என் மலர்
சினிமா செய்திகள்
பொன்னிமோகன் இயக்கத்தில் அப்புக்குட்டி, வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் வாழ்க விவசாயி படத்தின் முன்னோட்டம்.
விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'வாழ்க விவசாயி'. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி நாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும் வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி மற்றும் விஜயன், கராத்தே கோபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னிமோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். ரதன் சந்தாவத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

படம் குறித்து அப்புக்குட்டி கூறுகையில், இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி 'படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம் என தெரிவித்துள்ளார்.
சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள் என தயாரிப்பாளர்களை விமர்சித்த நடிகர் தனுஷூக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
நடிகர் தனுஷ் சமீபத்தில் சென்னையில் நடந்த பட விழாவில் பேசும்போது, “இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.
இது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறும்போது, “விஜய், அஜித்குமார் போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவுகிறார்கள். தனுஷால் யாரும் லாபம் அடையவில்லை. துள்ளுவதோ இளமை தொடங்கி வடசென்னை வரை தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்போது சினிமா துறையில் இல்லை” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியதாவது:- “தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர். கடன் வாங்கித்தான் பட அதிபர்கள் படம் எடுக்கின்றனர். கதாநாயகன் மற்றும் டைரக்டர் செய்யும் தவறுகளால் படப்பிடிப்பு காலதாமதமாகி வட்டி அதிமாகி விடுகிறது. ரூ.10 கோடிக்கு எடுத்த படத்தை ரூ.8 கோடிக்குத்தான் விற்க முடிகிறது. இதனால் வீடு சொத்துகளை இழந்து நிற்கிறார்கள்.
ஆனால் தனுஷ் போன்ற நடிகர்கள் ஆடம்பர கார்களில் வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று சில நடிகர்கள் சொந்தமாக படம் எடுத்து நஷ்டமடைந்த நிலைமையும் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டுவதை தனுஷ் நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சில தயாரிப்பாளர்கள் தனுஷூக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் விருந்தாளிகளாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அவரை ரகசிய அறையில் தங்க வைக்க பிக்பாஸ் திட்டமிட்டு இருந்த நிலையில் அதை மறுத்து கஸ்தூரி வெளியேறினார்.
கஸ்தூரி வெளியேற்றப்பட்டதை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார். அல்லது ஒருவரை ரகசிய அறையில் தங்க வைக்கவும் வாய்ப்பு உண்டு. தற்போதைய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியா காதல் மட்டுமே பரபரப்பாகி உள்ளது.

