என் மலர்
சினிமா செய்திகள்
அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த காட்டை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.பி.ஸ்ரீதர் ஓவியங்கள் வரைந்துள்ளார்.
அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.
காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளார்.
பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், தற்போது கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜடா’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சாஹோ திரைப்படம் 5 நாட்களில் 350 கோடி வசூலித்துள்ளது.
பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சாஹோ படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் பரவியுள்ளன. மேலும், சாஹோ திரைப்படத்துக்கான கடும் பொருட்செலவு, தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மீறி பலவீனமான கதையால் பின்னடைவு கண்டுள்ளதாக பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.
இருப்பினும் சாஹோ படம் முதல் நாள் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த திரைப்படம் 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனர் மட்டுமல்ல, வரலாற்று பிளாக்பஸ்டர் பாகுபலி 2-க்கு பிறகு இரண்டாவது பெரிய ஓப்பனராக மாறியது. பாகுபலி முதல் நாளில் உலகளவில் ரூ.214 கோடி வசூல் ஈட்டியது.

இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (ரூ.289) மற்றும் கபாலி (ரூ.286) ஆகிய வசூல் சாதனைகளை நான்கு நாட்களில் முறியடித்து உள்ளது. தென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த நான்காவது படமாக திகழ்கிறது. சாஹோவின் இந்தி பதிப்பு ஐந்து நாட்களில் வட இந்திய பாக்ஸ் ஆபிசில் ரூ.102.38 கோடி வசூலித்துள்ளது.
சாஹோ 5 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.350 கோடி வசூல் செய்துள்ளது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பை, இப்படம் ஈடு செய்யுமா என்பது இனிவரும் நாட்களில் தெரிய வரும்.
அதன் தற்போதைய வசூல் வேகத்தை பார்க்கும் போது பாகுபலி 2 சாதனையை முறியடிக்க முடியாது. பாகுபலி தென்னிந்திய திரைப்படத்தின் மிக அதிக வசூல் ஆகும் (1740 கோடி ரூபாய்). ஆனால் இந்த படம் 2.0 (ரூ.620 கோடி மொத்தம்) மற்றும் பாகுபலி 1 (ரூ. 570 கோடி மொத்தம்) சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் இந்திய திரையுலகம் முழுக்க லேடி சூப்பர் ஸ்டாராக பவனிவந்தவர் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.
இந்த சிலை உருவாக்கம் பற்றிய வீடியோ ஒன்று மேடம் துசாட்ஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், ’ஸ்ரீதேவி எங்கள் மனதில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் மனங்களிலும் என்றென்றும் வாழ்வார். என்று கூறியுள்ளார்.

மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அமைத்துள்ள ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்த்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதற்கு முன்னதாக கஜோல், கரண் ஜோஹர், ஷாருக்கான், வருண் தவான், சன்னி லியோன், அனில் கபூர், கரினா கபூர், கேத்ரினா கைப், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், மாதுரி தீக்ஷித், சத்யராஜ் உள்ளிட்டோரின் சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஹீரோ படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. ஹாலிவுட்டில் அயன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, பேட்மேன், எக்ஸ்மேன், தோர் என்று அதிகமாக சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி வசூல் குவிக்கின்றன. இந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கிரிஷ், ஷாருக்கானின் ரா ஒன் போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் லாபம் பார்த்தன.
தமிழில் விஜய்யின் வேலாயுதம், ஜீவாவின் முகமூடி படங்கள் சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் வந்தன. தற்போது சிவகார்த்திகேயனும் ஹீரோ என்ற பெயரில் தயாராகும் சூப்பர் ஹீரோ கதையில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. அதில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ முகமூடியை கையில் வைத்திருப்பது போன்று காட்சி உள்ளது. சைபர் கிரைம் குற்றங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக பேசப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிபடுத்தவில்லை.
இதில் கதாநாயகியாக டைரக்டர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடித்துள்ளார். அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் வெளியாகிறது.
ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ், ரவீனா நடிப்பில் உருவாகும் ’காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் முன்னோட்டம்.
பி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

