என் மலர்
சினிமா செய்திகள்
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் விமர்சனம்.
அம்மா மனைவியின் சண்டையில் வாழ்க்கையை வெறுத்த கோபி, மாமியார் மனைவியின் தொல்லை தாங்காமல் இருக்கும் சுதாகர், பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் அன்பு, ஆகிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கிறார்கள்
அப்போது மனைவி கொடுமையால் சிக்கி இருக்கும் டி.எம்.கார்த்திக் இவர்களோடு சேர்கிறார். நான்கு பேரும் ஒன்றாக இணைந்து எங்கேயாவது சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்புகிறார்கள். அப்போது வழிப்போக்கனாக பிஜிலி ரமேஷ் இவர்களுடன் ஒட்டிக் கொள்கிறார்.

இவர்கள் அனைவரும் ஈசிஆரில் உள்ள ரெசார்ட்டில் இரவு தங்குகிறார்கள். அங்கு நாயகி யாஷிகா ஆனந்த் மாணவிகளுடன் சுற்றுலா வருகிறார். இந்த ரெசார்ட்டில் இரவு விருந்தில் இறந்து கிடந்த கோழிகளை கொண்டுவந்து ஓட்டல் உணவுகளில் கலந்து பரிமாறுகிறார்கள். இதை உண்பதனால் அனைவரும் ஜாம்பி ஆக மாறுகிறார்கள்.
இந்த உணவை சாப்பிடாமல் இருந்த கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ், கார்த்திக், அன்பு, யாஷிகா ஆகியோர் மட்டும் ஜாம்பியாக மாறாமல் இருக்கிறார்கள். இதே இடத்தில் ரவுடியாக இருக்கும் யோகிபாபுவும், இவரை என்கவுண்டர் செய்வதற்காக காத்திருக்கும் ஜான் விஜய்யும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், ஜாம்பியாக மாறியவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் ஜாம்பியை மையமாக வைத்து ஏற்கனவே மிருதன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது ஜாம்பி வெளியாகி இருக்கிறது.
ஜாம்பி திரைப்படத்தை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், பல இடங்களில் காமெடி காட்சிகள் எடுபடவில்லை. காமெடி என்ற பெயரில் பார்ப்பவர்களை கடுப்பாக்கி இருக்கிறார்கள்.
கோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியில் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறார். மருத்துவ மாணவியாக வரும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாலும், காமெடியாலும் கவர்ந்திருக்கிறார்.

காமெடியான நடிகர்களை வைத்து காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். நிறைய லாஜிக் மீறல்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. திறமையான நடிகர்களை சரியாக கையாள தெரியாமல் விட்டிருக்கிறார்.
பிரேம்ஜியின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ஜாம்பி’ காமெடி குறைவு.
தொடர்ந்து விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடித்து வரும் டாப்சி, தனக்கு வரும் வாய்ப்புகளை நழுவவிடுவது இல்லை என்று கூறியிருக்கிறார்.
டாப்சிக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அடுத்து நடிக்கும் படம் வேறு கதைக்களத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் அடுத்தடுத்து விளையாட்டு பட கதையாக இருந்தாலும் நடிக்க சம்மதிக்கிறார் டாப்சி.
‘சூர்மா’ என்ற இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த டாப்சி அடுத்து ‘சாத் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்தார். அடுத்து ‘ராஷ்மி ராக்கெட்’ படத்தில் தடகள வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதவிர இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வருகிறது.

இதுபற்றி டாப்சி கூறும்போது, ‘எனக்கு வரும் படங்கள் நல்ல படங்களாக இருக்கிறது. அதனால் அவற்றை தவற விடுவதில்லை. மேலும் இன்றைய நிலையில் எனக்கு வரும் வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். என்னை தேடி வரும் படங்களில் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் எதுவும் என் கையை நழுவிபோய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என்றார்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நடித்து வந்த புதுமுக நடிகை திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயர், காவ்யா மாதவன், நஸ்ரியா நாசிம், பிரியாமணி, பாவனா என பல நடிகைகள் குடும்ப தலைவிகள் ஆகிவிட்டனர். நயன்தாரா போன்றோர் இன்னும் நடித்து வருகின்றனர். மலையாளத்தில் திருமணத்துக்கு பின்னும் நடிகைகளுக்கு நல்ல நல்ல வேடங்கள் வருகின்றன. தமிழில் கேணி படத்தில் நடித்தவர் பார்வதி நம்பியார்.

