என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எப். 2 படத்தின் படப்பிடிப்பில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நான்கு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

    தற்போது கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் வருகிறது. முன்னதாக கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. 

    யாஷ்

    நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கே.ஜி.எப். 2ம் பாகத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
    பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
    பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய ராபர்ட்-ராஜசேகர் என்ற இரட்டையர் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தார். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தார்.

     இயக்குநர் ராஜசேகர்

    சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இந்த இரட்டையர் இயக்குநர்கள் 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்பட பல படங்களை இயக்கியுள்ளனர்.
    காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த கவுதம் மேனன்- சூர்யா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    2003-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம், ‘காக்க காக்க’. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு சூர்யாவை வைத்து ‘வாரணம் ஆயிரம்‘ படத்தை கவுதம் மேனன் இயக்கினார். இதில் அப்பா, மகன் என 2 வேடங்களில் சூர்யா நடித்தார். 

    இந்த கூட்டணி அதன் பிறகு சேராமலே இருந்தது. இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்து வந்தனர். இடையில் 2014ல் இணையும் வாய்ப்பு வந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் அது நடக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்தன. தற்போது இது உறுதியாகி உள்ளது. 

    கவுதம் மேனன், சூர்யா

    சூர்யாவின் ‘காப்பான்’ வரும் 20ந்தேதி வெளியாக இருக்கிறது. தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை முடித்த பிறகு, சிவா இயக்க இருக்கும் படத்துக்கு செல்கிறார் சூர்யா. தவிர, பாலா இயக்கும் ஓர் படத்திலும் நடிக்கிறார். தற்போது கவுதம்மேனன் படமும் சூர்யாவின் படவரிசையில் இணைந்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்‘ உள்ளிட்ட படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கெஸ்ட்டாக சென்றிருக்கும் சாக்‌ஷி, வெளியில் இருக்கும் மக்களை நாய் என்று கூறியதால் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3 ஆம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் 74-வது நாளில் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா ஷெரினும் தர்‌ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.

    சாக்‌ஷி அகர்வால்

    இதனால், கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டையிட்டுவிட்டு தனியாக சென்று அழுது கொண்டிருந்தார். அப்போது அவரை சமாதானம் செய்த சாக்‌ஷி ‘நாய்கள் ரோட்ல குரைக்கும். அத பத்தி கவலைப்படுவியா...’ ‘நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன்’ என்றும் தெரிவித்தார்.

    இதனை கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் சாக்‌ஷியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சாக்‌ஷியின் இந்த செயலுக்கு எதிராக இணையத்தில் கண்டனங்கள் வலுத்து வருகின்றது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

    கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 200 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில், விஜய் 150 நாட்கள் கலந்து கொண்டுள்ளார்.

    பிகில்

    தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்ட விஜய், தற்போது டப்பிங்கையும் முடித்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ஒரு படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கு முன்பாக, அதன் டீசரை வெளியிடுவது வழக்கம். ஆனால், ‘பிகில்’ படத்தின் டீசரை வெளியிடாமல், நேரடியாக டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    விமான நிலையத்தில் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம் என்று ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா கூறியுள்ளார்.
    ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யாவும் அவரது கணவர் விசாகனும் லண்டன் சென்றனர். அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கியபோது விசாகன் பாஸ்போர்ட் திருட்டு போய் இருந்தது. விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் பெற்று வெளியே வந்தார்கள்.

    விசாகன் அளித்த புகாரின் பேரில் கைப்பையை திருடியவர் யார் என்று விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் குறித்து சவுந்தர்யா கூறியிருப்பதாவது:-

    “கடந்த 1-ந்தேதி ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் லவுஞ்சில் நாங்கள் காருக்காக காத்து இருந்தோம். அப்போது எங்களுடைய கைப்பையை திருடி விட்டனர். இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது.

    கணவருடன் சவுந்தர்யா ரஜினிகாந்த்

    அதில் எமிரேட்ஸ் லவுஞ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

    என் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது.”

    இவ்வாறு சவுந்தர்யா கூறியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வழியை பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜ் பின்பற்றி வருகிறார்.
    ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    அதன் பிறகு ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் படங்களும் வெளியாக இருக்கின்றன. மேலும் ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

    நிவேதா பெத்துராஜ்

    இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. நயன்தாரா, அனுஷ்கா, அமலாபால் ஆகியோர் கதாநாயகர்களுக்கு ஜோடியாக ஒரு பக்கம் நடித்தாலும் இன்னொரு பக்கம் தங்களுக்கு முக்கியத்துவம் படங்களிலும் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் நிவேதாவும் இணைந்துள்ளார்.
    தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ராமர், தற்போது கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் சஞ்சய் கல்ராணி நாயகியாக நடிக்கிறார்.
    தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் ராமர். இவர் தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

    கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த புதிய படத்தை ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மணி ராம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.