படம் குறித்து ரவீந்தர் சந்திரசேகரன் கூறியதாவது: "காவல்துறை உங்கள் நண்பன்" படம் மிக அழுத்தமான கதையையும், அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இப்படத்தினை பார்த்த உடனே இதை எந்த வகையிலும் விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து விட்டேன். இப்படத்தினை எளிமையும் தத்ரூபமும் கூடியதாகவும், அதே நேரத்தில் அனைத்து மக்களையும் கவரும் வகையிலும் படைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.டி.எம்..
மனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை தான் என்றும் அது தனக்கு நிறைய இருப்பதாகவும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரேமம் என்ற ஒரு படத்திலேயே முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமான சாய்பல்லவி தமிழ், தெலுங்கில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்போது 2 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. அவர் அளித்த பேட்டி வருமாறு:- “மனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை. எனக்கு அது நிறைய இருக்கிறது.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எனது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை எப்படி கொள்ளையடிக்கும் என்றுதான் யோசிப்பேன். படத்தில் நடித்து திரைக்கு வந்த பிறகு வெற்றி பெற்றதா? அல்லது தோல்வி அடைந்ததா? என்று சிந்தித்துக் கொண்டு இருக்க மாட்டேன். படங்களில் நடிக்கும் முன்பு கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்று ஆலோசிப்பேன்.

நடிக்க ஆரம்பித்த பிறகு மானசீகமான உறவை கதாபாத்திரங்களோடு ஏற்படுத்தி கொள்வேன். அதுதான் எனது நடிப்பை பிரமாதமாக மாற்றி விடுகிறது. இயக்குனர் கதை சொல்லும்போதே நான் அந்த படத்தில் இருக்கிறேனா? இல்லையா? என்பது புரிந்து விடும். இயக்குனர் சொல்லும் கதை, கதாபாத்திரம் எனக்கு பிடித்து இருந்தால் போதும் உடனே சம்மதித்து விடுவேன்.
மறு கணத்தில் இருந்தே அந்த கதாபாத்திரத்தை நேசித்து அவற்றோடு ஒன்றிவிடுவேன். படப்பிடிப்பு முடியும்வரை அந்த கதாபாத்திரத்தோடு பயணம் செய்து கொண்டு இருப்பேன். அதனால்தான் இயல்பாக நடிப்பதாக என்னை பாராட்டுகிறார்கள்.”
இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.
லார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்தை காப்பி அடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஜெரோம் சல்லி சாடியுள்ளார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாஹோ'. இந்த படம் ஆகஸ்ட் 30ந்தேதி வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி ரூபாய். ’சாஹோ’ படம் வெளியான உடனே இந்த படத்தின் கதையும் காட்சிகளும் லார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் அந்த பிரெஞ்சு படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி படம் வெளியான அன்றே தனது டுவிட்டர் பக்கத்தில் ’இந்தியாவில் எனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன்’ என்று கூறியிருந்தார். அதன் உள் அர்த்தம் புரியாமல் ரசிகர்கள் பலர் குழப்பத்தில் இருந்தனர். அந்த பதிவின் பின்னூட்டத்திலும் ஏராளமான ரசிகர்கள் புரியவில்லை என்று கூறிவந்தனர்.

