என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் உருவாக இருக்கும் படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தீவிர பரத நாட்டிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் கங்கனா ரனாவத் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

    காயத்ரி ரகுராம் - கங்கனா ரனாவத்

    அதில் அவர் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருதாக தெரிகிறது. கங்கனா ஒரு கதாபாத்திரத்தை நேர்த்தியாய் செய்ய கூடியவர். மணிகர்னிகா படத்திற்காக வாள் பயிற்சி சண்டை பயிற்சி எல்லாம் கற்று தேர்ந்தே படத்தில் நடித்திருந்தார். அதே போல் தலைவி படத்திற்காகவும் மிக தீவிரமாய் பயிற்சி செய்து வருகிறார்.

    புகைப்படம் நன்றி - Team Kangana Ranaut
    கைதி படம் உருவாக கார்த்தி தான் காரணம், கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொல்லிட்டார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
    கார்த்தி நடிப்பில் டிரீம்வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து  தயாரித்துள்ள படம் “கைதி”. மாநாகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். 

    தீபாவளிக்கு வெளியாக இருக்கும் கைதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது: இது எனக்கு இரண்டாவது படம். இந்தப்படம் நடக்க முழு காரணம் எஸ்.ஆர். பிரபு தான். நாயகி இல்லாம, கமர்ஷியல் விஷயங்கள் இல்லாம, எப்படி பண்ணுவீங்கனு எல்லோரும் கேட்டாங்க. தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோனு நினைச்சேன். கார்த்தி சார் கதை கேட்டவுடன் ஷீட்டிங் போகலாம்னு சொல்லிட்டாரு. 

    கைதி படக்குழு

    இப்படிப்பட்ட படம் உருவாக அவர் தான் காரணம். அவர் இல்லைனா இந்தப்படம் இப்படி ஒரு ஆக்‌ஷன் படமா வந்திருக்காது. இந்தப்படம் குறுகிய காலகட்டத்தில எடுத்த படம். இந்தப்படத்தில உழைச்ச எல்லோருமே மிகப்பெரிய பங்கை தந்திருக்காங்க. என் உதவி இயக்குநர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமால் உழைச்சிருக்காங்க. இந்தப்படம் ஒரு தியேட்டர் அனுபவமா இருக்கும். பாருங்க பிடிக்கும் என்றார்.
    கதையை மாற்றவேண்டும் என்று படத்தை பார்க்காமலேயே போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது என வித்யா பாலன் கூறியுள்ளார்.
    வித்யாபாலன் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நான் நடித்த 'டர்ட்டி பிக்சர்', 'கஹானி' மைல்கல் படங்களாக அமைந்தன. அந்த கதைகளை தேர்வு செய்ததில் சுதந்திரமாக செயல்பட்டேன். 

    மொழி எல்லைகளை தாண்டி நடிப்பதற்கு என் தைரியம்தான் காரணம். கதைகள் தேர்வில் துணிச்சலாக சுதந்திரமாக செயல்படுகிறேன். நான் நடிக்கும் எல்லா படங்களும் சிலருக்கு பிடிக்கலாம் இன்னும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். பிடிக்காதவர்கள் எனது படங்களை பார்க்க வேண்டாம். 

    வித்யா பாலன்

    சினிமா துறையில் இருப்பவர்கள் எந்த மாதிரி கதைகளிலும் நடிக்கலாம். அது அவர்கள் உரிமை. படங்களை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம். பெயரை மாற்ற வேண்டும். கதையை மாற்றவேண்டும் என்று படத்தை பார்க்காமலேயே போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தென்னிந்திய நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை எனக்கூறி நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். நாசர், விஷால் தலைமையிலான அணி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. 2018-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தலை கட்டட பணியை காரணம்காட்டி தள்ளிப்போட்டார்கள். இந்த ஆண்டு ஜூன் 23-ந்தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டார்கள். ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி நாசர், விஷால் அணியை எதிர்த்து களம் இறங்கியது. 

    தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தல் முடிந்தும் கூட வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சங்கம் செயல்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 

    நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் சங்க அலுவலகத்தில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் கு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நடிகர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு இந்த நோட்டீசை அனுப்பி உள்ளார். 

    தமிழக அரசு லோகோ

    அதில் கூறப்பட்டிருப்பதாவது:- நடிகர் சங்கத்துக்கான உங்களது நிர்வாக குழுவின் காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத் துடன் முடிவடைந்து விட்டது. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு எதிராக பதிவுத்துறைக்கு வந்த புகார் மீதான விசாரணை நடந்துவருகிறது. நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. எனவே நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்க கூடாது?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இதுபற்றி விஷால் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூச்சி முருகன் கூறியதாவது:- நடிகர் சங்கம் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 3 மாதங்களாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நலிந்த நடிகர்களுக்கும் நாடக கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. நடிகர்களுக்கு எழும் பிரச்சினைகளையும் பேசி தீர்த்து வருகிறோம். எனவே செயல்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இதற்காக நீதிமன்றம் செல்வோம். அங்கு வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுதா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பப்பி’ படத்தின் முன்னோட்டம்.
    ’கோமாளி’ படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பப்பி. இப்படத்தின் மூலம் வருண் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே போகன், நெருப்புடா, நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சம்யுதா ஹெக்டே நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு நாயகனின் நண்பராக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கியுள்ளார். 

    பப்பி படக்குழு

    பப்பி திரைப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக் குமார் ஒளிப்பதிவு பணியையும் ரிச்சர்ட் எடிட்டிங் பணியையும் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் இவர் பாடியுள்ள “சோத்துமூட்டை” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 11-ந் தேதி திரைக்கு வருகிறது. 

    தன்னை திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடிகர் ரஜினி வீடு வழங்கினார்.
    ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வில்லன் வேடங்களில் நடித்துவந்த அவர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கலைஞானம் தயாரித்திருந்தார். கதாசிரியராகவும் கலைஞானம் பணியாற்றினார். 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை வெளிப்படுத்திய கலைஞானத்திற்கு தற்போது 90 வயதாகிறது. 

    19 வயதில் சினிமா உலகில் நுழைந்தவர். இவரது பைரவி படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட்டது. கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் தவித்து வந்தார். கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்தினார். இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்தும் பங்கேற்றார். விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், கூறிய பிறகுதான் கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

    இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பது தனக்கு இப்போது தான் தெரியும் என்றும், தானே அவருக்கு சொந்த வீடு வாங்கி தருவேன் என்றும் உறுதி அளித்தார். இதன்படி, விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி, 2 கார் பார்க்கிங் கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம் ரஜினிகாந்த் பதிவு செய்து கொடுத்தார். சரஸ்வதி பூஜை தினமான நேற்று காலை, 10 மணிக்கு, ரஜினி கலைஞானத்துக்கு வழங்கிய வீட்டுக்கு சென்றார். கலை ஞானம் மற்றும் அவரது குடும்பத்தார், சால்வை அணிவித்து, ரஜினிக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றிய ரஜினி, பாபா படத்தை பரிசளித்தார். வீடு முழுவதும் சுற்றிப்பார்த்த அவர், வீடு தெய்வீகமாக இருக்கிறது என, வாழ்த்தினார். கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றி விட்டதாக கலைஞானம் உருக்கத்துடன் தனது நன்றி தெரிவித்தார். ரஜினிகாந்த் கலை ஞானத்திற்கு வீடு வாங்கி தந்த செய்தி சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் சொன்னபடி செய்து காட்டியுள்ளார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த், கலைஞானம்

    ரஜினி வீடு வாங்கி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கலைஞானம் கூறியதாவது:- “நான் ரஜினிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தேன் என்பதற்காக எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படி செய்துவிட்டார். கடைசி காலத்தில் வீடு வாங்கி கொடுத்ததை கூட சிலர் கிண்டல் செய்தனர். நான் அதை பொருட்படுத்தவில்லை.

    ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் போது அவர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. ரஜினியை நாயகனாக மாற்றும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. நான் செய்தேன். பின்னர் தான் மற்றவர்கள் செய்தனர். ரஜினி சொன்னதை செய்வார் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதுவே நடந்திருக்கிறது.

    ரஜினி அரசியல்வாதி ஆவதற்கு நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆருக்கு வந்த அதே நிர்பந்தம். 20 வருடங்களுக்கு முன்பே வந்திருந்தால் இன்று முதல்வர் ஆகியிருப்பார். அவர் மக்களை ஏமாற்ற கூடாது. ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் வெளியிடும் தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

    அதன்பின் லிரிக் வீடியோக்கள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியானது. இவை அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வைரலானது. தீபாவளிக்கு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியிடப்படாமல் இருந்ததால் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. மேலும், படத்தின் டிரைலரை உடனடியாக வெளியிட வேண்டுமேன சமூக வலைதளங்களின் மூலம் தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள் விடுத்துவந்தனர்.

    பிகில் டிரைலர்

    இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா பிகில் படத்தின் டிரைலர் வெளியிடும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி விஜய் நடிப்பில் ஏ.ஆர். ரகுமான் இசையில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவுள்ள பிகில் படத்தின் மிரட்டலான டிரைலர் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். 
    தமிழில் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், புரொடக்‌ஷன் மேனேஜராகவும் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி இன்று மாரடைப்பால் காலமானார்.
    தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர் குழந்தை இயேசு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் நான் கடவுள், தவசி, விஜய் ஆண்டனியின் நான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படங்களில் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்திருக்கிறார்.

    கேரள மாநிலம் குமுளியில் ‘பேய் மாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அங்கு தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். 

    வடிவேலுடன் கிருஷ்ணமூர்த்தி

    இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கிருஷ்ண மூர்த்தி மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    கிருஷ்ணமூர்த்தி மனைவி பெயர் மகேஷ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் பிரஷாந்த். இரண்டாவது மகன் கெளதம் இயக்குநர் ஆக முயற்சி செய்து வருகிறார்.
    நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் எடுக்கப்பட்ட நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
    நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக தங்களின் சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தாவையும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனாவையும் அவர்கள் நவராத்தியின் 6வது நாளில் தங்களின் வீட்டிற்கு அழைத்து கொண்டாடி உள்ளனர். 

    பிரபலங்கள்

    நான்கு பேரும் கண்கவர் பட்டுப்புடவையில் தோன்றினர். நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வீட்டிற்கு வந்த பிரித்தாவையும் வந்தனாவையும் நடிகர் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் வரவேற்றனர். நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நவராத்திரி விழாவில் பங்கேற்க ரஜினியின் வீட்டிற்கு வந்த பிரித்தா வந்தனா ஆகியோர் ரஜினியுடனும் லதா ரஜனிகாந்துடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.
    ஆசிட் வீச்சால் வாழ்க்கையையே இழந்ததாக நடிகை கங்கனா ரனாவத் சகோதரி ரங்கோலி சண்டல் தெரிவித்துள்ளார்.
    கங்கனா ரனாவத் கம்பீரமான நடிப்பால் பாலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்தவர். கிடைத்த வாய்ப்புகளில், தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லும் கங்கனாவின் ஆலோசகர், அவரின் சகோதரி ரங்கோலி சண்டல். கங்கனா நடிக்கும் படங்கள், பட விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் ரங்கோலி, தனக்கு நேர்ந்த ஆசிட் வீச்சு பாதிப்பு பற்றி பதிந்திருக்கிறார்.  

    அதில் கூறப்பட்டுள்ளதாவது, ’நான் வெளியிட்டிருப்பது என் கல்லூரிக் கால புகைப்படம். கல்லூரியில் படிக்கும்போது, ஒருவன் என்னிடம் காதலைத் தெரிவித்தான். அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பரிசாக என்மீது ஆசிட்டை ஊற்றினான். என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள், என் வாழ்க்கை முழுவதும் நிலை குலைந்துவிட்டது. உடம்பின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.

