போதனையாளர்கள் வரலாற்றில் இருந்திருந்தாலும் இயேசுவின் அணுகுமுறை மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய நோய் தீர்க்கும் முறை பிச்சையிடுவது போல இருக்கவில்லை. நண்பனுக்கு நட்புடன் கை குலுக்குவது போல, உறவினர் ஒருவருடன் உரையாடுவது போல ஆத்மார்த்தமான அன்புடன் மிளிர்ந்தது. எனவே தான் மக்கள் இயேசுவை நோக்கி கூச்சலிட்டார்கள்

    ‘நீர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’

    ஆலய குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டினார்கள். பழைய இறைவாக்கினர்கள் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா என்பதை அறிய. அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது இறைவாக்கினர் எசாயா எழுதிய தீர்க்கத் தரிசனம் ஒன்று. ‘செபுலான் நாடே, நப்தலின் நாடே… இருளில் இருக்கும் மக்கள் பேரொளியைக் காண்பார்கள்…’. கப்பர்நாகும் நகரம் செபுலான், நப்தலி என்னும் நகரங்களின் எல்லையில் தான் இருந்தது. எனவே இந்த தீர்க்கத் தரிசனம் இயேசுவின் வருகையைக் குறித்ததாக இருக்குமோ என்று அவர்கள் விவாதிக்கத் துவங்கினர்.

    இன்னொருவர் ஏசாயா தீர்க்கத் தரிசியின் இன்னொரு தீர்க்கத் தரிசனத்தை குறிப்பிட்டார். ‘ அவர் நம் நோய்களைத் தாங்கிக் கொண்டார், நம் வலிகளை ஏற்றுக் கொண்டார்’ இது கூட இயேசுவைக் குறித்ததாக இருக்குமோ ? விவாதங்கள் தொடர்ந்தன. பழைய நூல்களிலிருந்தும், தீர்க்கத் தரிசனங்களிலிருந்தும் இயேசுவைக் குறித்த செய்திகள் இருக்குமோ என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்தது. இயேசுவின் புகழ் பரவியது.

    மீண்டும் மீண்டும் இயேசுவைக் கூட்டம் மொய்க்கத் துவங்கியது. இயேசு சுற்றியிருக்கும் ஊர்களுக்கும் சென்று போதனைகளைச் செய்ய விரும்பினார். கப்பர்நாகூமிலேயே ஒரு மருத்துவரைப் போல தங்கி விட அவர் விரும்பவில்லை. வந்தவர்களைச் சுகமாக்கி விட்டு அவர் சீடர்களுடன் பயணத்தைத் துவங்கினார். சமாரியா, யூதேயா போன்ற இடங்களிலெல்லாம் இயேசுவின் கப்பர்நாகும் சுகமளித்தல் செய்தி பரவத் துவங்கியது. எருசலேம் வரை அவருடைய பெயர் வியப்புக்குரிய ஒன்றாக உச்சரிக்கப்பட்டது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள், கால் நாட்டு விழா நிகழ்ச்சிகள் பக்தர்களின்றி நடைபெறும்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு பந்தல் கால் நாட்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு நிறை புத்தரிசி வழிபாடு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7.30 முதல் 8.15 மணிக்குள் பந்தல் கால் நாட்டு விழா ஆகியவை நடக்கிறது.

    இதுகுறித்து கோவில் ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 18- ந் தேதி வரை வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள், கால் நாட்டு விழா நிகழ்ச்சிகள் பக்தர்களின்றி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் சாமி தரிசனத்திற்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போன்ற கெடுபிடிகளால் சனீஸ்வரர் கோவிலுக்கு மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ் மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால், திருநள்ளாறுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் சாமி தரிசனத்திற்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போன்ற கெடுபிடிகளால் சனீஸ்வரர் கோவிலுக்கு மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றை காண்பித்த பிறகே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வருகை குறைவால் கோவில் வளாகம், நளன் குளம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
    கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவிலில் உத்ராயண வாசல் திறக்கப்பட்டது. உத்தராயண வாசல் தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் ஆடி முதல் மார்கழி வரையும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த 3-வது தலமாக விளங்குகிறது. பூலோக வைகுண்டமாக போற்றப்படும் சாரங்கபாணி கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். அவரது வேண்டுகோளின்படி சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் கோலத்தில் சாரங்கபாணி அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

