என் மலர்
சினிமா செய்திகள்
சமூக வலைதளங்களில் சிவகுமார் பற்றி வெளிவந்த செய்திகளுக்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கடவுள் நம்பிக்கை பற்றி கூறியிருக்கிறார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சிவகுமார் பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் கடவுள், மதம் சம்பந்தமாக வெளியான சில செய்திகளுக்கு அவர் பதிலளிக்கும் வகையில், வீடியோ செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, ‘‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.
கடவுளுக்கு வடிவம் இல்லை; ஆண், பெண் என்ற பேதம் இல்லை! ‘கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல’ என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ‘ஹேராம்’ என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது.
அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார்.

நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன. இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன்.
யூடியூப்பில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது... ’அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல்’. இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.’’ இவ்வாறு கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. டெல்லியில் சில முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரையில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்தப் படப்பிடிப்பு மட்டும் சுமார் 40 நாட்கள் வரை நீடித்து வந்தது. தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் 3 நாட்கள் சிறுசிறு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளன. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவினர் அனைவருக்கும் தங்க காசுகளை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.
தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள நடிகை ரேகா இறந்ததாக வந்த வதந்திக்கு அவர் கோபப்பட்டு பட விழாவில் பேசியிருக்கிறார்.
சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100 சதவீதம் காதல்’. தெலுங்கில் வெளியான ‘100 சதவீதம் லவ்’ படத்தின் தமிழ் ரீமேக் இது.
இந்த படம் வரும் 4-ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ரேகா பேசியதாவது: ’இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்கள். நானும், ‘தலைவாசல்’ விஜய் சாரும் ஜி.வி.பிரகாசுக்கு அப்பா அம்மாவாக நடித்துள்ளோம். இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் என பலரும் பன்ச் வசனங்கள் பேசுவார்கள். நான் பன்ச் வசனங்கள் பேசும் அளவுக்கு பெரிய சூப்பர் ஸ்டார் அல்ல. ‘உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்‘ என்று விஜய் சார் சொன்னது போல் இருக்கிறேன்.
ஆனால், என்னை புதைத்து அருகில் ரஜினி சார், விஜய் சார் எட்டி பார்ப்பது போல் டிசைன் செய்து நான் இறந்துவிட்டதாக ஆகஸ்டு 17-ந்தேதியில் இருந்து செய்திகள் பரவி வருகின்றன. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். இன்று பல்வேறு ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் யூடியூப் சேனல் தொடங்கி, அதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு அதன் மூலம் வருமானம் பெறுகிறார்கள்.

இது எந்த நிலைக்கு போகும் என தெரியவில்லை. இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பிரபலங்கள் இறந்துவிட்டார்கள் என்று செய்தி பரப்பப்படும் போது பிரபலங்களை விட அவர்களை சேர்ந்தவர்களை ரொம்பவே வருத்தப்பட வைக்கும்.
என்னிடமே சில நடிகர்கள் தொலைபேசியில் ‘நீ இறந்துவிட்டாயா’ எனக் கேட்டார்கள். ஆமாம். இப்போது பேய் தான் பேசுகிறேன் என சொன்னேன். இறந்து விட்டீர்களா என்பதை என் தொலைபேசியிலேயே அழைத்து கேட்கிறார்கள். எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. நான் கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன். 100 படங்களைத் தாண்டி விட்டாலும் இன்னும் மாநில அரசு, மத்திய அரசு விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது”
இவ்வாறு அவர் பேசினார்.
பொங்கல் பண்டிகையில் ரஜினி, விஷால், கார்த்தி ஆகியோரின் படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆனாலும் அது நடைமுறையில் இல்லை என்று சிறுபட தயாரிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகிறார்கள்.
வருகிற தீபாவளி, பொங்கல் பண்டிகையில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர். பொங்கல் பண்டிகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் படம் ரிலீசாவதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

வட மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு தர்பார் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விஷால், கார்த்தி படங்களும் மோத தயாராகின்றன. பொங்கலுக்கு வெளியாகும் விஷால் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனந்த் இயக்குகிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
கார்த்தி படத்துக்கும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ஜோதிகாவும் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் பாபநாசம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். கடந்த பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'ஒற்றைப் பனைமரம்' என்கிற படம் உருவாகி இருக்கிறது.
திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் படத்தின் முன்னோட்டம்.
திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நடிகை அனுஷ்கா விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன.

ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதி செய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருந்தார். ஆனால் அவர் தற்போது சம்பளம் குறைவு என்பதால் விலகிவிட்டார் என கூறப்படுகிறது. அனுஷ்காவிற்கு பதிலாக அந்த இடத்தில் த்ரிஷாவை நடிக்கவைக்க இயக்குனர் ஆலோசித்து வருகிறார் என்கிறார்கள்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, தர்ஷன், முகேன், ஷெரின், லாஸ்லியா ஆகிய 5 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற அபிராமி, 50 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.

தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த அபிராமி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'காப்பான்' படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்து பாராட்டினார்.
பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது.

விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறையோடு காப்பான் படத்தில் பங்களிப்பு செய்த நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு காப்பான் படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா ஏற்படுத்தி இருப்பதாகவும் சொன்ன விவசாய சங்க நிர்வாகிகள், டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்திற்கு விஜய் சேதுபதி கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தனது 64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 3-ந் தேதி தொடங்க உள்ளது.
2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் இது தொடர்பாக படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை அணுகியதாக கூறப்பட்டது.

எனினும் கால்ஷீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி தளபதி 64 படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் விஜய் சேதுபதி இப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என கூறப்படுகிறது.
இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக "பேட்ட" திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் ஜோடியாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து திருமணத்துக்கு அவர் தயாராவதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது.
இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர். நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
திருமணத்தை வட இந்தியாவில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று இருவரும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணங்கள் வெளிநாட்டில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. திருமண சடங்கு நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்யின் அறிவுரையை ஏற்று சமூக பிரச்சனைகளுக்கு அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி குரல் கொடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பிகில் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக “யார எங்க உட்கார வைக்கனுமோ, அங்க உட்கார வைக்கனும்”, சுபஸ்ரீ விவகாரம் போன்றவற்றை குறிப்பிட்டு விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விவாத பொருளாகவும் மாறியது.

மேலும் சமூக பிரச்சனைகளுக்கு டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி குரல் கொடுங்கள் என ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார். இதனை பின்பற்றும் விஜய் ரசிகர்கள் ஏற்கனவே #JusticeForSubashri, #KeezhadiTamilCivilization போன்றவற்றை டிரெண்டாக்கி கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #SaveTheniFromNEUTRINO போன்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.