இந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன்வைத்யா ஆகிய மூவரும் விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் மூவரையும் ஒருவார காலத்திற்கு பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கவைக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வருகிறது.
முன்னதாக சாக்ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் கூறியிருந்த நிலையில் அதை மறுத்து நடிகை சாக்ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனால் சாக்ஷி உள்ளே சென்றுள்ளதால் கவின் - சாக்ஷி இடையே புதிய பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது. இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இனி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது கூறியதாவது:- ’திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரத்தைத் தரக்கட்டுப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதேபோல, அந்த பொருள்களின் விலையை கட்டுப்படுத்தவும் பல விதிமுறைகளை வகுத்து உள்ளோம்.
திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகள் வெளிப்படையாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிட்ட சில திரையரங்குகளை சோதனை முயற்சியாகக் கண்காணித்து வருகிறோம்.
படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வாறு அமலுக்கு வந்தால், இனி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்கான, கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்” என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திரைப்படத்துறையினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது:- தியேட்டர் வசூலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக இது நீண்ட நாட்களாக நாங்கள் அரசிடம் வைத்த கோரிக்கை தான். ஹீரோக்களின் சம்பளம் தான் பட தயாரிப்பு தொகையில் பெரும் அளவை விழுங்குகிறது. அவர்களிடம் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டுகோள் வைத்தால் நீங்கள் ஒழுங்காக கணக்கு காட்டுங்கள் என்கிறார்கள்.
அதே நேரத்தில் தோல்வி அடைந்த படங்களுக்கும் வெற்றி விழா கொண்டாடுதல், 100 கோடி, 150 கோடி வசூல் என்று பொய் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் என்ற நிலை ஏற்பட்டால் ஹீரோக்களின் உண்மையான மார்க்கெட் நிலவரம் தெரிய வரும். எனவே சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் தான். இது சாத்தியமான ஒன்றும் கூட. கோவை திரையரங்குகளில் 80 சதவீதத்துக்கு மேல் ஆன்லைனாகி விட்டன. அவர்களால் முடிந்தது மற்றவர்களால் ஏன் முடியாது. இந்த அறிவிப்புக்காக அமைச்சருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னணி தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க முன்னாள் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது:- இது 200 சதவீதம் சாத்தியமானது. வரவேற்க வேண்டிய ஒரு விஷயம். தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க வருபவர்களுக்கும் ஆன்லைனிலேயே டிக்கெட் புக் செய்து கொடுக்கலாம். ஆன்லைன் புக்கிங்குக்கான சேவை கட்டணம் தான் இங்கு முக்கிய பிரச்சினை. மற்ற நாடுகளில் இந்த கட்டணம் 2 முதல் 4 சதவீதம் மட்டும்தான்.
அதாவது 100 ரூபாய்க்கு 2 ரூபாய். ஆனால் இங்கு அப்படி இல்லாமல் ஒரு டிக்கெட்டுக்கு 30 முதல் 40 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதை குறைத்து ஒழுங்குபடுத்தவேண்டும். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு திரையரங்கில் ஆன்லைன் மூலம் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றால் 3 கோடி ரூபாய் கட்டணமாக வருகிறது. இந்த கட்டணத்தை தவிர்க்க நேரில் வந்து எடுக்கும் ரசிகர்களது நிலையையும் யோசிக்கவேண்டும். ஆனால் முழுக்க ஆன்லைன் டிக்கெட் என்பதன் மூலம் வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும். அரசுக்கு சேர வேண்டிய வரி முழுமையாக கிடைக்கும்.
ஹீரோக்களின் சம்பளத்தை முறைப்படுத்த முடியும். வங்கிகள் பட தயாரிப்புக்கு கடன் கொடுக்க முன்வருவார்கள். தனியாருக்கு வட்டி கட்டும் சுமை குறையும். அரசுக்கு வரி வருமானம் அதிகரிக்கும் என்பதால் இதுவரை இருந்துவரும் 20 சதவீத வரியை குறைக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த ஆன்லைன் டிக்கெட் முறை மூலம் பிளாக் டிக்கெட் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. அதையும் முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைந்து அரசு சரியான முறையில் இதை செயல்படுத்தினால் சினிமா மீண்டும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறும்’. இவ்வாறு அவர் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குனர் சேரன், தான் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் மூன்றாவது சீசன் 70வது நாளை கடந்து முக்கியமான கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சேரன், லாஸ்லியா, கவின், தர்ஷன், முகென், வனிதா, சாண்டி, ஷெரின் ஆகிய 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அப்படி இயக்குனர் சேரனிடம் கேள்வி கேட்ட ஒரு பெண், “பிக்பாஸூக்கு பிறகு, திரைத்துறையில் உங்கள் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும்?” என கேட்டார். அப்போது இந்த கேள்வியை ரசித்த கமல்ஹாசன், ‘இது கேள்வியல்ல, வாழ்த்து’ என தனது பாணியில் சொல்லி சிரித்தார்.

பார்வையாளரின் கேள்விக்கு பதிலளித்த சேரன், “நிச்சயம் எனது ‘கம்பேக்’ ஒரு ‘ஸ்ட்ராங்கான கம்பேக்’ ஆகத்தானிருக்கும். அதற்கான பேச்சுவார்த்தையை முடித்து விட்டுத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்க உள்ளேன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என கூறினார் சேரன்.
ஆகஸ்ட் 2-ந்தேதி, சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதற்காக நுழைந்தேன் என்ற காரணத்தை கூறும் போது, விஜய் சேதுபதியின் மூலமாகத் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியே தெரியும். அவரால் தான் உள்ளேயே நுழைந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினர் மனநிலையை நான் அறிய முயற்சித்து வருகிறேன்’ என்று கூறியிருந்தார்.
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் எப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

சுஜாதா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஏற்கனவே விஷ்ணு விஷால், காடன், இன்று நேற்று நாளை 2 மற்றும் பெயரிடப்படாத 2 படங்கள் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தமபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கேமராமேன் பலியானார், நடிகர் படுகாயம் அடைந்தார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை மலையடிவார பகுதியில் கடந்த 25 நாட்களாக டி.வி. தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமராமேன் உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். நேற்றும் படப்பிடிப்பு நடைபெற இருந்தது.
இதையடுத்து அவர்கள் உத்தமபாளையம் நோக்கி கார் மற்றும் ‘கேரவன்’ வாகனத்தில் வந்தனர். இதில் காரை தேனி கோடங்கிப்பட்டியை சேர்ந்த நடிகர் தவசி (வயது 59) என்பவர் ஓட்டினார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கேமராமேன் சிவா (55) என்பவர் வந்தார். மற்றவர்கள் ‘கேரவன்’ வாகனத்தில் பின்னால் வந்தனர்.