    இங்கு பெருமாளுக்கு ஆராவமுதன் என்ற பெயரும் உண்டு. தாயார் கோமளவள்ளி. ஹேமரிஷி தவம் செய்த தலம். அவர் பெயரால் விளங்கும் ஹேமபுஷ்கரணியில் கோமளவள்ளி, பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக தேருடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளை வணங்கினால் முக்தி கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இங்கு சொர்க்கவாசல் கிடையாது. இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலை கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    இந்த நிலையில் உத்ராயண வாசலுக்கு எதிரே சாரங்கராஜா பூமி தேவி, ஸ்ரீ தேவியுடன் எழுந்தருள உத்ராயண வாசலுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து உத்ராயண வாசல் திறக்கப்பட்டது. உத்தராயண வாசல் தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் ஆடி முதல் மார்கழி வரையும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் கோவிலில் இன்று நடைபெற இருந்த தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா அன்று கோவிலில் இருந்து சாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உப கோவிலான லட்சுமணேசுவரர் கோவிலுக்கு வந்தடைவர்.

    தொடர்ந்து அங்கு மாலை 6 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி மற்றும் அம்பாள் வைக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடத்தப்படும். பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாமியுடன் கூடிய தெப்பமானது தெப்பக்குளத்தை 13 முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைப்பூச தெப்பதிருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி அளவில் நடைபெறவிருந்த சாமி அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதற்கு பதிலாக கோவிலின் உள்ளேயே வைத்து சாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடத்த கோவில் நிர்வாக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
    அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்தி சன்னதியின் முன்பு மேள தாளங்கள் முழங்க முன்னும், பின்னும் 3 முறை ஆடியபடி வந்து ஊடல் செய்து, சாமி அம்மனுடன் இணைவது போன்று மறுவூடல் விழா நடைபெற்றது.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வருகின்றனர். கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில் 2 முறை பக்தர்களை போலவே அருணாசலேஸ்வரரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

    பிருங்கி முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்த போது வண்டு உருவில் மாறி அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கியிருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக ஐதீகம். இது மனித வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்படுவது வாழ்வின் ஒரு நிலை என்பதை உணர்த்துகிறது.

    இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடக்கும். இந்த திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு அம்மன் சென்று விட்டார். வழக்கமாக சாமி குமரக்கோவிலுக்கு செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு நேற்று கிரிவலம் வர வேண்டிய அருணாசலேஸ்வரர் திருவூடல் விழா நிறைவடைந்ததும் நேற்று முன்தினமே மலையை சுற்றி கிரிவலம் சென்றார். பின்னர் ராஜகோபுரத்தின் அருகில் உள்ள முருகர் சன்னதியில் எழுந்தருளினார்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் மறுவூடல் விழா நடந்தது. முன்னதாக அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமி மேளதாளங்கள் முழுங்க அங்கிருந்து அவரது சன்னதியில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு வந்த அம்மன் சாமி சன்னதியில் உற்சவ மூர்த்தி சன்னதியில் கதவை மூடி இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்தி சன்னதியின் முன்பு மேள தாளங்கள் முழங்க முன்னும், பின்னும் 3 முறை ஆடியபடி வந்து ஊடல் செய்து, சாமி அம்மனுடன் இணைவது போன்று மறுவூடல் விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் ஓதுவார் சாமியின் முன்பு திருவூடல் மற்றும் மறுவூடல் விழாவின் கதையை பாடி காணப்பித்தார்.

    இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதில் கோவில் பணியாளர்களும், சிவாச்சாரியார்களும், உபயதாரர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
    10-ம் திருவிழாவான நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. இது மிகப்பழமையான குடவரை கோவிலாகும். இந்த கோவில் தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    காஞ்சியில் நிலமாகவும், திருவானைக்காவலில் நீராகவும், திருவண்ணாமலையில் தீயாகவும், காளகஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில் விண்ணாகவும் சிவபெருமான் வணங்கப்படுகிறார். இந்த பஞ்ச பூதங்களும் வழிபட்ட தலமாக பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் விளங்குகிறது. சிவன் கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் நடக்கும். ஆனால் இந்த கோவிலில் அமாவாசையன்று கிரிவலம் நடக்கிறது. அமாவாசை கிரிவலம் செல்ல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு, சித்திரைத் திருவிழா, தை பெருந்திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    தைத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு தைத்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பூஜை, இரவு 9 மணிக்கு சாமியும், அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியில் வலம் வருதல் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் இரவு சாமியும், அம்பாளும் கைலாசபர்வத கற்பக விருட்சக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    9-ம் நாள் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் தேரில் விநாயகர், சாமி, அம்பாள் எழுந்தருளச் செய்து அரசின் வழிகாட்டுதலின் படி வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு சாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    10-ம் திருவிழாவான நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, பூதப்பாண்டி பூதலிங்கேஸ்வரர் பக்தர்கள் பேரவை மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
    இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.14 மணி முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணி வரை உள்ளது.
    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.14 மணி முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணி வரை உள்ளது.

    இந்த மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பவுர்ணமி சமயத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வர வேண்டாம். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    பொதுவாகவே எல்லோரும் ஒரு விருப்பம் நிறைவேற வேண்டுமென்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடுதான்.
    தை மாதம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது ‘தைப்பூசம்’ தான். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான் தை மாதமாகும். அந்த மாதத்தில் வரும் பூசத்தைத் தான் மாதப் பெயரோடு இணைத்து, ‘தைப்பூசம்’ என்று அழைக்கிறோம். அந்தத் திருநாளில் முருகப்பெருமானை வழிபட நினைப்பவர்கள், மார்கழி மாதத்தில் மாலைபோட்டுக் கொண்டு காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபடுவார்கள்.

    ஐப்பசி மாதம் வரும் சஷ்டி திதியில்தான் முருகன் போராடி வெற்றிபெற்றார். அவருக்கு தாய், ஞான வேலை வழங்கிய நல்ல நட்சத்திரம் தான் பூச நட்சத்திரமாகும். போராட்டமான வாழ்வைப் பூந்தோட்டமாக மாற்றும் நட்சத்திரம் இதுவாகும். அந்த நட்சத்திரத் திருநாள் 18.1.2022 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் இல்லத்தில் இனிய சம்பவங்கள் ஏராளம் நடைபெறும்.

    பொதுவாகவே எல்லோரும் ஒரு விருப்பம் நிறைவேற வேண்டுமென்று நினைப்பது வழக்கம். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற வைப்பது பூச வழிபாடுதான்.