மலையாளத்திலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவரும் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு கல்யாணத்துக்கு தயாராகிவிட்டார். தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த தகவலை பார்வதி நம்பியரே பகிர்ந்துள்ளார். வினித் மேனனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது என ஒரு வரியில் நிச்சயதார்த்த தகவலை பகிர்ந்து கொண்டவர் நிச்சயதார்த்த படத்தையும் வெளியிட்டுள்ளார். திருமணம் எப்போது என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் முன்னோட்டம்.
‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். கதாநாயகியாக காஷ்மீரா அறிமுகமாகிறார்.மதுசூதனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரித்துள்ள இப்படத்தை, பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் மூலம் சித்து குமார் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
படைப்பாளன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய திருநாவுக்கரசர், சினிமாவில் கதை தான் ஹீரோ என்று தெரிவித்துள்ளார்.
எல். எஸ். பிரபுராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படைப்பாளன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை தனியார் திரையரங்கில் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு உறுப்பினர் சினேகன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் திருநாவுக்கரசர் பேசியதாவது: எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க வேண்டும் என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சினை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்த படத்தின் இயக்குநர்
தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர்.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச்
சொல்லியும் இருக்கிறார்.
அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள இந்த படம் சினிமாவில் நடக்கும் கதைத்திருட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரொம்ப சிறப்பாக இருக்கு. அது நடப்பில் இருக்கும் விஷயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.
இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவவலி மாதிரி தான். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும். அதனால் இதை பரிசீலிக்கலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது’ இவ்வாறு அவர் பேசினார்.
விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம் பெறும் ‘வெறித்தனம்’ பாடல் யூடியூப்பில் புதிய வரலாறு படைத்திருக்கிறது.
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான `சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் செப்டம்பர் 1-ந் தேதி வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தபாடல் வெளியான சில நிமிடங்களிலே டிரண்டானது. இப்பாடல் ஒரு நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் வெளியான 24 மணிநேரத்தில் உலகளவில் யூடியூப்பில் அதிகம் பார்க்கபட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து 4-வது இடத்தை பிடித்தது.
இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து வரும் வெறித்தனம் பாடல், தற்போது மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. வெறித்தனம் பாடல் இதுவரை 1.2 கோடி பேர் பார்த்துள்ள இப்பாடல் 10 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிவேகமாக 10 லட்சம் லைக்குகளை பெற்ற லிரிக்கில் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘ஜிப்ஸி’ படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீவா நடித்துள்ள ‘ஜிப்ஸி’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூமுருகன் இயக்கி உள்ளார். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். இதனால் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு செல்கிறார்கள்.