இந்நிலையில் ஜெரோம் சல்லி தனது டுவிட்டர் பக்கத்தில் ’எனது லார்கோ வின்ச் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது படமும் முந்தைய படத்தை போலவே மோசமாக இருப்பது போல தெரிகிறது. எனவே தெலுங்கு இயக்குனர்களே, என் கதையை திருடினால் தயவுசெய்து ஒழுங்காக திருடுங்கள். என்னுடைய “இந்தியாவில் எதிர்காலம்” ட்வீட் முரண்பாடாக இருந்ததால் மன்னிக்கவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
கடந்த 2008ஆம் பிரெஞ்சு மொழியில் வெளியான ‘லார்கோ வின்ச்’ படத்தை ஜெரோம் சல்லி இயக்கியிருந்தார். அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கும் முதல் படம் கடந்த ஆண்டு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வெளியான ’அஞ்ஞாதவாசி’. அப்போதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை ஜெரோம் எழுப்பியிருந்தார்.
இதே போல் பல வருடங்களுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ படத்தின் போஸ்டர் ‘லார்கோ வின்ச்’ படத்தின் போஸ்டர் போல இருப்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. பின்னர் அந்த படமே கைவிடப்பட்டது.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் எமி ஜாக்சன், தற்போது கர்ப்பமாக உள்ள இவரின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசவ நாட்களுக்காக காத்திருக்கும் எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேற்கத்திய முறைப்படி நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி முற்றிலும் பேஸ்டல் நீல நிறத்திலான தீமில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மிட்டாய்கள், பூக்கள், குக்கீஸ் என எல்லாமே போஸ்டல் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப எமியும் பேஸ்டல் நிற கவுன் அணிந்திருந்தார். இதனால் அவரின் வயிறு அழகான தோற்றத்தை அளித்தது. எப்போதும் மாடல் என்ற மிடுக்குடன் தோன்றும் எமி வளைகாப்பு நிகழ்ச்சியில் தாய்மைக்கே உரிய தோற்றத்தில் பிரதிபலித்தார்.
எமி ஜாக்சன் அளித்த பேட்டியில் தன் ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று பெயர் சூட்டப்போகிறோம் என்பதை அறிவித்துள்ளார். இந்த பெயர் தேர்வுக்கான காரணம் கேட்டபோது “அது தனது பாய் பிரண்ட் ஜார்ஜின் கலாச்சாரம் என்றும் அந்த தலைமுறையின் முதல் குழந்தைக்கு கொள்ளு தாத்தாவின் பெயர்தான் வைப்பார்கள்’ என்றும் கூறியுள்ளார்.
ஆன்லைன் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சினிமா டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்தி அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. மல்டி பிளக்ஸ் மற்றும் குளிர்சாதன திரையரங்குகளுக்கும் குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கும் தனிதனி கட்டணங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, “தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன என்பதை கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடைமுறைக்கு வரும்” என்றார். இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:- “தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 15 முதல் 20 சதவீதம் டிக்கெட்டுகள்தான் ஆன்லைனில் விற்பனையாகிறது. மீதி 80 சதவீத டிக்கெட்டுகளை நேரில் வந்துதான் வாங்குகிறார்கள். அரசு கொண்டு வந்துள்ள நடைமுறையை ஆதரிக்கிறோம். அதே நேரம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்க வேண்டும் என்பது சிரமமான காரியம்.
ஆன்லைன் என்றால் வங்கிக்கும். ஆன்லைன் கம்பெனிக்கும் ஒரு தொகையை மக்கள் கட்ட வேண்டி உள்ளது. பெரிய நகரங்களுக்கு இது சாத்தியம். நேரடியாக வாங்கும் டிக்கெட்டுகளுக்கு அரசே ஒரு சர்வர் ஏற்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் கண்காணிக்க முடியும். ஆன்லைன் டிக்கெட் விற்பனை சிரமங்களை அமைச்சரை நேரில் சந்தித்து எடுத்துச் சொல்வோம்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு நகராட்சி வரி 8 சதவீதம் விதிக்கப்பட்டு இருப்பதால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. அதை நீக்க வேண்டும். 4 ஆயிரமாக இருந்த தியேட்டர்கள் எண்ணிக்கை 834 ஆக குறைந்து விட்டது. ஒரு தியேட்டரை 3 அல்லது 4 தியேட்டராக மாற்ற அனுமதி கேட்டு மனுகொடுத்து உள்ளோம். அதை ஏற்றால் 4 ஆயிரம் தியேட்டர்களாக மாறும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு குறிப்பிட்ட கம்பெனியோடு ஏற்கனவே ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருப்பதால் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அமைச்சரை நேரில் சந்தித்து இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
நடிகை கஸ்தூரி கூறும்போது, “தியேட்டர் அதிபர்களுக்கும் மக்களுக்கும் இடையில் இடைத்தரகராக ஆன்லைன் தளம் உள்ளது. தியேட்டரில் நேரில் டிக்கெட் எடுக்க முடியாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. செல்போன், இன்டர்நெட் வைத்து இருந்தால் மட்டுமே சினிமா பார்க்க முடியும் என்பது உரிமை மீறல்” என்றார்.
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, கும்கி திரைப்படத்தில் அறிமுகமாகி இவன் வேற மாதிரி, அரிமா நம்பி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 2007ஆம் ஆண்டில் லட்சுமி உஜ்ஜைனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிக்கு விராட் என்ற மகன் உள்ளார். அவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. தனது பெயரைக் கொண்ட சிறுவனின் பிறந்தநாள் தொடர்பாக சமூக வலைத்தளம் மூலம் அறிந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சிறுவன் விராட்டுக்கு வீடியோ மூலம் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
Super sweet of you @imVkohli to take time to send a video msg for my boy #Virat on his birthday. He’s super excited for this and happy for our win in WI. 😊👍 pic.twitter.com/1BpceYMOHK
— Vikram Prabhu (@iamVikramPrabhu) September 3, 2019
தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து கோலி அனுப்பிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம் பிரபு, உங்களின் தீவிர ரசிகனான எனது மகனுக்காக நேரம் செலவிட்டு வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
நடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார்.
கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஜூலை 5ந்தேதி இந்த படம் வெளியானது. ராட்சசி படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் படத்தை பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- 2 மாதங்களுக்கு முன்பாக இந்த படம் வெளியானது. நேற்று இரவு இந்த படத்தை அதிகாரிகளோடு பார்த்தேன். படத்தைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுவேன். கண்டிப்பாக, இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இதன் கதை அற்புதமாக இருக்கிறது, கதாபாத்திரங்களும் அருமை. கல்வி அமைச்சராக இந்த படத்தை பார்ப்பது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியையும் நம் நாட்டின் சூழலோடு என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. கீதா ராணி ஒரு பெரிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரம். பெரிய மாற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை அவர் நமக்கு நிரூபிக்கிறார். நாம் செய்யவேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் இந்த படத்தில் வெற்றிகரமாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இலவச காலை உணவுத் திட்டம். உணவை தாண்டிய சில விஷயங்களை பற்றிய எனது எண்ணங்களை இந்த படம் பிரதிபலிக்கிறது.