    தைப்பூசத்தன்று ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்குச் சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனிவரும் முருகப்பெருமானைக் கண்டு கோடிக்கணக்கான மக்கள் தரிசித்து வழிபடுவர். குன்றக்குடி, பழநி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை போன்ற ஆலயங்களில், அருகில் இருக்கும் கந்தப்பெருமானை பாத யாத்திரையாகச் சென்று வழிபட்டு வந்தால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    இல்லத்தில் வழிபடுவோர் பஞ்சமுக விளக்கேற்றி, 5 வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை பரிமளப் பொருட்கள் வைத்து, 5 வகை பூக்களால் மாலை சூட்டி, 5 வகை நைவேத்தியம் படைத்து, 5 வகை பழங்கள் வைத்து, கந்தனின் துதிப்பாடல்கள் மற்றும் கவச பாராயணங்களை படித்தால், அவர் வேண்டும் வரம் அருள்வார்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மர சக்கரங்களாக இருந்த இந்த தேரை பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் பி.எச்.இ.எல். நிறுவனத்தின் மூலமாக இரும்பு சக்கரங்களையும் இரும்பு அச்சையும் செய்து கொடுத்தார்.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் மற்றும் விநாயகர் தேரோட்டம் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேர் புதுப்பிக்கப்பட்டு ஓட்டி வரப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மர சக்கரங்களாக இருந்த இந்த தேரை பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் பி.எச்.இ.எல். நிறுவனத்தின் மூலமாக இரும்பு சக்கரங்களையும் இரும்பு அச்சையும் செய்து கொடுத்தார். தற்போது 2 மர சக்கரங்கள் நான்கு இரும்பு சக்கரங்களுடன் இந்த தேர் உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் தேர் சுமார் 21 அடி உயரமும், 21 அடி நீளமும், 21 அடி அகலமும் கொண்டதாகும்.

    தேரின் வடிவம் தாமரைப்பூ வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர் தேக்கு, இலுப்பை, வேங்கை, சோம்பு மரங்களை கொண்டு உருவாக்குவது வழக்கம். அதிகமாக இலுப்பை மரம் தேர்களில் பயன்படுத்தப்படுகிறது. இலுப்பை மரம் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்கும் என்பதால் இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் இந்த தேரின் உள்பகுதி சிறு விரிசல்கள் உள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் தேரை செப்பனிட அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. சில காரணங்களால் அந்த திட்ட அறிக்கை அளவில் நின்று விட்டது.

    இந்த தேரில் எந்த வகையான குறைபாடுகள் உள்ளன? எங்கெங்கு உள்ளன? என்பது குறித்தும் தேரில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதா? அல்லது புதிய தேர் வடிவமைப்பதா? என்பது குறித்து அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனத்தில் இருந்து ஸ்தபதி வேலாயுதம் நேற்று பார்வையிட்டார். அவர் இதற்கான செலவீனங்கள் எவ்வளவு ஆகும் என்பது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த ஆய்வின்போது அறநிலையத்துறை கண்காணிப்பாளர் இந்திரா மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் ஊழியர்கள் திருச்செங்கோடு அறநிலையத்துறை ஊழியர்கள் பலரும் உடன் இருந்தனர்.
    திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணி விடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறுகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதி உள்ளது. இங்கு வருடம்தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா நேற்று (14-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

    கொடி யேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து கொடிப் பட்டம் தயாரித்தலும், கொடிப் பட்டம் தலைமைப்பதியை சுற்றி வருதலும் நடைபெற்றது.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க காவி உடை அணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்களின் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோ‌ஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வக்கீல் பால.ஜனாதிபதி தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.

    பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாகன பவனியும், வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடைபெற்றது.

    நேற்று இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி தொட்டில் வாகனத்தில் தெருவீதி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியறை பணிவிடைகளை வக்கீல் யுகேந்த், வைகுந்த், நேம்ரிஸ் ஆகியோர் செய்தனர். கொடியேற்ற நிகழ்ச்சி அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு அய்யா மயில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    மூன்றாம் திருவிழாவில் இரவு அய்யா வெள்ளை சாற்றி அன்ன வாகனத்தில் பவனி வருதலும், நான்காம் திருவிழாவில் இரவு வைகுண்டசுவாமி கருட வாகனத்தில் பவனி வருதலும், ஐந்தாம் திருவிழாவில் இரவு அய்யா வைகுண்டசுவாமி பச்சை சாற்றி துளசி சப்பர வாகனத்தில் பவனி வருதலும், ஆறாம் திருவிழாவில் இரவு சர்ப்ப வாகன பவனியும், 7-ம் திருவிழாவில் இரவு கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    வருகின்ற 21-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திரு விழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங் கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகின்ற 24-ம் தேதி திங்கள்கிழமை 11-ம் திருநாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணி விடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறுகிறது.
    ×