    படக்குழுவினர்

    மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் இப்படத்தின் துவக்கி வைத்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகாததால், தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல தடைகளை தாண்டி நேற்று (6-ந்தேதி) திரைக்கு வரும் என்று அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. மீண்டும் படத்தை தள்ளி வைத்துள்ளனர்.

    ‘எனை நோக்கி பாயும் தோட்டா‘ படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பட நிறுவனத்தின் அறிக்கை

    “செப்டம்பர் 6-ந்தேதி வெளியாக இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெருமுயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருந்துகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை. இதில் ஏற்படும் தாமதத்தினால் ரசிகர்களுக்கு ஏற்படும் ஏமாற்றம், விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும்தான். இந்த திரைப்படத்தை திரையில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் காத்திருப்பை இந்த படம் நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்.”

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் நடித்த படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றிய முத்து விஜயன் இன்று காலமானார்.
    தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் இன்று காலமானார். ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...’, ‘மேகமாய் வந்துபோகிறேன்...’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த கவிஞர் முத்துவிஜயன், பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.

    மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்து விஜயன் இன்று மாலை 4 மணிக்கு காலமானார். சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் இவரது உடல் தகனம் நடைபெற்றது.

    கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற முத்துவிஜயன் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்தார்.
    சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் விமர்சனம்.
    ஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா, தம்பி. இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பைக் மீது தீவிர பைத்தியமாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், வளர்ந்த பிறகு பைக் ரேஸ் ஓட்டும் பழக்கம் ஏற்படுகிறது. 

    அப்படி ஒரு பைக் ரேசின் போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டிக் கொள்கிறார். மேலும் சித்தார்த் ஜி.வி.பிரகாஷை அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் சித்தார்த் மீது கடுப்பாகிறார் ஜி.வி.பிரகாஷ்.

    சிவப்பு மஞ்சள் பச்சை

    இந்நிலையில், அக்கா லிஜோமோலுக்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, ஜி.வி.பிரகாஷுக்கு பிடிக்காமல் போகிறது. ஆனால், லிஜோமோலுக்கு சித்தார்த்தை பிடித்து போக, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷ், அக்காவிடம் நடந்ததை சொல்ல, அவரும் மனதை கல்லாக்கிக் கொண்டு, சித்தார்த்தை வெறுக்கிறார்.

    இந்நிலையில், சித்தார்த்தும் ஜி.வி.பிரகாஷுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்கள்? சித்தார்த்தும், லிஜோமோலும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

    சிவப்பு மஞ்சள் பச்சை

    சித்தார்த் போக்குவரத்து அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜிவி.பிரகாஷுடன் மல்லுக்கட்டுவது, குடும்பத்திற்காக ஏங்குவது என நடிப்பில் அசத்தி இருக்கிறார். பைக் ரேசராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். அக்கா லிஜோமோலுக்காக அழும் இடத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 

    ஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடித்திருக்கும் லிஜோ மோலுக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அன்பு, பிரிவு, வலி என நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக வரும் காஷ்மிரா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    சிவப்பு மஞ்சள் பச்சை

    பிச்சைக்காரன் படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சசி. கமர்ஷியல் படமே என்றாலும் இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும், அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதையாக சொல்லியிருக்கிறார். இதில் மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு. முதல் பாதி காமெடியுடனும், இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக செல்லும்போது, பாடல்கள் தடையாக இருப்பது போல் தோன்றுகிறது.

    சித்துகுமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. 

    மொத்தத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ செல்லலாம்.
    ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா மூன்றாவது முறையாக அவருடன் இணைந்திருக்கிறார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்குப்பின் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ‘தர்பார்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். 

    ரஜினியின் ஆரம்பகால படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர்கள் கூட்டணியில் உருவான தில்லு முல்லு படம் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாப்படுகிறது. தர்பார் படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா சிவ்பிங்க் இணைந்துள்ளார். 

    ரஜினியுடன் அதித்யா

    இவர் 2.0, பேட்ட ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை ஆதித்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    ஜெய்ப்பூரில் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்றும், வசனம் பேசும் காட்சிகளும் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது படக்குழு மும்பையை மீண்டும் மையமிட்டுள்ளது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ந்தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    ×