என் மலர்
சினிமா செய்திகள்
மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன, இதில் இந்திராகாந்தி வேடத்தில் அஜித் பட நடிகை நடிக்க உள்ளார்.
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வெளிவருகின்றன. ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை படங்கள் வெளிவந்தன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் ‘தலைவி,’ ‘த அயன் லேடி’ ஆகிய பெயர்களில் இரண்டு இயக்குனர்கள் படங்களாக எடுக்கின்றனர்.
இவற்றில் கங்கனா ரணாவத், நித்யாமேனன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. சாகரிகா கோஷ் எழுதிய இந்திரா காந்தி வாழ்க்கை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

இகுறித்து வித்யாபாலன் கூறியதாவது:- “இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அது இப்போது நனவாக போகிறது. இந்திராகாந்தி வாழ்க்கை கதையில் இந்திராவாக நான் நடிக்க இருக்கிறேன். கணிதமேதை சகுந்தலா தேவி வாழ்க்கையும் படமாகிறது. அதில் சகுந்தலா தேவியாக நடிக்கிறேன்.
சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு 40 வயது ஆகிறது. 14 வருடங்களாக நடித்து வருகிறேன். எனது உடல் எடை பற்றி விமர்சனங்கள் வருகின்றன. அதை கண்டுகொள்வது இல்லை.”
இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.
ராட்சசி படத்தை பார்த்து பாராட்டிய மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக்கிற்கு நன்றி தெரிவித்து நடிகை ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்.
ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக் என்பவர் பார்த்து ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, அந்த படத்தில் கூறியது போல் தங்கள் நாட்டில் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு எனது நன்றிகள். கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற எங்களது குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக உங்கள் பாராட்டை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த படத்தில் வலிமையான காட்சிகளாக வந்துள்ளது. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் ஒரு சிறு வெளிப்பாடு தான் இந்த படம்.
இந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இந்த படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் படக்குழுவினர்களுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டு இந்த படத்தையும் இதன் கருத்தையும் உலக அளவில் எடுத்து செல்ல உதவியாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி’ என்று ஜோதிகா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் கடந்துள்ளதை குறிக்கும் இணையதளத்தை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் சூர்யா தொடங்கி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து சூர்யா கூறும்போது, ‘நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களை அண்ணா என்று அழைப்பதா? சித்தப்பா என்று அழைப்பதா? என்ற குழப்பம் எனக்கு இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தை எல்லா ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் பார்க்கின்றேன். இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் இந்த இணையதளத்தை தயாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள் என சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கலைக்குடும்பத்திலும் ரசிகக்குடும்பத்திலும் ஒருவனான எனக்கு அவரின் கலையுலக பயணத்தின் 60வது ஆண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி’ என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் நடிக்க வந்து 7, 8 ஆண்டுகளை தொட்ட பின்னர் தான் இந்த சம்பளத்தை தொட்டனர். ஆனால் நடிக்க வந்து 4 படங்களிலேயே சம்பளத்தில் கோடிகளை கடந்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.
நடிகை ஷ்ரத்தா கபூர், டீன் பட்டி என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். பின்பு லவ் க தி எண்ட் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அவர் நடித்த ஆஷிகுய் 2 திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார். இந்த திரைப்படம் காதல் கதை திரைப்படமாக வந்தது.

அதன் பிறகு அவர் காதல் கதை திரைப்படமாகவே நடித்து வந்தார். வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக 7 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது, சந்தானத்தின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி இயக்கும் இந்த புதிய படத்திற்கு ‘டிக்கிலோனா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான குட்டி ராதிகா, கோலிவுட்டில் வழிகாட்ட யாருமே இல்லை என்று கூறியிருக்கிறார்.
இயற்கை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் குட்டி ராதிகா. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து செட்டில் ஆனார்.
தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’கன்னட சினிமாவில் நுழையும்போது எனக்கு வயசு 14. சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. சினிமாவில் என்ன மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு என் குடும்பத்துக்கும் தெரியாது. எனக்கும் சின்ன வயது. கதைகூட கேட்காம எல்லா படத்துலயும் நடிப்பேன்.