ஆனால் நமது குழந்தைகளோடு ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாணவர்கள் படிப்பு நிறுத்தப்படும் பிரச்சனையில் கீதா காவல்துறை மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரையும் இந்த பிரச்சனையைத் தீர்க்க ஈடுபடுத்தியுள்ளார். இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் படிப்பு தடைப்படாமல் இருக்க அனைத்து மூலைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.
அது மட்டும் இல்லை. கீதா அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் சந்திக்கிறார். குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் கவனமாக இருக்க ஆசிரியோர் பெற்றோர் கழகம் போன்ற ஒன்றை கீதா நிறுவுகிறார். கல்வியை வளர்ப்பதே அனைத்து கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பெரிய விருப்பம்.
ஏனெனில், ஒரு சமூகத்தின் இலக்காகவும் திட்டமாகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் கல்விதான் உதவும் என்று நம்புகிறேன். அனைத்து கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், மற்றும் அனைவரும் இந்த படத்தை விரைந்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்’. இவ்வாறு மலேசியக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொன்னிமோகன் இயக்கத்தில் அப்புக்குட்டி, வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் வாழ்க விவசாயி படத்தின் முன்னோட்டம்.
விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'வாழ்க விவசாயி'. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி நாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும் வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி மற்றும் விஜயன், கராத்தே கோபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னிமோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். ரதன் சந்தாவத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

படம் குறித்து அப்புக்குட்டி கூறுகையில், இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி 'படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம் என தெரிவித்துள்ளார்.