அங்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. ஜிப்ஸி படத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், அதனால் தான் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகளும் உள்ளன.
நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜிப்ஸி திரைப்படத்தில் என்ன பிரச்சினை. இருமுறை தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும், முதல்வர் யோகி கெட்டப் போட்டு அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா? தயாரிப்பாளர் தி.மு.க.வா?” என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மகாமுனி படத்தின் விமர்சனம்.
மகாமுனி படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆர்யா. மகா, கால் டாக்சி டிரைவராக பணி புரிகிறார். இவரது மனைவி இந்துஜா. இவர்களுக்கு பள்ளிக்குச் செல்லும் ஒரு மகன். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவர் பணத்திற்காக அரசியல்வாதியான இளவரசுவை எதிர்க்கும் ஆட்களை கொலை செய்வதற்கு திட்டங்களைப் போட்டு கொடுக்கிறார். இளவரசு, அருள்தாஸ், மதன் குமார், இவர்களுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எம்.சுந்தர் ஆகியோர் கூட்டணியாகி மகாவை என்கவுண்டரில் கொல்ல சதி செய்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு கதாபாத்திரமான முனி, தனது அம்மா ரோகிணி உடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரி முடித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்வதொடு டியூஷன்னும் எடுக்கிறார். ஜெர்னலிசம் படிக்கும் மகிமா, ஆர்யாவை காதலித்து வருகிறார். இது மகிமாவின் தந்தை ஜெயப்பிரகாஷுக்கு தெரிய வருகிறது. சாதிவெறி பிடித்த ஜெயப்பிரகாஷ் முனியை கொல்ல திட்டமிடுகிறார். மகா, முனி இருவரை கொலை சதி துரத்துகிறது. இருவரும் தப்பித்தார்களா? இருவருக்கும் என்ன தொடர்பு? மகாவின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஆர்யா. மகா கதாபாத்திரத்தில் பாசமிகு தந்தையாகவும், பொறுப்பான கணவராகவும் பளிச்சிடுகிறார். இந்துஜா புடவை வாங்கியதை சொன்னவுடன் அதற்கு இவர் கொடுக்கும் பதில் அனைத்து நடுத்தர குடும்ப கணவனின் ஆதங்கம். முனி கதாபாத்திரத்தில் மகிமாவின் கடவுள் பற்றிய கேள்விக்கு ஆர்யா கொடுக்கும் பதில்கள் இவரின் குரலுக்கு அந்த வசனங்கள் உயிர் பெற்றிருக்கிறது. இரண்டு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறார். நான் கடவுளுக்கு பிறகு ஜாலியான வேடங்களிலேயே நடித்துவந்த ஆர்யா இதில் தனது நடிப்பின் பல பரிணாமங்களை காட்டி அசர வைக்கிறார்.
இந்துஜா, ஒரு சராசரி குடும்ப பெண்ணாக அழகாய் பொருந்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவில் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். கணவனிடம் உரிமையோடு சண்டை போடும் போது கண்ணில் நீரை நிறுத்தி அதில் காதலை ஆடவிட்டு, நடுத்தர குடும்பத்து இல்லத்தரசியை நம் கண் முன் நிறுத்துகிறார். குறிப்பாக இறுதி காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.
மகிமா இதுவரை பார்த்திராத ஒரு துணிச்சலான பெண் வேடத்தில் நடித்துள்ளார். ஆர்யாவை பார்க்கும்போது முகத்தில் இருக்கும் புன்னகையை உதடுகள் வெளியே விடாமல் தடுப்பதும் அதற்குத் துணையாய் விழிகள் பேசுவதும் கதாபாத்திரத்திற்கு அழகு. இறுதியில் பாட்டிலை பிடுங்கி குடித்துவிட்டு உடைப்பது துணிச்சலான நடிப்பின் உச்சகட்டம். எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக செய்ய முடியும் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்து இருக்கிறார் மகிமா.

இன்ஸ்பெக்டராக வரும் ஜி.எம்.சுந்தரும் அரசியல்வாதியாக வரும் இளவரசும் நடிப்பில் அசத்துகிறார்கள். இளவரசுவின் மருமகனாக வரும் யோகி கவனிக்க தகுந்த நடிப்பு. சூப்பர் குட் சுப்பிரமணி, அருள்தாஸ், பாலாசிங், மதன் குமார், ரோகிணி என மற்ற அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
மவுனகுரு படம் மூலம் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சாந்தகுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்ற கனமான கதையுடன் களம் இறங்கியுள்ளார். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தில் கவர்கிறார். இந்த படம் மூலம் ஒரு நாவலைப் படிப்பது போன்ற ஒரு அனுபவத்தை திரையில் காண்பித்திருக்கிறார். மகா-முனி என இருவரின் வாழ்க்கையை மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் அந்தக் கதைக்கு உரிய பாத்திரமாகவே பார்க்க முடிகிறது என்பது இவருக்கு கிடைத்த முதல் வெற்றி. இம் மாதிரியான கதைகளை திரையில் காண்பதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதே இப்படம் சொல்ல வருகிறது.

