என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகியோர் நடிப்பில் சுதர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் விமர்சனம்.
    பார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள். இவர்கள் கூட்டத்தை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி செய்கிறது.

    இந்த ஐந்து பேரும் அடுத்ததாக சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் உலக கோப்பையை திருட திட்டம் போடுகிறார்கள். இதை திருடி விற்றால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால், இவர்களுக்கு பல தடைகள் வருகிறது.

    இதை சமாளித்து இறுதியில் ஐந்து பேரும் உலகக் கோப்பையை திருடினார்களா? இல்லையா? ஐதராபாத் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    திட்டம் போட்டு திருடுற கூட்டம்

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கயல் சந்திரமௌலி இப்படத்தின் மூலம் திரையில் தோன்றியிருக்கிறார். நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்திய இவருக்கு இந்த படமும் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் காமெடி காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.

    வித்தியாசமான கெட்டப்பில் தனக்கே உரிய நக்கல், நையாண்டியுடன் நடித்து அனைவருடைய கவனத்தையும் பெற்றியிருக்கிறார் பார்த்திபன். பல காட்சிகளை சாதாரணமாக நடித்து விட்டு செல்கிறார். பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்த சாட்னா டைட்டஸ் இந்த படத்தில் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆண்களுக்கு இணையாக போட்டிபோட்டு நடித்திருக்கிறார். சாம்ஸ், டேனி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    திட்டம் போட்டு திருடுற கூட்டம்

    கொள்ளையடிப்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுதர். கிரிக்கெட் உலக கோப்பையை திருட முயற்சிப்பது புதிய முயற்சி. திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாகவும் காமெடியுடனும் கொண்டு செல்கிறார் இயக்குனர். ஆனால், காமெடி காட்சிகளை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    அஷ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ காமெடி கூட்டம். 
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தன்னைப் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள பெட்ரோமாக்ஸ் படம் வரும் 11-ந்தேதி வெளியாக உள்ளது. விஷால் ஜோடியாக ஆக்‌‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார்.

    மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் எனவும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தான் மாப்பிள்ளை என்றும் செய்தி பரவியது.

    தமன்னா

    இது குறித்து கேட்டபோது, ‘நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால் சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் வரவில்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான்’ என்றார் தமன்னா.
    ‘வாழ்க விவசாயி’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி, நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக் கூடாதா? என்று பட விழாவில் பேசியிருக்கிறார்.
    கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    இதில் அப்புக்குட்டி பேசும்போது, ‘நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன் என்று நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. 

    எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்கு ஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை. பிறகு நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். 

    அப்புக்குட்டி - வசுந்தரா

    அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது, இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் கூட நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..? அந்தவகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். 



    ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 

    இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 64-வது படம் ஆகும். ஏற்கனவே மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா பெயர்கள் அடிபட்டன. இந்தி நடிகை கியாரா அத்வானியிடமும் பேசி வருகிறார்கள்.

    விஜய் - விஜய் சேதுபதி

    இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். அவர்களிடம் கால்ஷீட் இல்லாததால் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவருக்கு கதை பிடித்துள்ளதால் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். 

    ஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு இணையான சம்பளம் என்கின்றனர். ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.
    நடிகர் ஜெயம் ரவி வீட்டில் வேலை பார்க்கும் காவலாளிகளுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் என்பவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் செக்யூரிட்டி நிறுவனத்தில் 150 காவலாளிகள் வேலை செய்கிறார்கள். அவர்களை பல்வேறு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட வீடுகளுக்கும் காவல் பணிக்கு அனுப்பி வருகிறோம்.

    இந்த நிறுவனத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவியின் வீட்டு பாதுகாப்புக்கு 2 காவலாளிகளை வேலைக்கு அனுப்பி வைத்தோம். அவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    ஜெயம் ரவி

    அவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பள பணம் ரூ.70 ஆயிரத்தை கொடுக்காமல் அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். பின்னர் அந்த 2 பேரில் ஒருவரை எங்களது நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே ஜெயம் ரவிக்கு தனிப்பட்ட முறையில் காவலாளியாக நியமித்து கொண்டனர்.

    ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரி என்பவர்தான் இதற்கு காரணமாக உள்ளார். இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் விமர்சனம்.
    வைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். 

    இந்நிலையில், தன்னுடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தை காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடுகிறார். 

    ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத நிலையில், நட்டி ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். சிவகார்த்திகேயனுடன் உள்ள ஒரு முன்பகையை மனதில் வைத்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார் நட்டி. 

    இறுதியில் இதை எப்படி சிவகார்த்திகேயன் சமாளித்தார்? அண்ணன், தங்கை பாசம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நம்ம வீட்டுப்பிள்ளை

    ஆக்‌ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் பொறுப்பான குடும்பத்து பையனாக தன்னைக் காட்டிக் கொள்ள ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். கிராமத்து இளைஞனாக வேட்டி சட்டை அணிந்து படம் முழுவதுமே பயணிக்கிறார். கிளைமேக்ஸ் எமோஷ்னல் காட்சியில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

    தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், ஹீரோவிற்கு தங்கையாக நடிக்க தனி தைரியம் வேண்டும். அதை நடிப்பில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக நடித்திருக்கும் அனு இம்மானுவேல், சிவகார்த்திகேயனை காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். மற்றபடி பெரியதாக வேலை இல்லை.

    இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். வேலாராமமூர்த்தி, சமுத்திரகனி, ஆர்.கே.சுரேஷ், அர்ச்சனா, சூரி, சுப்பு, நட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    நம்ம வீட்டுப்பிள்ளை

    இயக்குனர் பாண்டிராஜ் இதற்கு முன்பு இயக்கியிருந்த ’கடைக்குட்டி சிங்கம்’ படமும் கிராமத்துப் பின்னணியில் வெளியானதால், இந்த படமும் அதே சாயலில் இருக்கிறது. அந்த வெற்றி இதில் கிடைப்பது என்பது கேள்விக்குறிதான். படம் பார்ப்பதற்கு சீரியல் போன்று இருக்கிறது. அண்ணன் - தங்கை பாசம், தாத்தா - பேரன் பாசம், அம்மா - மகன் பாசம், சித்தப்பா பாசம் என பாசப்பிணைப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறார்.

    நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். தனக்கே உரிய பாணியில் இசையமைத்து அதில் கிராமிய இசை கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.

    மொத்தத்தில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ சீரியல் ரசிகர்களுக்கு மட்டும்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை ஸ்ரீதேவி: தி எடர்னல் ஸ்கிரீன் தேவி என்ற புத்தகத்தை எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். இதற்கான அனுமதியை தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரிடம் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார். 

    இந்த புத்தகத்துக்கு இந்தி நடிகை கஜோல் முன்னுரை எழுதியுள்ளார். உலகெங்கிலும் உள்ள ஸ்ரீதேவியின் ரசிகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் என்று கஜோல் கூறியுள்ளார். மேலும், இது குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது வரை அழியாத புகழுடன் இருக்கும் ஸ்ரீதேவியின் ஐம்பது ஆண்டு கால பயணத்தை எழுத்தாக கொண்டு வந்திருக்கிறது என்றார். 

    கஜோல் - ஸ்ரீதேவி

    கஜோல் இது குறித்து மேலும் கூறும்போது, “நான் ஸ்ரீதேவியின் படங்களையும், அவரது ஸ்கிரீன் - மேஜிக்கையும் பார்த்து தான் வளர்ந்தேன். எப்போதும் நான் அவரது ரசிகை” என நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
    மர்ஜாவன் என்று உருவாகி இருக்கும் இந்தி படத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் இசையை வைத்ததற்கு இசையமைப்பாளர் இமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
    ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் 'மர்ஜாவன்'. இந்த படத்தின் டிரெய்லர் இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் பக்கத்தில் முதல் இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

    இந்த டிரெய்லர் பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் பின்னணி இசை அப்படியே இந்த ட்ரெய்லரின் இறுதியில் வரும் காட்சிகளுக்கு பயன்படுத்தி இருந்தார்கள். இந்த பின்னணி இசை 'விஸ்வாசம்' படத்தில் அஜித் அறிமுகமாகும் காட்சியில் வரும். இந்த டிரெய்லரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில், 'விஸ்வாசம்' படத்தின் இசையமைப்பாளர் இமான் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

    இமான் ட்விட்

    இந்த விவகாரம் தொடர்பாக இமான் தனது டுவிட்டர் பதிவில், ‘மர்ஜாவன்’ இந்திப் படத்தின் ட்ரெய்லரில் ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, இசை உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்தோ முன்கூட்டியே எதுவும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
    நடிகர் விக்ரமின் மகனும் ஆதித்ய வர்மா படத்தின் நாயகனுமான துருவ் விக்ரம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்.
    தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம்.  விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

    இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் துருவ் விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் இடம் பெற்ற ‘உன் விழிகளில்...’ என்ற பாடலை பாடி அசத்தி இருக்கிறார்.