    சில அறுவைசிகிச்சைகளுக்குப் பின் கண் விழித்தபோது, என் முகத்தை பார்த்து நானே பயந்தேன். ஏழு மாதங்கள் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். என்னுடைய சகோதரி என்பதற்காக கங்கனாவும் தாக்கப்பட்டாள். ஒருவரின் காதலை  ஏற்றுக்கொள்ளாதது அவ்வளவு பெரிய குற்றமா?என்னுடைய உடல் உறுப்புகளைச் சரிசெய்ய ஐந்து வருடங்களில் 54 அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அப்போதுகூட மருத்துவர்களால் என்னுடைய காதை சரிசெய்ய முடியவில்லை.

    கங்கனா ரனாவத், ரங்கோலி சண்டல்

    கண், மார்பு, கழுத்து பகுதிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. என் மார்பு பகுதியை, சரிசெய்ய உடலின் பல்வேறு பகுதியில் இருந்து சதை எடுத்து ஒட்டினார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு என் குழந்தைக்கு பாலூட்ட என்னால் முடியவில்லை. என் ஒட்டுமொத்த குடும்பமும் மனவேதனையிலிருந்து இப்போதுதான் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.ஆனால், என்மீது ஆசிட் வீசியவன் ஒரே மாதத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

    குற்றம் செய்தவனுக்கு ஒரு மாதம் தண்டனை, பாதிக்கப்பட்டவளுக்கு ஆயுசு முழுக்க தண்டனை. இதுதான் இப்போதைய சமூக நிலையாக இருக்கிறது. என்னைப்போல் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. நியாயம் தேடி போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்கி, நாம் ஏமாறுவதுதான் மிச்சமாக இருக்கிறது. என்னைத் தண்டித்தவனை, நான் தண்டிக்க வேண்டும் என்பதைவிட, இப்போது என் குடும்பத்தின் நிம்மதியே எனக்குப் பெரிதாக இருக்கிறது. அதனால், நான் பாதிக்கப்பட்ட வழக்கு பற்றிக் கவலைப்படுவதில்லை.

    என்னைப் பார்ப்பவர்கள், நான் என் அழகை இழந்ததற்காக வருந்துகிறார்கள். நம்முடைய கண்முன் உடலின் மொத்த அழகும்  கரைந்து ரத்தத்துடனும், வலியுடனும் உருகும்போது, அழகு பெரிசாகத் தெரியாது. நான் இப்போது, என்னுடைய மனவலிமையை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என் மனவலிமையைத்தான் என்னுடைய அழகாகப் பார்க்கிறேன். கங்கனாவைப் பார்க்கும் பலரும், ‘அவள் மிகத் தைரியமான பெண்ணாக இருக்கிறாள்’ என்பார்கள். அவளின் தைரியத்திற்கு நான் அனுபவித்த வலிகளும் ஒரு காரணம்“ என்று பதிவிட்டிருக்கிறார். 
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அவரது பிறந்தநாளுக்கு முன்பே தொடங்கும் என கூறப்படுகிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக, சிவாவின் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

    மேலும், ஏ.ஆர்.முருகதாசும் அடுத்ததாக கதை ஒன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். இடையே இயக்குநர் சிவாவோ சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே மீண்டும் ரஜினி நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இயக்குநர் சிவா இயக்கத்திலேயே நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினி. 

    சிவா, ரஜினி

    சிவா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, நேற்று முன்தினம் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ரஜினி. இதனால் இந்த கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. தன் பிறந்த நாளுக்கு முன்பாக படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று ரஜினி கூறியுள்ளார். அதற்கு ஏற்றார் போல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது படக்குழு. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
    கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது.
    50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. 

    சர்வதேச திரைப்பட விழா

    மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, உயரே, கோலாம்பி, இந்தியில் உரி, கல்லிபாய், சூப்பர் 30 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. இவ்விழாவில் சுமார் 10 ஆயிரம் சினிமா பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
    ×