search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சாமிதோப்பில் வைகுண்டசாமி தலைமைப்பதியில் 24-ந்தேதி தேரோட்டம்

    திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணி விடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறுகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதி உள்ளது. இங்கு வருடம்தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா நேற்று (14-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

    கொடி யேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட சுவாமிக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து கொடிப் பட்டம் தயாரித்தலும், கொடிப் பட்டம் தலைமைப்பதியை சுற்றி வருதலும் நடைபெற்றது.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க காவி உடை அணிந்து தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்களின் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோ‌ஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வக்கீல் பால.ஜனாதிபதி தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார்.

    பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாகன பவனியும், வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடைபெற்றது.

    நேற்று இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி தொட்டில் வாகனத்தில் தெருவீதி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியறை பணிவிடைகளை வக்கீல் யுகேந்த், வைகுந்த், நேம்ரிஸ் ஆகியோர் செய்தனர். கொடியேற்ற நிகழ்ச்சி அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு அய்யா மயில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    மூன்றாம் திருவிழாவில் இரவு அய்யா வெள்ளை சாற்றி அன்ன வாகனத்தில் பவனி வருதலும், நான்காம் திருவிழாவில் இரவு வைகுண்டசுவாமி கருட வாகனத்தில் பவனி வருதலும், ஐந்தாம் திருவிழாவில் இரவு அய்யா வைகுண்டசுவாமி பச்சை சாற்றி துளசி சப்பர வாகனத்தில் பவனி வருதலும், ஆறாம் திருவிழாவில் இரவு சர்ப்ப வாகன பவனியும், 7-ம் திருவிழாவில் இரவு கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    வருகின்ற 21-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திரு விழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங் கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகின்ற 24-ம் தேதி திங்கள்கிழமை 11-ம் திருநாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணி விடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறுகிறது.
    Next Story
    ×