    தற்போது இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
    சமூக வலைதளங்களில் சிவகுமார் பற்றி வெளிவந்த செய்திகளுக்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கடவுள் நம்பிக்கை பற்றி கூறியிருக்கிறார்.
    சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சிவகுமார் பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் கடவுள், மதம் சம்பந்தமாக வெளியான சில செய்திகளுக்கு அவர் பதிலளிக்கும் வகையில், வீடியோ செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. 

    அதில் கூறியிருப்பதாவது, ‘‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். 

    கடவுளுக்கு வடிவம் இல்லை; ஆண், பெண் என்ற பேதம் இல்லை! ‘கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல’ என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ‘ஹேராம்’ என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. 

    அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். 

    சிவகுமார்

    நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன. இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். 

    யூடியூப்பில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது... ’அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல்’. இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.’’ இவ்வாறு கூறியுள்ளார்.


    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். 

    மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. டெல்லியில் சில முக்கிய சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரையில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. 

    சூரரைப்போற்று படக்குழுவினர்

    இந்தப் படப்பிடிப்பு மட்டும் சுமார் 40 நாட்கள் வரை நீடித்து வந்தது. தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இன்னும் 3 நாட்கள் சிறுசிறு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளன. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படக்குழுவினர் அனைவருக்கும் தங்க காசுகளை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. 
    தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள நடிகை ரேகா இறந்ததாக வந்த வதந்திக்கு அவர் கோபப்பட்டு பட விழாவில் பேசியிருக்கிறார்.
    சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100 சதவீதம் காதல்’. தெலுங்கில் வெளியான ‘100 சதவீதம் லவ்’ படத்தின் தமிழ் ரீமேக் இது.

    இந்த படம் வரும் 4-ந்தேதி வெளியாகிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ரேகா பேசியதாவது: ’இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்கள். நானும், ‘தலைவாசல்’ விஜய் சாரும் ஜி.வி.பிரகாசுக்கு அப்பா அம்மாவாக நடித்துள்ளோம். இங்கு ஒரு வி‌ஷயம் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

    ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் என பலரும் பன்ச் வசனங்கள் பேசுவார்கள். நான் பன்ச் வசனங்கள் பேசும் அளவுக்கு பெரிய சூப்பர் ஸ்டார் அல்ல. ‘உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்‘ என்று விஜய் சார் சொன்னது போல் இருக்கிறேன்.

    ஆனால், என்னை புதைத்து அருகில் ரஜினி சார், விஜய் சார் எட்டி பார்ப்பது போல் டிசைன் செய்து நான் இறந்துவிட்டதாக ஆகஸ்டு 17-ந்தேதியில் இருந்து செய்திகள் பரவி வருகின்றன. எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். இன்று பல்வேறு ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் யூடியூப் சேனல் தொடங்கி, அதில் தேவையில்லாத வி‌ஷயங்களை போட்டு அதன் மூலம் வருமானம் பெறுகிறார்கள்.

    ரேகா

    இது எந்த நிலைக்கு போகும் என தெரியவில்லை. இதற்கு மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பிரபலங்கள் இறந்துவிட்டார்கள் என்று செய்தி பரப்பப்படும் போது பிரபலங்களை விட அவர்களை சேர்ந்தவர்களை ரொம்பவே வருத்தப்பட வைக்கும்.

    என்னிடமே சில நடிகர்கள் தொலைபேசியில் ‘நீ இறந்துவிட்டாயா’ எனக் கேட்டார்கள். ஆமாம். இப்போது பேய் தான் பேசுகிறேன் என சொன்னேன். இறந்து விட்டீர்களா என்பதை என் தொலைபேசியிலேயே அழைத்து கேட்கிறார்கள். எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. நான் கணவன், குழந்தைகளுடன் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். 100 படங்களைத் தாண்டி விட்டாலும் இன்னும் மாநில அரசு, மத்திய அரசு விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது”

    இவ்வாறு அவர் பேசினார்.


    ×