தமிழ் சினிமாவுல ‘இயற்கை’ திரைப்படத்துல நடிக்கும்போது 15 வயசுதான். முதல் படமே தேசியவிருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ‘இயற்கை’ படத்தோட படப்பிடிப்புலதான் தமிழையே கத்துக்கிட்டேன். ஆனா அந்தச் சமயத்துல எனக்குப் படங்கள்ல நடிக்கிறது சம்பந்தமா கால்ஷீட் கொடுக்கறதுக்கும், கோலிவுட்டில் வழிகாட்டவும் யாருமே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா எனக்குத் தமிழ்ல நல்ல காட்பாதர் கிடைச்சிருந்தா கோலிவுட்டிலேயே செட்டில் ஆகிருப்பேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காவிரியை மீட்பதற்காக ஜக்கி வாசுதேவ் ஆரம்பித்துள்ள ‘காவிரி கூக்குரல்’ திட்டத்திற்கு குயின் நடிகைகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2-வது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார்.
இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இயக்கத்திற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகைகள் கங்கனா ரணாவத், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் காவிரி கூக்குரலுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கங்கனா ரணாவத் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மகேஷ் பாபு, தன்னை பற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இவருடைய டப்பிங் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மகேஷ் பாபு சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார்.
அவர் நடித்து கடைசியாக வெளிவந்த பாரத் எனே நேனு (பரத் என்னும் நான்) மற்றும் மஹரிஷி என இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அடுத்து அவர் இயக்குநர் அணில் ரவிப்புடி இயக்கும் சரிலேறு நீகேவ்வாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்மி மேஜராக நடிக்கிறார். அவருடன் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
மகேஷ் பாபு சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும்போது, அவரின் எதிர்கால திட்டங்கள் குறித்து வதந்திகள் எழுந்துள்ளன. நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்ற வதந்திகள் பரவுகின்றன. ஆனால், நடிகர் மகேஷ் பாபுவோ தனக்கு அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்று அறிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:- ’நான் செய்ய விரும்புவது நடிப்பு மட்டுமே. நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நான் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று நினைத்தேன், அப்போது நான் செய்ததை, செய்வதை நான் மிகவும் விரும்பினேன். நிச்சயமாக, அந்த நாட்களில் என்னுடைய நோக்கங்கள் வேறுபட்டன. பள்ளிக்கு செல்வதை நான் ஒரு வருடம் தவறவிட்டபோது, என்னுடைய அப்பா படிக்கச் சொன்னார். பின்னர் திரும்பி வந்து திரைப்படங்களில் நடிக்க சொன்னார். அதாவது, எனக்குத் தெரிந்த ஒரே விஷயம், நடிப்பு மட்டும் தான். நான் அதை மாற்ற விரும்பவில்லை’. இவ்வாறு அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு வெப்சீரிசை சசிகலா கதாபாத்திரம் இன்றி இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். நித்யாமேனன் இதில் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
இயக்குனர் விஜய்யும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்கிற பெயரில் படமாக்க போவதாக அறிவித்தார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதையடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.
ஜெயலலிதாவின் குழந்தை பருவம், இளமை பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது, முதல் அமைச்சராக இருந்தது, இறந்தது என்று அனைத்தையும் படமாக்கி படத்துக்கு ‘குயின்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

ஜெயலலிதாவாக இதில் மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். ‘இவன் வேற மாதிரி’ படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா, சோபன்பாபு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார்.
ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது போயஸ் கார்டன் வேதா இல்லம் பழைய மாடலில் இருந்தது. இப்போது நவீனமயமாக இருப்பதால் அதேபோன்று பழைமை மாறாத தோற்றம் கொண்ட பங்களா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள கார்டனில் இருக்கிறது.
ஜெயலலிதா இளமை தோற்றத்தில் நடிக்கும் காட்சிகளை ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் படமாக்கி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடித்து இருக்கிறார். முக்கியமாக சசிகலா கதாபாத்திரம் இந்த படத்தில் இல்லை என்கிறார்கள்.
எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிப்பதால், சிவப்பு மஞ்சள் பச்சை படம் நாளை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.
2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே இப்படம் செப்டம்பர் 6ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிப்பதால், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் நாளை ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் அடுத்து ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ள, இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது. இப்படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இணைய தொடரில் நடித்து பிரபலமானவர் ஆவார்.
மிலிந்த் ராவ் 7 ஆண்டுகளாக இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘காதல் டூ கல்யாணம்’ என்ற படத்தை இயக்கினார். 2010-ல் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் விவாகரத்து ஆன பின், கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவருக்கும் சவுந்தர்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது. விசாகனுக்கு வெளிநாடுகளிலும் தொழில்கள் இருக்கின்றன. அவற்றை கவனிக்க அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவார். சவுந்தர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தது.

விமானத்தில் இருந்து விசாகன், தன் மனைவி சவுந்தர்யாவுடன் இறங்கி விமான நிலையத்துக்குள் வந்தார். எமிரேட்ஸ் சேவை மையத்தில் பாஸ்போர்ட் அடங்கிய பையை விசாகன் எடுக்க முயன்றபோது, பாஸ்போர்ட் இருந்த பிரீப் கேஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவர்கள் விமானத்தில் தேடினார்கள். விமானத்தில் அந்த பை இல்லை.
பாஸ்போர்ட்டுடன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரும் அந்த பையில் இருந்தது. பாஸ்போர்ட் இல்லாமல் விமான நிலையத்தை விட்டு விசாகன்-சவுந்தர்யா இருவரும் வெளியேற முடியாததால் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்களும் புகாரை பதிவு செய்துகொண்டு விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் இருவரையும் தங்க வைத்தனர். இந்த தகவல் உடனடியாக இந்திய தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

தூதரக அதிகாரிகள் வந்து இருவரிமும் விசாரித்தபோதுதான் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டிருப்பது நடிகர் ரஜினியின் மகள், மருமகன் என்பது தெரிய வந்தது. உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு விமான நிலையத்தில் என்ட்ரி போடப்பட்டு இருவரும் வெளியே வந்தனர். தன் மகள் லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய தகவல் ரஜினிக்கு தெரிந்து, அவரும் தனக்கு வேண்டிய நண்பர்களை தொடர்புகொண்டு உதவி செய்ய கோரினார். விசாகன் அளித்த புகாரை அடிப்படையாக வைத்து அவருடைய கைப்பையை திருடியவர் யார் என்று சி.சி.டி.வி. கேமரா மூலம் லண்டன் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.






