என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், "இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….

    நாந்தாண்டா நீதி ….

    நாந்தாண்டா நீதி …." என்று குறிப்பிட்டு முதல் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


    • மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
    • அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது.

    தமிழ், மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கலாபவன் மணி. ஜெமினி, மழை, பாபநாசம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி திடீரென மரணமடைந்தார்.அவரது மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களும் , சர்ச்சை களும் அப்போது எழுந்தது. 45 வயதில் மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.



    எனவே அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கலாபவன் மரணம் பற்றி விசாரித்து வந்த சி.பி.ஐ. கேரள உயர் நீதிமன்றத்தில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இதில் விசாரணை குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற போலீஸ் அதிகாரி சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.



    அந்த தகவலின் படி, கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இதுவே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. கல்லீரல் பாதித்து, ரத்தவாந்தி எடுத்த போதும், கட்டுபாடின்றி பீர் குடிப்பதை அவர் கைவிடவில்லை. மரணமடைந்த அன்று 12 பாட்டில் பீர் குடித்துள்ளார் என்றும் அதில் மெத்தல் ஆல்கஹால் கலந்துள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலாபவன் மணி இறப்புக்கு முதல் நாள் அவர் வீட்டுக்கு வந்து சென்ற நண்பர்கள் ஜாபர், இடுக்கி, தரிக்கிட காபு ஆகியோரிடம் இது குறித்து விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. கலாபவன்மணி தனது மரணத்தை தானே தேடிக்கொண்டார் என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • அஜயன் பாலா 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார்.
    • திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம்.

    திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது ' மைலாஞ்சி' திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.

    அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்பிலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான 'மைலாஞ்சி', தற்போது 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' என்று மாற்றப்பட்டுள்ளது.


    இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, "திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது," என்றார்.

    மேலும் பேசிய அவர், "பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்" என்று கூறினார்.

    காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

    • நடிகை சாக்‌ஷி அகர்வால் பல படங்களில் நடித்து வருகிறார்.
    • விரைவில் சாக்‌ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். தற்போது தமிழ் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.


    மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் இவர்.


    அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படமான 'சாரா'வில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும், '8 தோட்டாக்கள்' புகழ் வெற்றிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், 'கெஸ்ட் 2' உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.


    கியூட் ஹீரோயினாக கலக்கி வரும் சாக்ஷி அகர்வாலுக்கு, தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து, பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சாக்ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம். இந்த தீபாவளி, நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக, பான் இந்திய தீபாவளியாக அமைந்துள்ளது.

    • சேலம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால் சாமி என்பவர் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.
    • இந்த அமைப்பின் தலைவரும், செயலாளரும் பணம் வாங்கிக் கொண்டு பல மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

    சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக MSME புரொமோஷன் கவுன்சிலிங் என்ற அமைப்பின் பெயரில் நிறுவன உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், அமைப்பின் தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் மற்றும் தமிழகத்தின் தலைவராக இருந்த நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு சிறு, குறு தொழில் நிர்வாகிகளுடன் மத்திய அரசு கடன் விவகாரம் குறித்து பேசினார்கள்.

    இதில், சிறப்பு அழைப்பாளராக நமீதாவும் கலந்து கொண்டார். இதன் பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கவுன்சிலிங் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் இந்திய அரசின் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதோடு தேசிய கொடியை வாகனத்தில் பொருத்தியிருந்தது குறித்து புகார் எழுந்தது.

    மேலும், சேலம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால் சாமி என்பவர் ரூ.41 லட்சம் பணத்தை தன்னிடம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது புகார் அளித்திருந்தார். இது குறித்து சேலம் சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும், இந்த அமைப்பின் தலைவரும், செயலாளரும் பணம் வாங்கிக் கொண்டு பல மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த கோபால் சாமி, தமிழக தலைவர் பதவியை வாங்குவதற்காக நடிகை நமீதாவின் கணவர் ரூ.4 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் தற்போது நமீதாவின் கணவர் மற்றும் முத்துராமின் உதவியாளர் மஞ்சுநாத் ஆகிய இருவரும் இன்று இரவு ஆஜராகும் படி சூரமங்கலம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை மஞ்சுநாத் மற்றும் நடிகை நமீதாவின் கணவர் இருவரும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக காவல் துறையின் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா.
    • இவர்கள் இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்கள்.

    தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்து. இப்படத்தில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.


    அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், இவர்கள் இருவரையும் இணைத்து பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் உலா வந்தது. அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவை காதலிப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.


    இந்நிலையில், தற்போது இவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


    • அரசு அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
    • விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.


    தாசில்தார் மகேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தியேட்டரில் ஆய்வு செய்த காட்சி

    அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

    விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிடப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • தேசிங்கு பெரியசாமி 'எஸ்.டி.ஆர். 48' படத்தை இயக்குகிறார்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.


    2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தேசிங்கு பெரியசாமி, "சிம்பு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் நான் காட்டு பசியில் இருக்கிறேன் என்று அதற்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு நடிகர் கமல்ஹாசன், சிம்புவின் ஒட்டு மொத்த திறமையையும் வெளிக்கொண்டுவரும் ஒரு படமாக இது இருக்கும் என்று சொன்னார்.


    இப்படம் தர லோக்கல் வரலாற்று படமாக இருக்கும். இப்படத்தின் கதையை பொறுத்தவரை நிறைய கதாபாத்திரங்களுக்கான தேவை இருக்கிறது. மார்க்கெட்டுக்காக தெலுங்கில் இருந்துலாம் நடிகர்களை கொண்டு வரும் ஐடியா வேண்டாம். கதைக்கு பொருத்தமானவர்களை மட்டும் தேர்வு செய்யுமாறு கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கூறிவிட்டார்கள்" என்று பேசினார்.

    இதற்கு ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்பட பாணியை தவிர்க்க சொன்னதாக கமல் கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’.
    • இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சலார் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 1-ஆம் தேதி மாலை 7.19 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • ’ஜிகர்தண்டா -2’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
    • இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், இப்படத்தை பாராட்டி சவுந்தர்யா ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'கார்த்திக் சுப்பராஜ் உங்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். என் அண்ணா ராகவ லாரன்ஸ் நடிப்பு அருமையாகவும் பெருமையாகவும் உள்ளது. எஸ்.ஜே. சூர்யா நீங்கள் ஒரு உத்வேகம். 'ஜிகர்தண்டா 2' படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் யோகிபாபு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் நடிகர் யோகி பாபு மனம் உருகி முருகரை வழிபட்டார். பின்னர் அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டார். இதனை தொடர்ந்து பைரவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த போது நடிகர் யோகி பாபுவுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். 

    • சல்மான்கான் நடித்துள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.94 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    'டைகர் 3' படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் மகராஷ்டிராவில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியின் போது அவரது ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


    பட்டாசு வெடித்த ரசிகர்கள்

    இந்நிலையில், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக நடிகர் சல்மான்கான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டைகர் 3 படத்தின் போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தது குறித்து கேள்விப்பட்டேன். இது ஆபத்தானது. நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் படத்தை ரசியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    ×