கோம்பை இரட்டை புளியமரம் பகுதியில் கார் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக கார் ஓடியது. பின்னர் சாலையில் 4 முறை உருண்டு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் வந்த சிவா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் தவசி உயிருக்கு போராடினார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தவசியை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சிவா, நடிகர்கள் விஜய், அஜித், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த படங்களில் கேமராமேனாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்களுக்கு காப்புரிமை விவகாரத்தில், இளையராஜாவுடனான மோதல் தீர்ந்ததா என்பது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா ஆகிய 3 பேரும் ஐதராபாத்தில் நவம்பர் 3-ந்தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பாட உள்ளனர். இதையொட்டி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இளையராஜா தனது பாடல்களை பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தாரே? அவருடன் மோதல் தீர்ந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- “இளையராஜாவுக்கும் எனக்கும் இடைவெளி என்பது ஒருபோதும் இல்லை. அவர் எப்போது அழைத்தாலும் போவதற்கு நான் தயாராகவே இருப்பேன். அவர் அழைத்தார். நான் போனேன். முன்பு மாதிரியே சேர்ந்து பணியாற்றினோம். ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் இணைந்து விடுவார்கள்.

அதுமாதிரிதான் எங்களுக்கும் நடந்தது. இருவரும் சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றோம். அவர் இசையமைப்பில் சமீபத்தில் 2 பாடல்களை பாடினேன். ஒரு பெரிய மரத்தை புயல் வந்து சாய்த்து விட்டு போய் விடும். ஆனால் அருகம்புல் எப்போதும் சாயாமல் அப்படியே இருக்கும். என்னை ஒரு அருகம்புல் மாதிரிதான் நினைக்கிறேன்.
இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை சிறியதுதான். இருவரும் அதை மறந்து விட்டோம். உன்னை கட்டிப்பிடிக்கணும் போல் இருக்குடா? என்று இளையராஜா சொன்னார். உடனே போனேன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அதோடு எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
தமிழில் சிவகார்த்திகேயன், ஜீவா போன்ற நடிகர்களுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, அடுத்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று அழுத்தமாக தடம் பதித்தவர் விஜய் மில்டன். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலிசோடா', 'பத்து எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலிசோடா 2' படங்களுக்கு பிறகு ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு மழை பிடிக்காத மனிதர் என்று தலைப்பு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் ஆண்டனி 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்', 'காக்கி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படங்களுக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் நடிப்பார். ஸ்ரீதிவ்யா கைவசம் இந்தப் படம் மட்டுமே இருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா தொடர்ந்து ஜீவா, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வெளியானது.
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தது ஏன் என்பது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கனா படத்தின் வெற்றி மூலம் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது. தனி கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்த போதிலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக வானம் கொட்டட்டும் படத்திலும் நடித்து வருகிறார்.
இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:- ரொம்ப சின்ன வயதிலேயே 2 சிறுவர்களுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில் நடித்தேன். அந்த படம் தான் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எனவே தங்கையாக நடிப்பதற்காக வருத்தப்படவில்லை.

அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்தால் சரியாகி விடும். சிவாஜி - சாவித்திரி போன்றவர்கள் அப்படி நடிக்கவில்லையா என்ன? சிவகார்த்திகேயனை அண்ணா என்று அழைப்பதில் எனக்கும் வருத்தம் தான். படம் பார்த்தால் இந்த கேள்விகள் எழவே எழாது’. இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம் பெறும் ‘வெறித்தனம்’ என்ற பாடல் யூடியூப்பில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வருகிறது.
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.
படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான `சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் நேற்று வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது.

இன்னும் 24 மணி நேரங்களே முடியாத நிலையில் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. விஸ்வாசம் படத்தில் இருந்து வெளியான அடிச்சு தூக்கு பாடல் லிரிக்கல் வீடியோ இதுவரை 6.97 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. ஆனால் நேற்று வெளியான வெறித்தனம் பாடல் தற்போது வரை 7.35 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.
உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கபட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து 4-வது இடத்தில் இருப்பதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாடலில் இடம்பெற்றுள்ள ‘அவன் வரவரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுருது; அவன் எழுந்து கிழுந்து வந்தானா இந்த தீபாவளி நம்பள்து’ என்கிற வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கிறதா? என்கிற விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியின் குடும்ப விழாவில் பங்கேற்ற போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு மேற்கொண்டார்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி - முரசொலி செல்வம் தம்பதியின் பேத்தியும் எழிலரசி - ஜோதிமணி ஆகியோரின் மகளுமான ஓவியாவுக்கும் தொழிலதிபர் ஜெயபிரகாஷ் - பவானி தம்பதி மகன் அக்கினீஸ்வரனுக்கும் நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவிர மிகசிலரே இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

நடிகர் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். அப்போது தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினும் விஜய்யும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பகிர்வதோடு விஜய் அரசியலுக்கு வர தயாராகி விட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.






