என் மலர்
சினிமா செய்திகள்
நேர்கொண்ட பார்வை படத்தை போல் அஜித் தனது 61-வது படத்திலும் ரீமேக் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்துள்ளது. இந்த படம் அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக வந்தது. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது.
இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்துக்கு பிடித்தமான கார்பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. புதிய படத்துக்காக நரைமுடிகளை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார் அஜித்.

உடல் எடையையும் குறைத்துள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு அஜித்குமார் நடிக்க உள்ள 61-வது படம் பற்றிய தகவலும் தற்போது கசிந்துள்ளது. இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘ஆர்ட்டிக்கிள் 15’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் உரிமை போனிகபூரிடம் உள்ளது. அவரே தமிழில் தயாரிப்பாரா? என்பது தெரியவில்லை. ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் கதை அஜித்துக்கும் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கும் படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நடிகைகள் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார். ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் திரிஷாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமான அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனுஷ்காவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின.
கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்றத்துடன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதன்பிறகு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று அனுஷ்கா கூறி இருந்தார். இந்த நிலையில் அனுஷ்கா ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மீண்டும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். உடற்பயிற்சிகளால் எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் மகாமுனி படத்தின் முன்னோட்டம்.
`கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘மகாமுனி’. சாந்தகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 20-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இதற்கிடையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதற்கு மதுமிதா, நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. என் மீது பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா நாசரேத் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை. தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.
ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஆதரவாக பிரபல நடிகர் களமிறங்கி இருக்கிறார்.
ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். ரம்யா பாண்டியன் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றன.
இந்த புகைப்படங்களால் திடீரென பிரபலமானார் ரம்யா பாண்டியன். அதேவேளையில் இந்த புகைப்படங்கள் படவாய்ப்புக்காக எடுக்கப்படவில்லை என்றும் ரம்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகுக்கு கோரிக்கை வைத்திருக்கும் நடிகர் விவேக், ’பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர், ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார். தமிழை தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழில் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் பெற்ற நயன்தாரா மீது தெலுங்கு சினிமா அதிருப்தி அடைந்து நடிக்க தடை விதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு படம் முடிந்தபிறகும் அதை ரசிகர்களிடம் பிரபலப்படுத்த விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால் நயன்தாரா, தான் நடிக்கும் எந்த படத்துக்கும் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்றும் பேட்டிகள் கொடுப்பது இல்லை என்றும் கொள்கை வைத்து இருக்கிறார்.
அவர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது படத்தில் நடிக்கும் ஹீரோ, மற்றும் பிற நட்சத்திரங்கள் மட்டுமே விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மகன் ராம் சரண் படத்தை தயாரிக்கிறார். பல கோடி செலவில் இப்படம் தயாரிக்கப்படுவதால் பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ராம் சரண் ஒப்பந்தம் செய்யும்போதே நயன்தாராவிடம் கேட்டுக்கொள்ள அவரும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கலந்து கொள்வதாக கூறினாராம்.

‘சைரா’ படம் முடிந்து அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் விளம்பர வேலைகளில் ராம் சரண் ஈடுபட்டுள்ளார். நிகழ்ச்சியில் நயன்தாராவை பங்கேற்பதற்கு உறுதி செய்ய, ராம சரணின் மேனேஜர் நயனை பலமுறை போனில் அழைத்தும் சரியான பதில் இல்லை என்கிறார்கள்.
இது சிரஞ்சீவி, ராம் சரணுக்கு தெரியவர அவர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம். நயன்தாரா தரப்பில் கேட்டால், ‘படங்கள் அதன் கதையை பொருத்தே வெற்றி பெறுகிறது. புரமோஷனை பொறுத்து அல்ல’ என பதில் கூறியிருக்கிறார். நயன்தாரா மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவும் அவர் தெலுங்கில் நடிப்பதற்கு தடை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் காதல் திருமணம் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை ஒருவர் தற்போது நான்காவது முறையாக தனது பெயரை மாற்றியுள்ளார்.
தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகரும், நடிகைகளும் தங்களது இயற்பெயரை மாற்றி வைத்துதான் சினிமா உலகில் என்ட்ரியாகின்றனர். அப்படி அறிமுகமான அதிதி மேனன் தற்போது நான்காவது முறையாக பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவரின் சொந்த பெயர் சாய்னா சந்தோஷ். அந்த பெயரில்தான் மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார். அதில் சீரியல் வில்லியாக அறிமுகமான அவருக்கு அங்கு பிரச்சனைகள் தொடங்கவே பின்பு தமிழ் திரையுலகம் பக்கம் தாவினார்.
தமிழில் முதன்முறையாக நெடுநல்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படவே அந்த படத்திலிருந்து ஆதிரா சந்தோஷ் விலகினார்.

அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் அபி சரவணனுடன், அதிதி மேனன் என்ற பெயரில் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.
அபி சரவணன், அதிதி மேனன் காதல் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் ரகசியமாக நடந்துள்ளது. திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் ஆன தகவல் கசிந்தால், அதிதியின் சினிமா வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் சென்னையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அபி சரவணன் புகார் ஒன்றை தெரிவித்தார். ஆனால், நான் அபியை காதலித்தேனே தவிர, திருமணம் செய்யவில்லை என அதிதிமேனன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அபி, அதிதி தம்பதியின் விவாகரத்து வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அபி மற்றும் அதிதி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
காதல் திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதால் மன உளைச்சலோடு போராடிக் கொண்டிருக்கும் அபிசரவணன், தொடர்ந்து சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தன்னுடைய இயல்பையும், பெயரையும் மாற்றாமல் சினிமாவில் அபி பயணிக்கும் அதே நேரத்தில், அதிதியோ, தற்போது வேறு ஒருபெயரை மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
ஏற்கனவே 3 முறை பெயரை மாற்றியிருக்கும் அதிதி, இந்த காதல் திருமண பிரச்சினையைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதோடு, வழக்கபோல பிரச்சினைக்குப் பிந்தைய பெயர் மாற்றம் போல இப்போது மிர்னா மேனன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பெயரில்தான் தற்போது மோகன் லாலுடன் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
அசுரன் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் கேம் ஆப் திரோன்ஸில் நடித்த நடிகர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் தனுஷ் நடிக்கும் புதிய படம் தொடங்கியுள்ளது. பேட்ட திரைப்படத்திற்கு முன்பே இந்த கூட்டணி இணைய இருந்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் மற்ற படங்களில் ஒப்பந்தமானதால் இந்த கூட்டணி அமைவது தள்ளிப்போனது.
இப்படத்தில் ஐஸ்வர்யா லஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம் முழுக்க லண்டனை களமாக கொண்டு தயாராகவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் உலக புகழ்பெற்ற நடிகரான அல் பசீனோ-வை நடிக்க வைக்க படக்குழு தீவிர முயற்சிகள் எடுத்து வந்தது. ஆனால், அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

இந்த நிலையில், இந்த படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரேவ் ஹார்ட், டிராய், பென்-ஹர், வொண்டர் வுமன் போன்ற படங்களில் நடித்தவர். பிரபல வெப் சீரிஸான கேம் ஆப் திரோன்ஸில் ‘நைட் வாட்சில்’ லார்ட் கமாண்டராக நடித்தவர் இவர்தான்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் பிரபல நடிகர், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து ‘லாபம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.
இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் சமீபத்தில் இப்படத்தில் நடிகை தன்ஷிகா இணைந்தார். இவரைத் தொடர்ந்து தற்போது கலையரசன் இப்படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வரும் லாபம் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.
அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த காட்டை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.பி.ஸ்ரீதர் ஓவியங்கள் வரைந்துள்ளார்.
அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.
காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளார்.
பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், தற்போது கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜடா’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.