படத்தில், விவசாயம், கல்வி, ஜாதி, நடுத்தர வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், கணவன்-மனைவி இடையேயான உணர்வுகள், ஆசிரியருக்கு உண்டான பண்புகள், கடவுள் பற்றிய உரையாடல் என அனைத்தையும் நீண்ட விவாதம் ஆக்காமல் ஆங்காங்கே அழகாய் அளவாய் சொல்லியிருப்பது இயக்குனரின் சிறப்பு.
அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு மகா, முனி இருவரது வாழ்வியலையும் அழகாக பிரிக்கிறது. தமனின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் ’மகாமுனி’ கனமான கதையால் கவனிக்க வைக்கிறான்.
விஷாலின் ஆக்ஷன் படத்திற்காக நடிகை தமன்னா ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தமன்னா. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி ஹீரோயினாகவே வலம் வந்துக்கொண்டிருந்த தமன்னாவை இப்படத்தில் ராணுவ கமாண்டோவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

இதுபற்றி அவர் கூறும்போது, ’ராணுவ பெண் கமாண்டோவாக தமன்னா நடிக்கிறார். விஷாலுடன் இவரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார். குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மற்ற காட்சிகள் ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத், சென்னையிலும் படமாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடந்துவருகின்றன’. இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன, இதில் இந்திராகாந்தி வேடத்தில் அஜித் பட நடிகை நடிக்க உள்ளார்.
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் திரைப்படங்களாக வெளிவருகின்றன. ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை படங்கள் வெளிவந்தன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் ‘தலைவி,’ ‘த அயன் லேடி’ ஆகிய பெயர்களில் இரண்டு இயக்குனர்கள் படங்களாக எடுக்கின்றனர்.
இவற்றில் கங்கனா ரணாவத், நித்யாமேனன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. சாகரிகா கோஷ் எழுதிய இந்திரா காந்தி வாழ்க்கை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

இகுறித்து வித்யாபாலன் கூறியதாவது:- “இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அது இப்போது நனவாக போகிறது. இந்திராகாந்தி வாழ்க்கை கதையில் இந்திராவாக நான் நடிக்க இருக்கிறேன். கணிதமேதை சகுந்தலா தேவி வாழ்க்கையும் படமாகிறது. அதில் சகுந்தலா தேவியாக நடிக்கிறேன்.
சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு 40 வயது ஆகிறது. 14 வருடங்களாக நடித்து வருகிறேன். எனது உடல் எடை பற்றி விமர்சனங்கள் வருகின்றன. அதை கண்டுகொள்வது இல்லை.”
இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.
ராட்சசி படத்தை பார்த்து பாராட்டிய மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக்கிற்கு நன்றி தெரிவித்து நடிகை ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்.
ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக் என்பவர் பார்த்து ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, அந்த படத்தில் கூறியது போல் தங்கள் நாட்டில் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு எனது நன்றிகள். கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற எங்களது குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக உங்கள் பாராட்டை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த படத்தில் வலிமையான காட்சிகளாக வந்துள்ளது. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் ஒரு சிறு வெளிப்பாடு தான் இந்த படம்.
இந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இந்த படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் படக்குழுவினர்களுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டு இந்த படத்தையும் இதன் கருத்தையும் உலக அளவில் எடுத்து செல்ல உதவியாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி’ என்று ஜோதிகா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் கடந்துள்ளதை குறிக்கும் இணையதளத்தை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் சூர்யா தொடங்கி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து சூர்யா கூறும்போது, ‘நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களை அண்ணா என்று அழைப்பதா? சித்தப்பா என்று அழைப்பதா? என்ற குழப்பம் எனக்கு இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தை எல்லா ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் பார்க்கின்றேன். இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் இந்த இணையதளத்தை தயாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள் என சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு அண்ணன் கமல்ஹாசன் அவர்களின் கலைக்குடும்பத்திலும் ரசிகக்குடும்பத்திலும் ஒருவனான எனக்கு அவரின் கலையுலக பயணத்தின் 60வது ஆண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி’ என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.






